Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Tuesday, November 30, 2010

திவசம் எதற்காக ?

clip_image001
ஒரு ஜீவன் இருக்கும்போதும் இறக்கும்போதும் இறந்தபின்பும் செய்ய வேண்டிய தொண்டுகள் நிறைய உண்டு.  ‘இறக்கும்போது நாம் செய்கிற பணியினால் அந்த ஜீவன் பகவத் ஸ்மரணையோடு உயிரைவிட்டால் அது பகவானை அடைந்துவிடுமல்லவா ?  அதற்கப்புறம்  அதற்கு இறந்த பின் செய்ய வேண்டிய சம்ஸ்காரம், திவசம், திங்கள் எல்லாம் எதற்குச் செய்யவேண்டும் ?’  என்று கேட்டு விடக்கூடாது.  ஏனென்றால்,  நமக்குத் தெரிவது அந்த ஜீவனின் அந்திம காலத்தில் அது பகவானை நினைக்கும்படியான முயற்சியை நாம் பண்ணுகிறோம் என்பதுதான்.  அந்த முயற்சி எவ்வளவு பலித்தது என்பது நமக்குத் தீர்மானமாகத் தெரியாது.  நாம் கங்கா தீர்த்தம்,  விபூதி, துளசி கொடுப்பதை அந்த ஜீவன் எந்த அளவுக்கு மனசுக்குள் வாங்கிக் கொண்டது என்பது நமக்குத் தெரியாது.  அது பகவத் ஸ்மரணையோடுதான் உயிரை விட்டதா என்பதும் நமக்குத் தெரியாத விஷயம்.  அதனால், அது பகவானிடம்தான் போய்விட்டது என்று நாமாகத் தீர்மானம் பண்ணிக் கொண்டு அபரகார்யம், திவசம் முதலானவற்றை நிறுத்திவிடக் கூடாது.
–மஹா பெரியவர் அருளிய ‘தெய்வத்தின் குரல்’ தொகுப்பிலிருந்து

மனக் குரங்கை அடக்குங்கள் !

clip_image002
பகவானிடம் நாம் செல்வம், ஆரோக்கியம், புகழ் இப்படி எது எதையோ வேண்டுகிறோம்.  உண்மையில்,  மனமானது கண்டபடி அலையாமல் அதைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் ஸ்வாமியின் அருளை நாம் கோர வேண்டும்.  மனம் அவசியமற்றதையெல்லாம்  செய்யத் தூண்டும்.  கண்ணால் காணக் கூடாதவற்றைக் கண் பார்க்கிறது.  காதால் கேட்கக் கூடாதவற்றைக் காது கேட்கிறது.  நாக்கினால் ருசிக்கக் கூடாதவற்றை நாக்கு ருசிக்கத் துடிக்கிறது.   இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா ?  மனம்,  பல பொருட்களைக் கண்டு மயங்குகிறது.  இந்த மனக் குரங்கை எப்பாடு பட்டாவது அடக்கியாக வேண்டும்.
மஹா பெரியவர் அருளிய ‘தெய்வத்தின் குரல்’  தொகுப்பில் இருந்து….

Monday, November 29, 2010

பண்டரிபுர தரிசனம்

clip_image001
சென்னையில் வசித்த சுப்பிரமணியன், காஞ்சிப்பெரியவரின் மீது தீவிரபக்தி கொண்டவர். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் சுவாமிகளைச் சந்திக்கத் தவறியதில்லை. 1983 பிப்ரவரியில் மஹாகாவ்ம் முகாமிற்குச் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் சுவாமிகளிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார்.
“”பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனைத் தரிசிக்க எண்ணுகிறேன். ஆனால், எனக்கு நாளையோடு லீவு முடிந்துவிடுகிறது. நாளை மறுநாள் அலுவலகத்திற்கு அவசியம் செல்லவேண்டும். அதற்குள் பாண்டுரங்கனைத் தரிசிக்கும்பேறு கிடைத்தால் சந்தோஷம் அடைவேன்,” என்று விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். பெரியவரும் அவருக்கு ஆசி வழங்கி பிரசாதம் கொடுத்தார்கள். பெரியவரின் அருளால் நாளை உறுதியாக பண்டரிநாதனைத் தரிசிக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு பண்டரிபுரம் கிளம்பினார் சுப்பிரமணியம். ஆனால், அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினத்தில் அங்கு கட்டுக்கு அடங்காமல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
clip_image002
நீண்ட வரிசையில் மக்கள் தரிசனத்திற்குக் காத்து நின்றனர். நம்பிக்கையோடு வந்தும் பாண்டுரங்கனைக் காண முடியவில்லையே என்ற மனவேதனையில் கோயிலையாவது ஒருமுறை வலம் வரலாம் என்று சுற்றத் தொடங்கினார். கோபுரவாசலுக்கு அருகில் வரும் போது, திட்டிவாசல் என்னும் ஒடுக்கமான வாசலை அடைந்தார். அவ்வாசல் வழியாக ஒருவர் மட்டுமே நுழைய முடியும். அவ்வாசல் வழியாக கோயில் பண்டா(அர்ச்சகர்) ஒருவர் கதவைத் திறந்து கொண்டு சுப்பிரமணியத்தைப் பார்த்து ஹிந்தியில் பேசினார். “”விட்டோபா (பாண்டுரங்கன்) தரிசனம் வேணும்னா என்னோட வா” என்று அழைத்தார் அந்த பண்டா.
clip_image003
ஆச்சர்யத்துடன் சுப்பிரமணியம் பண்டாவைப் பின்தொடர்ந்தார். ஐந்தே நிமிடத்தில் பாண்டுரங்கன் முன், அவர் நின்று கொண்டிருந்தார். பாண்டுரங்கனும் ருக்மாயியும் புன்னகையுடன் தரிசனம் தந்தனர். சிறு காணிக்கையை பண்டாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அவர் கிளம்பினார். அவரை அழைத்துச் சென்றவர் கோயில் பண்டாவாகவே சுப்பிரமணியனுக்குத் தோன்றவில்லை. பாண்டுரங்க தரிசனம் பெற காஞ்சிப்பெரியவரே உதவியதாகவே நம்பினார்

Sunday, November 28, 2010

விமான விபத்து !

clip_image001

அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர் மகன் டாக்டர் ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதா ராமகிருஷ்ணனும் அமெரிக்கா செல்வதற்கு முன் காஞ்சிபுரம் மடத்திற்கு பெரியவரைக் காண வந்திருந்தனர். பெரியவரிடம், “”வரும் 12ம்தேதி புறப்படறோம். பெரியவாளின் அனுக்ரஹம் பூரணமாக வேணும்,” என்று சொல்லி அந்த தம்பதிகள் வணங்கினர்.

பெரியவர் கண்ணை மூடிக் கொண்டு மவுனத்தில் ஆழ்ந்தார். “” பதினைஞ்சு நாள் கழிச்சு புறப்படு” என்று கண்டிப்பான தொனியில் சொன்னார். டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. பயணத்தை தள்ளிப்போட இஷ்டமில்லை. பெரியவர் பேச்சை கேட்காமலும் இருக்கமுடியவில்லை. டிக்கட் கான்சலேஷன், அடுத்து ரிசர்வேஷன் எப்படி செய்வது? என்று மனக்குழப்பமும் உண்டானது. கடைசியில் அமெரிக்கப்பயணத்தை ஒத்தி வைத்தார்.

மீனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மும்பையிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டது. அதில் பயணம் செய்த நூறு பேரும் இறந்துவிட்டனர். இதனைக் கேள்விப்பட்ட டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதாவும் தாங்கள் பெரியவரால் காப்பாற்றப் பட்டதை எண்ணி ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். வரவிருந்த துன்பத்தில் இருந்துகாப்பாற்றிய காஞ்சிப்பெரியவரின் அருளாசியை வியந்து மகிழ்ந்தனர்.

Saturday, November 27, 2010

காஞ்சி மகானின் ஆசி பெற்ற வானதி திருநாவுக்கரசு…

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சில துறைகளைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு கௌரவ டாக்டர்  பட்டம் வழங்கப் போவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

clip_image001
வானதி திருநாவுக்கரசு தமது புத்தக வெளியீடுகள் மூலம் சிறந்த தொண்டை ஆற்றி வருகிறார் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம்.  அதனால் புத்தக பதிப்புத் துறையில் சிறந்து விளங்கும் அவருக்கு டாக்டர்  பட்டம் வழங்க சிபாரிசு செய்திருப்பதாகவும், திருநாவுக்கரசு வாழ்க்கைக் குறிப்புகள் வேண்டுமென்றும் கேட்டிருந்தார்கள்.   எந்தக் காரியத்தை துவங்குவது என்றாலும் திருநாவுக்கரசு, காஞ்சி மகானின் ஆசி இல்லாமல் துவங்கியது இல்லை.

அதனால், தனது வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கடிதத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்று மகானைச் சந்தித்தார்.  ஒரு பழத் தட்டில் பூக்களுடன் இந்தக் கடிதத்தையும் வைத்து மகான் முன் சமர்ப்பித்தார்.

விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லி, ஜனாதிபதியின் அனுமதிக்காக லிஸ்ட் டெல்லி போயிருக்கிறது என்று முடித்தார்.
clip_image002

மகான் அக்கடிதத்தை அவரே எடுத்துப் படித்தார்.  ‘அவா வேற தர்ராளாமா ?  நாமதான் ஏற்கனவே உனக்கு  ‘சமய இலக்கிய பிரச்சார மணி’ னு பட்டம் தந்தாச்சே”  என்று சொல்லி அக்கடிதத்தைப் பழத் தட்டிலேயே போட்டுவிட்டார்.  உடனே தன் உதவியாளரை அழைத்து ஒரு சால்வையைக் கொண்டு வரச் சொல்லி, அதை வானதி திருநாவுக்கரசுக்கு அணிவிக்கச் செய்தார்.  அத்துடன் நில்லாது, தன் மார்பில் இருந்த பவளமாளையைக் கழற்றி வானதியாருக்கு அணிவிக்கச் செய்தார்.

