பி.வி. சங்கீத சகோதரர்கள்
சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம்.
ஒருமுறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சிமடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தார்கள். அதே நாளில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால், காஞ்சி மடத்தில் பாடவேண்டியிருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு இருபது நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலைவிழாவில் முதல்நாள் பாடவேண்டிய பாலக்காடு கே.வி. நாராயண சுவாமிக்கு வரமுடியவில்லை. அவர் மூன்றாம் நாள் பாட வருவதாக ஒத்துக்கொண்டார். அதனால் முதல்நாள் நிகழ்ச்சியில் அவசியம் பாடும்படி கேட்டுக்கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ்சில் திருவனந்தபுரம் கிளம்பினர். முதல்நாள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மூன்றாம் நாள் காஞ்சிபுரம் புறப்பட்டனர். அப்போது கனமழை பிடித்துக்கொண்டது. காஞ்சிபுரம் செல்லமுடியுமோ முடியாதோ என்ற வருத்தம் உண்டானது. பெரியவரை வேண்டிக் கொண்டு மழையோடு மழையாக பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தனர். சென்னைக்குக் கிளம்பும் விரைவு பஸ் கிளம்பிக்கொண்டிருந்த சமயம். இவர்கள் பஸ்சில் இடம் இருக்கிறதா என பார்த்தனர். சொல்லி வைத்தது போல் இரண்டு இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன. மூன்றாம் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தனர். காலை பத்து மணிக்கு பூஜை ஆரம்பம். பூஜையில் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார்கள்.
பிரசாதம் வழங்கும் நேரம்… சங்கீத சகோதரர்கள் பெரியவர் முன் நின்றார்கள். பெரியவர் அவர்களிடம், “”என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?” திருவனந்தபுரம் சென்று வந்த விஷயம் பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று சகோதரர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். சாஷ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, “”பெரியவா அனுகிரஹத்தாலே திருவனந்தபுரத்திலேயும், காஞ்சியிலேயும் பாடும் வாய்ப்பு கிடைச்சுது!” என்று பணிவுடன் சொன்னார்கள். “”அப்படி ஒன்றும் இல்லை! அம்பிகை தான் ஒரே கல்லடிச்சு உங்களுக்கு இரண்டு மாம்பழம் கொடுத்துட்டான்னு சொல்லு!” என்று வாழ்த்தினார். பெரியவரின் வாழ்த்தைக் கேட்டு சகோதரர்கள் இருவரும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment