Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Wednesday, September 30, 2020

"தோல் டாக்டரும் Soul டாக்டரும்!" (மூன்று சம்பவங்கள்-டாக்டர் எம். நடராஜன்)

உலகம் போற்றும்  மகாப்பெரியவாள்  அற்பனான 
என்னையும், (என் விலாசத்தையும்)  நினைவில்
 வைத்துக்  கொண்டிருக்கிறார்களே.. என்ன பாக்கியம் 
செய்திருக்கிறேனோ?--டாக்டர் எம். நடராஜன்)

சொன்னவர்;டாக்டர் எம். நடராஜன்-சென்னை-10
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
பிரும்மஸ்ரீ சிவராம கிருஷ்ண சாஸ்திரிகள் என்பவர்
ரிக் வேத விற்பன்னர். மடத்துக்குப் பெருமை சேர்க்கும்
ஒரு மாமேதை.

கொடுமையான தோல்நோய் அவருக்கு. என்னிடம்
சிகிச்சை பெற்று வந்தார்.

பேட்டையிலிருந்த சம்ஸ்க்ருத பாடசாலையில்
பேராசிரியராகவும் வேலை பார்த்து வந்தார் அவர்.
சிலசமயம், உரிய காலத்தில் வந்து என்னிடம் மருந்து
வாங்கிக்கொள்ள மறந்துவிடுவார். நான் அவருடைய
மாணவர்கள் ஓரிருவரை அழைத்து மருந்து கொடுத்து
அனுப்புவேன். அப்படி மருந்து கொடுக்கும்போது, ஒரு
சமயம் மாணவர்களிடம், " நான் சாஸ்திரிகளை மட்டும்
காப்பாற்றவில்லை. அவரிடம் இருக்கும் ரிக் வேதத்தையும்
சேர்த்துக் காப்பாற்ற முயல்கிறேன்" என்று விளையாட்டாகச்
சொன்னேன்.

இந்தச் சொற்கள்,பெரியவாள் செவிகளுக்குப் போய்விட்டது.

அடுத்த தடவை தரிசனத்துக்குப் போனேன்.

"நீ சாஸ்திரிகளைக் காப்பாற்றி வருகிறாய் சந்தோஷம்.
ரிக் வேதத்தையும் காப்பாற்றுவதாகச் சொன்னாயாமே?"

"அவருக்கு மருந்தில் ஓர் அக்கறை வரவேண்டும்
என்பதற்காக அப்படிச் சொன்னேன்.."--டாக்டர்.

பெரியவாள் மெல்லப் புன்னகைத்தார்கள்.

"இவ்வளவு அக்கறையாக உன்னைப்போல
சொல்லக்கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்.."
என்று ஆசியுடன் பாராட்டினார்கள்.
....................................................................................................
சம்பவம்-2

கூட்டமில்லாத வேளை.நீண்ட நேரம் பேசுகிற வாய்ப்பு.

மரு,படை,Warts, Thistle Toe, Allergy Eczema என்ற பல
தோல் நோய்களைப் பற்றி விரிவாக, துருவித் துருவிக்
கேட்டார்கள். மருந்துகள் பற்றியும் கேட்டார்கள்.
பிறகு அவர்களுக்கே உரித்தான முறையில், சில ஆன்மீக
விளக்கங்களும்,பழங்கால தமிழ் வைத்திய
நிவாரணங்களையும் கூறினார்கள்.

சித்த மருத்துவ முறை பற்றிப் பெரியவாள் கூறிய
நுட்பமான செய்திகள் என்னைப் பிரமிக்க வைத்தன.

................................................................................................................
சம்பவம்-3

கும்பகோணத்துப் பாட்டி.
தொழில் - ஹோட்டல்களில் மாவாட்டுவது.

வெண்குஷ்டம் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும்
பரவிவிட்டது."பார்க்கவே நன்னாயில்லே.நாளைலேர்ந்து
வேலைக்கு வரவேண்டாம்..." என்று சொல்லிவிட்டார்கள்.

வேலை போயிற்று.ஆனால்,வேளை தவறாமல் பசி வருகிறதே

சதாராவில் பெரியவாள் முகாம்.
பாட்டி அம்மாள் தெய்வ சந்நிதியில் முறையிட்டாள்.

"இவ்வளவு தூரம் ஏன் வந்தே? சென்னை கீழ்ப்பாக்கம்
லாண்டன்ஸ் சாலையில், நடராஜன் என்று தோல் டாக்டர்
இருக்கார். அவரிடம் போய் சொல்லு. அவரே மருந்து 
கொடுத்து குணப்படுத்துவார்.--பெரியவா.

பாட்டி அம்மாள் வந்து விபரம் சொன்னார்.

நான் நெகிழ்ந்தே போனேன்.உலகம் போற்றும் 
மகாப்பெரியவாள் அற்பனான என்னையும்,
(என் விலாசத்தையும்) நினைவில் வைத்துக் 
கொண்டிருக்கிறார்களே..என்ன பாக்கியம்
செய்திருக்கிறேனோ?

Tuesday, September 29, 2020

"பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்..."

(வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து
பெரியவாளின் கருத்து)
சொன்னவர்-எம்.சுப்புராம சர்மா
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வேதங்களில் பல சாகைகள் (கிளைகள்/பகுதிகள்)
இருக்கின்றன. சாமவேதத்தில், ஜைமினிய சாகை
என்றும்,தலவகார சாகை என்றும் அழைக்கப்படும்
பகுதிகள் முற்றிலும் மறைந்துவிடக்கூடிய
நிலையில் இருந்தன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரு பணியாளர்
இருந்தார். ராஜகோபால அய்யங்கார் என்று பெயர்.
கோயிலில் அவருடைய பணி - இரவில் ரங்கநாதப்
பெருமாள் பள்ளியறைக்குச் செல்லும்போது,
சாம வேதத்தின் இந்தப் பகுதிகளை ஓதுவதுதான்.
குடும்பம் நடத்துவதற்குப் போதிய வருமானம்
இல்லாததால், பகல் நேரத்தில், ஒரு விறகுக் கடையில்
கணக்கு எழுதும் வேலையையும் செய்துவந்தார்.

ஜைமினிய சாகைக்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால்,
 ராஜகோபால அய்யங்காரைக் காப்பாற்றியாக வேண்டும்!

அவரையே ஆசிரியராக்கி, போதுமான சம்பளம்
கொடுத்து, 1963-ல் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
அவருக்குப் பின்னர் அவருடைய சிஷ்யர்
ஸ்ரீ மகரபூஷணம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு
பாடசாலை நடந்து வருகிறது.இதுவரை (2007-கட்டுரை)
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, இருபதுக்கும்
மேற்பட்ட மாணவர்கள், நல்ல முறையில் பயின்று
தேர்ச்சி பெற்று வித்வான்களாகி இருக்கிறார்கள்.

ஸ்ரீ மகரபூஷணத்துக்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து
அழைப்பு வந்தது. ஜைமினீய சாகையை நாடாப்பதிவு
செய்துகொள்ள வேண்டுமாம்.

ஸ்ரீ மகரபூஷணம், பெரியவாளிடம் வந்தார்.

"நான் என்ன செய்யணும்னு உத்தரவாகணும்...."

"உன் அபிப்ராயம் என்னன்னு சொல்லு...."-பெரியவா

"டேப் செய்வதில் எனக்கு சம்மதமில்லை. ஆனா திருப்பதி
தேவஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறதாலே
பெரியவாளிடம் தெரியப்படுத்தினேன்.

வேதத்தை நாடாப்பதிவு செய்வதை பெரியவாள்
ஏற்றுக்கொண்டதேயில்லை.நாடாப்பதிவு செய்வதால்
ஏற்படும் தீமைகளை மகரபூஷணத்திடம் விளக்கினார்கள்.

மகரபூஷணத்துக்கு பெரியவாள் வாக்கு, பெருமாள் வாக்கு.

அவருடைய வேதக்குரல் நாடாவில் பதிவாகவில்லை.
'அரங்கன் கேட்டு மகிழ்ந்தாலே போதும்'என்ற முதிர்ச்சி.

இதே மகரபூஷணத்துக்கு அமெரிக்காவிலிருந்தும்
அழைப்பு வந்தது. போனால் 'சில லகாரங்களுடன்
வரலாம்; பல விகாரங்களுடனும் வரலாம்'.

"நான் போகப்போவதில்லை..." என்று சொல்லி
தெண்டன் சமர்ப்பித்தார் மகரபூஷணம்.;

"ரொம்ப சரி,பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;

.........................பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…"

Sunday, September 27, 2020

"ஆச்சரியமும் பேராச்சரியமும்"

"தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் 
வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா
சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம்
தரணும்'னு பக்தர் சொன்னதை,பக்கத்துல இருந்து
கேட்டவர் மாதிரி, தானே நினைவுபடுத்தி வாங்கிண்டது
பேராச்சரியம்.

நன்றி-இன்றைய குமுதம்.லைஃப்
தொகுப்பு-பவானி ஸ்ரீதர்.
20-12-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு சமயம் மகாபெரியவா தஞ்சாவூர்ல 
முகாமிட்டிருந்தார். வழக்கம்போல ஆசார்யாகிட்டே 
ஆசிர்வாதம் வாங்கிக்கறுதுக்காக, சுத்துவட்டாரத்துல
இருந்தெல்லாம் தெனமும் நெறைய பக்தர்கள்
வந்துண்டு இருந்தா.

அங்கே தஞ்சாவூர்ல, பங்காரு காமாட்சியம்மனுக்கு
ஒரு கோயில் உண்டு.அந்தக் கோயிலோட ட்ரஸ்டி.
நடராஜ சாஸ்திரிகள் மகாபெரியவாளோட பக்தர்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல மகாபெரியவாளுக்கு பன்னீர்
ரோஜா மாலை வாங்கி சமர்ப்பிக்கணும்னு அவருக்குத்
தோணியிருக்கு.

