(ஆருத்ரா தரிசனத்தன்று பூஜை செய்வதை விட தரிசனம்
செய்வதுதான் உத்தமம்.)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-24 &
சி.வெங்கடேஸ்வரன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
(மார்கழி மாதம் வரும் 16-12-2016 ஆரம்பம்
அதையொட்டி இரண்டு பதிவுகள்).
மார்கழி மாதம்.ஆருத்ரா தரிசனம்.
ஸ்ரீ புதுப் பெரியவாள் பூஜை செய்வார்கள்.
"அடுத்த காலப் பூஜையாவது ஸ்ரீ பெரியவாள்
செய்வது சிலாக்கியம் என்று ஸ்ரீ மடம் மானேஜர்
பெரியவாளிடம் வந்து, " இன்று ஆருத்ரா.பெரியவாள்
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை செய்யணும்" என்று
பிரார்த்திப்பது போல் நினைவுபடுத்தினார்.
பெரியவாள்,; "இன்னிக்கு ஆருத்ரா தரிசனம்னு பெயர்.
இன்னிக்குப் பூஜை செய்வதை விட தரிசனம்
செய்வதுதான் உத்தமம். அதனாலே புதுப் பெரியவா
பூஜை செய்யட்டும். நான் தரிசனம் பண்ணிக்கிறேன்.."
என்றார்கள்.
பெரியவாள் வாக்கில் சரஸ்வதி தேவி நித்யவாஸம்
பண்ணிக் கொண்டிருந்தாள்.பட்டென்று சாதுர்யமான
பதில். 'பின் எப்படித்தான் வரும்?
.............................. .............................. .............................. .............................
"தை பிறந்தது மேளமும் கொட்டியது"
.
"நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,''
ஜனவரி 12,2016,.தினமலர்
காஞ்சிப்பெரியவருக்கு 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன் என்பவர் கூறிய தகவல் நம்மை பரவசமடைய செய்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு கார்த்திகை மாதத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஒரு தம்பதி தங்கள் மகளுடன் காஞ்சிபுரம் வந்தனர். மகாபெரியவரை தரிசிக்க காத்திருந்தனர். அவர்கள் முறை வந்ததும் அந்த குடும்பத்தினர் பெரியவருக்கு நமஸ்காரம் செய்தனர்.
அவரைப் பார்த்து தயக்கத்துடன் நின்ற குடும்பத்தலைவரிடம், "என்ன விஷயம்?'' என்று பெரியவர் கேட்டார்.
"பெரியவா! இவள் எங்களுக்கு ஒரே மகள். இவளுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. தாங்கள் அனுக்கிரகம் செய்து, திருமணம் விரைவில் நடக்க ஆசி வழங்க வேண்டும்,'' என்றார் குடும்பத்தலைவர்.
பெரியவர் அந்தப் பெண்ணிடம், "உன் பெயர் என்ன?'' என்றார்.
"ராதா' என்றாள் அவள்.
பெரியவர் அவளிடம், "உங்கள் ஊரில் பெருமாள் கோவில், சிவன் கோவிலெல்லாம் இருக்கிறதா?'' என்றார்.
"ஆம்' என்றாள் அவள்.
"சரி...அடுத்த மாதம் மார்கழி. தினமும் அதிகாலையில் நீராடிய பிறகு வீட்டு வாசலில் கோலம் போடு. பெருமாள் கோவிலுக்குப் போய் திருப்பாவை பாடு, சிவன் கோவிலுக்கு போய் திருவெம்பாவை பாடு. உனக்கு போக முடியாத நாட்கள் வருமில்லையா! அந்த நாட்களில் வீட்டில் இருந்தே அந்த பாடல்களை பாராயணம் செய்,'' என்று சொல்லி ஆசிர்வதித்தார்.
ராதாவும் பெரியவர் சொன்னதை தவறாமல் கடைபிடித்தாள். தை மாதம் பிறந்தது. ஒரு நன்னாளில் அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ராதாவின் பெற்றோர் கதவைத் திறந்தனர்.
வெளியே ஒரு பெரியவரும் அவரது மனைவியும் நின்றனர். அவர்கள் ராதாவைப் பெண் கேட்டு வந்துள்ள விபரம் தெரியவந்தது.
"எங்கள் பூர்வீகம் பாலக்காடு. உங்கள் பெண்ணைப் பற்றி அறிந்தோம். அவள் ஜாதகம் எங்கள் மகன் ஜாதகத்துக்கு பொருத்தமாயிருக்கிறது,'' என்றனர்.
திருமணப் பேச்சு நடந்தது. நிச்சயதார்த்த நாள், முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது. தை பிறந்ததும் ராதாவுக்கு வழியும் பிறந்து விட்டது.
திருமணத்துக்கு முன்னதாக பெரியவரிடம் ஆசி பெற ராதாவும், அவளது பெற்றோரும் காஞ்சிபுரம் வந்தனர். பெரியவரை அவர்கள் தரிசித்தனர்.
ராதாவிடம், "உன் பெயர் ராதா தானே! உனக்கு வரப்போகும் ஆத்துக்காரர் பெயர் என்ன?'' என்று கேட்டார்.
"கண்ணன்'' என்ற ராதாவிடம், "உன் மாமனார் பெயர் பரமேஸ்வரனா?'' என்றார்.
"ஆம்...என்றாள் ராதா ஆச்சரியமாய்.
"மாமனார் பெயர் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?' என்று அவள் ஆச்சரியப்பட்ட வேளையில், "நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,'' என்றார்.
இதைக் கேட்ட எல்லாருமே அதிசயித்துப் போனார்கள். முக்காலமும் உணர்ந்த ஞானிக்கு இவர்கள் பெயர் தெரியாதா என்ன!
சி.வெங்கடேஸ்வரன்
No comments:
Post a Comment