2 – சூரிய சந்திரர்கள் உள்ளவரை — பேராசிரியர் வீழிநாதன்
மஹா பெரியவர் எம்.எஸ்.ஸுக்குப் பெரிய அனுக்கிரஹம் பண்ணியிருப்பதாகச் சொல்வதுண்டு. அது தப்பு.
ஏனென்றால், பெரியவர்களின் அனுக்கிரஹம் என்பது சந்திர ஒளி மாதிரி — எல்லோருக்குமானது. நேர்மையினாலேயும் பக்தியினாலேயும் அவ்வருளுக்கு நாம் பாத்திரமாகலாம். அவ்விதம் பெரியவர்களின் அனுக்கிரஹத்துக்குப் பாத்திரமானார்கள் எம்.எஸ்.
ப்ரஹலாதன் பற்றிச் சொல்வதுண்டு. பகவான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் கேள் ?” என்றார். ப்ரஹலாதன், “எனக்கு எந்த வரமும் வேண்டாம். உங்களைத் தரிசித்ததே போதும். அதற்கு மேலான வரம் எது ?” என்றான்.
ஆனால் பகவான், “என்னை உபாசித்ததினால் உனக்குக் கிடைத்த பலன் என் தரிசனம். என்னை தரிசனம் செய்ததற்கு பலன் உண்டு. ஆகவே, என்ன விருப்பமோ அதை வரமாகக் கேள்” என்றார். அப்போது ப்ரஹலாதன் “எந்த விதமான விருப்பமும் என் மனதில் தோன்றாமல் இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை வரமாக அருள வேண்டும்” என்றான்.
எம்.எஸ்.அம்மாவின் பக்தியும் மஹா பெரியவர்களிடத்தில் அப்படித்தான். மஹா பெரியவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது (அஜித:). ஆனால் பக்தர்களுக்குக் கட்டுப்படுவார். (பக்தஜித:). அந்த பக்திக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர் எம்.எஸ்.அம்மா ஐ.நா. சபையில் பாடுவதற்கு ‘மைத்ரீம் பஜத‘ பாடலை இயற்றித் தந்தார்.
அந்தப் பாடலில் கடைசி இரண்டு வரிகள் என்ன சொல்கின்றன….?
தாம்யத தந்த தயத்வம் ஜனதா;
ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.
இதற்கு என்ன அர்த்தம்…? ‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்; பூமியில் உள்ள சகல ஜனங்களும் ஸ்ரேயசுடன் (சுபிட்சமுடன்) விளங்கட்டும்’ என்று அர்த்தம்.
இந்தப் பிரார்த்தனையை எத்தனை தடவை உள்ளமுருகிப் பாடியிருப்பார் எம்.எஸ்.அம்மா ! இன்று அணு ஆயுதமும், பயங்கரவாதமும் வலிமை பொருந்திய தேசங்களின் அராஜகமும் ஓங்குகிறபோதும் கூட உலகில் மனிதம் வாழ்கிறது என்றால், அதற்கு இதுபோன்ற பிரார்த்தனைகள் அன்றி வேறு என்ன காரணமாக இருக்க முடியும் ?
(தொடரும்…)
No comments:
Post a Comment