ஒரு மகாபுருஷரை உலகம் இழக்கிறது…
சாச்சு. பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகளின் செல்லப் பெயர் இது. ஆனால், இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு. அது… ‘சிவன் சார்’! ஆசார- அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச் சடங்குகளும் நடந்தேறின.
கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் கல்வி; பதினோராம் வகுப்பு முடிந்ததும் அய்யன் தெருவில் கலை- கைவினைக் கல்விப் பள்ளியில், சித்திரப் பயிற்சி எடுத்துக்கொண்டார். புகைப்படக் கலையில் திறன் கொண்டார்; கும்பகோணத்தில், ‘சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ’ வைத்தார்.
சாச்சுவுக்கு மண வாழ்வில் விருப்பமில்லை. எனினும், குடும்பத்தாரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில், அனைத்தையும் துறந்து, தனிமையை நாடினார்.
காஞ்சி மகாபெரியவாளின் அபூர்வமான பல படங்களை எடுத்தவர், சாச்சுதான்! கும்பகோணம் டபீர் படித் துறையில், மகாபெரியவா காவிரியில் குளித்துவிட்டு, படியில் காவிரியை வடக்குமுகமாகப் பார்த்தபடி அமர்ந்திருக்க, பின்னே சுமார் நூறு பேர் படிகளில் சுற்றி நிற்பார்கள். இந்தப் படத்தை எடுப்பதற்கு மகா பெரியவா உத்தரவிட, உடனே சிவன் சார், காவிரியில் இறங்கி நின்றுகொண்டு, அதனை அப்படியே படமெடுத் தார்! பிறகு, இதுபற்றிக் குறிப்பிடும்போது, ”பெரியவா எனக்கு வைத்த டெஸ்ட் இது’‘ என்பார், சிவன் சார்! சிதம்பரம் கோயிலை, அதன் 4 கோபுரங்களும் தெரியும்படி புகைப்படம் எடுத்து அசத்தியதும் அவர்தான்.
ஒருகட்டத்தில், போட்டோ ஸ்டூடியோவை, தன் மீது மிகப்பெரிய பக்தி கொண்டிருந்த வெங்டேஸ்வரா ஸ்டூடியோ பெரியசாமியிடம் ஒப்படைத்தார். ‘கேன்வாஸ் போர்ட்ரைட்’ வரைவதில் தேர்ந்தவர் சிவன் சார். இவர் வரைந்த மகாபெரியவாளின் படம், முடிகொண் டான் வாஞ்சிநாதன் என்பவரது வீட்டில் இன்றும் உள்ளதாம்!
திருவண்ணாமலை தேயு!
தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, தனது தேகத்தைக் காட்டி, ‘இது, நெருப்பும் சூடும் கொண்டது; திருவண்ணாமலை தேயு’ என்பாராம் சிவன் சார்.
ஒரு முறை, பஸ் பயணத்தின்போது, சிவன் சார் சீட்டை விட்டு எழுந்துகொள்ள, அருகில் நின்றிருந்தவர் அதில் அமர்ந்தார். அவ்வளவுதான்… நெருப்பின்மீது உட்கார்ந்துவிட்டதுபோல துள்ளி எழுந்துவிட்டாராம் அந்த நபர்! சிவன் சாரின் உடம்புச் சூடு அந்த அளவுக்குத் தகித்தது!
இன்னும் வேறு பாரம் தேவையா?
நல்லி செட்டியார் சிவன் சாரின் பரமபக்தர். இவர், ’நாலு கிரவுண்டில் ஒரு வீடு கட்டி, ஆசாரமான ஒரு சமையற்காரரையும் ஏற்பாடு செய்கிறேன்’ என்றாராம். ஆனால், சிவன் சார் மறுத்துவிட்டார்.
நாதன்ஸ் கஃபே நாதன், அமெரிக்க நண்பர் ஒருவருடன் சிவன் சாரை சந்திக்கச் சென்றார். அவரை நமஸ்கரித்தவர், பெரிய தொகைக்கு செக் ஒன்றை சமர்ப்பித்தார். அப்போது, தான் உடுத்தியிருந்த துண்டைக் காண்பித்து, ”இதுவே எனக்குப் பாரமாக உள்ளது. வேறு பாரம் தேவையா?” என்று ஏற்க மறுத்துவிட்டாராம்.
காமாட்சிப் பாட்டி தந்த அப்பளம்!
தினம் பொழுது விடிந்தால், குளித்து மடியாக உளுந்து அரைத்து, அப்பளம் இட்டு உலர்த்தி, மாலையில் அதை குமுட்டி அடுப்பில் சுட்டு, மேலே நெய்யைத் தடவி அன்புடன் எடுத்து வருவார் காமாட்சிப் பாட்டி. அதில் பாதியோ, கால் பங்கோ சிவன் சார் வயிற்றை அடையும். இப்படியே 15 வருடங்கள் தொடர்ந்தது!
