Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Friday, December 31, 2010

Gift with a bow

Dear Friends,

Namaskaram to you all. I take this opportunity to wish each and everyone A VERY HAPPY, PROSPEROUS AND HEALTHY NEW YEAR 2011. I also thought of Maha Periavaa on this special occasion and with HIS blessings, I have provided various links to the Year 2011 Calendars for your easy reference created by inserting various moods of Shri Maha Periavaa. I pray to HIM to shower the blessings on us!!!

JAYA JAYA SHANKARA!!!  HARA HARA SHANKARA!!!!

image

http://www.mediafire.com/?ll7obpkcpu08eo5

image

http://www.mediafire.com/?8id82u2rpj1hzkd

image

http://www.mediafire.com/?obo606e4f967441

image

http://www.mediafire.com/?8t2a537a9i3txg5

image

http://www.mediafire.com/?9gw9hyfp8kd0243

image

http://www.mediafire.com/?puntm5uwfox0our

image

http://www.mediafire.com/?cv2848xhhn41hbt

image

http://www.mediafire.com/?gfcsusdb9r592u1

Thursday, December 30, 2010

ஆனந்தம்!

clip_image001

உயர்ந்த சந்தோஷத்தைத் தருவதாக நமக்குத் தோன்றுகிற நல்ல ஆசைகள் கூட உண்மையில் துன்பம் தருபவை தான். ஏனென்றால், எப்பேர்ப்பட்ட ஆசையாயிருந்தாலும் அது ஒருவித அரிப்புத்தான். மனசில் அதிருப்தியிருந்து அதனால் ஏற்படுகிற அரிப்புத்தான் ஆசை, ஆசை என்பது. மனஸுக்கு எடுக்கிற தாகம்தான் ஆசை. ஆசையிருக்கிறதென்றால் மனஸ் என்று ஒன்று இருக்கிறது என்றே அர்த்தம். மனஸ் என்பது இருந்து விட்டால் உபத்ரவம்தான். மனஸ் ஆத்மாவுக்கு த்விதீயமான வஸ்து; அதனால் பயஹேதுவானது என்று பார்த்தோமே! இந்த மனஸ் என்கிற வஸ்து தான் அகண் டானந்தமான பரமாத்மா சிறுத்துக் குறுகிப் போய் ஜீவாத்மா என்று வேஷம் போட்டுக் கொள்ளும்போது இப்படி அதைச் சின்னதாகக் குறுக்க வைத்துக் கட்டுவது. தனி ஜீவன்கள், individual-கள் என்று தங்களை அவர் கள் தெரிந்து கொள்வதே தனித் தனி மனஸ்களைக் கொண்டுதான். ஆனதால் மனஸ் என்பது பரமாத்மாவுக்கு வேறேயாகத்தான் எப்போதும் இருக்க முடியும்.

ரொம்ப உயர்ந்த நிலையில் கூட அது பரமாத்மாவைத் தொட்டுக் கவிந்து கொண்டோ, அல்லது பரமாத்மாவின் சக்தி, கருணை முதலானவற்றை ஓரளவுக்குத் தனக்குள்ளும் நிரப்பிக் கொண்டோதான் இருக்க முடியுமே தவிர, அப்படியே அவனுடைய அகண்டா கார ஸ்வரூபத்தோடு ஒன்றாகி, அவனுடைய அகண்டானந்தத்தைத் தானும் அனுபவிக்க முடியாது. இந்த மனஸைப் பூராவும் அவனிடமே கரைத்து இல்லை யென்றாக்கிக் கொண்டால்தான் சாச்வதமான அகண்ட ஆனந்தம் கிடைக்கும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி http://www.kalkionline.com

Tuesday, December 28, 2010

தியானம்

clip_image001

மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு உதவுவதாகவுமிருக்கிறது.

பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லா மலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உப நிஷத் சொல்கிறது. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய் விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லா மையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடி யும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும்.

அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன விரதம் என்று ஒன்று அனுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி
சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி http://www.kalkionline.com

Sunday, December 26, 2010

தெய்வ சீந்தனை!

அருள்வாக்கு

clip_image001

சாதாரணமாக எல்லா ஜனங்களுக்குமே தெய்வ சிந்தனை இருக்கத்தான் வேண்டும். மநுஷ்ய ஜீவன் அந்தப் பெயருக்கு லாயக்காக இருக்க வேண்டுமானால் தனக்கு ஜீவ சக்தியைக் கொடுத்த ஸ்வாமியைச் சிந்தித்து, அவன் அருள் வழிகாட்டுகிற படிதான் ஜீவனம் நடத்த வேண்டும். இந்த (தெய்வ) சிந்தனை நாமே பண்ணுவதாக இருந்தால், நம்முடைய சித்தம் ஓடுகிற தாறுமாறான ஓட்டத்தில் உருப்படியாக ஒன்றும் தேறாது. அது மாத்திரமில்லா மல் நமக்கு ஸ்வாமியைப் பற்றி சோந்த அனுபவமாக என்ன தெரியும்? நமக்குத் தெரியாதவரைப் பற்றி நாம் என்னத்தைச் சிந்திக்க முடியும்? இங்கே, அப்படித் தெரிந்துகொண்ட பெரியவர்கள் பாடிய ஸ்தோத்திரங் கள் - தமிழ் முதலான ப்ரதேச பாஷைகளில் இருக்கிற துதிகளுந்தான் - நமக்குக்கை கொடுத்துத் தூக்கிவிட ஓடி வருகின்றன. பல காலமாக அவற்றை, ஸ்வாமியை சோந்தத்தில், நேரில் தெரிந்துகொண்ட எத் தனையோ பேர் சோல்லிச் சோல்லி அவற்றுக்கு தெய்விக சக்தி கூடிக் கொண்டே வந்திருக்கும். அவற்றைச் சோல்வதே, அதாவது ‘ஸ்தோத்ர பாராயணம்’, ‘துதி ஓதுதல்’ என்பதே நம்முடைய சித்தத்தை ஸ்வாமியிடம் சேர்த்து வைக்கும்.

clip_image002

நம் தேசம் செய்த பாக்கியம், இம்மாதிரி ஸ்துதிகள் ஒவ்வொரு தெய்வத்தையும் குறித்துக் கணக்கு வழக்கு இல்லாமலிருக்கின்றன. நம் தேசத்திலும் இந்தத் தமிழ்நாட்டில் பிறந்தவர்களின் பாக்கியம் இங்கே தோன்றிய நம் முன்னோர்கள் நம்முடைய தமிழ் பாஷையில் துதிகளை அப்படியே கொட்டி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் ஜனங்கள் அவரவரும், தாங்களே படித்துப் பாராயணம் பண்ணலாம். குருமுகமாகக் கற்றுக் கொண்டுதான் பண்ணணும் என்று கண்டிப்பு இல்லை. அநுபவம் கண்ட குரு எடுத்து வைத்துப் பண்ணினால் அது ரொம்ப விசேஷந்தான்; ஸந்தேஹமேயில்லை. ஆனால் அப்படிக் கட்டாயமாக விதி இல்லை.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி http://www.kalkionline.com

Friday, December 24, 2010

ஆறறிவின் பக்தியை மிஞ்சிய ஐந்தறிவின் பக்தி…

clip_image001

பரமாச்சார்யார் செல்லும் இடங்களுக்கெல்லாம் 1927 -ஆம் ஆண்டு முதல் ஒரு நாய் வந்து கொண்டிருந்தது.  அது நல்லறிவு படைத்த ஜீவன்.  அசுத்தங்களைத் தொடுவது இல்லை.  பரமாச்சார்யார் முகாம் செய்யும் இடங்களில் எல்லாம் தங்கி,  இரவில் மடத்தின் கால்நடைகளையும் சாமான்களையும் பாதுகாக்கும்.  மடத்திலிருந்து போடப்படும் அன்னத்தைத் தவிர, வேற்று மனிதர் அளிக்கும் எதையும் அது உட்கொள்ளாது.

clip_image002

ஆனால் ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் மாலையில், ‘நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா ?”  என்று விசாரிப்பார்.

