பெரியவா அணிவித்த சிவப்பு சால்வை!
ஒரு சமயம் அந்த ஓவியர் காஞ்சி மஹா சுவாமிகளை தரிசிக்கப் போயிருந்தார். அப்போது சிவப்பு நிற சால்வை ஒன்றை அவருக்கு அணிவிக்கச் செய்துவிட்டுச் சொன்னாராம்:
நீ இனிமே வெளியிலே எங்கேயும் போகாதே, உன் வீட்டில் இருந்தபடியே சித்திரம் வரை. உனக்கு எல்லாம் தானே தேடி வரும்.”
அந்த அருளாசியை அப்படியே ஏற்றுக் கொண்டார் அண்மையில் காலமான ஓவியர் ஜி.கே.மூர்த்தி. எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளப் போக மாட்டார். ஏதாவது விருதுகள், பரிசு பாராட்டு என்றால்கூடத் தன் சார்பாக யாரையாவது அனுப்பித்தான் பெற்றுக் கொள்வார்.
அபாரமான ஆன்மிக ஈடுபாடுள்ளவர் ஜி.கே.மூர்த்தி. ஆனால், ஒரு வித்தியாசம், எல்லோரும் வணங்கி வழிபடுகிற தெய்வ வழிபாட்டில் அவர் கூடுதலான நம்பிக்கை கொண்டிருந்தது சனி பகவான் மீதுதான். சனி பகவான் திரு உருவம் ஒன்றை பூஜைக்கு உரிய முறையில் வரைந்து பிரபலமாக்கினார். அதிலும் ஒரு வித்தியாசம் – பரவலாக நம்பப்படுகிற காக்கை வாகனத்துக்குப் பதிலாக, கருடனை, சனிபகவானின் வாகனமாக ஆக்கினார். அப்படி ஓர் ஆதாரம் பழைய நூல்களில் இருக்கிறது என்று சொன்னார். இதே கருத்தை ஓவிய மேதை எஸ்.ராஜமும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சனி பகவானுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாளைய ஆசை, இடம் தர பலர் முன் வந்தும் ஏனோ அது கைகூடவில்லை. ‘சனி பகவான் அங்கீகாரம் கிடைக்கலே’ என்று சொன்னார்.
கும்பகோணம் ஓவியப் பள்ளியில் படித்த மூர்த்தி, முதலில் படங்களை வரைந்தது ‘கலாவல்லி’ மாத இதழுக்குத்தான். பிறகு சென்னை வந்தபிறகு அமுதசுரபி முதலிய இதழ்களுக்கு வரைந்தார்.
அவருடைய ஓவியப் பாணி வித்தியாசமானது. ஆங்கிலப்பாணி ஓவியம். துல்லியமாகவும், மிகைப்படுத்தப்படாத அநாடமியோடும் இருக்கும். சிற்ப நகாசு வேலை நுட்பங்கள் அதிகமிருக்கும்.
நோயே இல்லாமல் வாழ்ந்தவர். தமக்குத் தோன்றுகிற ஆன்மிகச் சிந்தனைகளை எல்லாம் கட்டுரைகளாக எழுதி, சிறு சிறு நூல்களாக வெளியிட்டு ஒவ்வொரு புத்தாண்டின் போதும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.
மகான்கள், தேவி, முருகன், மகாவிஷ்ணு போன்ற வண்ணப்படங்களை நிறைய வரைந்தார். நல்ல குடும்பம், திட்டமிட்ட வாழ்க்கை, தம்முடைய முப்பது வயது நிறைவதற்கு முன்னாலேயே, தியாகராய நகரில் தாமோதர ரெட்டித் தெருவில், சிறியதாக ஒரு வீட்டு மனையை வாங்கி, வீடும் கட்டிக் கொண்ட அவர், ஓவிய உலகிலும் அவரது திறமையின் மூலம் புகழ் வீட்டைக் கட்டிக் கொண்டார்.
(ஜி.கே.மூர்த்தியின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர் ஓவியக் கவிஞர் ‘அமுதோன்’.)
–நன்றி கல்கி
No comments:
Post a Comment