தீபாவளித் திருட்டு!
தீபாவளிக்கு
நாலைந்து நாட்கள் முன்னாடியே, பெரியவாளிடம். நிறைய வஸ்த்ரங்கள் வேஷ்டி,
புடவை என்று பலபேர் கொண்டு வந்து ஸமர்ப்பிப்பார்கள். அதில் நல்ல விலை
உயர்ந்த வஸ்த்ரங்கள் நிறையவே இருக்கும். அனேகமாக எல்லாவற்றையுமே பெரியவா
தன் அமுதக் கைகளால் தொட்டு ஆஶிர்வாதம் பண்ணி கையோடு பட்டுவாடா பண்ணச்
சொல்லிவிடுவார்.
ஒருமுறை
ஶிவாஸ்தானத்தில் தீபாவளிக்கு மூன்று தினங்களுக்கு முன்னால், இதுமாதிரி
புது வஸ்த்ரங்கள் வழக்கம்போல் வைக்கப்பட்டிருந்தது. மத்யானம் பிக்ஷைக்குப்
பின், பெரியவா சற்று ஓய்வெடுக்க தன் அறைக்குள் சென்று விட்டார்.
புது வஸ்த்ரங்களை அங்கேயே வைத்துவிட்டு மற்ற பாரிஷதர்களும் ஸாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கச் சென்று விட்டனர்.
அந்த
‘ஸௌகர்யமான‘ தருணத்தை யாரோ ஒருவன் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு,
எல்லா விலையுயர்ந்த வஸ்த்ரங்களையும் ‘சுருட்டி‘ கொண்டு போய்விட்டான் !
அவன் அத்தனையையும் எடுத்துக் கொண்டு போகும்போது, அங்கு யாருமே இல்லை!
இதில்
வேடிக்கை என்னவென்றால், பெரியவாளுடைய ரூம் கதவுகளின் நடுவில் ‘gap‘
இருக்கும். அந்த gap வழியாக, உள்ளேயிருந்து கொண்டு, வெளியே நடப்பதை பார்க்க
முடியும்!
“ஆஹா!
யாருமே பார்க்கவில்லை!” என்று ஸந்தோஷப்பட்டுக் கொண்டு, வஸ்த்ரங்களை ஒரே
‘சுருட்டாக சுருட்டிய’ அந்த ஶிகாமணியை, தன் ரூமின் கதவிடுக்கு வழியாக
பெரியவா பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்! ஆனால், அதைப் பற்றி மூச்சு
விடவில்லை !
[நமக்குள்
ஆத்மஸ்வரூபமாக இருந்துகொண்டு, நம் மனஸின் அத்தனை வக்ரங்களையும் பார்த்துக்
கொண்டிருந்தும், நம்மைத் தலைகீழாக புரட்டிப்போட்டு, நம் அஹங்காரத்தை
த்வம்ஸம் பண்ணும் ஸமயம் வரும்வரை, எதுவும் செய்யாமல் ஸும்மா.. ஸாக்ஷி
மாத்ரமாக பார்த்துக் கொண்டிருப்பதுபோல்!!!]
ஸாயங்காலம், ஸ்நானம் முடிந்து வந்த பாரிஷதர்கள், வஸ்த்ரங்கள் வைத்திருந்த இடம் ‘ஸப்ஜாடாக காலி’யாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்கள்!
“எங்கடா! துணியெல்லாம் இங்கதானே இருந்தது! காலேல இருந்ததே! இப்போ காணோமே!……”
“நீதான பொறுப்பை எடுத்துண்ட?…. எங்க போச்சு?…”
பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டனர்.
துணிகள் போனது போனதுதான்!
பெரியவா மூச்சுக் காட்டவில்லை!
தீபாவளிக்கு முந்தின நாள்!
பெரியவா தன் பாரிஷதரான ஶ்ரீ ராமக்ருஷ்ணனை கூப்பிட்டார்.
“நா….கேக்கறதுக்கு பதில் சொல்லேன்….. தீபாவளி அன்னிக்கி என்னென்ன பண்ணறது வழக்கம்?”
“போது
விடியறதுக்குள்ள எண்ணெய் தேச்சுப்பா… புது வஸ்த்ரம் கட்டிப்பா……. பட்டாஸ்
வெடிப்பா… ஸ்வீட், பக்ஷணம் ஸாப்பிடுவா… பெரியவா ஏன் இப்டி கேக்கறேள்னு…..”
“அப்போ... தீபாவளின்னா, புது வஸ்த்ரம் மட்டும் போறாது. இல்லியா? எண்ணெய், பட்டாஸு, ஸ்வீட், பக்ஷணம் எல்லாந்தான் வேணும்ங்கற!………”
“ஆமா…….பெரியவா……”
“ஸெரி. அப்போ நீ என்ன பண்ணறேன்னா…… தனியா கொஞ்சம் பக்ஷணம் பண்ணு. அப்புறம் கொஞ்சம் எண்ணெய், கொஞ்சம் பட்டாஸு வாங்கிக்கோ…... ”
“ஸரி”
“ராத்ரி
எல்லா…ரும் தூங்கினப்புறம், தேனம்பாக்கத்துல இருக்கானே, ஒன் ஶிஷ்யன் ‘
குண்டு‘ ! அவனோட ஆத்துத் திண்ணைல எல்லாத்தையும் வெச்சுட்டு வா…..”