மகானே பட்டம் கொடுத்த பிறகு…..வேறு பட்டம் எதுவும் தேவை இல்லை தானே ?  அதேபோல் இன்று வரை பாண்டிச்சேரி பல்கலைக்கழக பட்டம்  அவருக்கு வரவே இல்லை.

Friday, November 26, 2010

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன காஞ்சி முனிவர்…

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம்.  கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது.  அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை.   படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான்,  அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும்.  காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை,  எங்கும் போகக் கூடியவராயிற்றே…

ஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார்.  படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை.  தெய்வத்தின் தரிசனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போகலாமே — மனதில் மட்டும் பக்தி என்று ஒன்று இருந்தால்.
clip_image001

அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன.  எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள்.  எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு,  தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.

சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு.  எல்லாவற்றையும் கேட்ட பின்,  மகான், தங்கை மீனாளைப் பார்த்தார்.  பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது.   மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா ?

மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் –

“அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.  எல்லாம் சரியாகி விடும். “  என்றார்.

clip_image002

“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே”  என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார்.  அதனாலென்ன ?  தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே !   திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்”  என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.

அவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு, திரும்ப முயன்றார்கள்.  சற்று தூரம் வந்தவுடன்,  மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள்.

“உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு’  என்று சொன்னபோது திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.

அந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது.  இவர்களும் ஊர்ருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும்.  இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா ?  தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார் ?  மகானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு,  திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன், வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்.

மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை‘ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்.  ஒரே மாதம்தான்…  மீனாள் பூரண குணமடைந்தாள்.  மனக் கோளாறு முழுமையாக விலகி,  இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார்,  பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு.  மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை,  கைவிட்டதுமில்லை

Thursday, November 25, 2010

சூடான பால் !

clip_image001

திருச்சியில் ஒரு பக்தர்.  புகைப்படக்காரர்.  சிறிய ஸ்டுடியோ வைத்திருந்தார்.  வீட்டு பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும்.

தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு,  ஏதாவது ஒரு படையலை,  மகாபெரியவர் படத்துக்கு முன் வைத்து வணங்கிவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார்.  பெரியவாளின் நாமத்தை அவரது உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு தடவை பெரியவா,  ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம் செய்திருந்தார்.  அதுவோ உஷ்ணப் பிரதேசம்.  வெயில் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருந்தது.

திருச்சியில் இருந்த இந்த புகைப்படக் கலைஞருக்கு ‘பெரியவாளைத் தரிசிக்க வேண்டும்’  என்று மனதில் ஆசை வந்தது.  அன்று காலை ரயிலில் புறப்படும்முன் வழக்கம்போல் பெரியவா படத்துக்கு முன்னால் படையலாக சூடான பாலை ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்.

கர்நூலில் அளவுக்கு அதிகமான பக்தர் கூட்டம்.  எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம்.  நமது புகைப்பட நிபுணர் எந்தப் பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை.  சற்றுத்  தூரத்தில் இருந்த மணற்குவியல்  ஒன்றின்மீது ஏறி நின்று மகாப் பெரியவாளைத் தரிசிக்க முயன்றார்.  வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது.  கும்பல் குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார்.  இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு.

சற்றுத்  தூரம்தான் நடந்திருப்பார்.  யாரோ அவரைக் கூப்பிடுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார்.

ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார்.  “நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க ?”

“ஆமாம்”

பெரியவா உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.”

“என்னையா ?”  — பக்தருக்கு வியப்பு.

“நீங்க ஃபோட்டோகிராபர் தானே ?”

“ஆமாம்”

“அப்படியென்றால் வாருங்கள்….”

விடாப்பிடியாக அவரை அழைத்துக் கொண்டுபோய் பெரியவா முன் நிறுத்தினார்,  அந்தச் சிஷ்யர்.  கைகளைக் கூப்பியவாறு,  கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட,  புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.

அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான்,  “என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே…  கடைசியில் பார்க்காமலே போனால் என்னப்பா அர்த்தம் ?”  என்றார்.

“கும்பல் நிறையா இருந்தது… அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு….”  என்று தடுமாற்றத்துடன் இழுத்தார் புகைப்படக்காரர்.

“சரி.  சரி.. சாப்பிட்டியோ ? “

“சாப்பிட்டேன் !”

சில வினாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார்.  “என் வாயைப் பார்த்தியோ ?”

நாக்கை வெளியே நீட்டுகிறார்.  சூடுபட்டது போல் சிவந்திருக்கிறது.  பிறகு கேட்டார்.  “உதடெல்லாம் கூடப் புண்ணாகி விட்டது..  ஏன் தெரியுமா ?”

புகைப்பட நிபுணருக்குப்  புரியவில்லை.

“நீ பாலைச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா…  அதான்! “  என்றார்.

திருச்சிக்காரருக்குப் புறப்படும்போது தான் வைத்த படையல் அப்போது தான் நினைவுக்கு வந்தது.

சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபு,  என்னை மன்னியுங்கள் “  என்று கதறினார்.

எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால்,  காஞ்சி மகான் அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள்.
அது சாத்வீகமான் பக்தி !  “ஆண்டவனே,  நீதான் எனக்கு எல்லாம் ! “  என்று மனதார நினைக்கும் பக்தி !!

Wednesday, November 24, 2010

5 வகை ஸ்நானங்கள் பற்றி காஞ்சி மகாபெரியவர்…

clip_image001காஞ்சி மகாபெரியவர்

clip_image002

சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான். இதற்கு அப்பறம் வருவதுதான், ‘கௌண’மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்! ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும்போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக்காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்கிறோம்.

பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது எழும் குளம்படி மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணனே இந்தப் பசுக்களின் குளம்படித் தூள், சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி ‘கோதூளீ தூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ‘கோதூளி’ நம்மீது படும்படியாக நின்று அந்த மண்துகள்கள் நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம். இதன் பெயர் ‘வாயவ்யம்’. இது வாயுவுடன் சம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம்.

clip_image003அபூர்வமாக சில தருணங்களில் வெய்யில் அடிக்கும்போதே மழையும் பொழிகிறதல்லவா..? இவ்வாறான மழைஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது ‘திவ்யஸ்நானம்’. இதுவே நான்காம் வகை ஸ்நானம்.

புண்யாக வாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம் மீது தெளிப்பார். சந்தியாவந்தனத்தில் ‘ஆபோஹிஷ்டா’ சொல்லி நீரைத் தெளித்துக் கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்ளுவது ஐந்தாம் முறை. இதன் பெயர் ‘ப்ராஹ்மம்’. ‘ப்ரம்மம்’ என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு, ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ என்று பெயர்.

பார்க்கப் போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான். எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈச்வர ஸ்மரணையுடன், ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன

Tuesday, November 23, 2010

ராமநாம பாட்டி

clip_image001

காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து பக்தர் ஒருவர் காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க மடத்திற்கு வந்திருந்தார். அந்த ஊரில் சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ கிடையாது. ஒரே ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் தான். வந்திருந்த பக்தர் தன்னுடைய ஊரைச் சொன்னதும், பெரியவர் அவரிடம், “”உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராமபிள்ளையார் கோயில் என்று தானே கூறுவார்கள்,” என்றார். அவரும்,””ஆமாம் சுவாமி!” என்று சொல்லித்  தலையசைத்தார்.

சிறிது நேர யோசனைக்குப் பின் பெரியவர் மீண்டும் பக்தரை அழைத்து, “”உங்க கிராமத்தில் அந்த காலத்தில் துக்கிரிப்பாட்டி என்றொருத்தி இருந்தாள் தெரியுமா?” என்று கேட்டார். பக்தரும் பயபக்தியுடன்,””நான் கேள்விப்பட்டிருக்கிறேன்!” என்றார்.

“”உங்கள் ஊர் துக்கிரிப்பாட்டி பற்றி நானே உனக்குச் சொல்கிறேன்” என்று தொடர்ந்தார்.

“”அந்த காலத்தில் உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் தான் ராமநாமஜெபம் நடக்கும். அதனால் அக்கோயிலுக்கு “”ராம பிள்ளையார் கோயில் ” என்ற பெயர் வந்தது” என்றார். பெரியவர் பேச்சை பக்தர் மெய்மறந்து கேட்கத் தொடங்கினார்.  பெரியவர், ””அதுசரி!  ராமபிள்ளையார் இருக்கட்டும்.  துக்கிரிப்பாட்டி கதைக்கு வருகிறேன்!” என்று தொடர்ந்தார்.

“” துக்கிரிப்பாட்டியின் இளவயதிலேயே கணவர் இறந்து விட்டார். அதனால், அவளை உலகம் பழித்துப்பேசியது. அவளைக் கண்டால் ஆகாது என்று எண்ணி “”அடி! துக்கிரி! துக்கிரி!” என்று திட்டித்தீர்த்தது. விதியின் கொடுமையை எண்ணிய அவள் தன் மனநிம்மதிக்காக ராமநாமாவைச் சொல்லத் தொடங்கினாள். அதுவே ஜபவேள்வியானது. ஆண்டுகள் உருண்டோடின. அவளும் பாட்டியாகிவிட்டாள். ஒரு சந்தர்ப்பத்தில், ஊர் பிரமுகரின் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனது. வயிற்றுவலியால் குழந்தை துடித்தது. வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. விஷயத்தை அறிந்த துக்கிரிப்பாட்டி தானாகவே பிரமுகரின் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். ராமநாமத்தை ஜெபித்து, குழந்தையின் நெற்றியில் விபூதியிட்டு, “”பூரண குணம் உண்டாகும்” என்று சொல்லிச் சென்றாள். என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை “”துக்கிரிப்பாட்டி” என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர்.  “”ராமநாம பாட்டி” என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள். நீயும் அந்த பாட்டிபோல சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜெபித்துவா.  எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும்,” என்று ஆசியளித்து அனுப்பினார்.

பெரியவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் ராமநாமத்தின் மகத்துவத்தை உணர்ந்தனர்.

Monday, November 22, 2010

பி.வி. சங்கீத சகோதரர்கள்

சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம்.
clip_image001
ஒருமுறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சிமடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தார்கள். அதே நாளில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால், காஞ்சி மடத்தில் பாடவேண்டியிருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு இருபது நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலைவிழாவில் முதல்நாள் பாடவேண்டிய பாலக்காடு கே.வி. நாராயண சுவாமிக்கு வரமுடியவில்லை. அவர் மூன்றாம் நாள் பாட வருவதாக ஒத்துக்கொண்டார். அதனால் முதல்நாள் நிகழ்ச்சியில் அவசியம் பாடும்படி கேட்டுக்கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ்சில் திருவனந்தபுரம் கிளம்பினர். முதல்நாள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மூன்றாம் நாள் காஞ்சிபுரம் புறப்பட்டனர்.  அப்போது கனமழை பிடித்துக்கொண்டது. காஞ்சிபுரம் செல்லமுடியுமோ முடியாதோ என்ற வருத்தம் உண்டானது. பெரியவரை வேண்டிக் கொண்டு மழையோடு மழையாக பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தனர். சென்னைக்குக் கிளம்பும் விரைவு பஸ் கிளம்பிக்கொண்டிருந்த சமயம். இவர்கள் பஸ்சில் இடம் இருக்கிறதா என பார்த்தனர். சொல்லி வைத்தது போல் இரண்டு இருக்கைகள் மட்டும்  காலியாக இருந்தன. மூன்றாம் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தனர். காலை பத்து மணிக்கு பூஜை ஆரம்பம். பூஜையில் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார்கள்.
clip_image002

பிரசாதம் வழங்கும் நேரம்… சங்கீத சகோதரர்கள் பெரியவர் முன் நின்றார்கள். பெரியவர் அவர்களிடம்,  “”என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா?   நல்ல மழையாச்சே!   எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?”  திருவனந்தபுரம் சென்று வந்த விஷயம் பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று சகோதரர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். சாஷ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, “”பெரியவா அனுகிரஹத்தாலே திருவனந்தபுரத்திலேயும், காஞ்சியிலேயும் பாடும் வாய்ப்பு கிடைச்சுது!” என்று பணிவுடன் சொன்னார்கள்.  “”அப்படி ஒன்றும் இல்லை! அம்பிகை தான் ஒரே கல்லடிச்சு உங்களுக்கு இரண்டு மாம்பழம் கொடுத்துட்டான்னு சொல்லு!” என்று வாழ்த்தினார்.  பெரியவரின் வாழ்த்தைக் கேட்டு சகோதரர்கள் இருவரும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

Sunday, November 21, 2010

பரோபகாரத்துக்காகவே சிக்கனம் — காஞ்சி மகா பெரியவர்

கீழ்க்காணும் வரிகள் மறைந்த காஞ்சி மகா பெரியவர் சொன்னது. சின்ன வயதில் இதை நான் படித்த போதும் சரி, இப்போது படிக்கும் போதும் சரி, சட்டென்று மனதில் ஒரு தெளிவும், ஒரு புரிதலும் உண்டாகிறது. இந்த பாடத்தை முடிந்த வரை வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிய வேண்டும் என்பது பிரார்த்தனை.

clip_image001

“பரோபகாரத்துக்காகவே சிக்கனம்”

சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால் தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும். அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு மேல்நாடுகளைப் பார்த்து material comfort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது; பிறத்தியாருக்கும் தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைக்கிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறது போல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக – கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது?

இப்போது பொதுவாக உள்ள பரிதாப நிலை என்னவென்றால், ஒன்று, சிக்கனமாக இருப்பவன் தானும் அநுபவிக்காமல் பிறத்தியானுக்கும் உதவி பண்ணாமல் கருமியாக இருக்கிறான்; செலவாளியாக இருப்பவனோ ஸெளகர்யம், இன்னும் ஸெளகர்யம் என்று பறப்பதில் தனக்கே போதாமல் கடனாளியாக நிற்பதால் இவனாலும் பரோபகாரம் நடப்பதில்லை.

பிறருக்குச் செய்வதற்காகவே சொந்த விஷயத்தில் சிக்கனமாயிருக்கவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ஒவ்வொருவனும் கடைப்பிடித்தால் எவ்வளவோ புண்யத்துக்குப் புண்யம், நிம்மதிக்கு நிம்மதி, எத்தனையோ தீனர்களும் க்ஷேமமடைவார்கள்.

சிக்கனமாயிருந்தாலொழிய, இப்போது இருக்கிற போக போக்ய இழுப்பில், எவனுக்குமே மிச்சம் பிடிக்க முடியாது. அதனால் சிக்கன வாழ்க்கை நடத்தினால்தான் ‘தனக்கு மிஞ்சி’ தர்மம் பண்ண முடியும். அதாவது எத்தனை சிக்கனமாயிருக்க முடியுமோ அப்படியிருந்து தனக்கு மிஞ்சும்படியாகப் பண்ணிக்கொண்டு தர்மம் பண்ணணும்.

–ஸ்ரீகாந்த் மீனாக்ஷி  (http://kurangu.blogspot.com)

Saturday, November 20, 2010

காயத்ரீ மந்திரத்தின் மகிமை — காஞ்சி மஹா பெரியவாள்
clip_image001
மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராமணனாக மாட்டான்.  அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்கிரஹாரம் ஆகாது.  அது குடியானவர் தெருதான்.  ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராமணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்பிராமணன்;  கெட்டுப்போன பிராமணன்.  கெட்டாலும் ‘பிராமணன்’ என்ற பேராவது இருக்கிறது.  மறுபடி பிராமணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டு விட்டால் பிராமணத்துவம் அடியோடு போய்விடுகிறது.  அவன் மறுபடியும் பிராமணனாக உறவுக்காரர்களாக உடையவன்.  அதாவது,  பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன் தான் !
ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும்.  சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது.  ஆனால் உபயோகப்படுமாறு  பெரிசாக்கப்படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது  பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும்.  கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது.  இதுவரைக்கும் அனாசாரம் செய்ததற்குப் பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்.  இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திர சக்தி இருப்பதற்குத் தேகத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Friday, November 19, 2010

