கருணைத் தெய்வம் காஞ்சி மகான் (15)
மைக்கேல் ஓரன் ஃபிட்ஜெரால்ட், ஓர் அமெரிக்கர். இண்டியானா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவர், உலகின் பல மதங்கள் குறித்தும் 12 நூல்கள் எழுதியுள்ளார். அவை பெருமைமிக்க பல விருதுகளைப் பெற்றுள்ளன. அவரது எட்டுப் புத்தகங்களும், இரண்டு குறும்படங்களும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இன்றைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில், ‘இன்ட்ரொடக்ஷன் டு ஹிந்து தர்மா‘ எனும் நூலை வெளியிட்டிருக்கிறார் இவர். ”இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு, காஞ்சி மகாபெரியவரின் சொற்பொழிவுகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டேன். அவை 6,500 பக்கங்கள் கொண்டவை!” என்கிறார்.
”சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னர்கள், மந்திரிகள் முதல் தெருவைச் சுத்தம் செய்வோர் வரை, பலர் காஞ்சி முனிவரின் எதிரே அமர்ந்து, அவருடைய ஞானச் சொற்களைக் கேட்டு மகிழ்ந்துள்ளனர். அவர் முகாமிட்ட இடங்களிலெல்லாம் குறிப்பாக ஒவ்வொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு விளக்கியுள்ளார். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அவரது திருவடிக்கு முன்னே அமர்ந்து, தங்களின் நேரத்தைப் பயனுள்ளதாக்கிக் கொண்டுள்ளனர். 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஞானியான காஞ்சி சுவாமிகளின் மூலமாக இந்து தர்மம் குறித்து அறிவது சிறப்பானது என மக்கள் கருதினர். காஞ்சி மகானைத் தரிசிக்கும்போது அவர்களுக்குள் ஆன்மிக உணர்வு பொங்கி எழுவதை உணர முடிகிறது. இந்த நூலில், மகானின் புகைப்படங்கள் பலவற்றைத் தொழில்நுட்ப முறையில் சீராக்கிப் பிரசுரித் திருக்கிறோம். மகாபெரியவாளின் பக்தர்களுக்கு இவை நிச்சயம் பொக்கிஷமாகத் திகழும்” எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் மைக்கேல்.
சுமார் 15-க்கும் மேற்பட்ட தலைப்புகளில், மகா பெரியவரின் உரைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தொகுத்தளித்திருப்பது சாதாரண விஷயமல்ல!
சரி… அவரது புத்தகத்துக்குள் நுழைவோமா?
‘எல்லோருக்கும் பொதுவான தர்மம்‘ எனும் பிரிவில், மனத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவரிக்கிறார் பெரியவாள்.
”ஒருமுனைப்பான சிந்தனை அல்லது தியானத்துக்குக் குறுக்கே நிற்பது எது? சலனம் மிகுந்த மனம். ஆசைகள் யாவும் அந்த மனத்தில் எழுந்து, பிரச்னைகளை உருவாக்குகின்றன. ஆசைகளிலிருந்து விலகி, மனத்தைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. நீங்கள், வாய் மற்றும் கண்களை மூடிக் கொள்ளலாம். ஆனால் மனத்திடம், ‘எதையும் நினைக்காதே’ எனச் சொல்லிப்பாருங்கள்; கேட்கவே கேட்காது!
மனத்தை வசப்படுத்த அந்தரங்கம், பகிரங்கம் என இரண்டு வழிகள் உண்டு. பகிரங்கம் என்பதில் சந்தியாவந்தனம், தியாகம், தர்மம் ஆகியவையும், அந்தரங்கம் என்பதில் தியானத்துக்கு உதவ அகிம்சை, சத்தியம், அஸ்தேயம் (திருடாமல் இருப்பது), ஸ்வச்சம் (தூய்மை), இந்திரியக் கட்டுப்பாடு ஆகிய ஐந்து முறைகளும் இருக்கின்றன” என்று விவரித்துக்கொண்டே வரும் பெரியவாள் கடவுள், பிரார்த்தனை பற்றியெல்லாம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
”எல்லா மதங்களிலும், கடவுள் என்பவர் உலகைப் படைத்தவராகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அவரேதான் காத்தருள்கிறார். ‘அவரது விருப்பப்படி படைத்துவிட்டு, அவரது விருப்பப்படி காக்கிறவர் கடவுள் எனில், நாம் ஏன் பக்தி செலுத்தவேண்டும்?’ என்று ஒரு கேள்வி எழலாம். இதற்குப் ‘பதஞ்சலி யோக சூத்திரம்‘ பதில் தருகிறது.