சுரீரென்றது ராமக்ருஷ்ணனுக்கு!
“என்னது?
அந்த குண்டுப்பயல்தான் எல்லா வஸ்த்ரங்களையும் சுருட்டிண்டு போனவனா?
பெரியவாளுக்கு எப்டி தெரிஞ்சுது? ஏன் யார்கிட்டயும் சொல்லலே?”
விடைகாணமுடியாத
கேள்விகளோடு, பெரியவா சொன்னபடி பக்ஷணங்கள், எண்ணெய், பட்டாஸு
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், “குண்டு“வின் வீட்டுத் திண்ணையில்
வைத்துவிட்டு வந்தார். அந்தப் பையன்தான் ராமக்ருஷ்ணனுக்கு உதவியாக
இருப்பவன்.
“என்னோட
மாட்டை அந்த குண்டுதான் மேய்க்கறான்னுதான், பெரியவா “ஒன் ஶிஷ்யன்” ன்னு
சொன்னாரா? ச்சே! இப்டி பண்ணிட்டானே!..என்ன ஒரு திருட்டு புத்தி ! அதுவும்
எந்த மாதிரி எடத்ல!”
ராமக்ருஷ்ணனுக்கோ…
மனஸ் முழுக்க குண்டுப்பயலின் திருட்டுத்தனத்தை நினைத்து நினைத்து ஒரே
கோபம்! ‘பெரியவா ஸன்னிதில இருந்தும் திருட்டு புத்தியோட இருந்துட்டானே!’
என்ற ஆதங்கம்! என்ன செய்வது?
ஸாக்ஷாத்
மஹா மஹா பெரியவாளிடம் இருந்தும், அவருடைய தர்ஶனத்தை, ஸ்மரணத்தை அனுதினமும்
பெற்றுக் கொண்டிருந்தாலும், பொய்-புரட்டு, கோப-தாபங்கள், பழி-பகை போன்ற
துர்குணங்கள் சிலருக்குப் போகவில்லையென்றால், அவர்களுடைய ‘ப்ராரப்தம்’
ரொம்ப strong-காக இருக்கிறது, இன்னும் strong-காக ஆகிக் கொண்டிருக்கிறது
என்பதே அர்த்தம்.
விடி
காலையில் தூங்கி எழுந்து, தீபாவளி கொண்டாட, வாஸலுக்கு வந்ததும், தன்
வீட்டு வாஸலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய், ஸ்வீட், பக்ஷணம், பட்டாஸு
இத்யாதிகளை ‘குண்டு‘ பார்த்தோ இல்லியோ, சவுக்கடி விழுந்ததுபோல் இருந்தது!
அவ்வளவுதான்! ஒரே ஓட்டமாய் ஶிவாஸ்தானத்துக்கு வந்து, கருணாமூர்த்தியின் பாதங்களில் விழுந்தான்.
“தப்பு பண்ணிட்டேன்! பெரியவா… என்னை மன்னிச்சிடுங்கோ!…”
“ஏந்திரு!
வேணுங்கறதை கேட்டியானா இங்க இருக்கறவா ஒனக்கு குடுக்க மாட்டாளா?
தீபாவளிக்கி எல்லாருந்தானே புதுஸு கட்டிக்கணும்? சின்னதோ, பெருஸோ….
அடுத்தவாளோட பொருளையோ, ஒழைப்பையோ திருடறது, அத, ஒனக்குன்னு வெச்சுக்கறது….
எல்லாமே மஹாபாபம் இல்லியா? இனிமே இப்டி பண்ணாதே!”
அவனுக்கு நல்லபடி எடுத்துச் சொல்லி, ஆஶிர்வாதம் பன்ணினார் பெரியவா.
உண்மைதான்.
தீபாவளியன்று நமக்குள் இருக்கும் பொய்மை, கோபம், பொறாமை, ஆசை போன்ற கெட்ட
குணங்கள் என்னும் நரகாஸுரனை அந்த பரமாத்மாவின் பாதஸ்மரணம் மட்டுமே பொசுக்க
வல்லது.
நாமும்
இனி எப்போதுமே தீபாவளி திருநாளைப் போல, ஜகத்குருவின் ஒளிமிகு உருவத்தை
நம்முள் ஏற்றுவோம். “சந்த்ரஶேகரம்” எனும் தீபம் ஏற்றப்பட்டுதான்
இருக்கிறது. நாமோ துர்குணங்கள் என்னும் படு கெட்டியான படுதாவை போட்டு
"தீபத்தின் ஜ்யோதிஸ்ஸை பார்க்க மாட்டோம்!" என்று அடமாக
உட்கார்ந்திருக்கிறோம். கொஞ்சம் முயற்சி செய்தால் கூட போறும்.... திரை
லேஸாக விலகிய அடுத்த க்ஷணமே…. தீயகுணங்கள் என்னும் நரகாஸுர இருட்டு, தானே
ஓடிவிடும். எவ்வளவுக்கெவ்வளவு படுதா நீங்குகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு
ஜோதிப்ரகாஶம்!
No comments:
Post a Comment