சந்தனக்கூடு
clip_image001
மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு.அதேமாதிரி மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை. அவர் சமாதியான அன்று மரியாதை செலுத்த வந்தவர்களுள்  சில இஸ்லாமிய சகோதரர்களும் அடக்கம்.
clip_image002
ஒருமுறை சிறந்த இலக்கியவாதியும், கம்பன் கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மாயில் அவர்கள் பெரியவர்களைப் பார்க்க வந்தார். இருவருக்கும் இடையே இலக்கிய விஷயங்களைப் பற்றியும் கம்பராமாயணத்தைப் பற்றியும் விவாதம் வெகு நேரம் நடந்து கொண்டு இருந்தது. மடத்திலிருந்த எல்லோருக்கும் ஸ்வாமிகள் நீதியரசருக்கு என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் என்ற எண்ணமே மிகுதியாக இருந்தது. இந்துக்களுக்கெல்லாம் விபூதி குங்குமம் வழங்கலாம். ஆனால் இந்த இஸலாமிய பெரியவருக்கு என்ன கொடுப்பார்? விவாதம் முடிந்து நீதியரசர் விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது.
ஸ்வாமிகள் மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து சைகையால் ஒரு பொருளைக் கொண்டுவரச்சொன்னார்கள். உடனே அவரும் ஒரு வெள்ளிப் பேழையில் அந்தப்பொருளைக் கொண்டுவந்து ஸ்வாமிகள்முன் வைத்தார். ஸ்வாமிகள் நீதியரசரைப் பார்த்து இந்தப்பேழையில் சந்தனம் இருக்கிறது இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள் என்றார்.மேலும் கூறினார்   நம் இருமதத்தினருக்கும் பொதுவான அம்சம் இது.   உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு உண்டு   எங்கள் கோவில்களிலும் சந்தனம் உண்டு.   நீதியரசரும் சந்தோஷத்துடன் அதை அணிந்து கொண்டு சென்றார்.
முஸ்லிம் அன்பருக்கு அறிவுரை — காஞ்சி மஹா பெரியவர்
clip_image001
அடையாறு பிள்ளையார் கோயிலுக்கு ஒருமுறை ஸ்வாமிகள் விஜயம் செய்திருந்தார்கள்.அவர்கள் வருகையை முன்கூட்டி அறிந்த ஒரு பக்தர்,  கோவில் முன்னால் பந்தல் அலங்காரம் செய்ய விரும்பினார்.  ஆகவே அவருடைய நண்பரான சங்கு மார்க் லுங்கி நிறுவன அதிபர் ஹாஜி ஸையித் அப்துல் காதிர் அவர்களை அணுகி, அந்தச் செலவை ஏற்குமாறு அவரை கேட்டுக்கொள்ள, அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார்.  குறிப்பிட்ட நாளன்று பந்தல் ஜோடனையும், மலர்களும், வண்ண விளக்குகள் அலங்காரமும் எதிர்பார்த்ததை விட வெகு நேர்த்தியாக அமைந்திருந்தது.  அதேமாதிரி அதற்கான செலவும் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு அதிகமாகிவிட்டது.
மகாஸ்வாமிகள் அந்த மலர் அலங்காரத்தைப் பார்த்துவிட்டு,  “இதெல்லாம் யார் செய்தது?” என்று கேட்டார்கள்.
‘அதில் ஏதும் தவறு நேர்ந்துவிட்டதோ ‘  என்று பயந்த அன்பர்கள் பூ ஜோடனை செய்தவரை முன்னால் நிறுத்தி,  ‘இவர்தான் இதெல்லாம் செய்தார்.  இதற்குப் பண உதவி செய்தவர் ஒரு முஸ்லிம் அன்பர்”  என்றனர்.
“அந்த முஸ்லிம் அன்பரை முடிந்தால் வரச்சொல்.  அவரை நான் பார்க்க விரும்புகிறேன்”  என்றார் ஸ்வாமிகள்.
சங்கு மார்க் அதிபரின் நண்பர்,  ஸ்வாமிகளை அவர் சந்திக்க முயற்சி எடுத்துக் கொண்டார்.  “சரி.  அப்புறம் வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கலாம்”  என்று சொல்லிவிட்டார் பாய்.
இது நடந்து எட்டு வருஷங்கள் ஆகி விட்டன.  இதற்கிடையில் நோய்வாய்ப்பட்டிருந்த அந்த நண்பரும் (பக்தர்) இறந்துவிட்டார்.  இதற்குப் பிறகுதான் சங்கு மார்க் பாய்க்கு காஞ்சீபுரம் வரும் சந்தர்ப்பம் கிடைத்தது.  ஸ்ரீ மடத்திற்கும் வந்தார்.
ஸ்வாமிகளிடம் இதைத் தெரிவித்ததும்,  “இருக்கச் சொல்”  என்றார்கள்.  தமது நித்ய அனுஷ்டமானங்கள்,  பூஜை முதலியவற்றை முடித்துக் கொண்டு வந்தார்கள்.  தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் எல்லாருக்கும் ஆசி வழங்கியவாறு நடந்த ஸ்வாமிகளிடம்,  பாய் வருகையை தெரிவித்தனர்.  “இருக்கட்டும்,  சந்திக்கிறேன்”  என்ற பாவனையில் ஸ்வாமிகள் சைகை செய்தார்.
பிறகு சற்று நேரத்தில் பாய் அருகில் வந்தார்கள்.  சங்கு அதிபரைச் சற்று நேரம் ஏற இறங்கப் பார்த்தார்கள்;  மிகவும் கூர்ந்து பார்த்தார்கள்.  ஹாஜிபாய் அப்போது வழக்கமான லுங்கி, ஷர்ட் அணிந்திருந்தார்.
“வயசு எத்தனை ?”  என்று ஸ்வாமிகள் வினவினார்கள்.
“ஐம்பத்தெட்டு”
“தவறாமத் தொழுகிறாயா ?”
“தொழுகிறேன்”
“ஆறுமுறையும் தொழவேண்டும்”
“ஐவேளைத் தொழுகை தான் கட்டாயக் கடமை;  அதனால் ஐந்து வேளைகள் தொழுது வருகிறேன்.”
“இல்லை,  நீ ஆறு முறையும் தொழவேண்டும்.”
“விரதமெல்லாம் ஒழுங்காகக் கடைப்பிடிப்பதுண்டா ?”
“சின்ன வயசிலிருந்தே ரமலான் மதத்தின் நோன்பு முழுவதையும் தவறாமல் நோற்று வருகிறேன்.”
“”அதேமாதிரி நோற்று வரவேண்டும் “  என்று கூறிவிட்டு,  பாயின் வயிற்றைக் காட்டி,  “பசிச்சவனுக்குத் தான் பசியின் அருமை தெரியும்,”  என்றார்கள்.
அவர் விடைபெற்றுக்கொண்டு புறப்படும்முன்,  அவருக்கு ஒரு சாதரா போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அதன் பின்னர் ‘முஸ்லிம் முரசு‘  என்ற பத்திரிகை ‘ஸ்வாமிகளை சந்தித்தது பற்றி‘  சங்கு மார்க் அதிபரைப் பேட்டி கண்டு  கட்டுரை வெளியிட்டிருந்தது.  அதிலிருந்து ஒரு பகுதி:
“ஆறு முறை தொழ வேண்டும் என்று காஞ்சிப் பெரியவர் சொன்ன அறிவுரைக்குப் பிறகே நீங்கள் ஆறு முறை தொழுவதாக வேறொரு பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டியில் சொல்லப்பட்டிருக்கிறதே,  அப்படியானால் அதுவரை உங்களை அவ்வாறு செய்யத் தூன்டுமளவுக்கு இஸ்லாமிய அறிவுரைகள் அமையவில்லை எனக் கொள்ளலாமா ?”
“அது என் இதயத்தில் விழுந்த சாட்டையடி.  அமைதியாக,  ஆனால் ஆழமாக அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைகள் என் உள்ளதைத் தொட்டு விட்டன.  அவர் சொன்னார் என்பதற்காக நான் தொழுகிறேன் என்று அர்த்தமல்ல.  நியாயமாக ஐவேளையும் நான் தொழுது வருபவன் தான்.  மக்காவிலும், மதீனாவிலும் தஹஜ்ஜத்துத் தொழுகைக்கு (ஆறாவது வேளையாகப் பேட்டியில் குறிப்பிடப்படும் தொழுகை)  தனியாகப் பாங்கு சொல்லப்பட்டு அதுவும் ஒரு கடமையான தொழுகையைப் போன்று தொழப்படுவதாகக் கண்டிருக்கிறேன்.  இங்கே வந்த பிறகும் நான் அவ்வாறே  தஹஜ்ஜத்துத் தொழுகையும் நியமமாகத் தொழுதிருக்க வேண்டும்.  ஆனால் தொழவில்லை.  அதை அழுத்தமாக ஞாபகப்படுத்தும் விதத்தில் அவர் அந்த வார்த்தைகளைச் சொன்னதும் என் இதயம் கசிந்து விட்டது.  இங்கே இன்னொன்றையும் நான் சொல்லியாக வேண்டும்.  நான் முன்பு தப்லீக்கில் மிகவும் ஈடுபாடு கொண்டு பல இடங்களுக்கும் சுற்றியவன்.  ஒரு தடவை அங்கப்ப நாயக்கன் தெரு,  மஸ்ஜிதே மமூர் பள்ளி வாசலில் தப்லீக் பயான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அன்று அந்த வேலை எனக்கு வருமான வரி சம்பந்தமான முக்கிய வேலை இருந்தது.  அதற்கு நான் அவசியம் போயாக வேண்டும்.  எனவே, எழுந்து செல்ல எண்ணும்போது,  ‘பயான்’ செய்து கொண்டிருந்தவர் சொன்னார்;  “இந்தப் பயான் முடியும் முன்னால் இங்கிருந்து யாரும் எழுந்து சென்றால் அவர்கள் நாடிச் செல்லும் காரியம் கைகூடுமா ?”  என்று அவர் சொன்னது என்னைப் புண்படுத்தியது.  ஏன் இப்படி இவர்கள் வலுக்கட்டாயமாக வார்த்தைகளை விட்டு இம்சைப்படுத்துகிறார்கள்  என்ற எண்ணம் தான் வளர்ந்தது.  அப்படி அவர் சொன்னது எனக்கு ஒரு மௌடீகமாகவே பட்டது.  அவர்களின் அணுகுமுறை எனக்குப் பிடிக்கவில்லை. அதிலிருந்து நான் தப்லீக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.  அறிவுரை சிறப்பாக இருந்தாலும் அதைச் சொல்ல வேண்டிய முறையில் நளினமாகச் சொல்லா விட்டால் பலன் எதிர்மாறாகி விடுகிறது.  அதற்காகத் தான் இந்தச் சம்பவத்தைச் சொன்னேன்.  அடுத்த கேள்வி ?”
“திரு கஅலூபாவையும், திரு ரவ்ழாவையும் பார்க்கின்ற பாக்கியத்தைப் பெற்ற நீங்கள் அந்தப் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியதைப் பெரும் பேறாகக் கொள்ள வேண்டிய தாங்கள்,  …..  “அந்த சாந்த முனிவர் என் மேல் அன்புகொண்டு ஆசீர்வதித்ததை நான் என் வாழ்நாளில் கிட்டிய பெரும்பேறாகக் கருதுகிறேன்’  என்று சொன்னது சரியா ?”
இந்தக் கேள்விக்கு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டு, “பஷீர் மௌலானாவை சந்தித்ததையும் சொல்லியிருக்கிறேனே ?”  என்றார் ஹாஜியார்.
“அதுசரி.  அதெல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்புகள் என்று குறிப்பிடத் தக்கவையே தவிர, அதைப் பெரும்பேறு என்ற நிலையில் அவ்வளவு பொருத்தமாக இல்லை என்பது என் கருத்து.”
“வேறு கேள்விகள் உண்டா ?”
“இல்லை.  போயிட்டு வர்றேன்.  அஸ்ஸலாமு அலைக்கும்.”
“வஅலைக்குமுஸ்ஸலாம் “