இப்போ மகாபெரியவாளே தஞ்சாவூருக்கு
வந்திருக்கறதால தன்னோட எண்ணத்தை
ஈடேற்றிக்கலாம்னு நினைச்சார். அதனால,
ஒருகடையில்,புது ரோஜாப்பூவுல தொடுத்த
மாலை ஒண்ணு மறுநாள் வேணும்னு ஆர்டர் குடுத்தார்.

மறுநாள் காலங்கார்த்தால பூக்கடைக்குப் போனார்.
'தேன்மணம் மாறாத ரோஜா மாலையை வாங்கிண்டுபோய்
பெரியவாகிட்டே சமர்ப்பிக்கணும்.அதை அவர் சூடிக்கறதை
கண்ணாரக் கண்டு நெஞ்சார தரிசிக்கணும்!' மனசுக்குள்ளே
நினைச்சுண்டே போனவருக்கு,"இன்னும் ரோஜாப் பூ
மார்க்கெட்டுக்கே வரலை சார்,வந்ததும் மொதவேலையா
மாலைக்கட்டித் தந்துடறேன்!" கடைக்காரரோட பதில்
கொஞ்சம் ஏமாத்தமா இருந்தது.

வெயிட் பண்ணிய அவர், பூ வந்ததும் ஒவ்வொரு பூவா
பார்த்துப் பார்த்து எடுத்து அழகான மாலையா கட்டிக்
குடுத்தார் கடைக்காரர். தான் நினைச்ச மாதிரியே
மாலை அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம் பக்தருக்கு.
மாலையை வாங்கிண்டு வேகவேகமா பரமாசார்யாளை
தரிசிக்கப் புறப்பட்டார்.

மகாபெரியவாகிட்டே மாலையை தரணும்னு ஆசை 
ஆசையா போனவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துண்டு இருந்தது.
அவர் அங்கே போய்ச் சேர்ந்த சில நிமிஷம் முன்னாலதான்
மகாபெரியவா தரிசன நேரம் முடிஞ்சு உள்ளே எழுந்து
போயிருந்தார்.

"இன்னிக்கு மறுபடியும் எப்போ பெரியவா தரிசனம் தருவார்?
தன்னோட ஏமாற்றத்தை மனசுல அழுத்திண்டு, அங்கே
இருந்த தொண்டர்கிட்டே கேட்டார்.

"பெரியவாளோட தரிசன நேரம் இன்னிக்கு முடிஞ்சுடுத்து.
இனிமே நாளைக்குத்தான்!" சொன்னார்,தொண்டர்.

'வாடாத மாலையை மகாபெரியவாளுக்குத் தரணும்னு
நினைச்சுண்டு வந்தா,இப்படி ஆயிடுத்தே'ன்னு மனசு
வாடிப் போயிடுத்து அவருக்கு.

அப்படியே சோர்ந்த முகத்தோட வீட்டுக்குப் போனார்.என்ன 
நடந்ததுங்கறதை ஒய்ஃப்கிட்டே வருத்தமா சொன்னார்.

"இதுக்குப்போய் மன சங்கடப்படலாமோ...நம்ம வீட்டுல
இருக்கற காமாட்சி படத்துக்கு அந்த மாலையை
சாத்துங்கோ.அம்பாளுக்கு சாத்தினாலே ஆசார்யாளுக்கு
சாத்தினதா ஆகிடும்!" ஆறுதலா சொன்னா மனைவி.

'நான் மனசுல நினைச்சது ஆசார்யாளுக்குன்னுதான்.
அம்பாளுக்குன்னு இல்லை. இது அவருக்குத்தான்.
இன்னிக்கு தாமதமானதுக்கு ப்ராயச்சித்தமா, நாளைக்கு
ஒரு வெள்ளிக் கிண்ணத்தை ஆசார்யாகிட்டே
சமர்ப்பிக்கப்போறேன்" கொஞ்சம் அழுத்தமா சொன்னவர்
அந்த அறையில இருந்த ஒரு ஆணியில மாலையை
அப்படியே மாட்டிவைச்சார்.

மறுநாள் கார்த்தால ஆறுமணி இருக்கும்.அந்த ட்ரஸ்டியோட
வீடு இருந்த ஏரியாவே பரபரப்பா இயங்க ஆரம்பிச்சுது.
அதுக்கு காரணம், 'மகாபெரியவா இந்தத் தெருவுல இருக்கிற
பிள்ளையார் கோயிலுக்கு தரிசனத்துக்கு இன்னும் கொஞ்ச
நேரத்துல வரப்போறார்!" அப்படின்னு மடத்து சிப்பந்தி
ஒருத்தர் சொல்லிட்டுப் போன தகவல்தான்.

எல்லாரும் அவசர அவசரமா பூர்ண கும்பம்,புஷ்பம்,ஆரத்தித்
தாம்பாளம், பழங்கள் இப்படி முடிஞ்சதை தயார் பண்ணி
வைச்சுண்டு மகாபெரியவாளை வரவேற்கத் தயாரானா.
சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்துல அந்தப் பகுதிக்கு
வந்தார்,பரமாசார்யா. எப்பவும்போல வேகமான நடை.
மளமளன்னு நடந்தவர், அந்த பக்தர் வீட்டு வாசலுக்கு
வந்ததும், என்னவோ நினைச்சுண்டவர் மாதிரி ஒரு விநாடி
நின்னார். யாருமே எதிர்பார்க்காத வகையில சட்டுன்னு 
உள்ளே நுழைஞ்சவர்,அங்கே ஆணியில் மாட்டியிருந்த 
ரோஜாமாலையை எடுத்தார்.

இது என்னோடது,எனக்குத் தரேன்னு சொன்னது,அப்படின்னு
உரிமையோட எடுத்துக்கற பாவைனல அந்த புஷ்ப ஆரத்தை
எடுத்து சூடிண்டார், மகாபெரியவா, வழக்கமா கொஞ்ச
நேரத்துலயே உதிர்ந்துடக் கூடியது பன்னீர் ரோஜா. ஆனா
முதல்நாள் வாங்கின மாலை இன்னிக்குதான் பூத்த பூவுல
தொடுத்த மாதிரி அப்படியே மலர்ந்து அழகா இருந்தது.
ஒற்றை இதழ்கூட உதிரலை.

நடக்கறதெல்லாம் கனவா? நிஜமான்னுகூட புரியலை
பக்தருக்கு.கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்யம் நிறைஞ்சு
 வழிய அப்படியே கைகளைச் சேர்த்துக் கூப்பினார்.

"என்ன, சந்தோஷமா? எனக்குன்னுதானே வாங்கினே?
நானே எடுத்துண்டுட்டேன்!" சொன்ன பெரியவா,
"ஆமா எனக்குத் தரணும்னு வெள்ளிக் கிண்ணம் ஒண்ணை
எடுத்து வைச்சியே, அது எங்கே?" கேட்க, ஆச்சர்யத்தின்
உச்சத்துக்கே போனார் அந்த பக்தர்.

சட்டுன்னு பூஜை அறைக்குப் போனவர்,அங்கே தயார
எடுத்து வைச்சிருந்த வெள்ளிக் கிண்ணத்தைக் கொண்டு
வந்து மகாபெரியவாகிட்டே சமர்ப்பிச்சார்.

புது மணம் கமழ்ந்த ரோஜாமாலையைத் தரிச்சுண்டு,
பூ மாதிரியே மென்மையான புன்னகையோட அங்கேர்ந்து
புறப்பட்டார், மகாபெரியவா.

தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் 
வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா
சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம்
தரணும்'னு பக்தர் சொன்னதை,பக்கத்துல இருந்து
கேட்டவர் மாதிரி, தானே நினைவுபடுத்தி வாங்கிண்டது
பேராச்சரியம்.

Friday, September 25, 2020

"மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"

கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்--உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம் தாமதமாறதுன்னா உன்னைவிட அதிகமா அவஸ்தைப் பட்டுண்டு இருக்கிற யாருக்கோ உதவறதுக்காக சுவாமி ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும் அவசியம் உனக்கும் அனுக்ரஹம் பண்ணுவார்.)
 
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-10-09-2015 தேதியிட்ட பழைய குமுதம் பக்தி. (ஒரு பகுதி)

கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர், ஒரு சமயம் மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காகவந்திருந்தார். அவர் யார்? எங்கேயிருந்து வரார்ங்கறதெல்லாம்தெரியாது. ஏன்னா, அவர் மடத்துக்கு அடிக்கடி வர்ற ஆசாமி இல்லை.

அவர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்ததுகூட ஏதோ வேலையா மடத்துப் பக்கமா வந்தவர், அப்படியே எட்டிப் பார்த்துட்டுப் போகலாமேன்னுதான். வந்தவர் வரிசையில் நின்னார்.தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார்.

எல்லாம் கடனேன்னு செய்யறமாதிரிதான் இருந்தது. நமஸ்காரம் செஞ்சவர் எழுந்திருந்ததும் பெரியவா அவரைப் பார்த்து, " என்ன சுவாமியெல்லாம் திட்டறதுல இருந்து ஒருவழியா ஓய்ஞ்சுட்டே போல இருக்கு. திட்டியும் பிரயோஜனமில்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக்கூட நிறுத்திட்டே இல்லையா?" அப்படின்னு கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சி. அதோட 'என்னடா இது, நாம எதுவுமே சொல்லலை.ஆனா எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி பரமாசார்யா சொல்றாரே!'ன்னு ஆச்சரியம்.

"பெரியவா! குடும்பம் நடத்தறதே ரொம்ப கஷ்டமான  ஜீவனமாயிடுத்து. .சரியா  வேலையும்  கிடைக்கிறதில்லை. பகவானை வேண்டிண்டு  ஒரு  .பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுடுத்து.
மத்தவாளுக்கெல்லாம் கேட்கறதுக்கு  முன்னாலேயே  குடுக்கிற  சுவாமி  எனக்கு மட்டும்  ஏன்  இப்படிப் பண்றார்.?. அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்"  கண் ஓரத்துல நீர் தளும்ப  தழுதழுப்பா
சொன்னார் அவர்.