ஸ்வாமிகள் பல்லக்கில் அமர்ந்து ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் போகும்போது,  அந்த நாய் பல்லக்கின் கீழேயே போய்க் கொண்டிருக்கும்.  நடுவில் ஏதாவது ஒரு ஊரில் பக்தர்களுக்கு சேவை அளிப்பதற்காக பல்லக்கு நிறுத்தப்பட்டால், அது வெகு தூரத்தில் போய் நின்று விடும்.

சில சமயம், சாலையில் நடந்து செல்லும் யானையின் நான்கு கால்களின் நடுவே அது சென்று கொண்டே இருக்கும்.  மடத்தின் காவல்காரர்கள் சற்று அயர்ந்திருந்தால் அது மடத்தில் காவல் காக்கும்.  மடத்தில் வழக்கமாக அன்னமிடுகிறவர் ஒரு நாள் அன்னமிட மறந்து விட்டால்,  அது அன்று பட்டினி கிடக்கும்.

ஒரு சமயம் ஸ்வாமிகளை விட்டுப் பிரிய நேர்ந்த அந்த நாய்,  மீண்டும் ஸ்வாமிகளின் முகாமுக்கு எப்படியோ வழி கண்டுபிடித்து ஓடி வந்து விட்டது.

அன்று முதல் அது உயிர் வாழ்ந்தவரை ஸ்வாமிகளைத் தரிசிக்காமல் உணவு உட்கொண்டதே இல்லை.

Thursday, December 23, 2010

கருணைத் தெய்வம் காஞ்சி மகான் (15)

clip_image001

clip_image002மைக்கேல் ஓரன் ஃபிட்ஜெரால்ட், ஓர் அமெரிக்கர். இண்டியானா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவர், உலகின் பல மதங்கள் குறித்தும் 12 நூல்கள் எழுதியுள்ளார். அவை பெருமைமிக்க பல விருதுகளைப் பெற்றுள்ளன. அவரது எட்டுப் புத்தகங்களும், இரண்டு குறும்படங்களும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இன்றைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

clip_image003சமீபத்தில், ‘இன்ட்ரொடக்ஷன் டு ஹிந்து தர்மா‘ எனும் நூலை வெளியிட்டிருக்கிறார் இவர். ”இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு, காஞ்சி மகாபெரியவரின் சொற்பொழிவுகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டேன். அவை 6,500 பக்கங்கள் கொண்டவை!” என்கிறார்.

”சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னர்கள், மந்திரிகள் முதல் தெருவைச் சுத்தம் செய்வோர் வரை, பலர் காஞ்சி முனிவரின் எதிரே அமர்ந்து, அவருடைய ஞானச் சொற்களைக் கேட்டு மகிழ்ந்துள்ளனர். அவர் முகாமிட்ட இடங்களிலெல்லாம் குறிப்பாக ஒவ்வொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு விளக்கியுள்ளார். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அவரது திருவடிக்கு முன்னே அமர்ந்து, தங்களின் நேரத்தைப் பயனுள்ளதாக்கிக் கொண்டுள்ளனர். 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஞானியான காஞ்சி சுவாமிகளின் மூலமாக இந்து தர்மம் குறித்து அறிவது சிறப்பானது என மக்கள் கருதினர். காஞ்சி மகானைத் தரிசிக்கும்போது அவர்களுக்குள் ஆன்மிக உணர்வு பொங்கி எழுவதை உணர முடிகிறது. இந்த clip_image004நூலில், மகானின் புகைப்படங்கள் பலவற்றைத் தொழில்நுட்ப முறையில் சீராக்கிப் பிரசுரித் திருக்கிறோம். மகாபெரியவாளின் பக்தர்களுக்கு இவை நிச்சயம் பொக்கிஷமாகத் திகழும்” எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் மைக்கேல்.

சுமார் 15-க்கும் மேற்பட்ட தலைப்புகளில், மகா பெரியவரின் உரைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தொகுத்தளித்திருப்பது சாதாரண விஷயமல்ல!

சரி… அவரது புத்தகத்துக்குள் நுழைவோமா?

எல்லோருக்கும் பொதுவான தர்மம்‘ எனும் பிரிவில், மனத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவரிக்கிறார் பெரியவாள்.

”ஒருமுனைப்பான சிந்தனை அல்லது தியானத்துக்குக் குறுக்கே நிற்பது எது? சலனம் மிகுந்த மனம். ஆசைகள் யாவும் அந்த மனத்தில் எழுந்து, பிரச்னைகளை உருவாக்குகின்றன. ஆசைகளிலிருந்து விலகி, மனத்தைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. நீங்கள், வாய் மற்றும் கண்களை மூடிக் கொள்ளலாம். ஆனால் மனத்திடம், ‘எதையும் நினைக்காதே’ எனச் சொல்லிப்பாருங்கள்; கேட்கவே கேட்காது!

clip_image005

மனத்தை வசப்படுத்த அந்தரங்கம், பகிரங்கம் என இரண்டு வழிகள் உண்டு. பகிரங்கம் என்பதில் சந்தியாவந்தனம், தியாகம், தர்மம் ஆகியவையும், அந்தரங்கம் என்பதில் தியானத்துக்கு உதவ அகிம்சை, சத்தியம், அஸ்தேயம் (திருடாமல் இருப்பது), ஸ்வச்சம் (தூய்மை), இந்திரியக் கட்டுப்பாடு ஆகிய ஐந்து முறைகளும் இருக்கின்றன” என்று விவரித்துக்கொண்டே வரும் பெரியவாள் கடவுள், பிரார்த்தனை பற்றியெல்லாம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

”எல்லா மதங்களிலும், கடவுள் என்பவர் உலகைப் படைத்தவராகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அவரேதான் காத்தருள்கிறார். ‘அவரது விருப்பப்படி படைத்துவிட்டு, அவரது விருப்பப்படி காக்கிறவர் கடவுள் எனில், நாம் ஏன் பக்தி செலுத்தவேண்டும்?’ என்று ஒரு கேள்வி எழலாம். இதற்குப் ‘பதஞ்சலி யோக சூத்திரம்‘ பதில் தருகிறது.

பிரார்த்தனையின் நோக்கம், நமக்குப் பலன்களைக் கேட்பதாக இருக்கக்கூடாது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனுக்கு, நம் தேவை என்ன என்பது தெரியும். அவரைப் புகழ்ந்து, மகிழ வைப்பதற்காகக் காத்திருக்கிறார் என நினைப்பது தவறு. அவர் நம்மைப்போல் சாதாரணர் அல்ல. அப்படியெனில், பிரார்த்தனை ஏன்?

clip_image006

நம்மைப் படைத்த இறைவனுக்கு நம் மனதில் இருப்பது தெரியும். ஆனால், நாம் சொல்லவேண்டிய பிரார்த்தனையைச் சொல்லாவிட்டால், அது நம் நெஞ்சை நெருடியபடியே இருக்கும். அதை வெளியிட்டுவிட்டால் நெருடல் நீங்கி, மனம் சாந்தமாகிவிடும். கடவுள் ஏற்கெனவே நிச்சயித்து விட்டபடி நடக்கவிருப்பது எதையும் பிரார்த்தனையால் மாற்றிவிடமுடியாது. நம் மன அழுக்குகளை அகற்றவே பிரார்த்தனை செய்கிறோம். ‘தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தாற்கல்லால், மனக்கவலை மாற்றல் அரிது‘ என்று திருவள்ளுவர் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறதல்லவா? (கடவுளைச் சரணடைந்தால் மனக்கவலை நீங்கும் — சுஜாதாவின் ‘திருக்குறள் புதிய உரை’)  கடவுள் இருக்கிறார் என்கிற பக்திமயமான எண்ணமே, நம் நினைப்பைச் சுத்திகரிக்கும் ரசாயன மாற்றத்தை உண்டாக்கும் வித்தை.