Thursday, November 18, 2010

மஹா பெரியவரைச் சந்தித்த சாண்டோ சின்னப்பா தேவர் ! — பா. தீனதயாளன்

clip_image001
பல மாதங்கள்  ‘அவரைத் தரிசிக்க வேண்டும்‘  என்று சினிமா உலகிலும் எம்.ஜி.ஆர். உள்பட அனேக வி.ஐ.பி.க்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவரே ஒருநாள் தேவரை வரச் சொல்லியிருந்தார். ஆன்மீக ஆலமரத்தின் அருள்பார்வை தன்மீது விழாதா என்று அனைவரும் ஏங்கி நின்றார்கள்.  தேவருக்கே முதல் அழைப்பு.
‘புனிதம்’ என்பதற்குரிய அர்த்தத்தை அவரைப் பார்த்த பின்பே புரிந்து கொண்டார் தேவர்.  திருப்பாதம் விழுந்து தொழுதார்.  தன் குறையைக் கூறினார்.
‘உடம்பு முடியலீங்க சாமி.  சர்க்கரை….’
அவர் புன்னகை பூத்தார்.  உதயசூரியன் சிரித்ததுபோல் இருந்தது.  அவரது தேஜஸில் கண்கள் கூசின தேவருக்கு.  கை கூப்பி நின்றார்.
clip_image002
நீ என் கவலப்படற?  உனக்குத்தான் வாட்ச்மேன் மாதிரி முருகன் இருக்கானே… !’
உள்ளுக்குள் ஏதோ அறுந்தது.  ‘நான்’ என்கிற அகம்பாவமோ,  எல்லாம் என் காசு என்கிற சுயநலமோ,  எதுவோ.  தேவர் உடைந்து போனார்.  எத்தனைப் பெரிய வார்த்தை!  இந்தப் பாமர வியாபாரிக்குத் தகுமா ?clip_image003
கைகளை  உயர்த்தி ஆசி கூறினார் காஞ்சி மஹா பெரியவர்.  பொத்திய கரங்களை எடுக்க மனசில்லாமல் திரும்பினார் தேவர்.
மௌனம் தெய்வாம்சம்! சத்தம் அசுரத் தாண்டவம்!
clip_image004
தேவர் திரையுலகில் தனது முதலீடாகச் செய்த விஷயங்கள் மூன்று. எம்.ஜி.ஆர்., முருகர், விலங்குகள்.
எம்.ஜி.ஆரால் தேவர் வளர்ந்தாரா? தேவரால் எம்.ஜி.ஆர். திரையுலக வெற்றிகளைக் குவித்தாரா?
இரண்டுமே நிகழ்ந்தன. யாருமே எளிதில் நெருங்கிப் பழக முடியாத எம்.ஜி.ஆர்., தேவரோடு மட்டும் விடாமல் பாராட்டிய நட்பு ஆச்சரியத்துக்குரியது. என்னால் எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல; யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.
முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுபடத்தையும் முடித்துவிடும் அவரது வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது. இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தன்னிகரற்ற தயாரிப்பாளரின் கதை இது.
clip_image005
கடந்த பதினைந்து ஆண்டுகளாக சினிமா பத்திரிகையாளராக இயங்கி வரும் பா. தீனதயாளன் முன்னணி தமிழ் இதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர்

காலத்தைக் கடந்தவர் !

வைகாசி மாதம் உச்சிப் போது  கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.
அப்போது லால்குடிக்கு அருகில்,  நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த நேரம்.
தெருவில் நடமாட்டமே இல்லை.  பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன.  தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர்.  கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.clip_image001
அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் !  நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில்,  தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து,  கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார்.  அவருடன் வேறு யாரும் வரவில்லை.  ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை;  மிக அபூர்வம்!
பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர்  கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார்.  அவருக்குப் பின்னால் தவுல்காரர்;  ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார்.  மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர்.  இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து,  ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர்.  தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும்,  பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.
clip_image002
அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட  யானையரசன்,  ‘ஆதிமூலமே‘  என்று கதறியவுடன்,  மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்து தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.
ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:
ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.  மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30  மணி ஆகி விட்டது.  தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை.  அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது.  மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை.  ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை.  யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.
குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள் நாம்!  நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ,  குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல….
ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம்.  அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.
தமது பக்தர்,  அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் அல்லவா ?
பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்;  ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே !

Wednesday, November 17, 2010

கருணைத் தெய்வம் காஞ்சி மகான் (9) – பட்டாபி
clip_image001
clip_image002clip_image003காஞ்சி முனிவரைப் பற்றிச் சொல்லும்போதே, அந்தப் பழைய நினைவுகளில் மூழ்கி, மெய்ம்மறந்துவிடுகிறார் பட்டாபி சார். நெகிழ்ச்சி மிகுதியில், அவரது கண்களில் தேங்கி நிற்கிறது நீர்.
”வைதீகம் கலந்த பொதுக்காரியங்களில், அவரவருக்குண்டான தர்மத்தையும் கர்ம அனுஷ்டானங்களையும் விட்டு விடாமல் கடைப்பிடிக்க வேணும்னு அடிக்கடி சொல்லுவா பெரியவா! 25, 30 வருஷத்துக்கு முன்னே, ஜீவாத்மா கைங்கர்ய சபைன்னு ஒண்ணு ஆரம்பிச்சார். அனாதை பிரேத சம்ஸ்காரம் பண்றது ரொம்ப முக்கியம்கிறது பெரியவா கருத்து. ஆஸ்பத்திரிலேருந்தும் போலீஸ்கிட்டேருந்தும் சில தருணங்கள்ல தகவல் வரும். அதுக்கு, அரசு சட்டப்படி என்ன உண்டோ அத்தனையும் செய்துட்டு, அந்த அனாதை இந்துப் பிரேதத்துக்கு, கங்கா ஜலத்தை புரோக்ஷணம் (தெளித்தல்) செஞ்சு, தகனம் பண்ண ஏற்பாடு செய்தார், பெரியவா! இது, அரசாங்கத் துக்கும் பெரிய உதவியா இருந்துது.
இந்த அமைப்புல 50-60 வாலன்டியர்ஸ் இருந்தாங்க. எல்லாரும் இளவட்டப் பசங்க. பெரியவா சொல்லிட்டா, தயக்கம் இல்லாம, எடுத்துச் செய்யறதுக்குக் காத்துட்டிருப்பாங்க எல்லாரும்! இப்பவும் இந்தக் சேவை தொடர்ந்துண்டிருக்கு. ஆனா, முன்போல வாலன்டியர்ஸ் கிடைக்கறதுதான் கஷ்டமா இருக்கு.
‘இறந்து போனவர் யாரோ… அவர் நமக்குச் சொந்தமோ பந்தமோ கிடையாது. அதுக்காக, யாரோ ஒருத்தர்தானேன்னு சும்மா இருந்துடலாமா? இந்துவா இருந்தா, முறைப்படி பிரேத சம்ஸ்காரம் செஞ்சுதானே ஆகணும்?’னு பெரியவா ஆதங்கப்படுவா. இறந்த வங்க மேலயே அப்படியரு கருணை அவருக்கு இருந்துதுன்னா, உயிரோடு இருக்கிறவா மேல பெரியவா காட்டற கருணைக்குக் கேக்கணுமா? சிறைக்கைதிகளோட குழந்தைகளுக்கு யூனி ஃபார்ம், புஸ்தகம்லாம் வாங்கிக்கொடுக்க ஏற் பாடு பண்ணினார். கைதிகளோட மனைவிமார் களுக்கு உடம்பு சரியில்லைன்னா, சிகிச்சை தரவும் ஏற்பாடு பண்ணினார். இதுக்காகவே, கும்பகோணத்துல அத்வைத சபான்னு ஒண்ணு ஆரம்பிச்சு நடத்திண்டு வந்தார்.
வாக்யார்த்த சதஸ் அங்கே அடிக்கடி நடக்கும். இதுவும் மகா பெரியவா ஆரம்பிச்சு வைச்சதுதான். இங்கே, நல்ல விஷயங்களை நுணுக்கமா ஆராய்ஞ்சு பேசுவா. பிரதோஷம், தீபாவளி, சங்கராந்தி மாதிரி நாட்கள்ல ஜெயிலுக்குப் போய், அங்கே இருக்கிற கைதிகளுக்கு நல்ல மனசு அமைஞ்சு, அவாளும் நல்லபடியா வாழணும்கற நோக்கத்தோடு, பகவானைப் பத்தி விவரிச்சு, நீதி போதனைகள் சொல்லிட்டு வருவோம்.
அதேபோல, ஆஸ்பத்திரிகளுக்குப் போய் நோயா ளிகள்கிட்ட, அவங்க விருப்பத்தோடு ராம நாமம், சிவ நாமம்லாம் சொல்லி, அட்சதை, விபூதி, குங்குமம் கொடுப்போம். இதுலேயே அவாளோட வியாதி பாதி குணமாகிடும். ‘டெர்மினல் பேஷன்ட்ஸ்’னு சொல்லுவாளே, அப்படிக் கடைசி கட்டத்துல இருக்கிற நோயாளிகளுக்குப் பக்கத்துலயே உட்கார்ந்து ஜபம் பண்ணி, பத்துச் சொட்டு கங்கா ஜலத்தை அவாளுக்குக் குடிக்கக் கொடுப்போம்.
clip_image004இப்படித்தான் கேன்சர் பேஷண்ட் ஒருத்தர்… வலியால துடிச்சுண்டு இருந்தார். தினமும் அவர் பக்கத்துல உட்கார்ந்து, சிவ நாமமும் ராம நாமமும் சொல்லிண்டே இருந்தோம். ‘எனக்கு இப்ப வலியே தெரியலை; நிம்மதியாச் சாகறதுக்கு நான் தயார்’னு நெக்குருகிப் போயிட்டார். அப்புறம், அவர் இருந்த பதினைஞ்சு நாளும், வலியோ வேதனையோ இல் லாம நிம்மதியா இருந்தார். ஒரு மனுஷனோட பிராண அவஸ்தையைப் போக்கறது எவ்வளவு பெரிய தொண்டுன்னு பெரியவா மூலம்தான் தெரிஞ்சுண்டோம்.
பெரியவா பண்ணின இன்னொரு மகத்தான விஷயம், பிடி அரிசித் திட்டம். இதுல கிடைச்ச அரிசியைக் கொண்டு சமைச்சு, ரெண்டாவது மற்றும் நாலாவது ஞாயித்துக் கிழமைகள்ல, சென்னை போரூருக்குப் பக் கத்துல, கெருகம்பாக்கம் ஸ்ரீநீலகண்டேஸ்வரர் கோயில்ல கொடுத்து நைவேத்தியம் பண்ணி, எல்லாருக்கும் பிரசாதமா தந்தோம். இப்படித் தான், திருச்சி திருவானைக்காவல் அகிலாண் டேஸ்வரி கோயில்ல, ஒரு கடைசி வெள்ளிக் கிழமை அன்னிக்கி சர்க்கரைப் பொங்கல் வழங்கணும்னு ஆசைப்பட்டார் பெரியவா.
சுந்தரம்னு ஒரு அன்பர் ரொம்ப சிரத்தையா எங்ககூட சேர்ந்து சேவை பண்ணுவார். சர்க்கரைப் பொங்கலுக்கு பத்து மூட்டை அரிசி ஆகும்னா, அதுக்கு வெல்லம் எவ்வளவு தேவைப்படும்னு பாருங்கோ! நாலு பேர் உடைக்க, நாலு பேர் சமைப்பா. அதிகாலை ரெண்டு, ரெண்டரைக்கெல்லாம் சமையல் பண்ண ஆரம்பிச்சிடுவோம். வடக்கு வீதியில, நகரத்தார் சத்திரம் ஒண்ணு இருக்கு. அந்த இடத்துல, மிகப் பெரிய கோசாலை நடத்தினா பெரியவா (இப்போ, அங்கே ரிக்வேத பாடசாலை நடக்கிறது). அங்கேதான் பிரசாத விநியோகம் பண்ணுவோம். ஆடி கடைசி வெள்ளியின்போது, அன்னதானம் நடக்கும். அந்த விழாவுக்கு, வட நாட்டுக்காரா உள்பட, எல்லாரும் வந்து கலந்துப்பா.
‘வீட்டு விசேஷங்கள்ல கலந்துக்கறவா தான் லட்டு, ஜிலேபிலாம் சாப்பிடணுமா?’னு கேப்பார் பெரியவா. அதனால, அந்த அன்னதானத்துல வெறும் சாதம், குழம் புன்னு மட்டும் இல்லாம, ஸ்வீட்டும் போடு வோம். பரிமாறும்போது, ‘வேஸ்ட் பண்ணப் படாது’ன்னுதானே எல்லாரும் சொல்லு வோம்?! ஆனா, ‘எறியற மாதிரி பரி மாறுங்கோ!’ன்னு சொல்லுவார் பெரியவா.அதாவது, திருப்தியா சாப்பிட்டுட்டு, இலையில கொஞ்சம் மிச்சமே வெச்சிருக் கணும்; அந்த அளவுக்கு ஒருத்தர் வயிறு நிறையற மாதிரி பரிமாறணும்கிறது பெரி யவாளோட திருவுள்ளம்.
காஞ்சிக் கடலாடின்னு திருவண்ணா மலை மாவட்டத்துல ஒரு கிராமம். ஒரே காடா இருக்கும்; மலையும் உண்டு. பயங்கர மிருகங்கள்கூட அந்தக் காலத்துல இருந்து தாம்! அந்த ஊர்ல, பெரியவாளோட பூர்வாஸ்ரம பந்துக்கள் (உறவுகள்) இருந்தா. இப்பவும் ஒருத்தர் ரெண்டுபேர் அங்கே இருக்கா. மகா பெரியவாளுக்கு ‘தண்டம்’ பண்றதுக்கு, இங்கேருந்துதான் மூங்கில் வரும். மூங்கிலை வெட்டி, தண்ணியில அடிப்பா. அப்ப உடையாம இருந்தா, அது ஆண் மூங்கில்! ‘திக்’கா இருக்கும். பிஞ்சு மூங்கிலைத்தான் பெரியவாளுக்குத் தண்டம் செய்யறதுக்கு எடுத்துண்டு போவோம். ஏதாவது சின்னதொரு அனாசாரமாயிட்டா கூட, பெரியவா உடனே தண்டத்தை மாத்திடுவா. அதனால, அவர் எங்கே யாத்திரை போனாலும், கூடவே இருபது, இருபத்தஞ்சு தண்டங்களையும் எடுத்துண்டு போவோம்!
clip_image005காஞ்சிக் கடலாடிக்குப் பக்கத்துல பர்வதமலைன்னு ஒரு இடம்; பெரிய மலை அது; கஷ்டப்பட்டு, கவனமா ஏறணும். கொஞ்சம் அசந்தா, அவ்ளோதான்! மலை மேல அழகான கோயில் ஒண்ணு இருக்கு. ஸ்வாமி பேரு, மல்லிகார்ஜுன ஸ்வாமி. அம்பாள் பேரு பிரம்மராம்பிகை. மலையைப் பிரதட்சிணமா வந்தா, எப்படியும் 36 கி.மீ. இருக்கும். பெரியவா அந்த மலையைப் பல தடவை பிரதட்சிணம் பண்ணியிருக்கார். நாங்களும் அவரோடு கூட நடந்து போயிருக்கோம்.
மார்கழி ஒண்ணாம் தேதி, அங்கே சுத்துப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவா, கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் பேர் மலைப் பிரதட்சிணம் பண்ணுவா. பெரி யவா அதிகாலைல மூணே கால் மணிக்கெல்லாம் நடக்க ஆரம்பிச்சிடுவா. ஒருநாள்… 36 கி.மீ. தூரம் சுத்திட்டு, அசதில நாங்கள்லாம் அப்படியே தூங்கிட்டோம். ‘நீங் கள்லாம் சின்னவா; பசியைப் பொறுத்துப்பேள். இந்தக் கிராமத்து ஜனங்க பாவம்… என்னடா பண்ணுவா? குழந் தைங்களையும் தூக்கிண்டு எத்தனை பேர் நடக்கறா? அவாளுக்கெல்லாம் பசிக்காதா? குழந்தைகள் பசி தாங்குமா?’ன்னு பெரியவா எங்க சொப்பனத்துல வந்து கேக்கற மாதிரி இருந்தது. சட்டுன்னு எல்லோரும் பதறியடிச்சு எழுந்துண்டோம். அத்தனை பேருக்கும் வாய்க்கு ருசியா, ஸ்வீட்டோட அன்னதானம் பண்ற துன்னு தீர்மானம் பண்ணினோம்.
பிடி அரிசித் திட்டத்துல சேர்ற அரிசியை எல்லாம் தனியா வைச்சோம். மொத்தம் 25 மூட்டை அரிசி கிடைச்சுது. புளியஞ்சாதம் மாதிரி கிளறிப் போட அவ்ளோ அரிசி தேவை. அதே போல 15,000 ஜாங்கிரி பண்ணினோம். எல்லாத்தையும் லாரில ஏத்திண்டு போய், மூணு இடத்துல நிறுத்தி, பிரசாதமா விநியோ கிச்சோம். வருஷத்துல ஒருநாள், இப்படிப் பிரசாதம் பண்ணிக் கொடுக்கறது வழக்கம். இதெல்லாத்துக்கும் காரணம் பெரியவாளோட கருணைதான்.
மனசுல அன்பு சுரந்தால்தான், அது கருணையா பிறத்தியார்கிட்ட வெளிப்படும். பெரியவாளோட மனசு அப்படிப்பட்டது! அவர், கருணைத் தெய்வம். அவரோட கருணை மழைல நனையற பாக்கியம் நமக்குக் கிடைச் சிருந்தா, அதைவிட வேறென்ன வேணும், நமக்கு?!
நன்றி – சக்தி விகடன்
மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்த பில்லிசூனிய பாட்டி…
clip_image001
மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்த பில்லி சூனிய பாட்டி
பார்ப்பதற்கு ரொம்ப நல்ல பாட்டியாகத்தான் தென்பட்டாள். வெள்ளை வெளேரென்று புடவை. நெற்றி நிறைய திருநீறு. கழுத்து கொள்ளாமல் ருத்ராக்ஷ, ஸ்படிக மாலைகள். பெரியவாளை வெகு வினயமாகப் பணிந்து எழுந்தாள்.
பெரியவாள், ஒரு தொண்டரிடம் சமையல்கட்டிலிருந்து நூறு எலுமிச்சம்பழம் கொண்டுவரச் சொன்னார்கள். ஒரு தட்டில் அவைகள் வந்தன.
“அந்தப் பாட்டிகிட்ட குடு”
பாட்டிக்குத் திகைப்பு. பிரசாதம் என்றால், ஓரிரு பழங்கள் போதுமே…. நூறு எதற்கு? ‘எனக்கு ஏன் இத்தனை பழங்கள்?’ என்கிறார் போல் பார்த்தாள் பாட்டி.
“நீ… நிறைய எலுமிச்சம்பழம் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு… துர்தேவதையை ஆவாஹனம் பண்ணி, பல பேர் வீட்டிலே வைத்து, அவர்கள் குடியைக் கெடுக்க வேண்டியிருக்கு.. இந்தப் பழத்தை அள்ளீண்டு போ… உனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்…” என்று பொரிந்து தள்ளினார் பெரியவா. அவளோ, தான் ஒரு பில்லி-சூனியக்காரி என்று பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது என்று திடுக்கிட்டுப் போனாள்.
அழுதுகொண்டே நமஸ்காரம் செய்தாள்;  மன்னிப்பு கேட்டாள்.
“உனக்குத் தெரிந்த துர்தேவதை மந்திரங்களை, ஒரு பசு மாட்டின் காதில் சொல்லிவிட்டு, மறந்துவிடு. இனிமேல் பில்லி-சூன்யம் வேண்டாம். அதனால் வருகிற பணமும் வேண்டாம். பகவன் நாமா சொல்லீண்டிரு…”
பின்னர் பாட்டிக்கு விபூதிப் பிரசாதம் மட்டும் கொடுத்தார்.
(மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஆறாம் தொகுதியிலிருந்து

Tuesday, November 16, 2010

Please do not miss this 4 parts of Shri Udayalur K's best on Maha Periavaa!!!

மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – டாக்டர்.ஆர்.வீழிநாதன்

clip_image001
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சம்ஸ்க்ருதப் பண்டிதர் ஒருவர் எனது நெருங்கிய நண்பர். சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதும் வல்லமை பெற்றவர். அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சி:
வெகு நாட்களுக்கு முன், தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் பெரியவாள் முகாமிட்டிருந்த சமயம். சந்த்ரமௌலீஸ்வரர் சன்னதியில் தீப நமஸ்காரங்கள் முடிந்ததும் அங்கு குழுமியிருந்த மாணவர்களை ராம நாமத்தையும், சிவ நாமத்தையும் சொல்லச் சொன்னார் பெரியவர். குறிப்பாக அவர் ஒரு மாணவனை அழைத்து ‘ராம ராமா’ ‘சிவ சிவா’ என்று சொல்லச் சொன்னபோது, சுற்றி இருந்தவர்கள் அப்பையனை பிறவி ஊமை என்றனர். ‘ அதனாலென்ன? பையன் சொல்லட்டும்’ என்று பெரியவாள் சொல்ல, பையன் ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டான் .
இதைக் கண்ட என் ஆந்திர நண்பர். “எந்த மகானை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாதோ, எந்த மகானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ அந்த சந்திரிகா மௌலீ ஆன என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்” என்று சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதினார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அதுவரை அவர் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகமே எழுதியதில்லையாம்.
- டாக்டர்.ஆர்.வீழிநாதன் (மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஆறாம் தொகுதியிலிருந்து )

மாருதி மஹிமை

clip_image002
”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் சித்தம் க்ஷணகாலங்கூட நிற்காமல் ஸதாஸர்வதா ஒன்று மாற்றியொன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு உதாரணம் அதுதான். இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது ‘குரங்கு புத்தி’ என்கிறோம்.
ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம்
என்று ஆசார்யாளே சொல்கிறார் (சிவனந்தலஹரி – 20).  ‘பரமேச்வரா! ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போ ! வெறுமனே கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும்; நானும் பிழைத்துப் போவேன்’ என்று பரமேச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும் போது, ‘ஹ்ருதய கபி’ அதாவது ‘மனக்குரங்கு’, என்கிற வர்த்தையைப் போட்டிருக்கிறார்.
வெள்ளைக்காரர்களும் ‘மன்கி மைண்ட்’ என்கிறார்கள்.
கட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.
ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது – இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சாக உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ‘பசித்தாலும் புல் தின்னாது’ என்கிற ஒரு புலி சாக பக்ஷிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம் !
ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத் தன்னைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.
இதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனஸை அடக்கினார், பூர்ணமான இந்த்ரியக் கட்டுப்பாட்டோடு   இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டுவிட்டு எங்கேயோ குஹையிலே மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிடவில்லை. ஜன ஸமூஹ ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக் கொள்ளாமல் எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்காருபவர்கள் இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஓடாமல் அடக்கிப் போட்டு விடலாம். ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. ‘அஸாத்ய ஸாதகர்’ என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார். ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒரு மலையையே (ஸஞ்சிவி பர்வதம்) தூக்கிக் கொண்டு வருவது, ஒரு பெரிய வனத்தை (அசோகவனம்) அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே (லங்காபுரி) தஹனம் பண்ணுவது-என்றிப்படிச் செய்தவர் அவர்.
மனஸ் கொஞ்சங்கூடச் சலிக்காதவர்; ஸ்ரீராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இந்தண்டை, அந்தண்டை துளிக்கூட ஆடாமல் மனஸை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனஸு; ராம கார்யத்திலே ‘இதைவிட வேகமில்லை’ என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு !
ரொம்ப வேகமாக ஓடுவது எது?
‘வாயுவேகம், மனோவேகம்’ என்பார்கள்.
காற்றுதான் ஸ்தூலத்திலே பஹுவேகமாகச் செல்வது, ஸூக்ஷ்மத்திலே மனஸின் ஓட்டத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை.
‘காற்று மாதரி இந்த மனஸு கிடந்து பறக்கிறதே ! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை?’ என்று அர்ஜுனன் முறையிடுகிறான்.
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண…….வாயோரிவ ஸுதுஷ்கரம் (கீதை 6-34)
பகவானும் ஆடாமல் அசையாமல் நிறுத்தப்பட்ட யோகியின் மனஸைக் கொஞ்சங்கூடக் காற்றேயில்லாத இடத்தில் ‘ஸ்டெடி’யாக ஜ்வலிக்கிற தீபத்தோடு உவமித்துத்தான் சொல்லியிருக்கிறார்:
யதா தீபோ நிவாதஸதோ நேங்கதே ஸேபமா….. (கீதை 6-19)
‘நிவாதம்’ என்றால் ‘காற்று இல்லாமல்’ என்று அர்த்தம். வாதம் என்றால் காற்று. வாதம்,வாயு இரண்டும் ஒன்றுதான். ‘வாயுபிடிப்பு’ என்றும் ‘வாத ரேகம்’ என்றும் ஒன்றையேதான் சொல்கிறோம்?
ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?
சஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர் ! வாயு குமாரர். ‘வாதாத்மஜர்’ என்றும் சொல்வார்கள். ‘வாத’ என்றாலும் வாயுதானே? ‘ஆத்மஜன்’ என்றால் புத்ரன். வாத – ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
‘யூதம்’ என்றால் கூட்டம். ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே. ஆனபடியால் ‘வாநர-யூத-முக்யர்’.
இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலே என்ன சொல்லியிருக்கிறது?
வாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில்தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர்.
மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
‘மனோ-ஜவம்’ – மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். ‘ஜவம்’ என்றால் வேகம்.
‘மாருத – துல்ய – வேகம்’ – காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். ‘மாருதம்’ என்றாலும் காற்றுதான். ‘மந்த மாருதம்’ என்கிறோமல்லவா? மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு ‘மாருதி’ என்று பெயர். ‘வீர மாருதி கம்பீர மாருதி’ என்று (பஜனையில்) பாடுவார்கள்.
ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல ‘மனோஜவர்’ : அப்படியே, ஓயாமல் சலித்துக் கொண்டிருக்கிற வாயுவைப் போல ‘மாருத-துல்ய-வேகர்’; அவரே வாயுவின் பிள்ளைதான்- ‘வாதாத்மஜர்’; சஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன கபிகுல முக்யஸ்தராக இருப்பவர் வேற- ‘வாநர-யூத-முக்யர்!’.
இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால், இவரையே ச்லோகம்,
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
என்று ஸ்தோத்ரிக்கும்படியாவும் இருக்கிறார் !
புலன்களை வென்றவர் இவர்: ‘ஜிதேந்த்ரியர்’- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.
அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள ‘புத்திமதாம் வரிஷ்ட’ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே ‘ஸ்டெடி’யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி ‘புத்திமதாம் வரிஷ்ட’ராயிருக்கிறார்.
‘புத்திமான்’ என்று சொன்னாலே உசத்திதான். அதைவிட உசத்தி ‘புத்திமதாம் வர’ என்று சொல்லியிருந்தால். அப்படிச் சொல்லியிருந்தால் ‘புத்திமான்களில் சிறந்தவர்’ என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, ‘புத்தி மதாம் வரீய’ என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவரோடு ஒப்பிட்டு, ‘கம்பேரடிவ்’ – ஆக அவர் மற்றவர்களை விட உயர்வு சொருந்தியவரக இருக்கும் போது ‘வரீய’ என்பர்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படுச் சொன்னல்கூடப் போதாது ! இதையும்விட உசத்துயாக, ‘இதற்கு மேலே உசத்தியில்லை ; இவரோடுகூட ‘கம்பேரிஸ’னுக்கும் இடமில்லை; இவர்தான் புத்திக்கு ‘ஸூபர்லேடிவ்’; புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத்தான் வைக்கணும்’ என்றே (ச்லோகத்தில்) ‘புத்திமதாம் வரிஷ்ட’ என்று சொல்லியிருக்கிளது. ‘வரிஷ்ட’தான் சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக ‘கம்பேர்’ பண்ணக்கூட இன்னொன்று இல்லை.
ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன் என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.
ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும்விடப் பெரிய அவருடைய பெருமை என்ன என்றால் அவர் ராமதாஸனாக இருந்து, ‘பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை’ என்று இக்ர ஸ்தானம் (முதலிடம்) பக்திமான்களுக்கும் வரிஷ்டராயிக்கிறாரே, அதுதான். தேஹ சக்தியோடு, புத்தி நுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்தத் தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்து, ஸாக்ஷாத் ஸீதா-ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாரே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலைவணங்கிப் பணிய வேண்டும். ‘ஸ்ரீ ராமதூதாம் சிரஸா நமாமி’ என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும்.
மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி ||
ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .

Monday, November 15, 2010

கருணைத் தெய்வம் காஞ்சி மகான் (10) – பட்டாபி

clip_image001

clip_image002காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் தொடர்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர்கிட்ட பெரியவா இதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான் காய்கறி இல்லாம சமைப்பா. ஆனா இங்கே, நித்தியப்படி சமையலுக்கே காய் வாங்க வழியில்லாததால, ஆரஞ்சுப் பழத் தோலை எங்கேருந்தாவது தேடிக் கொண்டு வந்து, சாம்பார்ல போட்டுச் சமைக்கற நிலை இருந்துதாம்.

அப்பல்லாம் விவசாயிகள் நெல், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூன்னு தங்களால் முடிஞ்சதைக் கொண்டு வந்து கொடுப்பா. மத்தபடி காசா- பணமா கொடுக்கமுடியாது அவங்களால. ‘நாமளும் அதை எதிர்பார்க்கக்கூடாது’ம்பார் பெரியவா!

டீன் பருவத்துல பட்டத்துக்கு வந்தார் பெரியவா. கலவையில சேர்ந்தப்ப, அவருக்கு முன்னால பீடாதிபதியா இருந்த ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைஞ்சுட்டார். அதனால, ஆச்சார்யாள்கிட்டேருந்து படிக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் வழியில்லாம போயிடுத்து. வைஷ்ணவ சம்பிரதாயத்துல ‘சுயம் ஆச்சார்ய புருஷன்’னு சொல்வாளே, அப்படித்தான் பெரியவாளும் வளர்ந்தார். முதல் நாள் காயத்ரி உபாசனை பண்ணிட்டு, மறுநாள் குருவுக்குப் பண்ணவேண்டிய காரியங்களைச் செஞ்சார் பெரியவா.

அந்தக் காலத்துல அந்தணக் குடும்பங்கள்ல, ‘நாடு பாதி, நங்கவரம் பாதி’ன்னு ஒரு வசனம் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா இதுக்கு?

clip_image003நங்கவரம் ஜமீன் ராஜப்ப ஐயர்னு ஒருத்தர்; அவருக்குக் காவிரிக்கரையில பதினஞ்சாயிரம் ஏக்கர் நிலம் இருந்துது. அடுத்தடுத்த காலங்கள்ல அதெல்லாம் போயிட்டுது. ஜமீனோட குடும்பத்தார், மகேந்திரமங்கலம்ங்கிற இடத்துல பாடசாலை ஒண்ணை ஏற்படுத்தி, வித்வான்கள்லாம் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணி, எல்லா கிரந்தங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா. பெரியவா அதையெல்லாம் ‘மாஸ்டர்’ பண்ணிட்டார். அதாவது, நங்கவரம் ஜமீனும் உடையார்பாளையம் ஜமீனும்தான் மகாபெரியவாளோட வித்யாப்பியாசத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்கன்னு சொல்லுவா!

