Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Monday, September 30, 2019

"ஏன் கொலு வைக்கவில்லை?"-மூன்று வயதுக் குழந்தை ("கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே. அம்பாள் சித்தம்...."பெரியவா) (பெரியாவாளுடைய மனம் நளினீதளகதஜலம். தாமரை இலைத் தண்ணீர். முத்துக்களாகப் பளீரிடும்; ஆனால், ஒட்டிக்கொள்ளாது)

(நவராத்திரி ஸ்பெஷல் போஸ்ட்-29-09-2019ஆரம்பம்)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.
சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது.
பக்தர் குழுவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று எல்லோரையும் போல் நமஸ்காரம் செய்து விட்டு , பெரியவாளை நோக்கிப் போயிற்று.
பெரியவாள் எதிரில் தட்டுத் தட்டாகப் பழங்கள், கற்கண்டு,திராட்சை.
பெரியவாள்,அருகிலிருந்த தொண்டர் பிரும்மசாரி ராமகிருஷ்ணனைப் பார்த்து, ஒரு ஆப்பிள் எடுத்து,குழந்தையிடம் கொடுக்கச் சொன்னார்கள்-குழந்தை பழத்துக்காக வந்திருக்கிறதோ என்று.
குழந்தை ஆப்பிளை லட்சியம் செய்யவில்லை.
பெரியவாளைப் பார்த்து,
"ஏன் கொலு வைக்கவில்லை?" என்று கேட்டது.
குழந்தை சொன்னது, தெய்வம் சொன்ன மாதிரி.
கூடியிருந்த பக்தர்களை, ஆளுக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி கூறினார்கள் பெரியவா
.ஒரு மணி நேரத்தில் ஏராளமான பொம்மைகள் சேர்ந்து விட்டன, அதற்குள் படிக்கட்டு தயார்.
தினந்தோறும் இரவில் சுண்டல் நைவேத்யம்; விநியோகம்.சுமங்கலிகளுக்கு தாம்பூலம்-குங்குமம்.
நவராத்திரி முடிந்ததும், பொம்மைகளைக் காகிதத்தில் சுற்றி,அட்டைப்பெட்டியில் வைத்து, பாதுகாப்பாக வைப்பதற்கு பிரும்மசாரி ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
"கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே.அம்பாள் கிருபை. நவராத்திரி முடிஞ்சு போச்சு. வருகிற பக்தர்களிடம் ஒவ்வொரு பொம்மையா கொடுத்துடு. அடுத்த வருஷத்துக்காக ப்ரிஸர்வ் பண்ணாதே. அடுத்த வருஷ நவராத்திரி..... அம்பாள் சித்தம்...."
பெரியாவாளுடைய மனம் நளினீதளகதஜலம். தாமரை இலைத் தண்ணீர். முத்துக்களாகப் பளீரிடும்; ஆனால், ஒட்டிக்கொள்ளாது

Sunday, September 29, 2019

Navarathiri Special

" நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ,
வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது"
(காஞ்சிப்பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்று மகிழ்வீர்கள்)
.
அக்டோபர்-2013-தினமலர்-நவராத்திரி ஸ்பெஷல் போஸ்ட்.
காஞ்சி மகாபெரியவர், ஒரு நவராத்திரி சமயத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஆற்றிய அருளுரை இதோ:
உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரிகொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரிமுக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பூஜிக்க வேண்டும்
.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்விவளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்
.
தினமும் காலையில் சர்க்கரைப்பொங்கல், உளுந்தவடையும், மாலையில் சுண்டல், பால் பாயசமும் நைவேத்யம் செய்ய வேண்டும்.
பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாட வேண்டும். இந்நாட்களில் சவுந்தர்ய லஹரி, லட்சுமி, துர்கா அஷ்டோத்ரம், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம், தேவி பாகவதம் போன்றவற்றை பாடலாம்.
நவராத்திரியின்போது சுமங்கலிகள் நூல் புடவை அணிவது சிறப்பு.
கன்னி பூஜை: முதல்நாள், ஒரு கன்னிக்கும் (பெண் குழந்தை), ஒரு சுமங்கலிக்கும் பூஜை செய்ய வேண்டும். அந்த குழந்தைக்கு பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ ஆகியவற்றை வழங்கி மகிழ்விக்க வேண்டும். இதே போல், இரண்டாம் நாள் இரு கன்னிகளும், மூன்றாம் நாள் மூன்று கன்னிகளும் என ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தையை அதிகப்படுத்தி, ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளுக்கு பூஜை செய்ய வேண்டும். சுமங்கலியைப் பொறுத்தவரை, தினமும் ஒருவரே போதுமானது.
கொலு விதிமுறை: நவராத்திரி பூஜை செய்பவர்கள் மனத்தூய்மை, ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். அம்பிகை கொலு வீற்றிருக்கும் இடம் எப்போதும் தூய்மையோடும், கோலம் இட்டு அழகுடனும் இருப்பது மிக அவசியம். பூக்களால் அம்பிகையை தினமும் அலங்காரம் செய்ய வேண்டும். கொலு வைத்தவர்கள் துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடாது. தேவி உபாசகர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது.
காஞ்சிப்பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்று மகிழ்வீர்கள்.