பிரார்த்தனையின் நோக்கம், நமக்குப் பலன்களைக் கேட்பதாக இருக்கக்கூடாது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனுக்கு, நம் தேவை என்ன என்பது தெரியும். அவரைப் புகழ்ந்து, மகிழ வைப்பதற்காகக் காத்திருக்கிறார் என நினைப்பது தவறு. அவர் நம்மைப்போல் சாதாரணர் அல்ல. அப்படியெனில், பிரார்த்தனை ஏன்?
நம்மைப் படைத்த இறைவனுக்கு நம் மனதில் இருப்பது தெரியும். ஆனால், நாம் சொல்லவேண்டிய பிரார்த்தனையைச் சொல்லாவிட்டால், அது நம் நெஞ்சை நெருடியபடியே இருக்கும். அதை வெளியிட்டுவிட்டால் நெருடல் நீங்கி, மனம் சாந்தமாகிவிடும். கடவுள் ஏற்கெனவே நிச்சயித்து விட்டபடி நடக்கவிருப்பது எதையும் பிரார்த்தனையால் மாற்றிவிடமுடியாது. நம் மன அழுக்குகளை அகற்றவே பிரார்த்தனை செய்கிறோம். ‘தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தாற்கல்லால், மனக்கவலை மாற்றல் அரிது‘ என்று திருவள்ளுவர் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறதல்லவா? (கடவுளைச் சரணடைந்தால் மனக்கவலை நீங்கும் — சுஜாதாவின் ‘திருக்குறள் புதிய உரை’) கடவுள் இருக்கிறார் என்கிற பக்திமயமான எண்ணமே, நம் நினைப்பைச் சுத்திகரிக்கும் ரசாயன மாற்றத்தை உண்டாக்கும் வித்தை.
தர்மங்களிலேயே மிக உயர்வானது அகிம்சை. புத்த, ஜைன மதங்கள் முழுமையான அகிம்சையை அனுசரிக்க வேண்டும் என்கின்றன. நம் ஹிந்து தர்மத்தில் அதற்கு விலக்கு இருக்கிறது. யாகங்களில் பலி கொடுப்பதும், போரில் எதிரிகளைக் கொல்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. சமூகத்துக்கு நன்மை எதுவும் செய்யாமல் கொழுத்துப் போய் அமர்ந்திருப்பதைவிட, தேசத்துக்காகப் போரில் உயிர் துறக்கும் ராணுவ வீரன் மிக உயர்ந்தவன். அகிம்சையை உலகம் முழுக்கப் பின்பற்றுவது பல பிரச்னைகளுக்குக் காரணமாகும். எல்லோரும், எப்போதும் அதைப் பின்பற்றுவது சிரமம். அதனால், அப்படிப் பின்பற்றாதவர்கள் பாவம் செய்வதாக அமையும். நம் மதம் இந்த விஷயத்தில் யதார்த்த நிலையை மேற்கொண்டிருக்கிறது” என்று விவரிக்கும் பெரியவாள், யதார்த்த உலகில் மனிதனின் நடைமுறைகள் குறித்தும் சொல்கிறார்.
”பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், அவற்றைப் பெரிதுபடுத்துவதும் எழுத்திலும், பேச்சிலும் இன்றைக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதிகம் படித்தவர் என்றால், அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் காண்பிக்கிறார். குற்றம் காண்பது என்பது தோஷக்ஞனின் வேலை. தோஷக்ஞன் என்பவன் யார்? பிறர் குற்றங்களை வெளியே சொல்லித் திரிந்துகொண்டும், மிகைப்படுத்திப் பேசிக்கொண்டும் இருப்பவன். ஒருவரிடம் தவறு இருந்தால், அதை அவரிடம் நட்பு உணர்வோடு சொல்லவேண்டும்; அப்போது அவர் தன்னைத் திருத்திக் கொள்ளலாம். அதை விட்டு, தொடர்ந்து அதையே வெளியில் எல்லாம் சொல்லிக்கொண்டு அலைவது முறையல்ல.