பரிவோட அவரைப் பார்த்தார் பரமாசார்யா.

" ஒரு விஷயம் கேட்கிறேன்.கரெக்டா யோசிச்சு சொல்லு. ஒரு ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள்வருவா.சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். சிலருக்கு பல்வலி இவாள்லாம் அங்கே வந்திருக்கறச்சே, பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைக் கூட்டிண்டு வருவா.மாடியில் இருந்து விழுந்து நினைவு தப்பிடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா. இந்தமாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் எல்லாம் என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணணுமோ, யாருக்கு சட்டுன்னு சிகிச்சை  பண்ணலைன்னா அப்பறம் அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவாளைப் பார்க்க போயிடுவா.அதுக்காக சாதரண காய்ச்சல்னோ, தலைவலின்னோ வந்தவாளை டாக்டர்கள் எல்லாம்  அலட்சியப்படுத்தறாங்கறது அர்த்தம் இல்லை. அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை தந்துக்கலாம்.பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது. ஆனா, பாம்புக்கடி பட்டவருக்கோ, விபத்துல சிக்கினவாளுக்கோ உடனடியா மருத்துவம் பார்த்தாகணும்.

சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே யாருக்கு எப்போ உதவணும்கறது தெரியறதுன்னா, பிறவிப்பிணிக்கே சிகிச்சை பண்ணி, அதனால் வரக்கூடிய சங்கடங்களை போக்கக்கூடிய பகவானுக்கு யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்னு தெரியாதா?

உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம் தாமதமாறதுன்னா   உன்னைவிட அதிகமா அவஸ்தைப் பட்டுண்டு இருக்கிற யாருக்கோ உதவறதுக்காக  சுவாமி ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும் அவசியம் உனக்கும் அனுக்ரஹம் பண்ணுவார்.

அதுக்குள்ளே அவசரப்பட்டு, தெய்வத்தை நிந்திக்கிறதும் பூஜை புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகமா பேசறதும் தப்பு இல்லையா?"

பெரியவா சொல்லச்சொல்ல, கடவுளைப்பத்தி தப்பா நினைச்சதும் பேசினதும் தப்புன்னு புரிஞ்சண்டதுக்கு அடையாளமா அந்த ஆசாமியோட  கண்ணுல இருந்து தாரைதாரையா நீர் வடிஞ்சுது. அதுவே அவரோட தவறானஎண்ணத்தை அலம்பித் தள்ளி அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும்கறது நிச்சயம்.

மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகானை பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.

அவருக்கு மட்டுமல்லாம அன்னிக்கு ஆசார்யா தரிசனத்துக்கு வந்தவா எல்லாருக்குமே-இது பரமாசார்யா நடத்தின பாடமாகவே அமைஞ்சதுன்னுதான்சொல்லணும்

Wednesday, September 23, 2020

"கஷ்ட காலத்தில் அந்திமக் கிரியைக்கு உதவி செய்த (அக்காலத்தில் இரண்டாயிரம் ரூபாய்) பெரியவா."

பெரியவாளுக்கு லட்சியம் முக்கியம்;
லட்சங்கள் அல்ல!.

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஒரு குடியானவக் குடும்பம். செல்வம் செழிப்புடன் இருந்த
காலம் போய்,ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

அந்தக் குடும்பத்தில் ஒரு மூதாட்டி இறந்து போய் விட்டார்.
அவளுடைய கடைசிப் பயணத்துக்கும்,தகனக் கிரியைக்கும்
தேவையான பணம் இல்லை. மிகவும் ஆடம்பரமாக-பந்தல்,
மேளம்.தாரை- தப்பட்டை,பல்லக்கு,சங்கு ஒலி-இறுதி
 யாத்திரையை சம்பிரதாயமாக நடத்தி வரும் பரம்பரை.

பிறரிடம் கடன் கேட்பதும் கௌரவக்குறைவு.குடும்பத்தினர்
செய்வதறியாது தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீமடத்தினிடம் அபார பக்தியுடைய குடும்பமாதலால்,
எல்லோருக்கும் தெரிந்த மனிதர்கள்.

மடத்தின் பாராக்காரன், இன்னொரு பாராக்காரனிடம்
வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தான்.
"ரொம்ப கஷ்டப்படறாங்க, அண்ணே. எவ்வளவு செல்வாக்கா
இருந்த குடும்பம்! இப்போ கிழவி பொணத்தை எடுக்கக்கூட
முடியல்லே..."

பக்கத்து அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பெரியவா
செவிகளில் பாராக்காரனின் சொற்கள் விழுந்தன.

உடனே, கார்வார் ராமமூர்த்தி அய்யரைக் கூப்பிட்டு,
கிழவி மறைந்துபோன வீட்டுக்குச் சென்று, துக்கம்
விசாரித்துவிட்டு, 'இரண்டாயிரம் ரூபாய் பணம்
கொடுத்துவிட்டு வரச் சொன்னார்கள்.

கிழவியின் பையனுக்குக் கண்களில் வெள்ளமாய்
கண்ணீர் பெருகிற்று. - அன்னை மறைந்ததால் அல்ல;
ஆசார்யாரின் பெருங்கருணையை எண்ணிப் பார்த்ததால்!

அந்தக் காலத்து இரண்டாயிரம் ரூபாய் என்பது
இந்தக் காலத்து அரை லட்சத்துக்குச் சமம்.

பெரியவாளுக்கு லட்சியம் முக்கியம்;
லட்சங்கள் அல்ல!.

Tuesday, September 22, 2020

"சஹஸ்ர புருஷ போஜனுமும்,ஆசார அனுஷ்டானமும்"

விதியை மீறாத பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
​நன்றி-28-12-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)
 
ஒரு சமயம் ஸ்ரீமடத்துல சஹஸ்ர புருஷ போஜனம்
நடத்தலாம்னு மகாபெரியவா ஒரு திட்டத்தைச் சொன்னார்.

வேத மந்திரங்களை முறைப்படி கத்துண்டவாளும்,
கொஞ்சமும் வழுவாம ஆசார அனுஷ்டானங்களைக்
கடைப்பிடிக்கறவாளுமான ஆயிரம் வேதவித்துகளுக்கு
ஒரே நாள்ல போஜனம் செஞ்சுவைக்கறதைத்தான் சஹஸ்ர
புருஷ போஜனம்னு சொல்வா.இதை நடத்தி வைச்சா,நாடும்
மக்களும் க்ஷேமமா இருப்பா. அப்படிங்கறது ஐதிகம்.

இது என்ன பெரிய விஷயம்? ஒரே நாள்ல ஆயிரம்பேருக்கு
அன்னதானம் பண்ணணும் அவ்வளவுதானே? அப்படின்னு
தோணலாம்.

ஆனா, இதை செஞ்சுவைக்கறது ரொம்பவே கஷ்டம்.
ஏன்னா, ஒரே சமயத்துல ஆயிரம் வேதவிற்பன்னர்கள்
கிடைக்கறது அபூர்வம். அப்படியே தேடித்தேடி
கண்டுபிடிச்சாலும் அவா எல்லாரும் சந்தியாவந்தனம்
மாதிரியான ஆசார அனுஷ்டானங்களை ஒரு போதும்
தவறவிடாம கடைப்பிடிக்கறவாளங்கறதைத் தெரிஞ்சுண்டு
அதுக்கப்புறம்தான் அவாளை போஜனத்துக்கு தேர்வு
செய்ய முடியும்.

சரி, ஆள் கிடைச்சுட்டா மட்டும் போதுமா? பந்தியில்
உட்கார்ந்து சாப்பிடறவா, என்ன கேட்டாலும் குடுக்கணும்.
அதாவது ரெடிமேட் மெனு தயார் பண்ணிவைச்சுட்டு
இதுதான் லிஸ்ட்.இதுல இருக்கற ஐட்டமெல்லாம்
கிடைக்கும்னு மட்டும் சொல்ல முடியாது. போஜனத்துக்கு
உட்கார்ந்துட்டு ஒருத்தர் திடீர்னு எனக்கு இந்தப் பச்சடி
வேண்டாம்.அதுதான் வேணும்னு வேற எதையாவது
கேட்டுட்டார்னா, அதைக் குடுத்தாகணும் அப்போதான்
அது பூர்த்தியாகும்.

சஹஸ்ர போஜனம் செய்யறதுக்காகத் தீர்மானிச்ச நாள்
 நெருங்கிண்டே இருந்தது.வேத  பாட சாலைகள் அங்கே
இங்கேனெல்லாம் சொல்லி வைச்சும் ஆயிரம் பேர்
கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்தது.விஷயத்தை
மெதுவா மகாபெரியவாகிட்டே சொன்னா மடத்துல
இருக்கறவா.

மடத்தோட ஸ்ரீகார்யத்தை (செயலாளர்) கூப்டார்
மகாபெரியவா.பவ்யமா வந்து முன்னால நின்னார் அவர்.

"இது வேதம் படிச்சவாளுக்கு நடத்தற சஹஸ்ர புருஷ
போஜனம்.அப்படின்னா,போஜனத்துல ஸ்ரீமடத்துல
உள்ள வேதம் படிச்சவாளும் கலந்துக்கலாம் இல்லையா?
விதிமுறைகள் எல்லாம் தெரிஞ்சும் தெரியாதவர் மாதிரி
கேட்டார் பரமாசார்யா.

"கலந்துக்கலாம் பெரியவா.மடத்துல இருக்கறவா ஆசார
அனுஷ்டானத்தையும் கடைப்பிடிக்கறவாதானே,அதனால
கலந்துக்கலாம்!" மென்மையாகச் சொன்னார் ஸ்ரீகார்யம்.

நீ ஒண்ணு பண்ணு...வேத வித்துக்கள் எத்தனை பேர் 
வராளோ, அத்தனைபேரோட ஸ்ரீமடத்துல உள்ள வேத
பண்டிதர்களையும் போஜனத்துல பங்கெடுத்துக்கச்
சொல்லு.அப்படியும் எண்ணிக்கை சரிவரலைன்னா, ஒரே
நாள்ல நடத்தறதுக்கு பதிலா என்னிக்கு சஹஸ்ரம் பூர்த்தி
ஆறதோ,அன்னிக்கு வரைக்கும் நடத்தறதுக்கு ஏற்பாடு
பண்ணிடு. உத்தரவிட்டார் ஆசார்யா.