ஒருநாள், காமாட்சிப் பாட்டியை பாம்பு கடித்துவிட்டது. டாக்டர்கள் கைவிரித்து விட்ட நிலையில், அவருக்கு வாழைப் பட்டை சாறு கொடுத்தனர். பிறகென்ன… 20 வருஷம் உயிரோடு இருந்தார் பாட்டி. சிவன் சாருக்குக் கொடுத்த அப்பளம் வீண் போகுமா?!
மாற்றம் தந்த திருத்தம்!
காலப் போக்கில் நடந்த மாறுதல்கள், மக்களின் நாகரிக மோகம், பண்பாடு- கலாசார மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து, சிவன் சார் எழுதிய கருத்துக் களஞ்சியமே, ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’.
இந்தப் புத்தகத்துக்கு அட்டைப்படம் வரைந்தவர் ஓவியர் மணியம்செல்வன். அவர், படம் வரைந்தபோது சிறு திருத்தம் சொன்னார் சிவன் சார். ”அந்தச் சிறு திருத்தம் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது; படம் சாந்நித்தியத்துடன் திகழ்ந்தது” என்று சிலாகிக்கிறார் ஓவியர் மணியம்செல்வன். ‘எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக, சிவன் சாரின் இந்த நூலைப் பதிப்பிக்கும் வாய்ப்பு கிட்டியது’ என்பார் நர்மதா பதிப்பகம் ராமலிங்கம்.
வைராக்கியம் உள்ளவன் யார்?
ஓர் அவதாரப் புருஷர்- ஜீவன் முக்தர் எந்த நிலையில் இருப்பார்? இதற்கு, தனது புத்தகத்தில் சிவன் சார் தரும் பதில்…
‘சர்வ சக்திகளையும் கொண்ட ஒருவர் அல்லது கடவுள், இந்த உலகில் அவதரித்தாலும், அவர் மக்கள் அனைவருக்கும் நிவர்த்தி அளிக்கும் தொண்டில் ஈடுபடுவது இல்லை. இது ஒரு நியதி! ஆனாலும், அத்தகைய ஆத்மிக சக்தி என்றொரு மகத்துவம் உண்டு என்பதை உலகம் அறியும் பொருட்டு, ஏதோ தனக்குத் தோன்றும் ஒரு சில சந்தர்ப்பங் களில், அற்புதங்கள் செய்துவிட்டு தன்பாட்டில் மறைந்துபோய் விடுவதும் உண்டு.
ஆன்மிகத்தில் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள், கீர்த்தியைக் கொண்டிருக்க வேண்டுமென்ற நியாயம் கிடையாது. எவனொருவன் பதவி, ஸ்தாபனம், காணிக்கை போன்ற அனைத்தையும் துறந்து தனித்து இயங்குகிறானோ, அவனே வைராக்கியம் உள்ளவன்.’
எல்லாம் தானே சரியாகும்!
அன்பர் ஒருவருக்கு மனக் கஷ்டம். சிவன் சாரிடம் சென்று அனைத்தையும் கொட்டித் தீர்த்து ஆறுதல் பெறுவது என்ற முடிவுடன் சென்றார். அங்கே, வாசல் கதவு சாத்தப்பட்டிருந்தது. உள்ளேயிருந்து சிவன் சாரின் பேச்சுக்குரல் கேட்டது.
‘எல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் சொல்லணும்கிறது இல்லே. என்கிட்டேகூட சொல்ல வேண்டாம். எல்லாம் தானே சரியாகிவிடும்.’
சிறிது நேரம் காத்திருந்தும் எவரும் வெளியே வராததால், கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்ற அந்த அன்பருக்கு ஆச்சரியம்! காரணம், அங்கே சிவன் சாரைத் தவிர வேறு எவரும் இல்லை! பிறகுதான் அன்பருக்குப் புரிந்தது… அவை, தனக்காகவே சொல்லப்பட்ட வார்த்தைகள் என்று! சிவன் சாரைத் தரிசித்து, மன அமைதி பெற்றார் அன்பர்.
மகான்களிடம் தனது குறைகளைச் சொல்லித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்பதில்லை… அவர்களின் சந்நிதியை நோக்கி நடக்கத் தொடங்கினாலே, ஊழ்வினைகள் அலறி ஓடிவிடும்.
மற்றொரு தொண்டருக்கு உத்தியோகம் போய் விட்டது. இதுகுறித்து சிவன் சாரிடம் சென்று அவர் பிரார்த்திக்க, ’ஸ்ரீமடத்துக்குப் போய் சந்திர மௌலீசுவரரை தரிசித்து வேண்டிக்கொள்!’ என்றார் சிவன் சார். அந்தத் தொண்டரும் அவ்வாறே செய்ய, பறிபோன வேலை மீண்டும் கிடைத்தது.