clip_image007தர்மங்களிலேயே மிக உயர்வானது அகிம்சை. புத்த, ஜைன மதங்கள் முழுமையான அகிம்சையை அனுசரிக்க வேண்டும் என்கின்றன. நம் ஹிந்து தர்மத்தில் அதற்கு விலக்கு இருக்கிறது. யாகங்களில் பலி கொடுப்பதும், போரில் எதிரிகளைக் கொல்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. சமூகத்துக்கு நன்மை எதுவும் செய்யாமல் கொழுத்துப் போய் அமர்ந்திருப்பதைவிட, தேசத்துக்காகப் போரில் உயிர் துறக்கும் ராணுவ வீரன் மிக உயர்ந்தவன். அகிம்சையை உலகம் முழுக்கப் பின்பற்றுவது பல பிரச்னைகளுக்குக் காரணமாகும். எல்லோரும், எப்போதும் அதைப் பின்பற்றுவது சிரமம். அதனால், அப்படிப் பின்பற்றாதவர்கள் பாவம் செய்வதாக அமையும். நம் மதம் இந்த விஷயத்தில் யதார்த்த நிலையை மேற்கொண்டிருக்கிறது” என்று விவரிக்கும் பெரியவாள், யதார்த்த உலகில் மனிதனின் நடைமுறைகள் குறித்தும் சொல்கிறார்.

”பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், அவற்றைப் பெரிதுபடுத்துவதும் எழுத்திலும், பேச்சிலும் இன்றைக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதிகம் படித்தவர் என்றால், அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் காண்பிக்கிறார். குற்றம் காண்பது என்பது தோஷக்ஞனின் வேலை. தோஷக்ஞன் என்பவன் யார்? பிறர் குற்றங்களை வெளியே சொல்லித் திரிந்துகொண்டும், மிகைப்படுத்திப் பேசிக்கொண்டும் இருப்பவன். ஒருவரிடம் தவறு இருந்தால், அதை அவரிடம் நட்பு உணர்வோடு சொல்லவேண்டும்; அப்போது அவர் தன்னைத் திருத்திக் கொள்ளலாம். அதை விட்டு, தொடர்ந்து அதையே வெளியில் எல்லாம் சொல்லிக்கொண்டு அலைவது முறையல்ல.

ஆசையும் கோபமும் ஒருவரைப் பாவம் செய்யத் தூண்டுகின்றன‘ என்று கீதையில் கூறுகிறார் பகவான் கிருஷ்ணர். ஒன்றின்மீது அதீத ஆசைப்பட்டால், அதை அடைய நல்ல வழி, கெட்ட வழி எதையும் பயன்படுத்தத் தயங்குவதில்லை. அதைப் பெற இயலாதபோது, அதற்குத் தடையாக இருப்பவர்மீது நம் கோபத்தைக் காண்பிக்கிறோம். நிறைவேறாத ஆசை, கோபமாக மாறுகிறது.

clip_image008மனிதப் பிறவியின் நோக்கமே, பிறரிடம் அன்பு செலுத்தி வாழ்வதுதான். பிறரை நேசிப்பதைவிடப் பெரிய இன்பம் வேறு இல்லை. மற்றவர்களை நேசிக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சி, நமக்குள் பாய்ந்து அளிக்கும் இன்பம் போன்று வேறெதுவும் கிடையாது. பிறரை நேசிக்காமல் வாழும் வாழ்க்கை பயனற்றது. உண்மையான அன்புக்குக் காரணமோ, நோக்கமோ தேவையில்லை. அப்படி ஒருவர் அன்பு காண்பிக்கிறாரா என்று கேட்டால், இருக்கிறார். ஒரே ஒருவர். அவர்தான் இறைவன். அவரிடம் மட்டுமே அந்தப் பூரண அன்பு இருக்கிறது” என்கிறார் மகா பெரியவர்.

தர்மம் மட்டுமே காக்கும்‘ என்ற தலைப்பில் பெரியவாள் சொல்லியிருப் பது உலகில் உள்ள எந்தத் தனி மனிதருக்கும் பொருந்தும். ”நமது விருப்பு- வெறுப்புக்கு ஏற்ற மாதிரி நாம் நடந்துகொள்ளலாம் என்று எந்த மதமும் சொல்லவில்லை. எந்த மதமும் நம் சொந்தத் தேவைக்கு மட்டுமே செல்வத்தையும் சொத்தையும் சேர்த்து வைத்துக்கொள்ளச் சொல்லி உபதேசிக்கவில்லை. தான் ஒருவன் மட்டுமே முக்கியம், தானே எல்லாம் என எவனொருவன் எண்ணுகிறானோ, அவன் அவனுக்காக மட்டுமே வாழ்கிறான். அதனால்தான் எல்லா மதங்களுமே ‘இறைவன்‘ என்ற தத்துவத்தைச் சொல்லுகின்றன. மனிதனின் ஈகோவை அழித்துவிடச் சொல்லுகின்றன. ‘குழந்தாய், அந்த மகா சக்தியின் முன் நீ ஒன்றுமே இல்லை. அந்தச் சக்திதான் உனக்கு அறிவைத் தந்திருக்கிறது. அந்த அறிவைத் துணை கொண்டு தர்மத்தின் பாதையில் நீ செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல, அந்தச் சக்தியின் துணையை நீ ஆதரவாகப் பற்றிக் கொள்ள வேண்டும்!‘ என்கின்றன.

ஒரு மனிதனை உண்மையான மனிதன் ஆக்குவது ஞானம்தான். அதுதான் அவனை விலங்கு என்னும் நிலையிலிருந்து உயர்த்துகிறது. அடுத்த படி, அவனை தெய்வீக நிலைக்குக் கொண்டு செல்வது. எல்லா மதங்களின் குறிக்கோளும் இதுவே! அவை சொல்லும் வழிமுறைகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவற்றின் அக்கறை எல்லாம், மனிதன் ஆசையிலும் கோபத்திலும் சிக்கிவிடாமல், அன்பு, அடக்கம், அமைதி, தியாக உணர்வு இவற்றுடன் வாழவேண்டும் என்பதுதான்” என்னும் மகா பெரியவர், ‘வேத மதம்‘ என்கிற தலைப்பில் ஹிந்து மதம் குறித்தும் சொல்லியிருக்கிறார்.

clip_image009”ஹிந்து மதம் என்று சொல்கிறோமே தவிர, அப்படி ஒரு பெயர் ஆரம்பத்திலே இருந்ததாகச் சொல்ல முடியாது. நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலுமே ‘ஹிந்து மதம்’ என்ற பெயர் வரவில்லை. ‘ஹிந்து’ என்ற சொல்லால் நம்மைக் குறிப்பிட்டவர்கள் அயல்நாட்டினர்தாம். சிந்துநதியைத் தாண்டி வந்த அந்நியர்கள் ‘இண்டஸ்’ என்றும், ‘ஹிண்ட்’ என்றும் அதைக் குறிப்பிட்டார்கள். அதையடுத்த நிலப்பகுதியை ‘இண்டியா’ என்றார்கள். அங்கு வாழ்பவர்கள் ஹிந்து மதத்தினர் என்று இவ்வாறு தான் அறியப்பட்டது. நம்முடைய மதத்தைத் தவிர, பிற மதங்கள் யாவும் தனிநபரால் தோற்றுவிக்கப்பட்டவை. புத்த மதத்தைக் கௌதம புத்தர் தோற்றுவித்தார். ஜைன மதத்தை மகாவீரர் என்ற ஜீனர் தோற்றுவித்தார். ஏசு கிறிஸ்துவால் உருவானது கிறிஸ்துவ மதம். அவற்றுக்கெல்லாம் முந்தைய காலத்தில், வேறு எந்த மதத்தையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்ததால், நம் மதத்துக்கென ஒரு பெயர் தேவையாக இருக்கவில்லை.