Source: Sri Varagooran mama

Saturday, September 28, 2019

"பார்வை ஒன்றே போதுமே!" (யோகிராம் சுரத்குமார்- பெரியவா சந்திப்பு)

(ஆன்மிகத்தில் உயர்நிலை அடைந்தவர்கள் பேச, பார்வை மட்டுமே போதும் என்பதை அறிந்து வியந்தார் அடியவர்)



மார்ச் 09,2018-தினமலர்

மகா சுவாமிகள் உத்தரவின்படி திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமாரை சந்தித்தார் அடியவர் ஒருவர். காஞ்சிபுரம் அழைத்து வரச் சொன்ன தகவலை தெரிவித்தார். அடியவருடன் காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார் யோகிராம் சுரத்குமார்.
ஆசனத்தில் அமர்ந்திருந்த சுவாமிகள், யோகியை கண்டதும் தரையில் அமர்ந்தார். யோகியும் அவர் முன்பு அமர்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டே இருந்தனர். ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நிமிடங்கள் கரைந்தன. அடியவர் எப்போது பேசி கொள்வர் என காத்திருந்தார்.

சிறிது நேரத்திற்கு பின் புன்முறுவல் பூத்தார் சுவாமிகள்.

''நல்லது... யோகி வந்த வேலை முடிந்தது'' என எழுந்த பெரியவர், மறுபடியும் காரில் போய் திருவண்ணாமலையில் விட்டு வரச் சொல்லி அடியவருக்கு உத்தரவிட்டார்.

'அழைத்து வந்தது ஏதோ பேசத் தானே? அது நடக்கவில்லையே' என அடியவருக்கு ஆச்சரியம் எழுந்தது.

காரில் போகும் போது யோகி சிரித்தபடி, ''என்ன... நாங்கள் பேசிக்கொள்ளவில்லையே என நினைக்கிறீர்களா?'' என கேட்டார்.

தயக்கத்தோடு 'ஆமாம்' என்றார் அடியவர்.

'அவர் பார்வையாலே கேள்வி கேட்டார். நானும் பார்வையால் பதில் சொன்னேன். காஞ்சிபுரம் மடத்தின் ஆச்சார்யராக இருந்தவர் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். ராம நாமம் ஜபித்து வந்த அவரின் ஜீவசமாதி தஞ்சாவூர் மாவட்டம் கோவிந்தபுரத்தில் உள்ளது. மடத்தின் பொறுப்பை சீடரிடம் ஒப்படைத்த அவர், கிராமம் தோறும் சென்று ஜாதி, மதம் பாராமல் ராம மந்திர உபதேசம் செய்தவர். ராம நாமத்தை பரப்பும் நீயும், ஏன் கோவிந்தபுரத்தில் தங்கி சேவை செய்ய கூடாது'' என கேட்டார் சுவாமிகள்.

அதற்கு நான், ''இந்த பிச்சைக்காரனின் மனம் திருவண்ணாமலையில் லயித்து விட்டது. அதனால் அதை விட்டு செல்ல இஷ்டமில்லை'' என்றேன்.

''அப்படியானால் அங்கேயே இரு'' என்றார் சுவாமிகள்.

''இதை சொல்லவே உன்னை வர சொன்னேன். சரி... சென்று வா!''என விடை கொடுத்தார்.

ஆன்மிகத்தில் உயர்நிலை அடைந்தவர்கள் பேச, பார்வை மட்டுமே போதும் என்பதை அறிந்து வியந்தார் அடியவர்.

Friday, September 27, 2019

“1387 ரூபாய் அனுப்பு “

( “பெரீவாளுக்குச் சேரவேண்டிய பத்தாயிரம் ரூபாய்க்கு இருபத்திரெண்டு சொச்சம் வருஷத்துக்கு 3% simple interest ரூபாய் 6650/- . அதனுடன் ரூபாய் 10,000/- அசலையும் கூட்டினால் மொத்தம் ரூபாய் 16650/- அதை பன்னிரெண்டு மாசத்துக்கும் பிரிச்சால் 1387 ரூபாய் வரும் பார்..” என்று உள்மனசு சொன்னது !)

