வாழ்க்கைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந்தம்…
மகான் சாப்பிடுவது என்னவோ அவல்பொரிதான். எப்போதாவது கீரையை தமது மதிய உணவில் சேர்த்துக் கொள்வார் என்று மடத்து ஊழியர்கள் சொன்னது உண்டு. இருந்தாலும் சமையல் பக்குவத்தைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்டு பிரபல சமையல்காரர்களே மூக்கில் விரல் வைத்திருக்கிறார்கள்.
அவ்வப்போது மடத்திற்கு அரிசி, பருப்பு, உளுந்து என்று பக்தர்கள் மூட்டை மூட்டையாகக் கொண்டுவது கொடுப்பார்கள். ஒரு தடவை பக்தர் ஒருவர் தன் தோட்டத்தில் பயிரான கருணைக் கிழங்கை மூட்டையாகக் கொண்டு வந்து கொடுத்தார். மடத்தில் சிப்பந்திகள் மிகவும் திருப்தியாக அதை மசியல் செய்து எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாப்பிட்டவர்கள், முதலில் அதை எடுத்து வாயில் போட்ட பிறகு அதை தொடவே இல்லை. இலையின் மூலையில் அதை ஒதுக்கி வைத்து விட்டனர். ஏனெனில் கிழங்கு மசியல் நாக்கில் பட்டவுடன் அரிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான் ஒதுக்கிவிட்டார்கள்.
இந்த ‘மசியல் பகிஷ்காரம்’ மகானின் காதுக்குப் போகாமல் இருக்குமா ?
சமையல் செய்தவர்கள் மகானின் முன்னால், கையைக் கட்டிக்கொண்டு விசாரணையை எதிர்பார்க்கும் குற்றவாளிகளைப் போல் நின்று கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் எல்லோரும் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை. அமைதியான குரலில் மகான் கேட்டார்.
“எப்படிச் சமையல் செய்தாய் ?”
“கழுநீரில் நன்றாக அலசியபிறகு, புளிவிட்டு கொதிக்க வைத்தேன். ….இந்தக் கிழங்கு அதற்கெல்லாம் மசியவில்லை. அதனுடைய குணம் மாறவில்லை” என்று பிரதம சமையல்காரர் குறைபட்டுக் கொண்டார்.
பெரியவா சிரித்தபடியே சொன்னார்:
“கருணைக் கிழங்கை வெந்நீரில் வேகவைக்கும் போது அதோடு வாழைத்தண்டை சிறிதாக நறுக்கிப் போட வேண்டும். இரண்டும் நன்றாக வேகும்போது, கருணையின் குணம் மாறி விடும்” என்றார்.
மறுநாள் இந்த முறைப்படி சமைத்தபோது எல்லோரும் விரும்பி கேட்டுச் சாப்பிட்டார்கள்.
குழந்தையும் தெய்வமும்…
….நமக்கு ரொம்பப் பிரியம் குழந்தைகளிடம்தான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுகிற இடத்தில்தான் என்று சொல்வது உண்டு. குழந்தைக்கு அறிவு வளராததனால் காமக் குரோதாதிகள் இல்லாமல் இருக்கிறது. அவற்றுக்குக் கோபம் வரும். அழுகை வரும். உடனே இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சிரிக்கும். விளையாடும். அழுகை, கோபம் எல்லாம் குழந்தைக்கு வேர் ஊன்றுவது இல்லை. அடுத்த க்ஷணம் சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடும். அந்த மாதிரி நமக்கும் இருந்து விட்டால் அதுதான் உண்மையான ஞானம்…..
No comments:
Post a Comment