அப்படியானால், இந்த அநாதிகால மதத்தைத் தோற்றுவித்தவர் யார்? வியாசரா? கிருஷ்ணரா? ஆனால், இருவருமே தங்களுக்கு முன்பே வேதங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அப்படியானால், வேத மந்திரங்களை நமக்குத் தந்தது ஞானிகளும், ரிஷிகளுமா? ‘எங்கள் வழியாகத்தான் மந்திரங்கள் உலகுக்கு வந்தன. ஆனால், அவற்றை நாங்கள் உருவாக்கவில்லை. நாங்கள் மனத்தை அடக்கி, தியானம் செய்து கொண்டிருந்தபோது, அண்டவெளியில் அவை எங்களுக்குத் தெரிந்தன. நாங்கள் அவற்றை உருவாக்கவில்லை’ என்றார்கள். எல்லா ஒலிகளும் அண்டவெளியில்தான் தோன்றுகின்றன. அவற்றிலிருந்துதான் படைப்பு தொடங்கிற்று. ரிஷிகளின் சக்தியால் அவர்கள் மந்திரங்களைக் கண்டார்கள்” என்கிறார் மகா பெரியவர்.

உபநிஷத், பிரம்ம சூத்திரங்கள், வேத-வேதாந்தம், பல வகைக் கடவுள்கள், தர்ம சாஸ்திரங்கள், உரிமையும் கடமையும், 40 சம்ஸ்காரங்கள் (சடங்குகள்), பிரம்மசாரியின் கடமை, காயத்ரி- சந்தியாவந்தன மந்திரங்கள், பெண்கள் உரிமை, திருமணங்களைச்  சிக்கனமாக நடத்துவது… என எல்லாவற்றையும் பற்றி மகாபெரியவரின் வார்த்தைகளிலேயே விவரமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் மைக்கேல் ஓரன் ஃபிட்ஜெரால்ட். சம்ஸ்கிருத பதங்களுக்கு உரிய ஆங்கிலச் சொற்களையும் கொடுத்திருக்கிறார்.

பெரியவாளின் உபதேசங்களைக் கூடுமானவரை வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறையோடு அவர் செயல்பட்டிருப்பது பக்கத்துக்குப் பக்கம் தெளிவாகிறது. ஏராளமான புகைப்படங்கள் புத்தகத்துக்கு அணி சேர்க்கின்றன. மகா பெரியவரின் புகைப்படங்கள் சில அபூர்வமானவை. அவசியம் பெரியவாளின் பக்தர்கள் இல்லத்தில் இருக்க வேண்டிய புத்தகம்!

நன்றி – சக்தி விகடன்

Tuesday, December 21, 2010

பிரம்மத்தின் அவதாரம்

clip_image001

‘நகரத்தார்’ எனும் நாட்டு கோட்டை செட்டியார் குடும்பத்தை சேர்ந்த ஒருவர். ஒப்பற்ற சிவபக்தர்.  ஆசார சீலர்.  பரமாசார்யாளிடத்தில் அபார பக்தியும், ஸ்ரீமடத்துடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்தார்.  வழக்கப்படி ஒரு நாள், செட்டியார், ஸ்ரீ மடத்துக்கு ஸ்வாமிகளைத் தரிசனம் செய்வதற்காகச் சென்றார்.  அப்பொழுது அவருடன் கூட அவரது ஏழு வயதுப் பையனும் வந்திருந்தான்.  இருவரும் ஸ்வாமிகளைத் திருப்தியாகத் தரிசித்துவிட்டு அருளாசியுடனும் பிரசாதத்துடனும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.

அப்போது சிறுவன், தகப்பனார் காதில் ஏதோ விவரம் தெரிவிக்க, அதனைக் கவனித்த ஸ்வாமிகள், “குழந்தை என்ன சொல்றான் ?”  என்று கேட்டார்கள்.

செட்டியார் சற்றே தயங்கிய வண்ணம், “பெரியவாள் மடியில் ஒரு பாப்பா பச்சைப் பாவாடை கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறதாம்!  அந்த பாப்பா யாரு என்று கேட்கிறான் ?”  என்றார்.  அதை செட்டியாரால் நம்பவோ, நம்பாமல் இருக்கவோ முடியவில்லை.  இதில் தங்கள் கருத்தை விட ஸ்வாமிகள் அபிப்ப்ராயத்திற்கே மிகுந்த முக்யத்வம் கொடுத்துப் பதிலை ஆவலோடு அனைவரும் எதிர்பார்ப்பது புரிந்தது.  சிறிது நேரம் அமைதியில் கழிந்தது.

“இந்தப் பையன் சொன்னது வாஸ்தவம் தான்.  ஸ்ரீ மடத்தின் குரு பாரம்பரியத்துக்கு அப்படி ஒரு வரப்ப்ரசாதம், அருள் இருக்கிறது.  எங்கள் மடியில் சாரதா தெய்வம் குடியிருப்பதாக ஒரு ஐதீகம்.  அது எங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.  ஒரு குபேரனுக்குத் தெரியும்.  இந்தச் சிறுவன் கூடிய சீக்கிரம் குபேரனாவான்!”   என்று கூறினார்.

இதைக் கேட்ட செட்டியார் வியப்பில் வாயடைத்து நின்றார்.  அவரது குடும்ப நிலையை வைத்துப் பார்க்கும்போது குபேர அந்தஸ்தை அவரால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.  இரண்டுக்கும் நடுவே மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளி.  ஸ்வாமிகள் கூற்று எப்படி சாத்தியமாகும் ?  — புரியவில்லை.

இதற்கிடையில் இரண்டு ஆண்டுகள் ஓடி உருண்டன.  செட்டியாரின் பையனுக்கு வயது ஒன்பது, பத்து தொடங்கியது.  அப்போதுதான் சற்றும் எதிர்பாராத அந்தத் திருப்பம், தூரத்து உறவினர் வடிவத்தில் வந்தது;  வீட்டின் கதவைத் தட்டியது.

பிறகு உறவுகளின் உரையாடல்;  உணர்வுகளின் பரிமாற்றம்.

காரியங்கள் மளமளவென்று வேகம் பெற்றன;  அந்தச் சிறுவன் வேறு குடும்பத்துக்கு, அளப்பரிய செல்வச் சிறப்பின் ஒரே வாரிசாக ஸ்வீகாரம் செய்யப்பட்டான்.  அப்புறம் கேட்பானேன் ?

ஸ்வாமிகளின் வாய் முகூர்த்தம்  — சராசரி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவன், இன்று செல்வக் குடும்பத்தின் சீமானாக, சீரும் சிறப்புமாகப் பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார்.

இப்போது அவருக்கு இரண்டு பிள்ளைகள்.  வயது 69  ஆகிறது.

தம்மை அண்டி வந்தவர்களின் செய்தியெல்லாம் பிரம்மத்தின் அவதாரமான் ஸ்வாமிகளைப் போன்றோருக்கு துல்யமாக விளக்க முடிகின்றது.  அவற்றை அற்புதம் எனக் கூறுவோமேயானால், மேற்கூறிய சம்பவமும் அற்புதமே!  உண்மையில் அற்புதங்கள் நிகழ்கின்றன;  நிகழ்த்தப்படுவதில்லை.