ஆங்கரை சுவாமிகளுக்கு அற்புதம்…
‘ஆங்கரை பெரியவா எனும் ஸ்ரீகோவிந்த தாமோதர சுவாமிகள்’ என்ற சந்நியாச நாமம் கொண்ட திருவல்லிக்கேணி பாகவத பெரியவர் ஒருவர், சிவன் சார் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர்.
ஆங்கரை சுவாமிகளுக்கு இதய அறுவைச் சிகிச்சை ஆகியிருந்தது. பிறகு கை-கால் செயலற்றுப் போனது. பேச்சும் தடைப்பட்டது. இதனால் மனம் வருந்திய அன்பர்கள், சிவன் சாரின் நாற்காலிக்கு அருகில் சுவாமிகளை உட்கார வைத்தனர். சிவன் சாரின் கால் கட்டை விரல், சுவாமிகள் மீது பட்டபடி இருந்தது. சுவாமிகள் தும்பைப்பூவை சாரின் பாதங்களில் சமர்ப்பித்தார். சிறிது காலத்திலேயே எழுந்து நன்கு நடந்து, பழையபடி உபந்யாசமும் செய்ய ஆரம்பித்தார் ஆங்கரை சுவாமிகள்!
‘திருவெண்காடு போ..!’
ஒருமுறை, ‘திருவெண்காடு போ’ என்று சிவன் சாருக்கு உத்தரவிட்டார் மகாபெரியவா. அதுமுதல் தொடர்ந்து திருவெண்காடு செல்லலானார் சிவன் சார்.
திருவெண்காடு புனிதம் வாய்ந்தது. காசியைப் போன்றே, இந்தத் தலத்தின் காவிரி ஸ்நான கட்டத்துக்கு மணிகர்ணிகை என்று பெயர்.
இங்கு கோயில் கொண்டிருப் பவர் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீபிரம்ம வித்யாம் பிகை. புதன் தலமான இங்குதான், சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி வெண்காட்டு நங்கை அவதரித்தாராம். ஆலயக் குளக் கரையில் உள்ள ஆலமரமும், அதனடியில் உள்ள ருத்ர பாதமும் விசேஷமானவை. இந்தத் தலத்தில் மூதாதையருக்கு சிராத்தம் செய்து, ருத்ர பாதத்தில் பிண்டம் அளிப்பது மிகச்சிறப்பு!
பறவை பாஷையும் தெரியும்!
சிவன் சாரின் ஜோதிட மேதாவிலாசமும் வானியல் சாஸ்திர அறிவும், கணிதப் புலமையும் வியக்கவைக்கும். வேத வித்தான ஸ்ரீவிஜயபானு கன பாடிகள் கண்ட காட்சி இது… சிவன் சார், கைப்பிடி நெல்லை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஒருவித ஒலியெழுப்பிக் கூவ, குருவிகள் வந்து, அவரது கையில் அமர்ந்து நெல்லைச் சாப்பிடுமாம்! இதை, மகாபெரியவாளிடம் கனபாடிகள் சொன்னதும், ”சாச்சுவுக்கு மூணு பாஷை தெரியும். உனக்குத் தெரியுமோ?” என்றாராம் மகாபெரியவா. அதாவது, மனிதர்கள், மிருகங்கள் மற்றும் பட்சிகளின் பாஷையை அறிந்தவர் சிவன் சார்!
ஒரு மகாபுருஷரை உலகம் இழக்கிறது!
அது 1994-ஆம் வருடம். ஜனவரி 8- ஆம் நாள் அதிகாலை. நிஷ்டையில் இருந்த சிவன் சார், ‘ஒரு மகாபுருஷரை உலகம் இழக்கிறது’ என்றார். பிற்பகல், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்தவர், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார். மூன்று மணி அடிக்க ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது, சகஜ நிலைக்குத் திரும்பி, ‘எல்லாம் ஆயிடுத்து கிளம்பலாம்’ என்றார்! சரியாக 2:58க்கு, மகா பெரியவா ஸித்தி அடைந்தார் என்ற செய்தி வந்தது!
கலைஞனாகவும், பலரும் போற்றிய மகானாகவும், ஞானியாகவும், தீர்க்க தரிசியாகவும் திகழ்ந்த, அந்த சாச்சு என்கிற சிவன் சார் யார் தெரியுமா? காஞ்சி மகா பெரியவாளின் இளைய சகோதரர்தான்!
தகவல் உதவி: எஸ்.கணேச சர்மா, சிவராமன்
–நன்றி சக்தி விகடன்
இந்த மஹான் இன்னும் இருக்கிறாரா? அறிய ஆவல். ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
ReplyDelete