போஜனத்தன்னைக்கு கார்த்தால, மகாபெரியவா 
நித்யப்படியான சந்த்ர மௌளீஸ்வர பூஜையை
முடிச்சுட்டு ,தீர்த்தப் பிரசாதத்தை விநியோகம் 
பண்ணினதும், போஜனத்தை ஆரம்பிக்கலாம்னு
தீர்மானமாச்சு.

மகாபெரியவா திடீர்னு ஒரு உத்தரவைப் போட்டார்.
"தான் பூஜை பண்ணி முடிச்சதும் தனக்கு முன்னால ஒரு
திரை விரிக்கணும்னும்.போஜனத்துக்கு வந்திருக்கறவா
அந்தத் திரைக்குப் பின்னால வரிசையா வந்து அவாளோட
நாமதேயத்தைச் சொல்லிட்டு, தீர்த்தம் வாங்கிண்டு
போஜனத்துக்குப் போகலாம். இதுல அல
ஸ்ரீமடத்துக்காராளுக்கும் விலக்கு கிடையாது. அவாளும் 
வரணும்!" அதாவது மகாபெரியவா அவாளைப்
பார்க்காமலே பேரை மட்டும் கேட்டுட்டு தீர்த்தம் குடுப்பார்.

ஆசார்யா கட்டளைக்கு அப்பீல் ஏது?
வந்திருந்தவா எல்லாரும் அதே மாதிரி தீர்த்தம் வங்கிண்டா
ஸ்ரீமடத்துக்காராளும் வரிசையா வந்தா. அப்போ ஒருத்தர்
தன்னோடபேரைச் சொல்லி தீர்த்தத்துக்காக கையை
நீட்டினதும், " நீ போஜனத்துல கலந்துக்க வேண்டாம்.
அதுக்குப் பதிலா,அங்கே எல்லாருக்கும் பரிமாறற 
வேலையைப் பாரு!" சொல்லிட்டு தீர்த்தத்தைக் குடுத்தார்.

அந்தப் பண்டிதருக்கு அப்படியே கண் கலங்கித்து. " நாம
என்ன தப்பு செஞ்சோம்? எதனால பந்தியில உட்காரக்
கூடாதுன்னு பெரியவா கட்டளையிட்டா?" இந்த மன
வருத்தத்தோடேயே எல்லாருக்கும் பரிமாறி
முடிச்சுட்டு சோர்வா வந்து மடத்துல உட்கார்ந்தார்.

வழக்கப்படி ஸ்ரீமடத்துலயும் ஆஹாரம் பண்ணாம
பட்டினியாவே உட்கார்ந்து கவலையா யோசிச்சுண்டே
இருந்த அவர், "என்ன உபவாசம் இருக்கறதுன்னு
தீர்மானிச்சுட்டியா?" அப்படின்னு மகாபெரியவாளோட
குரல் கேட்கவும் சட்டுன்னு நிமிர்ந்தார்.

பக்கத்துல நின்னுண்டிருந்த பெரியவாளைப் பார்த்ததும்
அதுவரைக்கும் அடக்கி வைச்சுண்டு இருந்த துக்கம்
அப்படியே பீறிட ஓன்னு அழுதார்.

"பெரியவா நானும் முறைப்படி வேதமெல்லாம்
படிச்சுட்டுதானே ஸ்ரீமடத்துல இருக்கேன். மத்த
எல்லாரையும் போஜனத்துல கலந்துக்கச் சொல்லிட்டு
என்னை மட்டும் விலக்கினா, எல்லாரும் என்னை இழிவா
பார்க்கமாட்டாளா? உங்க உத்தரவுப்படிதானே என்னையும்
போஜனுத்துக்குத் தேர்ந்தெடுத்தா? அப்புறம் ஏன் என்னை
போஜனம் பண்ண வேண்டாம்னு சொன்னேள்?"
தாயார்கிட்டே உரிமையோட கேட்கற குழந்தை மாதிரி
கேவிக்கேவி அழுதுண்டே கேட்டார்.

வாத்சல்யமா அவரைப்பார்த்தார் ஆசார்யா.
"இப்போ நீ வேதனைப்படற அளவுக்கு என்ன ஆயிடுத்து?
சஹஸ்ர புருஷ போஜனத்துல உட்கார்ந்து போஜனம்
பண்ணறது ஒரு பெருமைதான். ஆனா...அதை பண்ணி
வைக்கறது எத்தனை புண்ணியம் தெரியுமோ? நீ அதுல
உட்கார்ந்து போஜனம் பண்ணியிருந்தா ஒனக்கு பெருமை
கிடைச்சிருக்கும்கறது வாஸ்தவம்தான். ஆனா, ஒனக்குப்
புண்ணியம் கிடைக்கணும்னுதான் உன்னை எல்லாருக்கும்
பரிமாறுன்னு சொன்னேன்.

சஹஸ்ர போஜனம் செஞ்சு வைக்கறதுக்கான வசதி ஒனக்கு
கிடையாது. ஆனா, பரிமாறினதால ஒனக்கு புண்ணியம்
கிடைச்சுடுத்து!" மகாபெரியவர் கொஞ்சம் நிறுத்தினார்.

அந்த நபரோட கண்ணுல இப்போ சோகத்துக்கு பதிலா
பிரகாசம் தெரிஞ்சுது.ஒரு மாதிரி நெகிழ்ச்சியோட
பரமாசார்யாளைப் பார்த்தார்.

"என்ன கொஞ்சம் தெளிவடைஞ்சியா? இன்னொரு
விஷயமும் சொல்றேன் கேளு!" சொன்ன மகாபெரியவா
தொடர்ந்தார். "ஸ்ரீமடத்துக் கார்யங்களுக்காக நேரம் காலம்
இல்லாம நினைச்சப்ப எல்லாம் உன்னை, அங்கே போ,
இங்கே போ,இதை வாங்கிண்டு வா!அதைக் குடுத்துட்டு வா
என்று அனுப்பறது வழக்கம்தானே? அதெல்லாம் நீ
யாருக்காகப் பண்ணறே? ஸ்ரீமடத்துக்காகா அதாவது
எனக்காகன்னு வைச்சுப்போமே.

அந்த மாதிரி சமயங்கள்ல நீ நித்ய கர்மாவை சரியா செய்ய
முடியறதில்லைன்னு நீயே வருத்தமா சொல்லி இருக்கே.
அது சூழ்நிலையால ஏற்பட்டதுன்னாலும் பிசகினது
பிசகினதுதானே?

சஹஸ்ர புருஷ போஜனத்துல கலந்துக்கறவா
வேதமந்திரங்களைப் படிச்சவாளா இருந்தா மட்டும் 
போதாது. நித்யகர்மா அனுஷ்டானங்களை பிசகாம
அனுஷ்டிக்கறவாளாவும் இருக்கணும்கறதுதானே விதி?
உன்னைக் கலந்துக்க நான் அனுமதிச்சா அந்த விதியை
மீறினதா ஆகும். கலந்துண்டா உனக்கு பாவம் வரும்.

என்னால ஒனக்கு எதுக்குப் பாவம் வரணும்னுதான்,
ஒன்னை கலந்துக்க வேண்டாம்னு சொன்னேன்.
பாவம் சேரலை. புண்ணியமும் கிடைச்சுது. என்ன
புரிஞ்சுதா? போ, போய் உபவாசத்தை முடிச்சுண்டு
மடத்துல போஜனம் பண்ணு!"

விளக்கம் சொல்லி பரிவோட சாப்பிடச் சொன்ன
பரமாசார்யாளை சாஷ்டாங்கமா நமஸ்காரம்
செஞ்சுட்டு, சந்தோஷமா போஜனம் பண்ணப் போனார்.
அந்த நபர்.

Sunday, September 20, 2020

'நான் பாவி...' என்று முணுமுணுத்த பெரியவா

(பெரியவா சொற்களைக் கேட்காத நாம்தான் பாவிகள்!)

ஒரு சிறு பதிவு.
சொன்னவர்;எம்.சுப்புராம சர்மா
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
பெரியவா ஒரு சந்தர்ப்பத்தில் சோகமாய்
இருப்பதுபோல காணப்பட்டார்கள். பெரியவாள்
திருமுகத்தில் கவலையின் ரேகையைக் காணவே
முடியாது. ஆனால் இப்போது ஏன் சற்று மாறினாற்போல
இருக்கிறது?. அணுக்கத் தொண்டர்களுக்குத் தவிப்பு.
யார் போய் கேட்க முடியும்?.

'நான் பாவி...' என்ற முணுமுணுப்புக் கேட்டது.

தொண்டர்கள் வேகமாக வந்து அருகே நின்றார்கள்.

"வேதரக்ஷணம் பண்ணுவதாகச் சொல்லி பல 
வித்வான்களைத் தயார் செய்தேன். ஆனால்
அத்யயனம் செய்த வித்வான்கள் இங்கே குருகுலம்
அமைக்கவில்லை. நிறையப் பணம் கிடைக்கிறது என்று
ஆசாரத்தைக் கைவிட்டு வெளிநாடு போய்விடுகிறார்கள்.
இந்தத் தவறு என்னால்தானே? டேப்ரிகார்டரில் வேறு
பதிவு செய்துகொள்ள உடன்படுகிறார்கள். இது தப்பு என்று
அவர்களுக்குத் தோன்றவில்லையே? வேத சப்தங்களை
டேப் செய்யக்கூடாது என்கிறேன். கேட்டால்தானே?
அதனால்தான் சொல்கிறேன் - நான் பாவி..."

பெரியவா சொற்களைக் கேட்காத நாம்தான் பாவிகள்!

