Navaneedha Soran
சுந்தா சுந்தரம் என்ற பெண்மணியின் குடும்பம் காஞ்சிப்பெரியவர் மீது அளவு கடந்த பக்தி மிக்கது. சுந்தா சுந்தரம் எப்போது வந்தாலும் ஒரு ரோஜா மலர்க் கூடையை கையில் கொண்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தக் குடும்பத்தோடு மூதாட்டி ஒருவர், பெரியவரைத் தரிசனம் செய்வதற்காக சங்கரமடத்திற்கு வந்திருந்தார். அவரது கையில் ஒரு சிறிய சீதாப்பழம் இருந்தது. பெரியவருக்கு கொடுக்க எண்ணி கையில் வைத்திருந்தார். மூதாட்டியைக் கண்ட மடத்து சிஷ்யர் ஒருவர், “”பாட்டியம்மா! பெரியவா இந்த மாதிரி பழங்களை எல்லாம் ஒருக்காலும் ஏத்துக்க மாட்டா! வெறுமனே நமஸ்காரம் செய்துட்டுப் போங்கோ!” என்று சொல்ல, மிகுந்த வருத்தத்துடன் அவர் தன்னுடைய முந்தானையில் அப்பழத்தை மறைத்துக் கொண்டார். நீண்ட வரிசையில் நின்றிருந்த மூதாட்டி பெரியவரின் அருகே வந்து சேர்ந்தார். பெரியவரை நமஸ்கரித்தார். அதுநேரம் வரை மவுனமாக இருந்த பெரியவர் பேசத் தொடங்கினார். “”நீ எனக்காக கொண்டு வந்த பழத்தை கொடுக்காமல் நிற்கிறாயே!” என்றார். ஆச்சரியப்பட்டு போனார் மூதாட்டி. கைகால்கள் கூட நடுங்கத் தொடங்கின. பாட்டி கொடுத்த சீதாப்பழத்தை விருப்பத்துடன் வாங்கிக் கொண்டு அவருக்கு ஆசியளித்து பிரசாதம் வழங்கினார். மற்றொரு நிகழ்ச்சி ஒன்றையும் கேளுங்கள்.
சந்தானராமன் என்ற அரசுஅதிகாரி டில்லியில் மத்திய அரசுப்பணியில் இருந்தார். வசதி மிக்க அவர், ஒருமுறை பெரியவரைச் சந்திக்க வந்திருந்தார். தன்னைப் பெரியவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். மவுனமாக விஷயத்தைக் கேட்ட பெரியவர் சட்டென்று “” நீ நவநீதசோரன் தானே!” என்றார்.
சிறுவயதில் பெரியவர் “நவநீதசோரன்’ என்று சொன்னதை எண்ணி மகிழ்ந்தார். சந்தானராமன் செல்வந்தரின் ஒரே பிள்ளை. ஆனால் வீட்டில் சாப்பாட்டைத் தவிர வெளியில் எதுவும் சாப்பிட்டதில்லை. நண்பர்களைப் போல தானும் பலகார பட்சணங்களைச் சாப்பிட விரும்பிய சந்தானராமன், சிறுவனாக இருந்தபோது அப்பாவின் சட்டையில் இருந்த பணத்தை எடுத்திருக்கிறார். இப்படி நாள் தோறும் தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அப்பா, கையும் களவுமாக மகனைப் பிடித்து விட்டார். அத்துடன் மகனின் நடவடிக்கை குறித்து மிகுந்த வேதனையும் அடைந்தார்.
காஞ்சிமடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் மகனைப் பற்றிச் சொல்லி வருந்தினார். பெரியவர் பலமாகச் சிரித்துவிட்டு, “”பகவான் கிருஷ்ணன் கூட சின்ன வயசிலே பால், தயிர், வெண்ணெய் திருடினான். அதுபோல சந்தானராமனும் “நவநீதசோரனாகி’ விட்டான். ஒன்று கவலைப்படாதீர்கள். நிச்சயம் இவன் பின்னாளில் நிதிநிறுவனங்களைக் கட்டிக் காப்பாற்றுவான். சிக்கனம் தேவைதான். இருந்தாலும் பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள். இனி இம்மாதிரியான தவறுகள் நடக்காது,” என்று ஆறுதல் சொல்லி ஆசி வழங்கினார். சந்தானராமனும் பெரியவரின் வாக்குப்போலவே, அரசுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். அந்நிகழ்ச்சியை மறக்காமல், தனது “புனைப்பெயரை’ மீண்டும் நினைவுபடுத்திய பெரியவரை எண்ணி, சந்தானராமன் மிகவும் பரவசப்பட்டார்.
No comments:
Post a Comment