‘ஆசையும் கோபமும் ஒருவரைப் பாவம் செய்யத் தூண்டுகின்றன‘ என்று கீதையில் கூறுகிறார் பகவான் கிருஷ்ணர். ஒன்றின்மீது அதீத ஆசைப்பட்டால், அதை அடைய நல்ல வழி, கெட்ட வழி எதையும் பயன்படுத்தத் தயங்குவதில்லை. அதைப் பெற இயலாதபோது, அதற்குத் தடையாக இருப்பவர்மீது நம் கோபத்தைக் காண்பிக்கிறோம். நிறைவேறாத ஆசை, கோபமாக மாறுகிறது.
மனிதப் பிறவியின் நோக்கமே, பிறரிடம் அன்பு செலுத்தி வாழ்வதுதான். பிறரை நேசிப்பதைவிடப் பெரிய இன்பம் வேறு இல்லை. மற்றவர்களை நேசிக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சி, நமக்குள் பாய்ந்து அளிக்கும் இன்பம் போன்று வேறெதுவும் கிடையாது. பிறரை நேசிக்காமல் வாழும் வாழ்க்கை பயனற்றது. உண்மையான அன்புக்குக் காரணமோ, நோக்கமோ தேவையில்லை. அப்படி ஒருவர் அன்பு காண்பிக்கிறாரா என்று கேட்டால், இருக்கிறார். ஒரே ஒருவர். அவர்தான் இறைவன். அவரிடம் மட்டுமே அந்தப் பூரண அன்பு இருக்கிறது” என்கிறார் மகா பெரியவர்.
‘தர்மம் மட்டுமே காக்கும்‘ என்ற தலைப்பில் பெரியவாள் சொல்லியிருப் பது உலகில் உள்ள எந்தத் தனி மனிதருக்கும் பொருந்தும். ”நமது விருப்பு- வெறுப்புக்கு ஏற்ற மாதிரி நாம் நடந்துகொள்ளலாம் என்று எந்த மதமும் சொல்லவில்லை. எந்த மதமும் நம் சொந்தத் தேவைக்கு மட்டுமே செல்வத்தையும் சொத்தையும் சேர்த்து வைத்துக்கொள்ளச் சொல்லி உபதேசிக்கவில்லை. தான் ஒருவன் மட்டுமே முக்கியம், தானே எல்லாம் என எவனொருவன் எண்ணுகிறானோ, அவன் அவனுக்காக மட்டுமே வாழ்கிறான். அதனால்தான் எல்லா மதங்களுமே ‘இறைவன்‘ என்ற தத்துவத்தைச் சொல்லுகின்றன. மனிதனின் ஈகோவை அழித்துவிடச் சொல்லுகின்றன. ‘குழந்தாய், அந்த மகா சக்தியின் முன் நீ ஒன்றுமே இல்லை. அந்தச் சக்திதான் உனக்கு அறிவைத் தந்திருக்கிறது. அந்த அறிவைத் துணை கொண்டு தர்மத்தின் பாதையில் நீ செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல, அந்தச் சக்தியின் துணையை நீ ஆதரவாகப் பற்றிக் கொள்ள வேண்டும்!‘ என்கின்றன.
ஒரு மனிதனை உண்மையான மனிதன் ஆக்குவது ஞானம்தான். அதுதான் அவனை விலங்கு என்னும் நிலையிலிருந்து உயர்த்துகிறது. அடுத்த படி, அவனை தெய்வீக நிலைக்குக் கொண்டு செல்வது. எல்லா மதங்களின் குறிக்கோளும் இதுவே! அவை சொல்லும் வழிமுறைகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவற்றின் அக்கறை எல்லாம், மனிதன் ஆசையிலும் கோபத்திலும் சிக்கிவிடாமல், அன்பு, அடக்கம், அமைதி, தியாக உணர்வு இவற்றுடன் வாழவேண்டும் என்பதுதான்” என்னும் மகா பெரியவர், ‘வேத மதம்‘ என்கிற தலைப்பில் ஹிந்து மதம் குறித்தும் சொல்லியிருக்கிறார்.