Saturday, September 19, 2020

"எங்..காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே"..-பெரியவா

வாட்சைப் பாக்காமலேயே கரெக்டா மணி மூணரைன்னு)
 
.(ஒரு பஸ் போவதைக் கூட கவனிச்சு அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல் தினமும் கவனிச்சு, அதையும் ஸ்லாகித்துக் கூறும் நுணுக்கமான பேரறிவு, பெரியவாளுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.)
பெரியவா என்றாலே பேரறிவுதானே!! P for "Perfection " -  என்பதைவிட P for Periyava என்று சொல்லலாம்! )

கட்டுரையாளர்-எஸ்.ரமணி அண்ணா.
புதுக்கோட்டையில் முகாம். மெயின் ரோடில் இருந்த பெரிய சத்திரத்தில் தங்கியிருந்தா பெரியவா. இரவுகால பூஜை முடிந்ததும் தனக்கு கைங்கர்யம் பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டு,

" அப்பா நாகு! நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ!" என்றார்.

"உத்தரவு பெரியவா. சரியா மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா"என்றான் பவ்யமாக.

நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே "மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்வளவு நன்னா இருக்காதுங்கறதால....."ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லறேன்னு சொல்லறியாக்கும்? சரி அப்பிடியே பண்ணு"

ராத்திரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று. பெரியவாளும் சயனத்துக்கு போய் விட்டார். நாகுவுக்கு ஒரே கவலை! அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை! அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா "பூணூல்" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச்! அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்? என்ன பண்ணுவது?

நேராக போய் தன் பொட்டியில் இருந்த வாட்சை எடுத்துக் கொண்டான். சத்தமில்லாமல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ண ஆரம்பித்தான். பல தடவை பண்ணினான். சரியாக மணி 3 . 30 ! கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" என்று நாமாவளி போட்டான்.

சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் "விஸ்வரூப" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம்!! ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான்! ஆனால், பெரியவாளின் மேல் இருந்த ப்ரேமை அவனுக்கு பலத்தை குடுத்தது.

நான்காவது நாள் இரவு, வேஷ்டியில் வாட்சை சொருகிக் கொண்டு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன், பாவம், தன்னை அறியாமல் தூங்கி விட்டான்!

"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது! தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான்! எதிரே கருணை ததும்ப சிரித்தபடி, அவனை தேடி வந்து விஸ்வரூப தரிசனம் தந்தான் அந்த பரமேஸ்வரன்!!!

மிகுந்த வாத்சல்யத்துடன் "கொழந்தே! மணி சரியா மூணரை ஆறதுடா........ப்பா! அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு! பாவம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ?" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார்.

வாட்சை பார்த்தால் மூணரை! இவனுக்கோ ஒரே ஆச்சர்யம்! வாட்சைப் பாக்காமலேயே பெரியவா எப்படி கரெக்டா மூணரை..ன்னு சொன்னார்!!

மறுநாள் பக்கத்தில் ஒரு பித்தளை சொம்பில் ஜலத்தோடு அமர்ந்தவன், கண்ணில் ஜலத்தை விட்டு அலம்பிக் கொண்டு பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன் ரெண்டரை மணி வரை ஒட்டிவிட்டான். பாவம். தன்னையறியாமல் தூங்கிவிட்டான். முந்தின நாள் போலவே பெரியவா வெளியில் வந்து இவன் தூங்குவதையும், பக்கத்தில் சொம்பில் ஜலம் இருந்ததையும் கண்டு சிரித்துக் கொண்டே நாமாவளி போட்டு அவனை எழுப்பினார். மணி சரியாக மூணரை!!ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகு! அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான்

. " என்னடா....நாகு! நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே!! என்ன தெரியணும்? கேளு..."

"அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா..........."

"எனக்கு தெரியும். ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே..........பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரை மணிக்கு எழுந்துண்டு வரார்? அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே!......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே? இல்லியா பின்னே?"

"ஆமா பெரியவா. என்னன்னே தெரியலை...........ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிடறேன். பெரியவாதான் சரியா மூணரைக்கு ஏந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள்...எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. மூணரை மணி....ன்னு சரியா எப்டி பெரியவா.........."

அவன் முடிப்பதற்குள் "ஏதாவது கர்ண யக்ஷிணி எங்..காதுல வந்து "மணி மூணரை " ன்னு சொல்லறதோன்னு சந்தேகமோ ஒனக்கு?" கடகடவென்று சிரித்தார்.

"எங்..காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே.........மணி மூணரைன்னு எங்..காதுல வந்து சொன்னது "பஸ்". அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ் பஸ்!! ஆச்சர்யப்படாதே!! மொத நாள் சரியா மூணரைக்கு நீ "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லி எழுப்பினேல்லியோ?.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு! அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் ! மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வாஸ்தவம்தான்! மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன்! நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு!" பெரியவா மிகவும் ரசித்துச் சிரித்தார்.

ஒரு பஸ் போவதைக் கூட கவனிச்சு அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல் தினமும் கவனிச்சு, அதையும் ஸ்லாகித்துக் கூறும் நுணுக்கமான பேரறிவு, பெரியவாளுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை......

ஏனென்றால், பெரியவா என்றாலே பேரறிவுதானே!! P for "Perfection " - என்பதைவிட P for Periyava என்று சொல்லலாம்! நாமும் இந்த குணத்தில் துளியையாவது நம்முடைய தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியவா அனுக்கிரகம் பண்ண பிரார்த்திப்போம்."

Thursday, September 17, 2020

"எனக்கே மூணு நாளா ஜுரம்-!"-பெரியவா

( நீ உடம்பு தேவலையாகணும்னு எங்கிட்ட வந்திருக்கே. 'எனக்கே மூணு நாளா ஜுரம்'. இது பூசாரியும் போலீஸும் சந்திச்சிண்ட மாதிரி இருக்கு!" என்று சிரித்தாராம். பெரியவா. கிழவரும் சிரித்துவிட்டார்.--பெரியவா சொன்ன கதை)
 
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நகைச்சுவைக்கும் பெரியவா பெயர் எடுத்தவர். ஒரு நாள்  இவர் படுத்துக்கொண்டிருக்கும்போது கிழவர் ஒருவர் வந்தார்.

"பிரபு! என்னால் ஒண்ணுமே முடியலை: அடிக்கடி ஜுரம் வருது: ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு!" என்று பெரிய பட்டியல் போட்டு, பெரியவாதான் காப்பத்தணும்!" என்று கும்பிட்டார்.

பெரியவா முனகிக் கொண்டே " ஒக்காரு! உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா.." என்று ஆரம்பித்தார்:

"ஒரு கிராமத்திலே, கோயிலில் குறி சொல்லும் பூசாரி ஒருவர் இருந்தார். அவர் சொன்னதெல்லாம் பலித்துவிடும்.அதே ஊரில் இருந்த ஒரு போலீஸ்காரர், பூசாரியின் நெருங்கிய நண்பன்.

ஒரு நாள் அந்த பூசாரி கோயிலைத் திறந்தார். பல சாமான்கள் திருட்டுப் போய்விட்டதைப் பார்த்தார். உடனே தன் போலீஸ் நண்பனிடம் தெரிவிக்க ஓடினார். அதே சமயம் அந்த போலீஸ்காரர் பூசாரியைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தார்.. "தேடிப்போன மூலிகை காலில் சுத்திண்டதுபோல நீயே வந்துட்டியே!" என்று பூசாரி சந்தோஷப்பட்டார். "கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல நீங்க வந்துட்டிங்களே!" என்று போலீஸ்காரனும் சந்தோஷப்பட்டார்.

"என்னது, நீ என்னைத் தேடி வரயா? என்ன ஆயிற்று?" என்றார்.

பூசாரி. "என் சைக்கிளைக் காணோம்: யார் எடுத்திருப்பான்னு கொஞ்சம் குறி பார்த்துச் சொல்லணும். அதுக்குத்தான் ஓடி வரேன்!"என்றார் 

அவர்!. "அட...ராமா! நானே கோயில் சாமான்களைக் காணோம்நீ கண்டு பிடித்துக் கொடுப்பாய் என்று, உன்னைத் தேடிவந்துண்டிருக்கேன். நீ இப்படிச் சொல்றயே?" என்றாராம்.

இது போலத்தான், நீ உடம்பு தேவலையாகணும்னு எங்கிட்ட வந்திருக்கே. 'எனக்கே மூணு நாளா ஜுரம்'. இது பூசாரியும் போலீஸும் சந்திச்சிண்ட மாதிரி இருக்கு!" என்று சிரித்தாராம். பெரியவா. கிழவரும் சிரித்துவிட்டார்.

Tuesday, September 15, 2020

"எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்!"

("யோகேஸ்வரர் --யாகேஸ்வரர்..ஆன கதை-நள தமயந்தி வரலாறு மூலம் காஞ்சிப்பெரியவரின் விளக்கம்)
மே 21,2015,.தினமலர்.

எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்' என்ற பழமொழி உண்டு. இதற்கு நள தமயந்தி வரலாறு மூலம் காஞ்சிப்பெரியவர் விளக்கம் அளித்தார்.

சமஸ்கிருதத்தில் புலமை மிக்க மன்னர் ஹர்ஷர், நளன் வரலாற்றை "நைஷதம்' என்ற பெயரில் எழுதியுள்ளார். நிஷத நாட்டு மன்னர் என்பதால் "நைஷதம்' என்று பெயரிடப்பட்டது.

நேர்மையும், ஒழுக்கமும் கொண்டவன் நளன். அவன் அழகைக் கேள்விப்பட்ட தமயந்தி நளனைப் பார்க்காமலே காதல் கொண்டாள். ஆனால், இதை அறியாத தமயந்தியின் தந்தை பீமன்சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். பூலோக அரசர்கள் மட்டுமில்லாமல் தேவர்களும் தமயந்தியின் அழகு கண்டு மயங்கினர். தமயந்தி நளனை விரும்பும் விஷயம் அறிந்த தேவர்கள் தாங்களும் நளன் போல உருமாறினர். சுயம்வர மண்டபத்தில் ஐந்து நளன்கள் அமர்ந்திருந்தனர். மணப்பெண் தமயந்திக்கு சரஸ்வதி தேவி ஒவ்வொரு ராஜகுமாரன் பற்றியும் விளக்கம் அளித்தாள்.