சொன்னவர் திருவாலூர் ஆடிட்டர் வெங்கட்ராமையர் பேரன் ஆரூரன்

வலையில் படித்தது.
அன்று காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீமஹா பெரியவாள் தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள். உடன் அணுக்கத்தொண்டர் சிலர் மட்டும் இருக்க பயத்துடன் தயங்கியபடியே சற்று ஓரமாகச் சென்று நமஸ்கரித்தேன்.
திரும்பிப்பார்த்த ஸ்ரீபெரியவாள் ” பூனா க்ருஷ்ணமூர்த்திக்கு பேப்பர் சிலவு, ஸ்டாம்ப், தபால்சிலவு நிறைய ஆறதாம். அதுக்காக ஒரு வருஷத்துக்கு மாசாமாசம் 1387ரூபாய் இவனை அனுப்பச் சொல்லு ” என்று கணீர்க் குரலில் உத்தரவிட்டார்கள்.
உடம்பும் மனசும் பதறிக்கொண்டிருந்ததால் உத்தரவானது சட்டென்று பிடிபடவில்லை.
“பூனா கிருஷ்ணமூர்த்தி… பூனா கிருஷ்ணமூர்த்தி…” என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னவர்களிடமிருந்து மறுபடியும் “1387 ரூபாய் அனுப்பு!” என்று ஆக்ஞை வந்தது.
“அப்படியே செய்கிறேன் ” என்று சொல்வதற்குக்கூடத் தைரியம் இல்லை. நாக்குக் குழறிக்கொண்டு தலையைத் தாழ்த்தி பலமுறை நமஸ்கரித்தேன். கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்தார்கள்…
…பக்கத்தில் ஏதோ சப்தம்… கண்ணைத்திறக்கிறேன்..
“இத்தனையும் ஸ்வப்னத்திலேன்னா நடந்திருக்கு! …” வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து மணியைப் பார்த்தபோது விடியற்காலம் நாலரை ஆகியிருந்தது.
அன்றைக்குத் தேதி 15/10/2012. விடிந்தால் திங்கட்கிழமை…
“யாரை வேண்டுமானாலும் ஸ்வப்னத்தில் பார்க்கலாம். ஆனால் எங்க அண்ணாவைப் பார்க்கணும்னா அவாளே நெனைச்சு தரிசனம் தந்தால்தான் உண்டு. அதனால் பெரீவா ஸ்வப்னத்தில் வந்தால் நேரா வந்தா மாதிரின்னு எடுத்துண்டு அவா சொன்னதைசெய்யணும் ” என்று ஸ்ரீசிவன் சார் சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வருகிறது.
சட்டென்று விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு மேற்கொண்டு செய்வதறியாது அமர்ந்திருந்தேன். மணி ஆறு அடித்தது…
“இத்தனை பெரிய ஜன ஸமூஹத்தில் பூனா க்ருஷ்ணமூர்த்தி என்பவரை எப்படித் தேடிக்கண்டு பிடிப்பது? பெரீவா உத்தரவாச்சே.. கட்டாயம் செய்துடணுமே ” என்று மனது சஞ்சலித்தது.
உள்ளுக்குள் ஒரு யோசனை. “சிவராமனிடம் கேட்கலாமே” …
விஷயத்தைக் கேட்டுகொண்டசிவராமன் “இதோ அஞ்சு நிமிஷத்தில் சொல்றேன்” என்றார். அவரே மறுபடியும் லைனுக்கு வந்தார்.
“ஆரூரான்!பெரீவா வாக்கு ஸத்யம்! நீ கேட்ட மாதிரி பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்னு ஒர்த்தர் காஞ்சீபுரத்திலேயே இருக்கார். அவரும் அவாத்து மாமியும் லிங்கப்பையர் தெருவில் வேதபவனம் என்கிற மடத்து கட்டிடத்தில் இருக்கா. அவருக்கு வயசு தொண்ணூறு இருக்கும். பெரீவாளின் சதாரா யாத்ரையின்போதெல்லாம் நிறைய கைங்கர்யம் பண்ணியிருக்கார். பெரீவா உத்தரவுப்படி ரொம்ப நாளா வேதபாராயணம் மடத்தில் நடத்திண்டு இருக்காராம். அதுக்காக எல்லோருக்கும் நிறைய தபால் போட்டுக்கொண்டே இருப்பாராம்… அவரின் அட்ரஸ் எழுதிக்கோ… போன் நம்பரும் தரேன்.. நோட் பண்ணிக்கோ.. அவரிடமும் பேசிட்டேன்.. மறக்காமல் இன்னிக்கே பணத்தை மணி ஆர்டர் பண்ணிடு ” என்று மூச்சு விடாமல் சொல்லிமுடித்தார்.
பத்து நிமிஷத்துக்குள் எல்லாம் கிடைத்துவிட்டது.
“சீக்ரம் குளிச்சுட்டு, பெரீவா பாதுகை கிட்ட பணத்தை வைத்து நமஸ்காரம் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பாருங்கோ” என்றாள் என் அகத்துக்காரி.
ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… பெரியவா உத்தரவாயிடுத்தே… இத்தனை பெரிய ஜன ஸமூஹத்துக்குள் பூனா கிருஷ்ணமூர்த்தியை எப்டித் தேடப்போறோம்னு ரொம்பவும் பயந்துட்டியோ?” என்று கருணையுடன் கேட்பதுபோலிருந்தது.
தெரிஞ்சதைச் சொல்லி ரெண்டு பத்ரபுஷ்பத்தைச் சார்த்தி விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தபால் ஆபீசுக்குப் .போய் பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகளுக்கு 1387 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பினேன்.
“அப்பாடா… பெரீவா உத்தரவிட்டபடி செஞ்சாச்சு” … என்றாலும் “அது என்ன 1387 ரூபாய் கணக்கு? ” மனசு கேள்வியைப் போட்டது!…
“அது என்ன 1387 ரூபாய்?..” மனசின் கேள்விக்கு புத்தியால் பதில் சொல்லக் கூடவில்லை.
