பெரியவர், மஹா பெரியவர் — டாக்டர் இரா. நாகசாமி
பெரியவர் ஒரு மஹா மேதை. நல்ல நினைவாற்றல் உள்ளவர். பல்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். பல விஷயங்கள் தெரிந்தவர். அவருக்கு என்மீது மிகுந்த அன்புண்டு. தினம் ஒரு கல்வெட்டைப் பற்றி எழுதி அனுப்பு. நான் படிக்க வேண்டும் என்று ஒருமுறை என்னிடம் கூறினார். கல்வெட்டுகளைப் படிக்கவும் அவருக்குத் தெரியும். அதை எப்படிப் படிக்க வேண்டும் என்றும் சொல்வார்.
ஒருமுறை ஒரு பேராசிரியர் கம்போடியா கல்வெட்டைப் பற்றிப் பேசினார். கூட்டத்தில் மஹா பெரியவரும் இருந்தார். அந்தப் பேராசிரியர் அந்தக் கல்வெட்டிலிருந்து ஒரு அடியை எடுத்துச் சொன்னார். உடனே பெரியவர், ஒரு அடியை மட்டும் சொன்னால் எப்படி ? அந்தச் செய்யுளின் பிற அடிகளையும் சொன்னால்தானே எல்லோருக்கும் புரியும் என்றார். அந்தப் பேராசிரியரால் மீதி வரிகளைச் சொல்ல முடியவில்லை. உடனே பெரியவர் மீதி வரிகளை மிகச் சரியாகச் சொன்னார். கம்போடியாவில் உள்ள ஒரு கல்வெட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் பெரியவர் விளக்கமாக எடுத்துச் சொன்னதைப் பார்த்ததும், அவருக்குக் கல்வெட்டுத் துறையில் இருந்த ஈடுபாட்டை நினைவாற்றலைக் கண்டு அங்கு குழுமியிருந்த எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். கோயில்கள், கோயிற் கலைகள், அதை எப்படி உருவாக்கினார்கள், அதை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் அவருக்குச் சமமானவர் யாருமே இல்லை.
டாக்டர் இரா. நாகசாமி தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமிழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்தியாவிலேயே முதன் முதலாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் ஆய்வுக்கு வழி வகுத்தவர். இவர் மேற்கொண்ட மாமல்லபுரம் பற்றிய ஆராய்ச்சி மிகவும் புகழ் பெற்றது. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சொற்பொழிவாளர். இவரது கட்டுரைகளை உலக அளவில் 25 க்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்த்து யுநெஸ்கோ பதிப்பித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதத்தில் 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். மத்திய அரசின் பல கலை, பண்பாட்டுக் குழுக்களில் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். உலக நாடுகள் பலவற்றிலும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, தமிழகத்தின் பண்டைச் சிறப்பை நாகரிகத்தை உலகுக்குச் சான்றுகளோடு அடையாளம் காட்டியவர். பார்க்க:
நன்றி – தென்றல் மாத இதழ்
website: http://www.tamilonline.com
Super
ReplyDelete