அதில் இருந்த காஞ்சிபுரம் மன்னர் பற்றி, ""இவர் காஞ்சியில் கடல் போல பெரிய குளம் உருவாக்கியுள்ளார். ஸ்படிகம் போல தூய நீர்  நிரம்பிய, அந்தக் குளத்தின் அழகை வர்ணிக்க முடியாமல் கவிஞர்களே மவுனமாகி விட்டனர். அதில் இருந்து தெளித்த நீர்த்துளி சந்திரனாக மாறியதோ என எண்ணத் தோன்றும். ஸ்படிக நிறம் கொண்ட யோகேஸ்வரரின் அபிஷேகத்திற்கு இக்குளத்து நீரே பயன்படுகிறது'' என்றாள்.

யோகேஸ்வரர் என இங்கு குறிப்பிட்டது  காஞ்சி சங்கர மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வர ஸ்படிக லிங்கமே. இதை ஆதிசங்கரர் கைலாயத்தில் சிவனிடம் இருந்து பெற்றார்.

ஹர்ஷரின் நைஷதத்தில், "யோகேஸ்வர' என்றே இருக்கிறது. ஆனால், மூல ஸ்லோகத்தைப் பிரதி எடுத்தவர்கள் கவனக்குறைவாக  "யாகேஸ்வர' என்று குறிப்பிட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தான், "எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்' என்ற பழமொழி வந்தது.

காஞ்சிபுரம் முழுவதிலும் ஆராய்ச்சி செய்தாலும் "யாகேஸ்வரர்' என்றொரு ஸ்படிகலிங்கம் இருப்பதாக தெரியவில்லை.

அதன் பின், நைஷதத்திற்கு உரை எழுதியவர்கள் "யோகேஸ்வர' என்று மூலத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு தவறைச் சரி செய்தனர்

Sunday, September 13, 2020

"ஸ்வாமிகள் எங்கே".பெரியவாளைப் பார்த்து தம்பதிகள்"

"சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை"-பெரியவா
(பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும். அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத் 
தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்! நமக்கும்தான்.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பஞ்சாங்கத்தில் 'வபன பௌர்ணமி' என்று சில பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். 
ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் அன்றைய தினம்தான் க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது சம்பிரதாயம்.

ஒரு வபன பௌர்ணமியன்று மகா பெரியவாளுக்கு கடுமையான காய்ச்சல்.அதனால் வபனம் செய்து கொள்ளவில்லை.ஒரு வபன பௌர்ணமி தவறினால், 
அடுத்த வபன பௌர்ணமி வரை காத்துக்கொண்டிருக்க
வேண்டியதுதான்.

காய்ச்சல் காரணமாக முடி மழித்துக் கொள்ளாததால், 
பெரியவாளுக்கு தலைமுடியும், தாடியும் மிகவும் வளர்ந்துவிட்டன.

அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில்,ஒரு மரத்தடியில் அமர்ந்து பெரியவாள் ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது,ஒரு தம்பதிகள் அவசரமாக தரிசனத்துக்கு 
வந்தார்கள். ஏராளமான முடியுடனிருந்த பெரியவாளை
அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை யாரோ ஒரு சந்நியாசி என்று நினைத்து அவர்களைப் பார்த்தே,"ஸ்வாமிகள் எங்கே?" என்று கேட்டார்கள்.

பெரியவாள் கொஞ்சமும் பதற்றப்படாமல், "சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை" என்று, இரு பொருள் தொனிக்கப் பதில் கூறினார்கள்.

வந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. சுவாமிகளை தரிசிக்க வேண்டும் என்று ஆவலுடன் 
வந்தால், அவர் இருக்குமிடமே தெரியவில்லையாமே

எதிரே வந்த ஒரு தொண்டரிடம் விசாரித்தார்கள்.

அவர் மரத்தடியிலிருந்த பெரியவாளை சுட்டிக்காட்டி, "அதோ இருக்காளே!" என்று கூறியதும்,தம்பதிகளுக்கு
உடல் வெலவெலத்து விட்டது.

"எவ்வளவு பெரிய அபசாரம் செய்துவிட்டோம்?" என்று தவித்துக்கொண்டிருந்தபோது, பெரியவாளே அவர்களை கூப்பிட்டு அருகில் உட்காரச் சொன்னார்கள்

"தாடி ரொம்பவும் வளர்ந்துபோச்சு! அதனாலே என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லே! நான் தான்
உங்களை பயமுறுத்தியிருக்கேன்! பரவாயில்லை..." என்று அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படும் வரை
சமாதானமாகப் பேசி,பிரசாதம் கொடுத்தார்கள்.

பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும்.

அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத்  
தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!

நமக்கும்தான்.

Saturday, September 12, 2020

சூட்சும ரூபத்துல அற்புதம் நிகழ்த்திய மகாபெரியவா

"என்ன ஒன்னைப் பார்த்துக்க யாரும் இல்லையேன்னு
நினைச்சுண்டு இருக்கியா? நான் இருக்கேன் நீ பயப்படாதே.
எழுந்திருந்து உட்காரு!"
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
​நன்றி-11-01-2018 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)
 
மகாபெரியவா மேல பரமபக்தியுள்ள சாஸ்திரிகள் குடும்பம்
ஒண்ணு சென்னையில இருந்தது. அந்தக் குடும்பத்துல
ஒருத்தரான அவர் தம்பிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப்
போயிடுத்து.
 
அவசர அவசரமா ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்த்தா.
ரெண்டு மூணுநாள் என்னென்னவோ பரிசோதனையெல்லாம்
பண்ணிட்டு,இனி இவர் எழுந்து உட்கார்றதே சந்தேகம்.
அநேகமா ஒருவாரமோ,பத்துநாளோதான் இருப்பார்.
அப்படின்னு  சொல்லிட்டா டாக்டர்கள்.

இடியே விழுந்தமாதிரி இருந்தது அந்தக் குடும்பத்துக்கு.
அதுலயும் அந்த நோயாளியோட அண்ணா ரொம்பவே
தவிச்சுட்டார். ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா,தன்னோட
தம்பி பொழைச்சு எழுந்துட மாட்டானான்னு அவருக்குள்ளே
ஒரு  மனப்போராட்டமே நடந்தது. "என்ன செலவானாலும்
பரவாயில்லை என் தம்பியைக் காப்பாத்துங்கோ!"ன்னு
டாக்டர்கள்கிட்டேயெல்லாம் கெஞ்சினார்.எந்தெந்த
தெய்வமெல்லாம் நினைவுக்கு வந்துதோ, அந்தந்த
தெய்வத்துக்கிட்டேயெல்லாம் மனசுக்குள்ளே வேண்டினார்.

அந்த சமயத்துல தற்செயலா யாரோ ஒருத்தர்,மகாபெரியவா
யாத்திரை முடிஞ்சு வந்து இப்போ காஞ்சிபுரத்துலதான்
இருக்காளாம்!" அப்படின்னு சொன்னது அவரோட காதுல
விழுந்திருக்கு. உடனே அவரோட மனசுக்குள்ளே ஒரு
பொறிதட்டியிருக்கு.

'ஆபத்பாந்தவனையே பக்கத்துல வைச்சுண்டு இப்படிக்
கலங்கிண்டு இருக்கோமே! நேரா அந்த நடமாடும் தெய்வத்துக்
கிட்டேயே தம்பியைக் கூட்டிண்டு போவோம். அவர் என்ன
சொன்னாலும் சரி!' அப்படின்னு நினைச்சவர் உடனடியா
புறப்படத் தயாரானார்.ஆனா, டாக்டர்களும் குடும்பத்துல
மத்தவாளும் பாதிக்கப்பட்டவரோட உடல் நிலை அதுக்கு
ஏத்த மாதிரி இல்லைன்னு சொல்லித் தடுத்துட்டா.

"சரி, தம்பியைத்தானே கூட்டிண்டு போகக் கூடாது? 
நான் மட்டும் போய் பெரியவாளைப் பார்க்கிறேன்!" -அண்ணா.

அவர் புறப்பட்டுட்டாரே தவிர, அவ்வளவு சீக்கிரமா அவரால
காஞ்சிபுரத்துக்குப் பயணப்பட முடியலை. ஏன்னா, இப்போ
மாதிரி அப்போ வாடகைக் கார் மாதிரியான வசதியெல்லாம்
சட்டுனு கிடைச்சுடாது. போக்குவரத்துக்கான பஸ் வசதியும்
குறிப்பிட்ட நேரத்துல மட்டும்தான் உண்டு. அதனால ரொம்ப
நேரம் காத்துண்டு இருந்தவர்,கிட்டத்தட்ட சாயந்திரம் 
நெருங்கற சமயத்துல தன்னோட நண்பர்கள்கிட்டே உதவி
கேட்டார்.அவா எப்படியோ ஒரு காரை ஏற்பாடு செஞ்சு
அனுப்பிவைச்சா. அதுல ஏறி காஞ்சிபுரத்துக்குப்
புறப்படறச்சே கிட்டத்தட்ட ஆறேழு மணி ஆயிடுத்து.

பரபரன்னு புறப்பட்டார் சாஸ்திரிகள். கார் வேகமா
காஞ்சிபுரத்தை நோக்கி போக ஆரம்பிச்சுது.அதே சமயம் 
அங்கே ஸ்ரீமடத்துல ஒரு அற்புதம் நடந்தது. ஆசார்யாளோட 
தரிசன நேரம் முடியறதுக்கு அன்னிக்கி கிட்டத்தட்ட 
ஒன்பதரை மணி ஆயிடுத்து. அதுக்கப்புறம் மடத்துல 
தங்கறவாளைத் தவிர மத்தவா எல்லாரும் புறப்பட்டுட்டா.
வழக்கம்போல மடத்தோட வாசக்கதவைச் சாத்திட்டு பூட்டுப் 
போடப் போனார், வாசல் காவல்காரர்.

