கருணைத் தெய்வம் காஞ்சி மகான் (21)
”மகா பெரியவா மனதுள் என்ன நினைக்கிறார் என்பது எவராலும் கண்டறியமுடியாத ஒன்று. அவர் தான் நினைப்பதைப் பக்தர்களின்மூலம் நடத்திக்கொண்டு விடுவார்” என்கிறார் அகிலா கார்த்திகேயன்.
”மகாபெரியவா பீடாரோஹணம் செய்த மணிவிழாவைக் கொண்டாடும் வகையில், மணிகள் பொருந்திய தங்கத்தாலான மகுடத்தை அவருக்குச் சூட்டவேண்டும் என்பது, ஆந்திர பக்தர்கள் சிலரின் விருப்பம். மணிமகுடம் மட்டுமின்றி, இரண்டு லட்சம் ரூபாய் நிதியும் திரட்டி, காஞ்சி மடத்துக்குக் கொடுக்கத் தீர்மானித்தனர். இது தொடர்பாக மகாபெரியவாளிடம் அனுமதியைப் பெறுவதற்காக, காஞ்சி மடத்துக்கு வந்தனர்.
சுவாமிகளைத் தரிசித்து நமஸ்கரித்துவிட்டு, தங்களது நிதி காணிக்கை குறித்து மெள்ளத் தெரிவித்தனர். உடனே பெரியவா, ”வசூல் பண்றதை உடனே நிறுத்திடுங்கோ!” என்றார். அந்த வார்த்தையில் கடுமை இல்லை; ஆனால், உறுதி இருந்தது. ஓர் உத்தரவு போன்று, தெலுங்கு மொழியிலேயே அதனைச் சொன்னார்.
இந்த மடம் அவசியமான செலவுகளுக்கே வழியின்றித் திண்டாடிய காலமும் உண்டு. ஆனால், போதிய அளவுக்கு திரவியங்கள் கிடைப்பதற்கு, ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் அருள் புரிந்திருக்கிறார். சில தருணங்களில், கொஞ்சம் நிறையவே பண்ணிவிடுகிறபோது சுவாமி நம்மைச் சோதனை பண்ணுகிறாரோன்னு தோணும். பணம் சேரச் சேர, ஏதாவது பணிக்கு அந்த நிதியைக் கொடுக்கச் சொல்லிடுவேன். மீதின்னு எதுவும் மிஞ்சாமலே மடம் நடக்கிறபடி சர்வ ஜாக்கிரதையா இருந்துட்டு வரேன். இப்போ பணம், தேவைக்கு ஏத்த அளவுக்கு இருக்கு. அதை இன்னும் கூட்ட வேண்டாமேன்னு பார்க்கறேன். எத்தனை நிதி வந்தாலும், அதை உபயோகப்படுத்தறதுக்கு நல்ல காரியங்கள் நிறையவே இருக்கு. ஆனா, அதிலே மடம் நேரடியா ஈடுபட்டுச் செய்தால், சுய பாத்தியதை மாதிரியான அம்சம் வந்துடும். அதனால், தானே எல்லாத்தையும் பண்ணணும்னு அட்சதை போட்டுக்காமல், மத்த சத்சங்கங்கள், ஸ்தாபனங்களைக் கொண்டு அந்த நல்ல காரியங்களைச் செய்யலாம். மடம், அவங்களுக்கு அட்வைஸ் பண்றதோட நிறுத்திக்கலாம்!” – பெரியவா சொல்வதை, கவனமாகக் கேட்டுக்கொண்டனர் அவர்கள்.
பெரியவர் தொடர்ந்தார்… ”ஆகையினால லட்சக் கணக்கில் பணம் எதுவும் வசூல் பண்ணவேண்டாம். நாளைக்கே ஏதேனும் பெரிய திட்டம் மடத்திலே செய்றதுக்குத் தீர்மானமாகும்போது, வெக்கப்படாம நானே உங்ககிட்டே கேக்கறேன். நம்ம முயற்சியை நிறுத்திட்டாரேனு நீங்க வருத்தப்பட வேண்டியதே இல்லே. உங்க மனசும் ஆர்வமும் எனக்குத் தெரியாம போயிடலே. அதனால நிறைய ஆசீர்வாதம் பண்றேன்!” என காஞ்சி மகான் விளக்கிய விதத்தில், ஆந்திர பக்தர்கள் நெகிழ்ந்து போனார்கள். ஆனாலும், ஏற்கெனவே வசூலித்துச் சேர்ந்த தொகையை என்ன செய்வது எனக் குழம்பித் தவித்தனர். தங்கள் குழப்பத்தையும் பெரியவரிடமே தெரிவித்தனர்.