பெரியவாளோட தபஸ், யாத்திரை, பிரசங்கம், அவரோட புகழ்னு ஜனங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சப்ப… மடமும் செழித்து வளர ஆரம்பிச்சுது. அவரோட மகிமையைத் தெரிஞ்சுண்டு மடத்துக்கு உதவின மக்கள் ஏராளம். ஆனாலும், பண விஷயத்துல பெரியவா ரொம்பக் கவனமா, ஜாக்கிரதையா இருப்பா. எத்தனையோ பெரிய மனுஷங்க எல்லாம் பணத்தைக் கட்டி எடுத்துண்டு வந்து பெரியவா காலடியில கொட்டினாலும், எல்லாத்தையும் ஏத்துக்கமாட்டார். யார்கிட்டேருந்து வாங்கலாம்; யார்கிட்டே வாங்கக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும். அந்தக் காலத்துலேயே ஒரு பெரும் பணக்காரர் கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்தப்பகூட, வேண்டாம்னு மறுத்த மகான் அவர்!

பழங்கள், அரிசி- பருப்புன்னு கொடுத்தா, வாங்கிப்பார். பணமா கொடுத்தா, தொடக்கூட மாட்டார். கிராமம் கிராமமா நடந்து போயிருக்கார். பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மரத்தடி, ஆத்தங்கரையோரம்னு, வசதி வாய்ப்புகளையெல்லாம் பார்க்காம, எங்கே இடம் கிடைக்கறதோ அந்த இடத்துல தங்கிப்பார், பெரியவா!

அவரோடயே நாங்களும் தங்குவோம்; சமைக்கிறதுக்கு அரிசி, பருப்பெல்லாம் கையோடு எடுத்துண்டு போயிடுவோம். ஒரு தடவை, சித்தூர் செக்போஸ்ட்ல இருந்த அதிகாரிகள் எங்ககிட்ட இருந்த ஒரேயரு அரிசி மூட்டையையும் பறிமுதல் பண்ணிட்டா. ‘அரசாங்கம் கேக்கறது; கொடுத்துடு’ன்னு சொல்லிட்டார் பெரியவா. ‘அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’ன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலையா போச்சு! இந்த விஷயம் தெரிஞ்சதும், அப்ப ஆந்திர மாநில சீஃப் மினிஸ்டரா இருந்த என்.டி. ராமராவ் பதறிப்போயிட்டார். அரிசியைத் திருப்பிக் கொடுக்க உத்தரவு போட்டதோடு, ஓடி வந்து பெரியவாகிட்டே நேரில் மன்னிப்பும் கேட்டுண்டார். பெரியவா மேல அவருக்கு அபரிமித மரியாதை!

clip_image004உடனே பெரியவா, ‘இதுல மன்னிப்புக் கேக்க என்ன இருக்கு? அரசாங்க சிப்பந்திகள், அவாளோட கடமையைத்தானே செஞ்சா! அதுல குத்தம் சொல்லப்படாது. காஞ்சி மடத்துமேல நீங்க வைச்சிருக்கற அன்பும் மரியாதையும் என்னிக்கும் மாறாம இருக்கணும்’னு ஆசீர்வதிச்சார் கருணையுடன்!

என்.டி.ஆர், சென்னாரெட்டி, எம்.ஜி.ஆர்-னு எல்லாருமே பெரியவா மேல பெரிய பக்தியோடு இருந்தா. ‘அவா நம்ம மடத்துமேல மரியாதை வெச்சிருக்கிறது பெரிசில்லே; அந்த மரியாதையை நாம காப்பாத்திக்கணும். அதான் பெரிசு’ன்னு அடிக்கடி சொல்வார் பெரியவா!” என்று சிலிர்த்தபடி சொன்ன பட்டாபி சார், காஞ்சி மகானுக்கும் மற்ற மகான்களுக்குமான தொடர்புகளையும் விவரித்தார்.

”திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள்னு பெரிய மகான் இருந்தார். அவர் வாழ்ந்த இடத்தைத் ‘தபோவனம்’னு சொல்வா. முக்காலமும் உணர்ந்த மகான் அவர்; உட்கார்ந்த இடத்துலேருந்தே எத்தனையோ பக்தர்களைக் காப்பாத்தி அருள்பாலிச்சிருக்கார்! எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்; தெய்வாம்சம் உள்ள ஞானி. இன்னிக்குப் பிரபலமா இருக்கிற நாமசங்கீர்த்தனத்துக்கு மூல காரணம், அவர்தான்!

ஒருமுறை, அவரைத் தரிசனம் பண்ண வந்த ஜனங்களும், அங்கேயே இருக்கிறவங்களும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டா. ஏன்னா… சுவாமிகள் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு, ஆடாம அசையாம அப்படியே ஸ்தம்பிச்சு இருந்தார். அதைப் பார்த்து என்னமோ, ஏதோன்னு பதறிப்போயிட்டா. அதுவும், சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம உட்கார்ந்திருந்தா, பார்க்கிறவாளுக்குப் பதற்றம் வரத்தானே செய்யும்?!

யார்கிட்ட போய், என்னன்னு கேக்கறதுன்னு தெரியலை பக்தர்களுக்கு! அதே நேரம், சுவாமிகளை அந்த நிலையில் பார்க்கிறதுக்கும் மனசு சங்கடப்பட்டுது. அப்ப யாரோ சிலர், ‘எல்லாரும் உடனே காஞ்சிபுரம் போய், பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, என்ன பண்றதுன்னு கேளுங்கோ’ன்னு யோசனை சொல்ல… பக்தர்கள் சில பேர் கிளம்பி, பெரியவாகிட்ட வந்து, ஞானானந்தகிரி சுவாமிகள் பத்தி விவரம் சொன்னா.

clip_image005எல்லாத்தையும் கேட்டுண்ட பெரியவா, ‘கவலைப்படாதீங்கோ! அவருக்கு ஒண்ணும் ஆகலை. அவர் சமாதி நிலைல இருக்கார்; சாம்பிராணிப் புகை போடுங்கோ. அது ஒருவித ஆராதனை; சமாதி நிலையிலேர்ந்து எழுந்துடுவார்’னு சொன்னார். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.

‘சுவாமிக்கு ஒண்ணும் ஆகலே’ங்கிற மகிழ்ச்சியோடு திருக்கோவிலூருக்கு ஓடினா. பெரியவா சொன்னபடி, சாம்பிராணி புகை காட்டி, ஆராதனை பண்ணினா. அதன் பிறகு, ஞானானந்தகிரி சுவாமிகள் சமாதி நிலைலேருந்து மீண்டு வந்தார்.

ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.

அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.

காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!

பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!

நன்றி – சக்தி விகடன்

திருப்பாவையில் தாமோதரன் சிறப்பு — ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர்

clip_image001
திருப்பாவை – 5
ஸ்ரீ ராகம் , ஆதிதாளம்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
clip_image002
பொருள்: அளவிட முடியாத மாபெரும் மாய சக்தி நிறைந்த விஷ்ணு பூமியில் உள்ள உயிரினங்கள் மேன்மையடைய, தன்னையே அர்ப்பணித்து, வட மதுரை (மதுரா) யமுனா நதிக் கரையில் த்வாரகை பூமியில் யாதவ குலத்தை மேம்படுத்த,  வசுதேவர் — தேவகியின் கர்ப்பத்தில் பிறந்த மாயக் கண்ணன்,  யசோதையின் கர்ப்பத்தை பிரகாசிக்க  (இவள் வயிற்றில் பிறந்த குழந்தை காளியை மாற்றம் செய்ததற்கு நன்றியாக)  நந்தகோபன் வீட்டில் வளர்ந்த குழந்தை கண்ணன் செய்த பால லீலைகளை பொறுத்துக் கொள்ள முடியாத மற்ற வீட்டுப் பெண்கள் அளித்த புகார்களை பல தரம் கேட்டு, கேட்டு,  யசோதையின் மனம் கோபம் கொண்டு,  வீட்டின் தூண்களிலும்,  உரலிலும் கண்ணனை அடிக்கடி இடுப்பைச் சுற்றி கயிற்றால் கட்டியபோது அடி வயிற்றில் (தாமம் – கயிறு,  உதரம்  – வயிறு)  ஏற்பட்ட தழும்புடைய தாமோதரனை,  மனம், வாக்கு,  (காயம் – உடம்பு)  சரீரம் இந்த மூன்றையும் சேர்த்து வழிபட வேண்டும்.
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர்
clip_image003
காயம்: (உடம்பு)  அகத்தூய்மை,  புறத்தூய்மையுடன் தூய நல்ல மலர்களை பெருமாள் திருப்பாதத்தில் தூவி (தொழ)  இரு கரம் சேர்த்து வணங்க வேண்டும்.
வாக்கு: பெருமாளின் திவ்ய கல்யாண குணங்களை வாய் விட்டு முழுமையான சொற்களால் பாடி வழிபட வேண்டும்.
மனம்: பெருமாளின் பெருமைகளை (புகழை) சிந்தித்து, சிந்தித்து தியானிக்க வேண்டும்.
பாசுர பலன்கள்:
அறியாமல் நாம் முன் ஜன்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இனி வரும் காலங்களில் செய்யும் கர்மாவினால் அடையப் போகும் துன்பங்களும் (தீயில் இட்ட பஞ்சு எரிந்து சாம்பலாகி விடுவது போல)  தாமோதரனை, மனம், வாக்கு, காயத்தால் நியமத்துடன் வழிபடும் பக்தர்களை, நெருங்காமல் விலகிப் போய் விடும் என்பது உண்மையானதும், உறுதியானதுமாகும்.
clip_image004
clip_image005
clip_image006

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top