“கொஞ்ச நேரம் ஆராய்ச்சி பண்ணாமல் இருக்கியா.. நானே ஒண்ணும் புரியாமல் முழிச்சிண்டு இருக்கேன்” புத்தி தனியாகக் கழற்றிக்கொண்டது.
“சரி.. எல்லாம் பெரீவா விட்ட வழி!” என்று ஒரு மாதிரியாக மனசு மடங்கிக்கொண்டது.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது…
1990ம் வருஷம். ஸ்ரீமஹாபெரியவாள் ஸ்ரீமடத்தில் இருந்த சமயம். ஸ்ரீசந்த்ரமௌளீ ச்வரர் சன்னதிக்கெதிரில் ஸ்ரீகார்யம் நீலகண்ட ஐயர் மாமா தன் அன்றைய அலுவல்களில் மும்முரமாயிருந்தார். அருகில் அமர்ந்தபடி அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். ஸ்வாமி சந்நதிப் பக்கமிருந்து ஸ்ரீசந்த்ரமௌளி மாமா (ஸாமவேதி ) வேகமாக வந்தார்.
” ஏய்.. உன்னை பெரீவா உத்தரவாறது” என்றார்.
என்னால் இதை நம்ப முடியவில்லை.
“மாமா, பெரியவாளுக்கு என்னைத் தெரியாதே.. எங்க தாத்தா அப்பாவையெல்லாம்தானே தெரியும்.. சரியாகக் கேட்டுண்டுட்டேளா ?.. ஒரு சமயம் அவாளுக்கு ஏதானும் உத்தரவு பண்ணியிருக்கப் போறா?” என்று குறுக்குக் கேள்வியைப் போட்டேன்.
” ஏம்ப்பா.. எத்தனை வருஷமா பெரீவாட்ட இருக்கேன். அவா சொல்றத கரெக்டா நான் புரிஞ்சுக்க மாட்டேனா?.. உன்னைச் சொல்லிதாம்ப்பா உத்தரவாச்சு!” என்று அழுத்திச் சொன்னவர் கையோடு என்னைக் கொண்டுபோய் ஸ்ரீமஹாபெரியவாளின் சன்னதியில் ஆஜர்படுத்தினார்.
இதிலிருந்துதான் ஸ்வாரஸ்யமான கதை ஆரம்பம்…
அணுக்கத்தொண்டர் : ” திருவாலூர் ஆடிட்டர் வெங்கட்ராமையர் பேரன் இதோ நிக்கறான் ”
ஸ்ரீமஹாபெரியவாள்: ” இவனா..? எனக்காக பத்தாயிரம் ரூபாய் இவன் தர்மம் பண்ணுவானான்னு கேளு !”
அணுக்கத்தொண்டர் : ” ஏம்ப்பா, நீ பெரீவாளுக்காக பத்தாயிரம் ரூபாய் தர்மம் பண்ணுவியா?”
ஆரூரன் : ” எங்கிட்டப் பணம் இல்லை. எங்க அப்பாக்கிட்ட கேட்டு வாங்கித்தரேன். ”
அணுக்கத்தொண்டர் : ” இவன் படிச்சிண்டிருக்கான். அதனால தன் அப்பாட்டக் கேட்டு வாங்கித்தரேங்கறான்.”
ஸ்ரீமஹாபெரியவாள் : ” என்ன படிக்கறான் கேளு! ”
அணுக்கத்தொண்டர் : (அவராகவே) “சி. ஏ படிக்கறான்”.
ஸ்ரீமஹாபெரியவாள் : ” இவன் ஏன் சி.ஏ படிக்கறான் கேளு! ” (அணுக்கத் தொண்டருக்கு இந்தக் கேள்வி புரியவில்லை )
ஸ்ரீமஹாபெரியவாள்: ” அந்தக்காலத்ல இவன் தாத்தா பெரீய்ய ஆடிட்டர்… அவர் சி.ஏ படிக்கலே… ப்ராக்டீஷனர்தான். இவன் அப்பாவும் ஆடிட்டர்தான். ஆனா tax advocate. அவா ரெண்டு பேருமே சி. ஏ படிக்காமலேயே ஆடிட்டராக முடிஞ்சுதுன்னா இவன் மட்டும் சி.ஏ படிச்சு என்ன பண்ணப் போறானாம்..?” (சிறிது நேரம் மௌனம்.. பிறகு தொடர்கிறார்கள். ) “சரி.. எப்போ படிச்சு முடிப்பான்னு கேளு !”
அணுக்கத்தொண்டர் : ” எப்போப்பா படிச்சு முடிப்பே?”
(அந்த சமயத்தில் C A Intermediate ஒரு பாதி முடிந்து அடுத்ததை முடிக்க முடியாமல் நான் தடுமாறிக் கொண்டிருந்தேன்.)
ஸ்ரீமஹாபெரியவாள் இப்படி கேள்வி கேட்டதும் அழுகை மேலிட்டது.
ஆரூரன் : “எப்போ முடிப்பேன்னு தெரீலை பெரீவா .. ரொம்ப கஷ்டமாயிருக்கு .. பெரீவா அனுக்ரஹம் பண்ணினா படிச்சு பாஸ் பண்ணிடுவேன்.”
ஸ்ரீமஹாபெரியவாள் : ” அப்டின்னா, இன்னும் நாலு வருஷத்ல பாஸ் பண்ணிடுவானா கேளு !”
ஆரூரன் : (அழுதுகொண்டு நமஸ்கரித்தபடியே) ” பெரீவா அனுக்ரஹத்ல பாஸ் பண்ணிடறேன் பெரீவா…”
ஸ்ரீமஹாபெரியவாள் : “அப்போ சரி… நாலு வருஷத்ல சி.ஏ படிச்சு பாஸ் பண்ணிட்டு அப்றமா எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொண்டுவந்து கொடு!”
இதற்குப் பிறகு நான் ஸத்குரு ஸ்ரீசிவன்சார் அவர்களிடம் அடைக்கலமானேன். ஒரு தாயார் தன் குழந்தையைப் பார்த்து கொள்வது போல ஸ்ரீசிவன்சார் என்னைப் பார்த்துக்கொண்டார். என்னைத் துரிசடக்கிப் படிக்க வைத்தார்.
சரியாக நான்கு வருஷம் கழித்து 1994 மே மாதம் சி.ஏ முடித்தேன்…. ஆனால், ஸ்ரீமஹாபெரியவாள் உத்தரவிட்டபடி பத்தாயிரம் ரூபாயை அவர்களிடம் என்னால் தர முடியவில்லை.
ஆமாம்.. ஸ்ரீமஹாபெரியவாள் 1994 January மாசம் சித்தியடைந்து விட்டார்கள்……
கடந்த காலச் சம்பவங்களை மனத்தால் அளைந்தபடியே அருகிலிருந்த ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்.
1387
“பெரீவாளுக்குச் சேரவேண்டிய பத்தாயிரம் ரூபாய்க்கு இருபத்திரெண்டு சொச்சம் வருஷத்துக்கு 3% simple interest ரூபாய் 6650/- . அதனுடன் ரூபாய் 10,000/- அசலையும் கூட்டினால் மொத்தம் ரூபாய் 16650/- அதை பன்னிரெண்டு மாசத்துக்கும் பிரிச்சால் 1387 ரூபாய் வரும் பார்..” என்று உள்மனசு சொன்னது !

