திவசம் எதற்காக ?
ஒரு ஜீவன் இருக்கும்போதும் இறக்கும்போதும் இறந்தபின்பும் செய்ய வேண்டிய தொண்டுகள் நிறைய உண்டு. ‘இறக்கும்போது நாம் செய்கிற பணியினால் அந்த ஜீவன் பகவத் ஸ்மரணையோடு உயிரைவிட்டால் அது பகவானை அடைந்துவிடுமல்லவா ? அதற்கப்புறம் அதற்கு இறந்த பின் செய்ய வேண்டிய சம்ஸ்காரம், திவசம், திங்கள் எல்லாம் எதற்குச் செய்யவேண்டும் ?’ என்று கேட்டு விடக்கூடாது. ஏனென்றால், நமக்குத் தெரிவது அந்த ஜீவனின் அந்திம காலத்தில் அது பகவானை நினைக்கும்படியான முயற்சியை நாம் பண்ணுகிறோம் என்பதுதான். அந்த முயற்சி எவ்வளவு பலித்தது என்பது நமக்குத் தீர்மானமாகத் தெரியாது. நாம் கங்கா தீர்த்தம், விபூதி, துளசி கொடுப்பதை அந்த ஜீவன் எந்த அளவுக்கு மனசுக்குள் வாங்கிக் கொண்டது என்பது நமக்குத் தெரியாது. அது பகவத் ஸ்மரணையோடுதான் உயிரை விட்டதா என்பதும் நமக்குத் தெரியாத விஷயம். அதனால், அது பகவானிடம்தான் போய்விட்டது என்று நாமாகத் தீர்மானம் பண்ணிக் கொண்டு அபரகார்யம், திவசம் முதலானவற்றை நிறுத்திவிடக் கூடாது.
–மஹா பெரியவர் அருளிய ‘தெய்வத்தின் குரல்’ தொகுப்பிலிருந்து
மனக் குரங்கை அடக்குங்கள் !
பகவானிடம் நாம் செல்வம், ஆரோக்கியம், புகழ் இப்படி எது எதையோ வேண்டுகிறோம். உண்மையில், மனமானது கண்டபடி அலையாமல் அதைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் ஸ்வாமியின் அருளை நாம் கோர வேண்டும். மனம் அவசியமற்றதையெல்லாம் செய்யத் தூண்டும். கண்ணால் காணக் கூடாதவற்றைக் கண் பார்க்கிறது. காதால் கேட்கக் கூடாதவற்றைக் காது கேட்கிறது. நாக்கினால் ருசிக்கக் கூடாதவற்றை நாக்கு ருசிக்கத் துடிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா ? மனம், பல பொருட்களைக் கண்டு மயங்குகிறது. இந்த மனக் குரங்கை எப்பாடு பட்டாவது அடக்கியாக வேண்டும்.
–மஹா பெரியவர் அருளிய ‘தெய்வத்தின் குரல்’ தொகுப்பில் இருந்து….
No comments:
Post a Comment