பிரம்மத்தின் அவதாரம்
‘நகரத்தார்’ எனும் நாட்டு கோட்டை செட்டியார் குடும்பத்தை சேர்ந்த ஒருவர். ஒப்பற்ற சிவபக்தர். ஆசார சீலர். பரமாசார்யாளிடத்தில் அபார பக்தியும், ஸ்ரீமடத்துடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்தார். வழக்கப்படி ஒரு நாள், செட்டியார், ஸ்ரீ மடத்துக்கு ஸ்வாமிகளைத் தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அப்பொழுது அவருடன் கூட அவரது ஏழு வயதுப் பையனும் வந்திருந்தான். இருவரும் ஸ்வாமிகளைத் திருப்தியாகத் தரிசித்துவிட்டு அருளாசியுடனும் பிரசாதத்துடனும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.
அப்போது சிறுவன், தகப்பனார் காதில் ஏதோ விவரம் தெரிவிக்க, அதனைக் கவனித்த ஸ்வாமிகள், “குழந்தை என்ன சொல்றான் ?” என்று கேட்டார்கள்.
செட்டியார் சற்றே தயங்கிய வண்ணம், “பெரியவாள் மடியில் ஒரு பாப்பா பச்சைப் பாவாடை கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறதாம்! அந்த பாப்பா யாரு என்று கேட்கிறான் ?” என்றார். அதை செட்டியாரால் நம்பவோ, நம்பாமல் இருக்கவோ முடியவில்லை. இதில் தங்கள் கருத்தை விட ஸ்வாமிகள் அபிப்ப்ராயத்திற்கே மிகுந்த முக்யத்வம் கொடுத்துப் பதிலை ஆவலோடு அனைவரும் எதிர்பார்ப்பது புரிந்தது. சிறிது நேரம் அமைதியில் கழிந்தது.
“இந்தப் பையன் சொன்னது வாஸ்தவம் தான். ஸ்ரீ மடத்தின் குரு பாரம்பரியத்துக்கு அப்படி ஒரு வரப்ப்ரசாதம், அருள் இருக்கிறது. எங்கள் மடியில் சாரதா தெய்வம் குடியிருப்பதாக ஒரு ஐதீகம். அது எங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஒரு குபேரனுக்குத் தெரியும். இந்தச் சிறுவன் கூடிய சீக்கிரம் குபேரனாவான்!” என்று கூறினார்.
இதைக் கேட்ட செட்டியார் வியப்பில் வாயடைத்து நின்றார். அவரது குடும்ப நிலையை வைத்துப் பார்க்கும்போது குபேர அந்தஸ்தை அவரால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. இரண்டுக்கும் நடுவே மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளி. ஸ்வாமிகள் கூற்று எப்படி சாத்தியமாகும் ? — புரியவில்லை.
இதற்கிடையில் இரண்டு ஆண்டுகள் ஓடி உருண்டன. செட்டியாரின் பையனுக்கு வயது ஒன்பது, பத்து தொடங்கியது. அப்போதுதான் சற்றும் எதிர்பாராத அந்தத் திருப்பம், தூரத்து உறவினர் வடிவத்தில் வந்தது; வீட்டின் கதவைத் தட்டியது.
பிறகு உறவுகளின் உரையாடல்; உணர்வுகளின் பரிமாற்றம்.
காரியங்கள் மளமளவென்று வேகம் பெற்றன; அந்தச் சிறுவன் வேறு குடும்பத்துக்கு, அளப்பரிய செல்வச் சிறப்பின் ஒரே வாரிசாக ஸ்வீகாரம் செய்யப்பட்டான். அப்புறம் கேட்பானேன் ?
ஸ்வாமிகளின் வாய் முகூர்த்தம் — சராசரி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவன், இன்று செல்வக் குடும்பத்தின் சீமானாக, சீரும் சிறப்புமாகப் பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார்.
இப்போது அவருக்கு இரண்டு பிள்ளைகள். வயது 69 ஆகிறது.
தம்மை அண்டி வந்தவர்களின் செய்தியெல்லாம் பிரம்மத்தின் அவதாரமான் ஸ்வாமிகளைப் போன்றோருக்கு துல்யமாக விளக்க முடிகின்றது. அவற்றை அற்புதம் எனக் கூறுவோமேயானால், மேற்கூறிய சம்பவமும் அற்புதமே! உண்மையில் அற்புதங்கள் நிகழ்கின்றன; நிகழ்த்தப்படுவதில்லை.
No comments:
Post a Comment