Thursday, September 26, 2019

"நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?" -பெரியவா

(உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு  ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே.... வாங்கித்தரியான்னு  இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!"-பக்தர்



கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
​நன்றி-19-10-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

ஒரு சமயத்துல ஆந்திராவுல இருக்கிற சித்தூருக்கு ஒரு தரம் விஜயம் பண்ணியிருந்தார் பரமாசார்யா. அங்கே ஏராளமான பக்தர்கள் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினா. அந்த சமயத்துல ஒரு பக்தர் மகாபெரியவாகிட்டே ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

"பெரியவா நமஸ்காரம். இந்த தேசத்துல பலப்பல க்ஷேத்ரங்கள், உங்களோட திருப்பாதம் பட்டுப் புனிதம் அடைஞ்சிருக்கு. அந்த பாக்யம் எங்க ஊருக்கும் கிடைக்கணும்னு ப்ரியப்படறோம். தயவு செஞ்சு எங்க ஊருக்கு ஒருதரம் நீங்க எழுந்தருளணும்!"

பக்தர் கேட்டதும் மென்மையா புன்னகைச்ச ஆசார்யா,
 "ஒங்க ஊர் எது? அது எங்கே இருக்கு?" அப்படின்னு கேட்டார்.

பக்தர் சொன்ன ஊர், அந்த சமயத்துல ஆசார்யா தங்கியிருந்த  இடத்துலேர்ந்து மூணுமைல் தொலைவுல இருந்தது. அதை மகாபெரியவாகிட்டே சொன்னார்,அவர்.

