பரமபக்தர் பரமஞானி
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமாத் ஸ்மரணாபவேத்!!
ஆஞ்ஜனேயரை வணங்குபவர்களுக்கு அவர் என்னென்ன அனுக்கிரகிக்கிறார் என்று இந்தச் சுலோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.
சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிறப்புகளையும் ஒரே இடத்தில் பொழிகிறார் ஆஞ்ஜனேயர்.
இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட, அவரிடம் சுபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு வினயம் இருக்காது; பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜனேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப்போலவே வினயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தின் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுப் பக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டை கூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்ஜனேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார்.
பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாவீரத்தோடு போராடி அபலைகளை ரட்சித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம்.
அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசித்தபோது ஆஞ்ஜனேய அவதாரமாக ஸ்மர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸமஸ்தாபனம் செய்தார்.
–காஞ்சி மகாமுனிவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
ReplyDeleteஜெய் ஆஞ்சநேய ஸ்வாமி கீ!