”ஹிந்து மதம் என்று சொல்கிறோமே தவிர, அப்படி ஒரு பெயர் ஆரம்பத்திலே இருந்ததாகச் சொல்ல முடியாது. நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலுமே ‘ஹிந்து மதம்’ என்ற பெயர் வரவில்லை. ‘ஹிந்து’ என்ற சொல்லால் நம்மைக் குறிப்பிட்டவர்கள் அயல்நாட்டினர்தாம். சிந்துநதியைத் தாண்டி வந்த அந்நியர்கள் ‘இண்டஸ்’ என்றும், ‘ஹிண்ட்’ என்றும் அதைக் குறிப்பிட்டார்கள். அதையடுத்த நிலப்பகுதியை ‘இண்டியா’ என்றார்கள். அங்கு வாழ்பவர்கள் ஹிந்து மதத்தினர் என்று இவ்வாறு தான் அறியப்பட்டது. நம்முடைய மதத்தைத் தவிர, பிற மதங்கள் யாவும் தனிநபரால் தோற்றுவிக்கப்பட்டவை. புத்த மதத்தைக் கௌதம புத்தர் தோற்றுவித்தார். ஜைன மதத்தை மகாவீரர் என்ற ஜீனர் தோற்றுவித்தார். ஏசு கிறிஸ்துவால் உருவானது கிறிஸ்துவ மதம். அவற்றுக்கெல்லாம் முந்தைய காலத்தில், வேறு எந்த மதத்தையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்ததால், நம் மதத்துக்கென ஒரு பெயர் தேவையாக இருக்கவில்லை.
அப்படியானால், இந்த அநாதிகால மதத்தைத் தோற்றுவித்தவர் யார்? வியாசரா? கிருஷ்ணரா? ஆனால், இருவருமே தங்களுக்கு முன்பே வேதங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அப்படியானால், வேத மந்திரங்களை நமக்குத் தந்தது ஞானிகளும், ரிஷிகளுமா? ‘எங்கள் வழியாகத்தான் மந்திரங்கள் உலகுக்கு வந்தன. ஆனால், அவற்றை நாங்கள் உருவாக்கவில்லை. நாங்கள் மனத்தை அடக்கி, தியானம் செய்து கொண்டிருந்தபோது, அண்டவெளியில் அவை எங்களுக்குத் தெரிந்தன. நாங்கள் அவற்றை உருவாக்கவில்லை’ என்றார்கள். எல்லா ஒலிகளும் அண்டவெளியில்தான் தோன்றுகின்றன. அவற்றிலிருந்துதான் படைப்பு தொடங்கிற்று. ரிஷிகளின் சக்தியால் அவர்கள் மந்திரங்களைக் கண்டார்கள்” என்கிறார் மகா பெரியவர்.
உபநிஷத், பிரம்ம சூத்திரங்கள், வேத-வேதாந்தம், பல வகைக் கடவுள்கள், தர்ம சாஸ்திரங்கள், உரிமையும் கடமையும், 40 சம்ஸ்காரங்கள் (சடங்குகள்), பிரம்மசாரியின் கடமை, காயத்ரி- சந்தியாவந்தன மந்திரங்கள், பெண்கள் உரிமை, திருமணங்களைச் சிக்கனமாக நடத்துவது… என எல்லாவற்றையும் பற்றி மகாபெரியவரின் வார்த்தைகளிலேயே விவரமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் மைக்கேல் ஓரன் ஃபிட்ஜெரால்ட். சம்ஸ்கிருத பதங்களுக்கு உரிய ஆங்கிலச் சொற்களையும் கொடுத்திருக்கிறார்.
பெரியவாளின் உபதேசங்களைக் கூடுமானவரை வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறையோடு அவர் செயல்பட்டிருப்பது பக்கத்துக்குப் பக்கம் தெளிவாகிறது. ஏராளமான புகைப்படங்கள் புத்தகத்துக்கு அணி சேர்க்கின்றன. மகா பெரியவரின் புகைப்படங்கள் சில அபூர்வமானவை. அவசியம் பெரியவாளின் பக்தர்கள் இல்லத்தில் இருக்க வேண்டிய புத்தகம்!
நன்றி – சக்தி விகடன்
No comments:
Post a Comment