அந்த சமயத்துல "கதவை சாத்த வேண்டாம். பரமாசார்யா
ஒன்னைக் கூப்பிடறார்!" தொண்டர் ஒருத்தர் வாட்ச்மேன்
கிட்ட சொல்ல, அவர் வேகமா உள்ளே போய்,ஆசார்யா
முன்னால பவ்யமா நின்னார்.

"இன்னும் கொஞ்ச நேரத்துக்கு கதவைச் சாத்த வேண்டாம்.
மெட்ராஸ்லேர்ந்து ஒருத்தர் இங்கே வந்துண்டு இருக்கார்.
அவர் வந்ததும் சாத்திக்கலாம்" சொன்னார் மகாபெரியவா.

சரின்னுட்டு வாசலுக்குப் போனார் காவற்காரர். சுமார்
அரைமணி நேரம் ஆகியிருக்கும்.வேகவேகமா மடத்து
வாசல்ல வந்து நின்னது சாஸ்திரிகள் வந்த கார்.

அதுலேர்ந்து பரபரப்பா கீழே இறங்கினார் சாஸ்திரிகள்.
வழியில ஏதோ ஊர்வலம் போனதால வர்றதுக்கு
இவ்வளவு நேரம் ஆகிடுத்து.பரமாசார்யாளை பார்க்கப்
போறப்போ வழியிலயே இப்படித் தடை வருதே. ஸ்ரீமடத்தை
சாத்திடுவாளே மகாபெரியவாளை தரிசிக்க முடியாதோன்னு
மனசுக்குள்ளே நினைச்சு பதட்டத்தோட வந்திருந்தார் அவர்.

"வாங்கய்யா..மெட்ராஸ்லேர்ந்து வரீங்களா?" வாட்ச்மேன்
அவரிடம் கேட்க, "ஆமா ஏன் கேட்கறே" அப்படின்னார்.

"இல்லை நீங்க வருவீங்கன்னும், நீங்க வந்தப்புறம்தான்
கதவை சாத்தணுனும் சுவாமி சொன்னார்! வாட்ச்மேன்
சொல்ல அப்படியே அதிர்ந்து போனார்.

"என்ன நான் வருவேன்னு ஆசார்யா சொன்னாரா? நான்
இங்கே வர்றதை முன்கூட்டியே தகவல் எதுவும்
சொல்லலையே.அப்புறம் எப்படித் தெரிஞ்சுது?
ஆச்சரியமாக் கேட்டு,காவலர் சொல்ல சிலிர்த்துப் போனார்.
சாஸ்திரிகள்.

"வாங்கோ வாங்கோ..நீங்க வந்ததும் ஒடனே கூட்டிண்டு
வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கா பெரியவா!" உள்ளே
நுழைஞ்ச அவர்கிட்டே அணுக்கத் தொண்டர் ஒருவர்.

பரவசத்தோட உச்சத்துக்கே போன அந்த சாஸ்திரிகள்
அவசர அவசரமா கையைக்காலை அலம்பிட்டு,நெத்திக்கு
இட்டுண்டு பெரியவா முன்னால போய் நின்றார்.

இருந்த பதட்டத்துல கொஞ்சம் புஷ்பத்தைத் தவிர எதுவும்
வாங்கிண்டு வராததால அதை மட்டும் பெரியவா முன்னால
வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணினார் சாஸ்திரிகள்.

"என்ன எல்லாரும் சாப்டுட்டேளா? இல்லை பதட்டுத்துல
உபவாசமாவே இருக்கேளா? அரிசி உப்மா எதுவும் பண்ணித்
தரச் சொல்லட்டுமா?" அன்பா கேட்டார் ஆசார்யா.

இருந்த மனநிலையில சாஸ்திரிகளுக்குப் பசிக்கவே இல்லை.
தம்பியோட உடம்பு குணமானாப் போதும். அது மட்டும்தான்
அவரோட மனசுல இருந்தது. அதனால "அதெல்லாம் ஒண்ணும்
வேண்டாம் பெரியவா. என்னோட தம்பி ஒடம்புக்கு..!"
சாஸ்திரிகள் வார்த்தையை முடிக்க முடியாம தழுதழுத்தார்.

"ஏன் பயப்படறே? அவனுக்கு ஒண்ணும் ஆகாது. ஆமா,அவனை
மட்டும் தனியா விட்டுட்டு வந்திருக்கியே.யார் பார்த்துப்பா?"
கேட்டார் மகாபெரியவா. ஒண்ணும் சொல்லத் தெரியாம 
கையைப் பிசைஞ்சுண்டு நின்னார் சாஸ்திரிகள்.

"இப்பவே ராத்திரி ரொம்ப நேரமாயிடுத்து. அதனால இங்கேயே
தங்கிக்கோ.கார்த்தால பலபலன்னு விடியறச்சே பொறப்படு.
இதோ இந்தப் பிரசாதமெல்லாம் காமாட்சி கோயில்லேர்ந்து
வந்தது. எல்லாத்தையும் எடுத்துண்டுபோய் ஒன் தம்பிட்ட
குடு!" பெரியவா கைநீட்டிய பக்கத்துல அஞ்சாறு மூங்கில்
தட்டுகள் நிறைய பழங்களும் புஷ்பங்களும் இருந்தது.
எல்லாத்தையும் எடுத்துண்ட சாஸ்திரிகள், 'தம்பி தனியா
இருப்பான்.அதனால இப்பவே!" அப்படின்னு இழுத்தார்!.

"நான்தான் சொன்னேனே.கார்த்தால பொறப்பட்டா போதும்.
அவனுக்கு ஒண்ணும் ஆகாதுன்னு.அப்புறம் ஏன் அவசரப்படறே?'
அதை மீறமுடியாத சாஸ்திரிகள் விடியற்காலை விறுவிறுன்னு
எழுந்திருந்து அங்கேர்ந்து கிளம்பிட்டார்,

வழி நெடுக பகவானை வேண்டிண்டே வந்தவர்.தம்பி இருந்த
ஆஸ்பத்திரிக்குப் போய் அவன் இருந்த அறைக்கதவைத்
திறந்தார். அவ்வளவுதான் அப்படியே அதிர்ச்சியில்
உறைஞ்சுபோய் நின்றார்.

உள்ளே அவரோட தம்பி இனிமே எழுந்து உட்கார்றதே
சந்தேகம்னு மொதநாள் டாக்டர்கள் கையை விரிச்சாளே
அதே தம்பி தான் படுத்துண்ட இருந்த கட்டில்ல சம்மணம்கட்டி
உட்கார்ந்துகொண்டு இருந்தார். அவரைப் பார்த்தா ஒடம்புக்கு
முடியாம படுத்த படுக்கையில இருந்தவர் இவராங்கற
சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு தெளிவா இருந்தார்.

சாஸ்திரிகளால தன்னோட கண்ணையே நம்ப முடியலை. 
அப்படியே டமால்னு நுழைஞ்சவர் தம்பியை பேர் சொல்லிக்
கூப்பிட்டார். "ஏண்டா உனக்கு எப்படி குணமாச்சு.டாக்டர் என்ன
மாத்திரை மருந்து கொடுத்தார். ஜம்முன்னு இப்படி எழுந்து
உட்கார்ந்துட்டியே. இது எப்படிடா நடந்தது?" படபடப்பா
கேள்விகளை அடுக்கிண்டே போனார்.

அமைதியா அவரைப் பார்த்த தம்பி பேச ஆரம்பிச்சார்;
"அண்ணா நேத்து ராத்திரி நினைவே இல்லாம கிடந்த சமயத்துல
எனக்குப் பக்கத்துல பரமாசார்யா வந்து உட்கார்ந்துண்டு,
"என்ன ஒன்னைப் பார்த்துக்க யாரும் இல்லையேன்னு
நினைச்சுண்டு இருக்கியா? நான் இருக்கேன் நீ பயப்படாதே.
எழுந்திருந்து உட்காரு!" அப்படின்னு சொல்றாப்புல இருந்தது.
நான் ஏதோ என்னோட மனபிரமைன்னு நினைச்சுண்டு
படுத்துண்டே இருந்தேன். திரும்பத் திரும்ப எழுந்திருந்து
உட்காருன்னு ஆசார்யா சொல்றாப்புல இருக்கவும் ஏதோ
ஒரு கட்டத்துல என்னை அறியாமலே எழுந்திருந்து
உட்கார்ந்துட்டேன்
.
கொஞ்சம் முன்னால டாக்டர் வந்து பார்த்தார்.
"உடம்பு பூரணமா குணமாயிடுத்தே.ஒரே ராத்திரியில எப்படி 
இந்த அதிசயம் நடந்தது? நீங்க இப்பவே டிஸ்சார்ஜ் ஆகலாம்!" 
அப்படின்னு சொல்லிவிட்டுப் போனார் டாக்டர். நீங்க யாராவது 
வரட்டும்னுதான் நான் வெயிட் பண்ணிண்டு இருக்கேன்.

அப்படியே சிலிர்த்துப் போய் கண்ணீர் சிந்திய சாஸ்திரிகள்
பெரியவா குடுத்தனுப்பின பிரசாதத்துல இருந்த விபூதி
குங்குமத்தை தம்பியோட நெத்தியில் இட்டுவிட்டார்.
ஒரு ஆரஞ்சு பழம் உரிச்சுக் குடுத்து சாப்பிடச் சொன்னார்.

காஞ்சிபுரத்துல ஸ்ரீமடத்துலதான் ஆசார்யா இருந்தார்.
நாங்கள் அங்கே இருந்தோம். அதேசமயம் அவரே சூட்சும
ரூபத்துல இங்கே வந்து தனியா இருந்த தன்னோட தம்பிக்கு
துணையா வந்து இருந்து அவனைப் பூரணமா குணப்படுத்திட்டு
போயிருக்கார்னா மகாபெரியவா சாட்சாத் மகேஸ்வரனோட
அம்சமாகத்தானே இருக்கணும்! நினைச்ச சாஸ்திரிகள்
மகான் இருக்கிற திசை நோக்கி சாஷ்டாங்கமா நமஸ்காரம்
பண்ணினார்.