"நீயே என்னை அழைச்சுண்டுபோறியா?"மகாபெரியவா  இப்படிக்   கேட்பார்னு எதிர்பார்க்காத பக்தர், சந்தோஷத்துல  திணறிப்போனார். அன்னிக்கு ராத்திரி அவரை அங்கேயே தங்கச் சொன்ன மகாபெரியவா, நாளைக்குக் கார்த்தால நித்யானுஷ்டானம் முடிஞ்சதும் புறப்படலாம்னுட்டார்.

சொன்னமாதிரியே மறுநாள் கார்த்தால பக்தர்கூட அவரோட ஊருக்குக் கிளம்பிவிட்டார், மகாபெரியவா. வழியில வெயில் அனலா கொளுத்தித்து.கொஞ்சம் கூட சலிச்சுக்காமலும் ஒடம்பு வருத்தத்தை வெளியில காட்டிக்காமலும் நடந்தார் மகாபெரியவா.அந்த பக்தருக்கு தான்,தப்புப் பண்ணிட்டோமோ.. பெரியவாளை கஷ்டப்படுத்தறோமோ! என்றல்லாம் தோணித்து.

ஒரு வழியா ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும்,ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பூர்ணகும்பம் தந்து பரமாசார்யாளுக்கு  செஞ்சிருக்கே?" என்று கேட்டார், மகாபெரியவா.

பக்தர் ஒரு இடத்தைச் சொன்னார். அதைக் கேட்ட பரமாசார்யா, "அங்கே வேண்டாம்.இங்கே பாதி கட்டிண்டு இருக்கற கட்டடம் ஒண்ணு இருக்கும் பார். அங்கே நான் தங்கிக்கறேன்" அப்படின்னார்.

பக்தருக்கும் அங்கே இருந்தவாளுக்கும் ஆச்சரியம்! ஊர்ல அந்த சமயத்துல ஒரே ஒருத்தர்தான் வீடு கட்டிண்டு இருந்தார். அது பரமாசார்யா வந்த வழியில் எங்கேயும் இல்லை.ஊர்ல  இன்னொரு கோடியில இருந்தது.அதை எப்படி மகாபெரியவா தெரிஞ்சுண்டார்ங்கறது அவாளுக்கு வியப்பா இருந்தது. ஆனா, அதைவிடப் பெரிய ஆச்சரியம் ஒண்ணு மறுநாள் நடக்கப் போறதுங்கறது அவாளுக்குத் தெரியாது.

புதுசா கட்டிக் குடித்தனம் வராத அந்த அகத்துல மகாபெரியவர் தங்கறதுக்கு ஏற்பாடு செஞ்சா.அந்த வீட்டுக்கு சொந்தக்காரர், பரமாசார்யாமேல பரமபக்தி உள்ளவர். வயசு ரொம்ப  ஆயிட்டதால தரிசனத்துக்குப் போகமுடியலையே, ஆசார்யாளுக்கு எதுவும் கைங்கர்யம் பண்ண  முடியலையேன்னு ஏங்கிண்டு இருந்தார் அவர்.

இப்போ ஆசார்யாளே தன்னோட அகத்தைத் தேடிவந்து தங்கிக்கறதா சொன்னதும் அவருக்கு சந்தோஷம் பிடிபடலை. ஒரு நாள் முழுக்க ஆசார்யா அங்கேயேதான் இருக்கப்போறார். பக்கத்துலயே இருந்து பார்த்துண்டே இருக்கலாம். மனசெல்லாம் சந்தோஷத்துல நிறைஞ்சு இருந்தது அவருக்கு.

அன்னிக்கு அங்கேயே தங்கி இருந்து எல்லாருக்கும் தரிசனம்  குடுத்தார், மகாபெரியவா. ஊர்க்காராள்லாம் மறுநாளும் அங்கே இருந்து அருளம்ணு ரொம்பவே வேண்டிண்டதால அங்கேயே தங்கினார்.

அடுத்த நாள் பொழுது விடியறதுக்கு முன்னாலயே யாரோ கிணத்துலேர்ந்து தண்ணீர் இறைச்சுண்டு இருக்கற சத்தம் கேட்டுது. அந்த இடத்தோட சொந்தக்காரருக்கு. இந்த நேரத்துல யாரா இருக்கும்னு வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.மகாபெரியவாதான் எழுந்திருந்து தன்னோட மரச் செம்பால ஜலம் இறைச்சு ஸ்நானம் பண்ணிண்டு இருந்தார்.

அடடா...ஆசார்யா ப்ரம்ம முகூர்த்தத்துலயே  எழுந்துட்டார்ங்கறதை புரிஞ்சுண்டு அவசர அவசரமா அவருக்கு ஏதாவது ஒத்தாசை பண்ணலாம்னு நினைச்சுண்டு கிட்டே ஓடினார் அந்த பக்தர்.

