காஞ்சி மகானின் ஆசி பெற்ற வானதி திருநாவுக்கரசு…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சில துறைகளைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப் போவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.
வானதி திருநாவுக்கரசு தமது புத்தக வெளியீடுகள் மூலம் சிறந்த தொண்டை ஆற்றி வருகிறார் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம். அதனால் புத்தக பதிப்புத் துறையில் சிறந்து விளங்கும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க சிபாரிசு செய்திருப்பதாகவும், திருநாவுக்கரசு வாழ்க்கைக் குறிப்புகள் வேண்டுமென்றும் கேட்டிருந்தார்கள். எந்தக் காரியத்தை துவங்குவது என்றாலும் திருநாவுக்கரசு, காஞ்சி மகானின் ஆசி இல்லாமல் துவங்கியது இல்லை.
அதனால், தனது வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கடிதத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்று மகானைச் சந்தித்தார். ஒரு பழத் தட்டில் பூக்களுடன் இந்தக் கடிதத்தையும் வைத்து மகான் முன் சமர்ப்பித்தார்.
விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லி, ஜனாதிபதியின் அனுமதிக்காக லிஸ்ட் டெல்லி போயிருக்கிறது என்று முடித்தார்.
மகான் அக்கடிதத்தை அவரே எடுத்துப் படித்தார். ‘அவா வேற தர்ராளாமா ? நாமதான் ஏற்கனவே உனக்கு ‘சமய இலக்கிய பிரச்சார மணி’ னு பட்டம் தந்தாச்சே” என்று சொல்லி அக்கடிதத்தைப் பழத் தட்டிலேயே போட்டுவிட்டார். உடனே தன் உதவியாளரை அழைத்து ஒரு சால்வையைக் கொண்டு வரச் சொல்லி, அதை வானதி திருநாவுக்கரசுக்கு அணிவிக்கச் செய்தார். அத்துடன் நில்லாது, தன் மார்பில் இருந்த பவளமாளையைக் கழற்றி வானதியாருக்கு அணிவிக்கச் செய்தார்.
மகானே பட்டம் கொடுத்த பிறகு…..வேறு பட்டம் எதுவும் தேவை இல்லை தானே ? அதேபோல் இன்று வரை பாண்டிச்சேரி பல்கலைக்கழக பட்டம் அவருக்கு வரவே இல்லை.
No comments:
Post a Comment