Sunday, December 19, 2010

அந்திம ஸ்மரணை

clip_image001

வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும்.  இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீட்சை வைத்துக் கொள்ளலாம்.  அதாவது:

அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா ?  இதையும் ஒரு சாவு மாதிரி என்று தான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது.  தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல்,  ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம் ?  இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது.  ‘நித்யப் பிரளயம்’  என்று தூக்கத்தைச் சொல்வார்கள்.  இப்படி தினமும் நாம் ‘சாகிற’  போது பகவானையே ஸ்மரித்துக் கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம்.  தூங்குகிறதற்கு  முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும்.  அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விட வேண்டும்.  வேறே நினைப்பு வரக் கூடாது.  சொல்லும்போது சுலபமாக இருக்கும்.  ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும்.  காமாக்ஷியோ, நடராஜாவோ,  தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸ்வாமியோ, முருகனோ — எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமான நமக்கு சாந்தியும், சந்துஷ்டியும் தருகிற ஒரு குரு அல்லது மகானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், “இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது ?  மனசுக்கு ரம்யமாகவும், ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம் ?”  என்று தான் தோன்றும்.  ஆனால், எதனாலோ,  சிறிது நேரமானால், இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு, மனஸ் வேறெங்கேயாவதுதான் போய் விழும். அப்படியே கண்ணைக் கசக்கித் தூக்கத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.  இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம்.  எல்லாம், அப்யாஸத்தில், விடா முயற்சியில் தான் இருக்கிறது.  நம்முடைய ஸ்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கைகொடுப்பார்.

Wednesday, December 15, 2010

அஸ்வமேதம்

clip_image001

அஸ்வமேத யாகத்தை நம் எல்லோராலும் பண்ண முடியுமா ?  அஸ்வமேதத்துக்கு சமமான பலனைத் தரும் ஒரு பணி இருக்கிறது.  மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்ததான அந்தப் பணிதான் அனாதைப் பிரேத  ஸம்ஸ்காரம்.  பரோபகாரமாக, இறந்துபோன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து நமக்கும் உபகாரம் பண்ணிக் கொள்கிறோம்

 

ராம நாம மகிமை — மஹா பெரியவா

clip_image001[1]

“நடமாடும் கடவுள்” மஹா பெரியவா எனக்கு ஒரு உபதேசம் செய்தருளினார்.  அதாவது “நீ நித்தியம் படுக்கப்போகும் போது, சத் விஷயங்களையே நினைத்துக் கொள்.  சதா “ராமா, ராமா“  என்று ஜபம் பண்ணிக் கொண்டிரு.  இந்த மந்திர ஜபத்திற்கு விதி நிஷேதம் ஒன்றுமில்லை.  நீ இதை எப்போதும்,  எந்த நிலையிலும் ஜபம் செய்யலாம்”  என்றருளினார்.

clip_image002

இப்படி அந்தக் கருணாமூர்த்தி, எனக்குத் தாரக மந்திரோபதேசத்தைச் செய்து அருளினார்.  என்னே அவரது ஸௌலப்ய குணம் !  இன்று நினைத்தாலும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.  ஆக,  என்றுமே அவர்தம் அருளாலே அவர்தாள் வணங்கி, சதா அவரையே தியானம் செய்து,  அவரது உபதேசத்திற்கிணங்க,  அந்த தேஜோமயமான திவ்ய ஸ்வரூபத்தை என் ஹ்ருதய கமலத்தில் ஆரோஹணித்து இடைவிடாது பூஜிப்பதே என் வாழ்வின் லக்ஷியம் எனக் கடைப்பிடித்து வருகிறேன்.

பரம பாவனமான இந்த மந்திரத்தின் பெருமையை அவர் பல தடவைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.  சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும்,  “ரா” என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும்,  “” என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

clip_image003

ஸ்ரீ தியாக பிரம்ஹமும் தாம் இயற்றிய “தேவாம்ருதவர்ஷணி”  ராகத்திலமைந்த “எவரனி“  என்ற பிரசித்தி பெற்ற கிருதியில் இக்கருத்தையே — “சிவமந்த்ரமுனகு ஜீவமு”  என்றும்  “மாதவமந்த்ரமுனகு ரா ஜீவமு” என்றும் பாடியருளியிருக்கிறார்.

–ஆர். சங்கரநாராயணன் (நடமாடும் கடவுள் – வானதி பதிப்பகம் வெளியீடு)

Monday, December 13, 2010

நாமார்க்கும் குடியல்லோம்!

clip_image001

1931 -ம் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் ஆங்கில அரசின் அடக்குமுறை அதிகமாய் இருந்த சமயம்.  காங்கிரஸ்காரர்களுக்கு ஆதரவு அளித்தால் “வந்தது, ஆபத்து !”  என்று மக்களும் ஸ்தாபனங்களும் பயப்பட்ட சமயம் அது.

பெரியவர் வட ஆற்காடு ஆரணியில் முகாமிட்டிருந்தார்.  அப்போது காங்கிரஸ் தொண்டர் படையொன்று அவரைச் சந்திக்க அனுமதி கோரிற்று.

விஷயத்தைப் பெரியவரிடம் விண்ணப்பித்த ஸ்ரீமட நிர்வாகிகள்,  “சர்க்கார் கெடுபிடி மிகவும் அதிகம்.  பெரியவர் காங்கிரஸ்காரர்களுக்குப் பேட்டி கொடுப்பதால் மடத்துக்குப் பல தொல்லைகள் ஏற்படலாம்” என்று தெரிவித்துக் கொண்டனர்.

அவர்கள் கூறியதைப் பெரியவர் கூர்ந்து கேட்டுக் கொண்டார்.  “அத்தனை பேரையும் வரச் சொல்லுங்கள்,  மடத்திலேயே அவர்களுக்குப் போஜனமும் ஏற்பாடு பண்ணுங்கள்”  என்று பரம சாந்தமாக ஒரு வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்.

மடத்து நிர்வாகிகள்,  “என்ன ஆகப் போகிறதோ?”  என்ற பயத்துடனேயே இட்ட பணியைச் செய்தனர்.

ஆபத்து ஏதும் வரவில்லை.

மானேஜர் இதை மகிழ்ச்சியுடன் பெரியவாளிடம் கூற, அவர்,  “நம்மைப் பார்க்கணும்னு ஒருத்தர் சொல்றச்சே,  அவர் யாராயிருந்தாலும் அதனால் என்ன ஆகுமோ,  ஏதாகுமோன்னு பயந்துண்டு கதவைச் சாத்திக்கறதுன்னா ‘ஜகத்குரு‘  ன்னு பட்டம் போட்டுண்டு இந்தப் பீடத்தில் ஒட்கார்ந்திருக்கிறதுக்கு லாயக்கே இல்லைன்னு அர்த்தம்”  என்று ரத்தினச் சுருக்கமாக மறுமொழி தந்தார்.

Saturday, December 11, 2010

சந்தோஷம் — மஹா பெரியவாளின் அருள்வாக்கு

clip_image001

மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவையைச் செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை – இத்யாதி இருக்கின்றன. நாம் சோந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடு கூட ‘அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தைதானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மைச் சோந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்!   நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

நம்மைப் போலவே சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும் கண்களைக் கவர்கிற காட்சி சாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி http://www.kalkionline.com

Friday, December 10, 2010

ஆஹாரம் — மஹா பெரியவாளின் அருள்வாக்கு

clip_image001

ஆஹாரம் என்றால் நாக்கால் சாப்பிடுவது மட்டுமில்லை. பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒவ்வோர் ஆஹாரம் உண்டு. பல காட்சிகளைப் பார்க்கிறோம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு, பேச்சுக்களைக் கேட்கிறோம். இது காதுக்கு ஆஹாரம். இப்படியே நாம் அனுபோகம் பண்ணு கிறதெல்லாம் நமக்கு ஆஹாரம்தான். இதில் எல்லாமே சுத்தமானதாய் இருக்க வேண்டும். மனசைக் கெடுக்கிற காட்சிகளைப் பார்க்கப்படாது; மனசைக் கெடுக்கிற பேச்சுக்களைக் கேட்கக் கூடாது; அனுபவிக்கிற தெல்லாம் ஈச்வர ஸாக்ஷாத்காரத்துக்கு உதவுகிற வையாகவே இருக்க வேண்டும்.