”இதுவரை எவ்ளோ வசூல் பண்ணியிருக்கேள்?” – பெரியவா கேட்டார்.
”அறுபதினாயிரம் ரூபாய்!” என்றனர் பக்தர்கள்.
”அறுபதுக்கு அறுபது பொருத்தம்தானே!” என்று சொல்லிவிட்டு, குழந்தை மாதிரி சிரித்தார் பெரியவா. ”பீடாதிபத்ய அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு அறுபதாயிரமோ? சரிதான்… பொருத்தமான கட்டத்தில்தான் நிறுத்தச்சொல்லி அம்பாள் உங்களை இங்கே அனுப்பியிருக்கா. வசூல் பண்ணினதை அப்படியே வெச்சிருங்கோ. நானே தேவைங்கிறபோது உங்ககிட்டேர்ந்து வாங்கிக்கறேன்!” என்று அன்பும் கருணையும் பொங்கச் சொன்னார். இதையடுத்து அந்தக் குழுவினர், மணி மகுடம் செய்து வைத்திருப்பதைச் சொல்லி, அதை மட்டுமேனும் தட்டாமல் ஏற்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் மனசை அறியாதவரா, பெரியவாள்?! தனக்கே உரிய வாஞ்சையுடன் தலையசைத்துச் சம்மதித்தார். ஆனாலும் துறவியாக இருப்பவர், நேராகப் பொன் மகுடம் தரிக்கலாகாது எனக் கருதி, பிரதோஷத்தின்போது பூஜை வேளையில் தான் அணிகிற ருத்திராட்ச கிரீடத்தின் மேலேயே அந்தப் புதிய கிரீடத்தை வைக்கச் சொன்னார்.
இது நடந்து பதினைந்து நாள் கழித்து, வசூல் செய்து வைத்திருந்த 60,000 ரூபாயை குருக்ஷேத்திரத்தில் கீதோபதேசக் காட்சியும், கீதாபாஷ்யம் செய்த ஆச்சார்யருக்கு சலவைக் கல்லில் பிம்பம் செய்யும் நற்பணிக்குமாக அனுப்பிவைக்கும்படி, பெரியவா உத்தரவிட்டார். ஆந்திர பக்தர்களும் அப்படியே செய்தனர். அப்படியெனில், ருத்திராட்ச கிரீடத்தின்மீது வைக்கப்பட்ட பொற்கிரீடத்தை ஏற்றுக்கொண்டுவிட்டாரா மகாபெரியவா?! ம்ஹூம்… அதுதான் இல்லை. பிறகு..?
ஸ்ரீபிரகதீஸ்வரருக்குத் தஞ்சைத் தரணியில் கோயில் எழுப்பியவனும், தேவாரத் திருமறைகளைக் கண்டறியப் பாடுபட்டு, அவற்றைத் தினமும் ஓதுவதற்கு வழிசெய்தவனுமான மாமன்னன் ராஜராஜசோழனிடம் மகாபெரியவாளுக்கு அளவற்ற அபிமானம் உண்டு. மன்னனின் ஆயிரமாவது ஆண்டு விழா 1984-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது மகாபெரியவா, ”ராஜா என்றாலே முடி சூடணும். அதுவும் இந்த ராஜராஜன், சிவபாதசேகரன். சிவனாரின் பாதத்தை முடியில் கொண்டவன். அவனுக்கு நாம் முடிசூட்டியே ஆகணும்!” எனக் கூறி, தஞ்சை ராஜராஜ சோழனுக்கு அணிவிக்க, தன் தங்கக் கிரீடத்தில் சற்றே மாறுதல் செய்து அனுப்பி வைத்தார். இதை, அப்போதைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி, ராஜ ராஜசோழனுக்குச் சூட்டி மகிழ்ந்தார். சந்திரசேகரரே, தனது பக்தனான சிவபாதசேகரனுக்கு மகுடம் சூட்டிப் பெருமைப்படுத்திய அதிசயம் இது.
ஆக, தாம் பெற்றுக் கொள்ளவிருந்த 60,000 ரூபாயும், பெற்றுக்கொண்ட பொற்கிரீடமும், தன் சந்நியாச தர்மத்தைச் சிறிதும் மீறாத வகையில், ஒரு பொதுவான நற்பணிக்குப் போய்ச் சேருகிறபடி செய்தது மகா பெரியவாளின் செயல்!
நன்றி – சக்தி விகடன்
No comments:
Post a Comment