அவரைப் பார்த்ததும்,"என்ன,நீயும் எழுந்துண்டுட்டியா? எனக்கு ஒத்தாசை பண்ணலாம்னு வந்தியாக்கும்.இந்த ஜலம் இறைக்கறதெல்லாம் நான் பார்த்துக்கறேன். இதோ இந்த  மரச்சொம்பைப் பார்த்தியா. ஒடைஞ்சு போய் கையெல்லாம் கிழிக்கறாப்புல இருக்கு. நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?" ஆணை இடவேண்டிய ஆசார்யா, செய்யறியான்னு கோரிக்கை மாதிரி கேட்டதும் அப்படியே குழைஞ்சுபோனார் அந்த பக்தர்.

அவரோட கண்ணுலேர்ந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து.
"பகவானே உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே.... வாங்கித்தரியான்னு இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!" தழுதழுத்தார் பக்தர்.

கொஞ்ச நேரத்துல பொழுது நன்னா விடிஞ்சதும் திருப்பதிக்குஆள் அனுப்பி கொஞ்சமும் ஆசாரம் குறையாதபடிக்கு  மரச்சொம்பு,கமண்டலு,தண்டம் எல்லாம் வாங்கிண்டு வரச் சொன்னார், அந்த பக்தர்.மகாபெரியவாளோட அன்னிக்கு சாயங்கால அனுஷ்டானத்துக்கு அதையெல்லாம் அவர் முன்னால வைச்சு சமர்ப்பிச்சார்.

"நன்னா வழவழப்பா இருக்கு. கையைக் கிழிக்காதபடிக்கு பார்த்து வாங்கிண்டு வந்து குடுத்திருக்கே.எல்லாரும் பரம சௌக்யமா இருக்கணும்!" ஆசிர்வதிச்ச ஆசார்யா,அன்னிக்கு ராத்திரியே அங்கேர்ந்து புறப்பட்டு மடத்தோட ஜாகை இருந்த சித்தூருக்குப் போய்ட்டார்.

பக்தர் கூப்பிட்டதுமே அவரோட ஊருக்கு வரேன்னு பெரியவா ஒப்புத்துண்டதுக்குக் காரணம் அந்த பக்தர்மேல இருந்த அன்பு மட்டும்இ ல்லை.அங்கே தனக்குத் தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற இன்னொரு பக்தர் வேண்டுதலுக்கு செவிசாய்க்கணும்கற கருணையும்தான் அப்படிங்கறது அதன்பிறகுதான் புரிஞ்சுது எல்லாருக்கும்

Wednesday, September 25, 2019

கிழவிக்கு மஹா பெvரியவரின் நன்றிக் கடன்!

(  ‘‘மஹா பெரியவரை அவர் தாயார் பிரசவித்த காலத்தில், உடன் உதவிக்கு இருந்த மருத்துவச்சி)


வாரியாரும்  அனந்தராம  தீட்சிதரும் வியப்பு மேலிட... கண்களில் நீர் மல்க மஹா பெரியவாளை நமஸ்கரித்தனர்.  

