பரோபகாரத்துக்காகவே சிக்கனம் — காஞ்சி மகா பெரியவர்
கீழ்க்காணும் வரிகள் மறைந்த காஞ்சி மகா பெரியவர் சொன்னது. சின்ன வயதில் இதை நான் படித்த போதும் சரி, இப்போது படிக்கும் போதும் சரி, சட்டென்று மனதில் ஒரு தெளிவும், ஒரு புரிதலும் உண்டாகிறது. இந்த பாடத்தை முடிந்த வரை வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிய வேண்டும் என்பது பிரார்த்தனை.
“பரோபகாரத்துக்காகவே சிக்கனம்”
சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால் தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும். அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு மேல்நாடுகளைப் பார்த்து material comfort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது; பிறத்தியாருக்கும் தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைக்கிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறது போல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக – கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது?
இப்போது பொதுவாக உள்ள பரிதாப நிலை என்னவென்றால், ஒன்று, சிக்கனமாக இருப்பவன் தானும் அநுபவிக்காமல் பிறத்தியானுக்கும் உதவி பண்ணாமல் கருமியாக இருக்கிறான்; செலவாளியாக இருப்பவனோ ஸெளகர்யம், இன்னும் ஸெளகர்யம் என்று பறப்பதில் தனக்கே போதாமல் கடனாளியாக நிற்பதால் இவனாலும் பரோபகாரம் நடப்பதில்லை.
பிறருக்குச் செய்வதற்காகவே சொந்த விஷயத்தில் சிக்கனமாயிருக்கவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ஒவ்வொருவனும் கடைப்பிடித்தால் எவ்வளவோ புண்யத்துக்குப் புண்யம், நிம்மதிக்கு நிம்மதி, எத்தனையோ தீனர்களும் க்ஷேமமடைவார்கள்.
சிக்கனமாயிருந்தாலொழிய, இப்போது இருக்கிற போக போக்ய இழுப்பில், எவனுக்குமே மிச்சம் பிடிக்க முடியாது. அதனால் சிக்கன வாழ்க்கை நடத்தினால்தான் ‘தனக்கு மிஞ்சி’ தர்மம் பண்ண முடியும். அதாவது எத்தனை சிக்கனமாயிருக்க முடியுமோ அப்படியிருந்து தனக்கு மிஞ்சும்படியாகப் பண்ணிக்கொண்டு தர்மம் பண்ணணும்.
–ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (http://kurangu.blogspot.com)
No comments:
Post a Comment