4 – சூரிய சந்திரர்கள் உள்ளவரை — பேராசிரியர் வீழிநாதன்
மஹா பெரியவர் வழிகாட்டி, தேர்வு செய்த பல சுலோகங்களையும், கீதங்களையும் எம்.எஸ்.அம்மா பாடி ஒலிப்பதிவு செய்து அளித்துள்ளார். மேளராக மாலிகை இவர் உத்தரவின் பேரில்தான் பாடப்பட்டது. பாலாஜி பஞ்சரத்ன தொகுப்பில் சுலோகங்களும் அவர் தேர்வு பண்ணிக் கொடுத்தவைதான். உச்சரிப்பு திருத்தமாக உள்ளதா என்று சரி பார்ப்பதும் உதவுவதும் எனக்குத் தரப்பட்ட பணி. இதை ஒரு மிகப் பெரிய கௌரவமாக நான் கருதிச் செய்து வந்தேன்.
எத்தனை முறை திருத்தம் சொன்னாலும் மனதிலே சோர்வு இல்லாமல் திருத்திக் கொள்வார் அம்மா. ஸ்ரீரங்க கத்யம் மிகக் கடினமான உச்சரிப்பு கொண்டது. அதைத் துல்லியமாக பதம் பிரித்துப் பாட அம்மாவால் தான் முடிந்தது. அதிலே தோஷம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடினாலும் முடியாது! அப்படி ஒரு அப்பழுக்கில்லாத சுத்தம். மேளராக மாலிகையின் வார்த்தைகள் அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும்.
‘கெளரிமனோஹர தம்பர சத்தம்‘ என்று வந்தால் ‘கௌரிமனோஹரி‘ என்பது ராகத்தைக் குறிக்கும். ’ஹரிதம்பர சத்தம்‘ என்பது பரமேசுவரனைக் குறிக்கும். (திக்கெல்லாம் தன் ஆடையாகக் கொண்டவன் என்று பொருள்) . இந்த இடத்தில் ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படிப் பாட வேண்டும் என ஆணையிட்ட மஹா பெரியவர்களிடம் ‘இது எப்படி சாத்தியம் ?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்:
“நீயா பாடப் போறே…? அவா பாடிடுவா… நீ ஏன் கவலைப்படறே!”
அதேமாதிரி, பெரியவர்களின் ஆசி அனுக்கிரஹத்தால் உரிய முறையில் துல்லியமாக அந்த இடத்தில் எம்.எஸ்.அம்மா பாடியிருப்பது, கவனித்துக் கேட்டால் புலனாகும்.
இந்த ஒலிப்பதிவு முடிந்து காஸெட் வெளியாகிற தருணத்தில் மஹா பெரியவர் எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?
“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார்.
இதை விட பெரிய அனுக்கிரஹம் என்ன வேண்டும் ?
(நிறைவடைந்தது)
நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர் எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ். அம்மாவின் அன்பு, கனிவு, கருணை அனைத்தும் அவரது இசையைப் போன்றே கம்பீரம் நிறைந்தது. மூத்த கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவு அலாதியானது; புதியதைக் கற்றுக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அபூர்வமானது; சக கலைஞர்களை அவர் ஊக்கப்படுத்திய முறை, வழிநடத்திய முறை தாய்மை நிறைந்தது.
அவரோடு பழகிய ஒவ்வொருவரும் அந்த இனிய நினைவுகளை தம் மனத்தில் அசைபோட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரது எளிமையும் பக்குவமும் பாந்தமும் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எம்.எஸ். அம்மாவின் ஒவ்வொரு பரிமாணம் பிடிபட்டு இருக்கிறது.
’எங்கள் எம்.எஸ்.’ என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொருவரும் தாம் புரிந்துகொண்ட விதத்திலேயே எம்.எஸ். அம்மாவைச் சித்திரிக்க முயன்று இருக்கின்றனர்.
நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர் எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ். அம்மாவின் இசையையும் ஆளுமையையும் ஒருசேர உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.
தொடர்புடைய பதிவுகள்:
No comments:
Post a Comment