மஹா பெரியவரைச் சந்தித்த சாண்டோ சின்னப்பா தேவர் ! — பா. தீனதயாளன்
பல மாதங்கள் ‘அவரைத் தரிசிக்க வேண்டும்‘ என்று சினிமா உலகிலும் எம்.ஜி.ஆர். உள்பட அனேக வி.ஐ.பி.க்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவரே ஒருநாள் தேவரை வரச் சொல்லியிருந்தார். ஆன்மீக ஆலமரத்தின் அருள்பார்வை தன்மீது விழாதா என்று அனைவரும் ஏங்கி நின்றார்கள். தேவருக்கே முதல் அழைப்பு.
‘புனிதம்’ என்பதற்குரிய அர்த்தத்தை அவரைப் பார்த்த பின்பே புரிந்து கொண்டார் தேவர். திருப்பாதம் விழுந்து தொழுதார். தன் குறையைக் கூறினார்.
‘உடம்பு முடியலீங்க சாமி. சர்க்கரை….’
அவர் புன்னகை பூத்தார். உதயசூரியன் சிரித்ததுபோல் இருந்தது. அவரது தேஜஸில் கண்கள் கூசின தேவருக்கு. கை கூப்பி நின்றார்.
‘நீ என் கவலப்படற? உனக்குத்தான் வாட்ச்மேன் மாதிரி முருகன் இருக்கானே… !’
உள்ளுக்குள் ஏதோ அறுந்தது. ‘நான்’ என்கிற அகம்பாவமோ, எல்லாம் என் காசு என்கிற சுயநலமோ, எதுவோ. தேவர் உடைந்து போனார். எத்தனைப் பெரிய வார்த்தை! இந்தப் பாமர வியாபாரிக்குத் தகுமா ?
கைகளை உயர்த்தி ஆசி கூறினார் காஞ்சி மஹா பெரியவர். பொத்திய கரங்களை எடுக்க மனசில்லாமல் திரும்பினார் தேவர்.
மௌனம் தெய்வாம்சம்! சத்தம் அசுரத் தாண்டவம்!
தேவர் திரையுலகில் தனது முதலீடாகச் செய்த விஷயங்கள் மூன்று. எம்.ஜி.ஆர்., முருகர், விலங்குகள்.
எம்.ஜி.ஆரால் தேவர் வளர்ந்தாரா? தேவரால் எம்.ஜி.ஆர். திரையுலக வெற்றிகளைக் குவித்தாரா?
எம்.ஜி.ஆரால் தேவர் வளர்ந்தாரா? தேவரால் எம்.ஜி.ஆர். திரையுலக வெற்றிகளைக் குவித்தாரா?
இரண்டுமே நிகழ்ந்தன. யாருமே எளிதில் நெருங்கிப் பழக முடியாத எம்.ஜி.ஆர்., தேவரோடு மட்டும் விடாமல் பாராட்டிய நட்பு ஆச்சரியத்துக்குரியது. என்னால் எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல; யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.
முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுபடத்தையும் முடித்துவிடும் அவரது வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது. இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தன்னிகரற்ற தயாரிப்பாளரின் கதை இது.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக சினிமா பத்திரிகையாளராக இயங்கி வரும் பா. தீனதயாளன் முன்னணி தமிழ் இதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர்
Your Blog is great.Thanks
ReplyDelete