இப்படி பொதுப்படையாகச் சொன்னாலும், இந்தப் பலவிதப் புலன்-நுகர்ச்சிக்கான ஆஹாரங்களிலும் வாயால் நுகர்கிற ஆஹாரந்தான் முக்கியமாக இருப்பதால் அதைப் பற்றி இவ்வளவு ஆசார விதிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் ஸ்தூலமாக நமக்கு உள்ளேயே போய், தேகம் முழுக்க ரத்தமாக வியாபிக்கிறது; இதுவே சித்தத்தையும் பாதிக்கிறது. ஒரு பக்கம் ஆஹாரமில் லாவிட்டால் மனுஷ்யன் ஜீவிக்கவே முடியவில்லையென்றால், இன்னொரு பக்கமோ அது மித ஆஹாரமாக இல்லா விட்டால் தேஹத்துக்கும் சிரமம், மனசுக்கும் அசாந்தி என்றாகிறது. வயிற்றிலே திணித்துக் கொண்டே போவதால் சாப்பாட்டுப் பொருளுக்கும் நஷ்டம், காரி யம் செய்ய முடியாமலும் நஷ்டம், இவற்றைவிட தியானத்தில் மனசு ஈடுபடாமல் போவது பெரிய நஷ்டம். ஆகையால் ‘சோற்றால் அடித்த பாண்டம்’ என்றே மனுஷ்யனுக்குப் பேர் இருப்பதால் இந்தப் பாண்டமும், இதற்கு உள்ளே யிருக்கிற மனசும் நல்லபடியாகவளர் வதற்காக ரிஷிகள் காட்டிக் கொடுத்திருக்கும் போஜன விதிகளை மேற்கொண்டு நடத்திக்காட்ட வேண்டும். இதன் முக்கியத்துவமும் அவசியமும் எல்லோருக்கும் புரிவதற்குப் பரமேச்வரனைப் பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறேன்.

பக்தி, ஞானம், உயர்ந்த குணங்கள், உத்தமப் பண்புகள் ஆகியவற்றால்தான் மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்பது அர்த்தம். இந்தக் குண விசேஷங்கள் விருத்தியாகவும் ஆஹார நியமமே உதவுகிறது என்று நம் சாஸ்திரங்கள் காட்டுகின்றன.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி http://www.kalkionline.com

Wednesday, December 8, 2010

காஞ்சி மாமுனியின் கருணை

மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனி பூத உடலை நீத்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவரோடு இருந்த நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்க முடியவில்லை. வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் அவர் போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார்

ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம்.பேசமாட்டார்கள். வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.
வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்""என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா"" என்று கேட்டார். சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று. மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.
அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். ""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது . நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன். அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல""
.
இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள்

Tuesday, December 7, 2010

கருணைத் தெய்வம் காஞ்சி மகான் (14) – பட்டாபி

clip_image001

பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்...

''அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.

'ராம ராம'ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா. அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, 'ராம்... ராம்'னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.

இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி... அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. 'ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்'னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.

அப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, 'ராம்... ராம்'னுதானே குரல் கேக்கும்! இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. 'இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை'னு பெரியவா சொல்றாளே... அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை?!'

யோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்.

சாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.

''என்ன அவசரம்... ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன்! ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே? வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்!''னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.

clip_image002

அதன்பிறகு, சில நாள் கழிச்சு... அதாவது 94-ஆம் வருஷம், ஜனவரி  8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா!

அன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா? தெரியலை.

அப்புறம்... எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். 'பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே'ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்?!

பெரியவா சொன்னதை எல்லாம் நினைச்சு நினைச்சுப் பார்த்தேன். ஒரு தடவை கி.வா.ஜ. சொன்னது ஞாபகத்துக்கு வந்தது...

''தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை! சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்''னு சொல்லிட்டு, ''ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ?'' என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்...

''ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர்? இவர் ஒருத்தர்தான்! அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்!''

clip_image003எத்தனை சத்தியமான வார்த்தை!

பெரியவா ஸித்தி ஆயிட்டானு சொன்னேன் இல்லியா? பெரியவாளுக்கு 90-லிருந்தே உடம்பு படுத்திண்டு இருந்தது; க்ஷீணமாயிண்டு இருந்தது. ஒரு தடவை, ஸ்மரணையே தப்பிப் போச்சு. எல்லாரும் ரொம்பக் கவலைப்பட்டா.

ராஜீவ் காந்தி அப்போ பிரதமரா இருந்தார். அவருக்கு விஷயம் தெரிஞ்சு, அவரோட ஏற்பாட்டுல, 'டோட்டல் பாடி ஸ்கேனர்' கொண்டு வந்து பெரியவாளைத் தீவிரமா பரிசோதனை பண்ணிப் பார்த்தா. பெரிய பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் வந்து சோதனை பண்ணினா.

ஒரு ஸ்டேஜ்ல, ஞானிகளுக்குத் தங்களோட சரீர ஸ்மரணை (தேக பாவம்) பரிபூர்ணமா விட்டுப் போயிடும்னு சொல்லுவா. யோக மார்க்கத்துக்குப் போயிடுவா. சுவாசத்தைக் கட்டுப்படுத்திண்டு இருப்பா. பெரியவாளும் அதே நிலையிலதான் இருந்தார். இது எனக்குப் புரிஞ்சுது. ஆனா, எதுவும் சொல்லாம, என்னை அடக்கிண்டு இருந்தேன்.

யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.

விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.

பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ? மே மாசத்துல, 'மேனா'ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார்! அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.

ஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ''நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே?''ன்னு கேட்டார்.

''நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே! பெரியவாதான் சொல்லணும்''னு அழுதுட்டேன்.

பெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ''கவலைப்படாதே! என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்! சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்!''னார்.

அந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.

ஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே... அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே!'' - சொல்லி நிறுத்திய பட்டாபி சார், பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்.

நன்றி – சக்தி விகடன்

Monday, December 6, 2010

மது(ரை) ர கான மணி அய்யர்

clip_image001

காஞ்சி மாமுனிவர் பெரியவாளுக்கு மணி அய்யரின் பாட்டு என்றால் உயிர்.  பிரபல  எழுத்தாளர் பரணீதரன் அவர்கள் பெரியவாளுடன் இருந்தபோது மணி அய்யரின் கச்சேரியை பற்றி எழுதியதாவது:

ஒரு சமயம் சென்னை தியாகராய நகரில் மதுரை மணி அய்யரின் கச்சேரி ஒரு மண்டபத்தில் நடந்தது.  சுமார் 200 ரசிகர்கள் மெய் மறந்து அய்யரின் கச்சேரியை கேட்கிறார்கள்.   மணி அய்யருக்கு  அப்போது உடல் நலம் குன்றி, கண் பார்வைகள் நலிந்து போன சமயம்.
clip_image002

கச்சேரியின்போது மகா பெரியவாள் தனக்கு முன்பு தட்டில் வைத்திருந்த ஆரஞ்ச் பழத்தின் சுளைகளை  எடுத்துவிட்டு அதன் மூடியால் தரையில் மணி அய்யரின் பாட்டுக்கு தாளம் போட்டு ரசிக்கிறார்.   கச்சேரி முடிந்ததும் மணி அய்யர் ” நான் பாடும்போது லயம் தப்பாமல் தாளம் போட்டு வந்தாரே, அவர் யார்?” என்று கேட்க, உடன் பாடியவர் மகாபெரியவாள் தான் என்று சொல்ல மணி அய்யர் தன்னை அறியாமல் “கைலாசநாதா! கபாலீஸ்வரா! என் தெய்வத்தை பார்க்க முடியவில்லையே” என்றாராம்.  இதை கேட்ட அத்தனை ரசிகர்களின் கண்களில் தாரையாக கண்ணீர் வந்தது என்று தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார்.