நன்றி-சக்தி விகடன்-26-05-2006


 
தி ருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் 1965-ஆம் ஆண்டு சென்னை நகரில் ஒரு பள்ளி ஆண்டுவிழாவின்போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ- மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினார். பின்னர், ஆசி வழங்கிச் சிறப்புரை ஆற்றியபோது, மனிதன் மனிதனாக வாழ வேண்டிய முறைகளையும் குருவின் மேன்மையைப் பற்றியும் விளக்கினார். அதற்கு உதாரணமாக அவர் சொன்ன சம்பவம் இதுதான்:
மனிதன் முதலில் வணங்க வேண்டியது மாதா. இரண்டாவது பிதா. மூன்றாவது குரு. நான்காவதாக தெய்வம். அப்படி ஒரு சம்பவம்...
சங்கராச்சார்ய மஹா ஸ்வாமிகள் அப்போது காஞ்சிபுரத்தில் இருந்தார். வாரியார் அவரை தரிசனம் செய்யச் சென்றார். மஹா ஸ்வாமிகள் பூஜையில் இருந்ததால், வாரியாரால் அவரை தரிசிக்க இயலவில்லை. அவரது பூஜை முடிவதற்குள் காமாட்சி அம்மனையும் மற்ற கோயில்களையும் தரிசித்துவிட்டு வரலாம் என்று கிளம்பினார் வாரியார்.
தரிசனம் முடிந்து திரும்பி வரும் வழியில் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரைச் சந்தித்தார் வாரியார். இருவரும் கோயிலின் ஒரு மூலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் எண்பது வயது மதிக்கத் தக்க மூதாட்டி ஒருவர் ஊன்றுகோலுடன் மெதுவாக நடந்து வந்து, தீட்சிதரை வணங்கினார். பின்பு அவரிடம், ‘‘எனக்கு ஒரு ருத்திராட்ச மாலை கொடுங்களேன்!’’ என்று கேட்டார். அதற்கு தீட்சிதர், ‘‘என்னிடம் தற்போது ருத்திராட்ச மாலை எதுவும் இல்லையே’’ என்றார்.
உடனே அந்த மூதாட்டி, ‘‘காஞ்சிப் பெரியவரிடம் சொல்லி வாங்கித் தாருங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு தீட்சிதர், ‘‘பெரியவாளிடம் என்னவென்று சொல்லி ருத்திராட்சம் கேட்க வேண்டும்?’’ என்றார். அந்த மூதாட்டி தன் பெயரைக் கூறி, ‘‘மஹா பெரியவரை அவர் தாயார் பிரசவித்த காலத்தில், உடன் உதவிக்கு இருந்த மருத்துவச்சி கேட்டதாகச் சொல்லுங்கள்!’’ என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கிளம்பினார்.
வாரியாரும் தீட்சிதரும் பேசியவாறு மடத்தை அடைந்தனர். அன்று மஹா பெரியவர், பூஜையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு மாலை ஏழு மணி அளவில் வேதவிற்பன்னர்களுக்கு ஆகமத் தேர்வு நடத்தினார். அதில் வெற்றி பெற்றவர் களுக்கு விருது, சால்வை ஆகியவை அளித்து அனுப்பி வைத்தார்.
இரவு சுமார் ஒன்பது மணியளவில் வாரியாரும் மஹா பெரியவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். மடத்துச் சீடர் அந்த அறையைச் சுத்தம் செய்ய வந்தார். அப்போது ஒரு சால்வையும் ருத்திராட்ச மாலை ஒன்றும் அங்கு இருந்தன. அந்தச் சீடரை அழைத்த மஹா ஸ்வாமிகள், ‘‘உடனே சேங்காலியை (அனந்தராம தீட்சிதரை) அழைத்து வா!’’ என்றார். சீடர் அப்படியே செய்தார்.
ஸ்வாமிகள் தீட்சிதரிடம், ‘‘இந்த சால்வையும் ருத்திராட்ச மாலையும் உனக்குத்தான்!’’ என்று அழுத்தமாகக் கூறினார். தீட்சிதருக்கு எதுவும் புரியவில்லை. பெரியவர் சிரித்துக் கொண்டே, ‘‘நீ இந்த மாலையையும் சால்வையையும் என்ன செய்யப் போகிறாய்?’’ என்று வினவினார்.
தீட்சிதர் மௌனமாக இருந்தார். உடனே மஹா பெரியவர் அவரிடம், ‘‘இவற்றைப் பேசாமல் (பெயரைச் சொல்லி) அந்தக் கிழவியிடம் சேர்த்துவிடு. இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’ என்று கூறினார். வாரியாரும் தீட்சிதரும் சிலிர்த்துப் போனார்கள்.
பிறகு மடத்துப் பிரசாதங்களுடன் ருத்திராட்ச மாலையையும் சால்வையையும் சீடனிடம் கொடுத்து தீட்சிதர் மூலம் அவற்றை அந்தக் கிழவியிடம் கொடுக்கச் செய்தார். வாரியாரும் தீட்சிதரும் வியப்பு மேலிட... கண்களில் நீர் மல்க மஹா பெரியவாளை நமஸ்கரித்தனர்.

Sunday, September 22, 2019

"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!- பெரியவாள்

( "பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் 'எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா -மடத்து மானேஜர் விச்வநாதய்யர்)





கட்டுரையாளர்; ரா.கணபதி.
புத்தகம்-மஹா பெரியவாள் விருந்து.
தட்டச்சு;வரகூரான் நாராயணன். 

பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில்ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது  ஸ்ரீஸி.எஸ்,விக்குப் ( விச்வநாதய்யர்)பொத்துக்கொண்டு  வந்து விட்டதாம்.

"எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா கிடக்கிறது இந்தத்தரித்திரம்பிடித்த ஊரில்இத்தனை யானையையும்,ஒட்டையையும், ஜனங்களையும் கட்டித்தீனி போடுவதென்றால் எப்படி?" என்கிற ரீதியில்பெரியவாள் காதுபடப் பொரிந்து தள்ளி விட்ராம்.

பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக " நீ ஏன்பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப்பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய  அளப்பா"என்றாராம்.

மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை! அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா, அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை செய்ததா என்று அவருக்குச் சொல்ல தெரியவில்லை. ஆனால் சொல்லத் தெரிந்தது,

 மறுநாள் காலையிலிருந்து அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில் புற்றீசலாகப்பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டேயிருந்ததுதான்.
வந்தது மட்டும் இல்லை.அக்காலத்தில் வெள்ளி நாணயம்வழங்கி வந்ததல்லவா? வந்த பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள்.

"நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா(இதை ஸி.எஸ்,வி.என்னிடம் கூறியது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்) அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!.மடத்து ஜாகையிலே எல்லாத்தையும்சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச்சாக்கிலே போட்டுக் கட்டினோம்.

பெரியவாள்,"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன்.ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!.

"பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் 'எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top