பண்டரிபுர தரிசனம்
சென்னையில் வசித்த சுப்பிரமணியன், காஞ்சிப்பெரியவரின் மீது தீவிரபக்தி கொண்டவர். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் சுவாமிகளைச் சந்திக்கத் தவறியதில்லை. 1983 பிப்ரவரியில் மஹாகாவ்ம் முகாமிற்குச் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் சுவாமிகளிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார்.
“”பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனைத் தரிசிக்க எண்ணுகிறேன். ஆனால், எனக்கு நாளையோடு லீவு முடிந்துவிடுகிறது. நாளை மறுநாள் அலுவலகத்திற்கு அவசியம் செல்லவேண்டும். அதற்குள் பாண்டுரங்கனைத் தரிசிக்கும்பேறு கிடைத்தால் சந்தோஷம் அடைவேன்,” என்று விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். பெரியவரும் அவருக்கு ஆசி வழங்கி பிரசாதம் கொடுத்தார்கள். பெரியவரின் அருளால் நாளை உறுதியாக பண்டரிநாதனைத் தரிசிக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு பண்டரிபுரம் கிளம்பினார் சுப்பிரமணியம். ஆனால், அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினத்தில் அங்கு கட்டுக்கு அடங்காமல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நீண்ட வரிசையில் மக்கள் தரிசனத்திற்குக் காத்து நின்றனர். நம்பிக்கையோடு வந்தும் பாண்டுரங்கனைக் காண முடியவில்லையே என்ற மனவேதனையில் கோயிலையாவது ஒருமுறை வலம் வரலாம் என்று சுற்றத் தொடங்கினார். கோபுரவாசலுக்கு அருகில் வரும் போது, திட்டிவாசல் என்னும் ஒடுக்கமான வாசலை அடைந்தார். அவ்வாசல் வழியாக ஒருவர் மட்டுமே நுழைய முடியும். அவ்வாசல் வழியாக கோயில் பண்டா(அர்ச்சகர்) ஒருவர் கதவைத் திறந்து கொண்டு சுப்பிரமணியத்தைப் பார்த்து ஹிந்தியில் பேசினார். “”விட்டோபா (பாண்டுரங்கன்) தரிசனம் வேணும்னா என்னோட வா” என்று அழைத்தார் அந்த பண்டா.
ஆச்சர்யத்துடன் சுப்பிரமணியம் பண்டாவைப் பின்தொடர்ந்தார். ஐந்தே நிமிடத்தில் பாண்டுரங்கன் முன், அவர் நின்று கொண்டிருந்தார். பாண்டுரங்கனும் ருக்மாயியும் புன்னகையுடன் தரிசனம் தந்தனர். சிறு காணிக்கையை பண்டாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அவர் கிளம்பினார். அவரை அழைத்துச் சென்றவர் கோயில் பண்டாவாகவே சுப்பிரமணியனுக்குத் தோன்றவில்லை. பாண்டுரங்க தரிசனம் பெற காஞ்சிப்பெரியவரே உதவியதாகவே நம்பினார்
No comments:
Post a Comment