Wednesday, September 9, 2020

பெரியவாளுக்கும் ரமண மகரிஷிக்கும் ​-உள்ள உறவு

அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?"-ரமண பகவான்.

(பெரியவாளுக்கும் ரமண மகரிஷிக்கும்

​-உள்ள உறவு)

”சொன்னவர்-பட்டாபி.

தொகுப்பு-சாருகேசி

'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்

பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர்கிட்ட பெரியவாஇதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான் காய்கறி இல்லாம சமைப்பா. ஆனா இங்கே, நித்தியப்படி சமையலுக்கே காய் வாங்க வழியில்லாததால, ஆரஞ்சுப் பழத் தோலை எங்கேருந்தாவது தேடிக் கொண்டு வந்து, சாம்பார்ல போட்டுச் சமைக்கற நிலை இருந்துதாம்.

அப்பல்லாம் விவசாயிகள் நெல், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூன்னு தங்களால் முடிஞ்சதைக் கொண்டு வந்து கொடுப்பா. மத்தபடி காசா- பணமா கொடுக்கமுடியாது அவங்களால. ‘நாமளும் அதை எதிர்பார்க்கக்கூடாது’ம்பார் பெரியவா!

டீன் பருவத்துல பட்டத்துக்கு வந்தார் பெரியவா. கலவையில சேர்ந்தப்ப, அவருக்கு முன்னால பீடாதிபதியா இருந்த ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைஞ்சுட்டார். அதனால, ஆச்சார்யாள்கிட்டேருந்து படிக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் வழியில்லாம போயிடுத்து. வைஷ்ணவ சம்பிரதாயத்துல ‘சுயம் ஆச்சார்ய புருஷன்’னு சொல்வாளே, அப்படித்தான் பெரியவாளும் வளர்ந்தார். முதல் நாள் காயத்ரி உபாசனை பண்ணிட்டு, மறுநாள் குருவுக்குப் பண்ணவேண்டிய காரியங்களைச் செஞ்சார் பெரியவா.

அந்தக் காலத்துல அந்தணக் குடும்பங்கள்ல, ‘நாடு பாதி, நங்கவரம் பாதி’ன்னு ஒரு வசனம் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா இதுக்கு?

நங்கவரம் ஜமீன் ராஜப்ப ஐயர்னு ஒருத்தர்; அவருக்குக் காவிரிக்கரையில பதினஞ்சாயிரம் ஏக்கர் நிலம் இருந்துது. அடுத்தடுத்த காலங்கள்ல அதெல்லாம் போயிட்டுது. ஜமீனோட குடும்பத்தார், மகேந்திரமங்கலம்ங்கிற இடத்துல பாடசாலை ஒண்ணை ஏற்படுத்தி, வித்வான்கள்லாம் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணி, எல்லா கிரந்தங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா. பெரியவா அதையெல்லாம் ‘மாஸ்டர்’ பண்ணிட்டார். அதாவது, நங்கவரம் ஜமீனும் உடையார்பாளையம் ஜமீனும்தான்மகாபெரியவாளோட வித்யாப்பியாசத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்கன்னு சொல்லுவா!

பெரியவாளோட தபஸ், யாத்திரை, பிரசங்கம், அவரோட புகழ்னு ஜனங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சப்ப… மடமும் செழித்து வளர ஆரம்பிச்சுது. அவரோட மகிமையைத் தெரிஞ்சுண்டு மடத்துக்கு உதவின மக்கள் ஏராளம். ஆனாலும், பண விஷயத்துல பெரியவாரொம்பக் கவனமா, ஜாக்கிரதையா இருப்பா. எத்தனையோ பெரிய மனுஷங்க எல்லாம் பணத்தைக் கட்டி எடுத்துண்டு வந்து பெரியவாகாலடியில கொட்டினாலும், எல்லாத்தையும் ஏத்துக்கமாட்டார். யார்கிட்டேருந்து வாங்கலாம்; யார்கிட்டே வாங்கக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும். அந்தக் காலத்துலேயே ஒரு பெரும் பணக்காரர் கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்தப்பகூட, வேண்டாம்னு மறுத்த மகான் அவர்!

பழங்கள், அரிசி- பருப்புன்னு கொடுத்தா, வாங்கிப்பார். பணமா கொடுத்தா, தொடக்கூட மாட்டார். கிராமம் கிராமமா நடந்து போயிருக்கார். பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மரத்தடி, ஆத்தங்கரையோரம்னு, வசதி வாய்ப்புகளையெல்லாம் பார்க்காம, எங்கே இடம் கிடைக்கறதோ அந்த இடத்துல தங்கிப்பார், பெரியவா!

அவரோடயே நாங்களும் தங்குவோம்; சமைக்கிறதுக்கு அரிசி, பருப்பெல்லாம் கையோடு எடுத்துண்டு போயிடுவோம். ஒரு தடவை, சித்தூர் செக்போஸ்ட்ல இருந்த அதிகாரிகள் எங்ககிட்ட இருந்த ஒரேயரு அரிசி மூட்டையையும் பறிமுதல் பண்ணிட்டா. ‘அரசாங்கம் கேக்கறது; கொடுத்துடு’ன்னு சொல்லிட்டார் பெரியவா. ‘அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’ன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலையா போச்சு! இந்த விஷயம் தெரிஞ்சதும், அப்ப ஆந்திர மாநில சீஃப் மினிஸ்டரா இருந்த என்.டி. ராமராவ் பதறிப்போயிட்டார். அரிசியைத் திருப்பிக் கொடுக்க உத்தரவு போட்டதோடு, ஓடி வந்துபெரியவாகிட்டே நேரில் மன்னிப்பும் கேட்டுண்டார். பெரியவா மேல அவருக்கு அபரிமித மரியாதை!

.உடனே பெரியவா, ‘இதுல மன்னிப்புக் கேக்க என்ன இருக்கு? அரசாங்க சிப்பந்திகள், அவாளோட கடமையைத்தானே செஞ்சா! அதுல குத்தம் சொல்லப்படாது. காஞ்சி மடத்துமேல நீங்க வைச்சிருக்கற அன்பும் மரியாதையும் என்னிக்கும் மாறாம இருக்கணும்’னு ஆசீர்வதிச்சார் கருணையுடன்!

என்.டி.ஆர், சென்னாரெட்டி, எம்.ஜி.ஆர்-னு எல்லாருமே பெரியவா மேல பெரிய பக்தியோடு இருந்தா. ‘அவா நம்ம மடத்துமேல மரியாதை வெச்சிருக்கிறது பெரிசில்லே; அந்த மரியாதையை நாம காப்பாத்திக்கணும். அதான் பெரிசு’ன்னு அடிக்கடி சொல்வார் பெரியவா!” என்று சிலிர்த்தபடி சொன்ன பட்டாபி சார், காஞ்சி மகானுக்கும் மற்ற மகான்களுக்குமான தொடர்புகளையும் விவரித்தார்.

”திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள்னு பெரிய மகான் இருந்தார். அவர் வாழ்ந்த இடத்தைத் ‘தபோவனம்’னு சொல்வா. முக்காலமும் உணர்ந்த மகான் அவர்; உட்கார்ந்த இடத்துலேருந்தே எத்தனையோ பக்தர்களைக் காப்பாத்தி அருள்பாலிச்சிருக்கார்! எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்; தெய்வாம்சம் உள்ள ஞானி. இன்னிக்குப் பிரபலமா இருக்கிற நாமசங்கீர்த்தனத்துக்கு மூல காரணம், அவர்தான்!

ஒருமுறை, அவரைத் தரிசனம் பண்ண வந்த ஜனங்களும், அங்கேயே இருக்கிறவங்களும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டா. ஏன்னா… சுவாமிகள் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு, ஆடாம அசையாம அப்படியே ஸ்தம்பிச்சு இருந்தார். அதைப் பார்த்து என்னமோ, ஏதோன்னு பதறிப்போயிட்டா. அதுவும், சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம உட்கார்ந்திருந்தா, பார்க்கிறவாளுக்குப் பதற்றம் வரத்தானே செய்யும்?!

யார்கிட்ட போய், என்னன்னு கேக்கறதுன்னு தெரியலை பக்தர்களுக்கு! அதே நேரம், சுவாமிகளை அந்த நிலையில் பார்க்கிறதுக்கும் மனசு சங்கடப்பட்டுது. அப்ப யாரோ சிலர், ‘எல்லாரும் உடனே காஞ்சிபுரம் போய், பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, என்ன பண்றதுன்னு கேளுங்கோ’ன்னு யோசனை சொல்ல… பக்தர்கள் சில பேர் கிளம்பி,பெரியவாகிட்ட வந்து, ஞானானந்தகிரி சுவாமிகள் பத்தி விவரம் சொன்னா.

எல்லாத்தையும் கேட்டுண்டபெரியவா,  ‘கவலைப்படாதீங்கோ! அவருக்கு ஒண்ணும் ஆகலை. அவர் சமாதி நிலைல இருக்கார்; சாம்பிராணிப் புகை போடுங்கோ. அது ஒருவித ஆராதனை; சமாதி நிலையிலேர்ந்து எழுந்துடுவார்’னு சொன்னார். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.

‘சுவாமிக்கு ஒண்ணும் ஆகலே’ங்கிற மகிழ்ச்சியோடு திருக்கோவிலூருக்கு ஓடினா. பெரியவா சொன்னபடி, சாம்பிராணி புகை காட்டி, ஆராதனை பண்ணினா. அதன் பிறகு, ஞானானந்தகிரி சுவாமிகள் சமாதி நிலைலேருந்து மீண்டு வந்தார்.

ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப்பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனேபெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி,பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப்பெரியவாளைத்தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.

அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.

காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!

பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும்ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top