ஒரு சமயம் நாட்டில், பஞ்சம் பட்டினி ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டபோது பெரியவாள் மதுரை மணி அய்யரிடம் ” நீ கச்சேரியில் கோளறு பதிகம் பாடு, நவகிரக கீர்த்தனைகளை பாடு” என்றார்.   அவரது வேண்டுகோளை ஏற்று கடைசிவரை தன் கச்சேரியின்போது அவைகளைப் பாடாமல் இருக்கமாட்டார்

Sunday, December 5, 2010

காஞ்சிப் பெரியவர் பற்றி கணபதி ஸ்தபதி…

clip_image001
சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்யாகுமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலை, டெல்லியில் மலைமந்திர் சுவாமிநாத சுவாமி கோவில், ஹவாயில் உள்ள இறைவன் கோவில் – இவற்றில் எதைப் பார்த்திருந்தாலும் நீங்கள் கணபதி ஸ்தபதி அவர்களின் பிரம்மாண்டக் கலைத் திறனைப் பார்த்திருக்கிறீர்கள். தவிர, லண்டன், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஃபிஜி, ஸ்ரீலங்கா என்று எங்கெல்லாம் உலகில் இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஸ்தபதியார், அவர்களுக்குக் கோவில்களை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவில் வாஷிங்டனில் சிவ-விஷ்ணு, ஐயப்பன், வெங்கடேஸ்வரா ஆலயங்கள், இல்லினாய்ஸ் ஸ்ரீ ராமர் கோவில், சிகாகோ கணேச சிவ துர்கை ஆலயம் என்று இவர் நிர்மாணித்த கோவில்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 82 வயது ஆன போதிலும் இன்னும் படைப்பும் ஆய்வும் தொய்வில்லாமல் செய்துவருகிறார்.

மகரிஷி மகேஷ் யோகியின் மஹரிஷி வேதப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ‘Building Architecture of Sthapatya Veda’, ‘Quintessence Of Sthapatya Veda’, ‘Who Created God’ போன்ற 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சில்ப குரு, துளசி சம்மான், கலைமாமணி, சில்ப கலாநிதி, தென்னக மயன், வாஸ்து வியாசன், பத்மபூஷண் உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற இவரைத் தென்றலுக்காக நேர்காணல் செய்தபோது…

கே: காஞ்சிப் பெரியவருடன் நெருங்கிப் பழகிய அனுபவங்களைச் சொல்ல முடியுமா?

ப: பல ஆண்டுகளுக்கு முன்னரே வேத, ஆகம, வாஸ்து, வித்வ சதஸ்ஸை அவர் காஞ்சிபுரத்தில் நடத்தியிருக்கிறார். நான் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது அதில் கலந்து கொண்டிருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் விளக்கமான பதில் சொன்னதால் என்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கும் மேல் அவருடன் தொடர்பு இருந்தது. காஞ்சிப் பெரியவர் வெறும் சன்யாசி மட்டுமல்ல. அவர் திரிகால ஞானி. பல்வேறு சாஸ்திரங்கள் தெரிந்தவர். மிகப் பெரிய ஆத்ம ஞானி. அவர் ஒரு மகா வித்வான். ஆர்க்கியாலஜிஸ்ட். அவரைப் போன்றவர்களின் அருளாசி கிடைத்தது எனது பாக்யம்தான். சுவாமிகளின் அருளாசியோடு அமைக்கப்பட்டது புதுதில்லியில் உள்ள சுவாமிநாத சுவாமி ஆலயம்.

clip_image002

“அமோகமாக இருப்பாய்” என்று ஆசிர்வதித்தார் காஞ்சி மகாபெரியவர்.

சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.

1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன்.

சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.

வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.

அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.

பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன்.

பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார். ‘காமகோடி’ என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

- கணபதி ஸ்தபதி
clip_image001[1]
நன்றி தென்றல் மாத இதழ் – மார்ச் 2009

http://www.tamilonline.com/thendral/

Saturday, December 4, 2010

மயங்கி விழுந்த சாஸ்திரி — ரா. வேங்கடசாமி

clip_image001

விழுப்புரம் அருகில் உள்ளது வடவாம்பலம் கிராமம்.  1926-ம ஆண்டு மகா பெரியவர் அந்த வழியாக போகும்போது மனதில் ஏற்பட்ட திடீர் சலனத்தின் காரணமாக அந்த கிராமத்துக்குள் தன் பரிவாரங்களுடன் நுழைந்தார்.”இங்கே ஒரு சந்நியாசி இருந்தாரே, ஞாபகம் இருக்கிறதா? என்று எதிர்பட்ட கிராமத்து முதியோர்களிடம் கேட்டார்,  யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த கும்பலில் இருந்த ஒரு முதியவர் மட்டும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன் ஒரு துறவி இருந்ததாகவும், அவர் அதே ஓரில் சமாதி அடைந்ததாகவும் சொன்னார்.  இரண்டு, மூன்று வருடங்கள் அவரது சமாதிக்கு பூஜைகள் தொடர்ந்து நடந்ததாகவும், பிறகு அது நின்று போனதாகவும் சொன்னார்.

ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் 58-வது பீடாதிபதி அங்கேதான் சமாதி அடைந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட மகான் அந்த கிராமம் முழுக்கத் தேடி அவரது சமாதியை கண்டுபிடித்தார்.  பிறகு தன்னுடன் வந்த அடியார்களில் ஒருவரிடம் அந்த இடத்தை தோண்ட சொன்னார்.’அகலமாக வேண்டாம், ஆழமாக தோண்டுங்கள்’ என்று கட்டளையிட்டார். மண்வெட்டிஎடுத்து மகான் காட்டிய இடத்தை தோண்டினார் ஒருவர்.  அப்போது அருகில் இருந்த குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்பவர் மெய்மறந்து ‘தோண்டாதே தோண்டாதே’ என்று கூச்சலிட்டு அங்கேயே மயங்கி விழந்தார்.  தோண்டிய ஆசாமி திகைத்துபோய் உடனே தோண்டுவதை நிறுத்தினார்.  வெகு நேரத்துக்கு பிறகுதான் அவரது மயக்கம் தெளிந்தது.  மகான் சாம்பமூர்த்தி சாஸ்திரியிடம் மெதுவாக விசாரித்தார்.

‘உடலில் காவி .. கையில் தண்டம். கழுத்தில் ருத்திராட்ச மாலை .. நெற்றி நிறைய விபூதி .. இத்துடன் ஆகாயத்தை தொடுமளவு ஒரு துறவியின் உருவம் என் கண் முன் தோன்றியது.  அவருக்கு முன்னால், ஆயிரக்கணக்கான அந்தணர்கள் வேதபாராயணம் செய்வதைக் கண்டேன்.  ஒரு கட்டத்தில் அவர் மெல்லிய குரலில் ‘தோண்டாதே .. தோண்டாதே’ என்று கூறியது என் செவிகளில் விழுந்தது.  அதையே நானும் சொல்லியிருப்பேன் போலிருக்கிறது.  பின்னர் அந்த நெடிய உருவம் சிறிதாகி மறைந்து போனது! ‘சதாசிவம். சதாசிவம்’ என்று யாரோ ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன்!’ என்றார்.

அதே இடத்தில்தான் ஸ்ரீஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருப்பதை உறுதிசெய்துகொண்ட மகாபெரியவா, 1927-ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி அதிஷ்டானத்துக்கு பிருந்தாவனம் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தார்.  இப்போது அங்கே வருடா வருடம் ஆராதனை நடக்கிறது.

சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்).  இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர்.  கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால்.  அப்போது யதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: “ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?”

‘இன்னும் போகலை’ என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : “ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!’ ‘அந்த ஊர் எங்கே இருக்கிறது?’ என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.

இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் ‘பெரியவா கிரஹம்‘ ஸ்தாபிதமானது.  காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும்.  அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும்.  அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம்.  இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்).  சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார்.  எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார்.  சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர்.  வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது.  அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.

டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: “ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?”

‘சட்‘ டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஆமாம்” என்றார்.  ஒருவித பிரமிப்புடன்.

“வண்டியில் ஏறுங்கள்.  கொண்டுபோய் விடுகிறேன்” என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர்.  சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது.  “இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க” என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, “வாருங்கள் … வாருங்கள்.  உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்.  முதலில் சாப்பாடு.  பிறகுதான் எல்லாம்!” என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ?   தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!

Friday, December 3, 2010

மாத்ரு தேவோ பவ….
clip_image001
மனுஷ்யராகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள்,  தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.  இதுவே பித்ரு கடன், தேவ காரியம் என்பவை.  நம்முடைய சக ஜீவர்களுக்கும் நம்மாலானதை நாம் செய்ய வேண்டும்.
பித்ருக்களான தாய் – தந்தையருக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும்.  ‘மாத்ரு தேவோ பவ,  பித்ரு தேவோ பவ‘  என்று வேத மாத சொல்கிறாள்.  நம் எல்லோருக்கும் வேதத்தின் சாரமான விஷயங்களை இலகுவாகப் பிழிந்து கொடுத்த ஔவை மூதாட்டியும் இதே விஷயத்தை, ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’  என்று சொல்கிறார்.clip_image001[1]
தாய் – தந்தையரிடம் பணிவுடன் நடந்து கொண்டு,  அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும்.  தாய் – தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு,  நாம் பிரதியே செய்ய முடியாது.   அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.
அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் போன பிற்பாடும்,  அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம்,  சிராத்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.
– மஹா பெரியவர் அருளிய ‘தெய்வத்தின் குரல்’ தொகுப்பில் இருந்து….

Thursday, December 2, 2010

மகான் ஸ்ரீசுப்ரமண்ய யதீந்திராள்

clip_image001

சித்தமல்லி கிராமத்தில் அவதரித்த மகா புருஷர் – ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகள் என்கிற சுப்ரமண்ய யதீந்திராள். குலசேகர ஸ்வாமி கோயிலுக்கு அருகிலேயே உள்ளது இவரது அதிஷ்டானம். கி.பி 1866-ஆம் ஆண்டில் அவதரித்த இவர், இளம் வயதிலேயே சாஸ்திரம் மற்றும் வேதங்களைக் கற்றார். மஹாமஹோபாத்யாய மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளிடம் கல்வி கற்றார். காஞ்சி மகா ஸ்வாமிகளது இறைப் பணியில், தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றி, மகா ஸ்வாமிகளின் அபிமானத்தையும் பெற்றார்.

clip_image002

ஒரு முறை மயிலாடுதுறையில் யாத்திரை மேற்கொண்டிருந்த மகா பெரியவாள், அருகே உள்ள கிராமமான கோழிகுத்தியில் சரஸ்வதி அம்மாள் என்பவரது இல்லத்தில் தங்கி இருந்தபடி, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு நாள், திரண்டிருந்த பக்தர் கூட்டத்தின் நடுவே உரை நிகழ்த்தினார் மகா பெரியவாள். தனது பேச்சில் ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகளை வெகுவாகப் புகழ்ந்தார் மகா பெரியவாள். “பொதுவா ஒண்ணு இருந்தா இன்னொண்ணு இருக்காது. இது உலகத்தோட இயற்கை. கல்வி இருக்கும் இடத்தில் பணம் இருக்காது; பணம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. கல்வி, பணம் – இவை இரண்டும் இருந்தால் அங்கே குழந்தைச் செல்வம் இருக்காது. கல்வி, பணம், குழந்தைச் செல்வம் – இவை மூன்றும் இருந்தால், அவரது வீட்டில் எவருக்காவது உடல் நலன் படுத்திக் கொண்டே இருக்கும். ஒரு வேளை இவை நான்குமே சுபமாக இருந்தால் அந்த கிரஹத்தில் நிம்மதி இருக்காது. இதை பரவலாக நாம் பார்க்கக் கூடிய நிஜம். ஆனால், இதற்கு விதிவிலக்கானவர் – சித்தமல்லி சுப்ரமண்ய சாஸ்திரிகள். பக்தி, படிப்பு, செல்வம், ஆரோக்கியம் முதலான அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்றவர் இவர். இது இறைவனின் அருள்! இப்போது அவருடைய மகளின் கிரஹத்தில் தங்கியபடிதான், உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.” என்றாராம்.

வாழ்வில் சகல வளங்களையும் பெற்று, குறைவின்றி வாழந்தவர் சுப்ரமண்ய சாஸ்திரிகள். இவருக்கு ஐந்து மகள்களும், நான்கு மகன்களும் உண்டு. ஒரு முறை சுப்ரமண்ய சாஸ்திரிகள் உடல் நலக் குறையுடன் காணப்பட்டார். அந்தக் காலத்தில் இது போன்ற தருணங்களில், ‘ஆபத்சந்நியாசம்’ வாங்கிக் கொள்வார்கள். அதாவது, இந்த சந்நியாசத்தை ஏற்றால், மறு பிறவி எடுத்ததாக ஆகிவிடுமாம். இதன் மூலம், தற்போது இருந்து வரும் நோய் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைத்து விடும் என்பது சிலரது நம்பிக்கை.

ஆபத்சந்நியாசத்தை அவரவரே எடுத்துக் கொள்ளலாம். எனினும் பிறகு சந்நியாசியிடம் சென்று முறைப்படி ஆபத்சந்நியாசம் எடுக்க வேண்டுமாம்.

clip_image003

முதலை ஒன்று, ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஸ்ரீ ஆதிசங்கரரின் காலை கவ்வி இழுக்க .. இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க ஸ்ரீஆதிசங்கரர், ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டாராம் (இதற்கு தன் அன்னையிடம் நிபந்தனை விதித்தார் என்பது தனிக்கதை). இதையடுத்து, முறைப்படி இந்த சந்நியாசத்தை எடுத்துக் கொண்டார்.

சுப்ரமண்ய சாஸ்திரிகளும் ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டவர். எப்படி?

clip_image004

ஒரு நாள் காஞ்சிபுரத்தில் மகா பெரியவாளைச் சந்தித்து, “எனக்கு ஆபத்சந்நியாசம் வழங்குங்கள்” என்றாராம் சுப்ரமண்ய சாஸ்திரிகள். நீ ஊருக்குப் போ. பண்டிதர்களை அனுப்புகிறேன்” என்றாராராம் ஸ்வாமிகள். இதையடுத்து சில நாட்களில் சுப்ரமண்ய சாஸ்திரிகளின் உடல் நிலை மோசமானது. அப்போது, காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் இருந்து ஸாஸ்திரிகளுக்கு ஆபத்சந்நியாசம் வழங்குவதற்காக இரண்டு பண்டிதர்கள் சித்தமல்லிக்கு வந்தனர்.

clip_image005

ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டால், மூன்று நாட்கள் மட்டுமே வீட்டில் தங்கலாம். சாஸ்திரிகளோ அப்போது உடல்நிலை முடியாமல் இருந்தார். இந்த நேரத்தில் எப்படி ஆபத்சந்நியாசம் கொடுப்பது என்று வந்தவர்களும் வீட்டில் இருந்தவர்களும் குழம்பினர். எனினும் ஆபத்சந்நியாசம் கொடுக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் கழிந்தன, 3-வது நாள்… சாஸ்திரிகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. மறுநாள், ஆபத்சந்நியாச தர்மப்படி சாஸ்திரிகள் வேறு இடத்தில் தங்க வேண்டும். அதற்காக, மடம் ஒன்றும் தயார் செய்யப்பட்டது. குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்க்காரர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கியவர், கிலோ கணக்கில் கற்பூரத்தைக் கொண்டு வந்து ஏற்றச் சொன்னார். கற்பூரம் கொழுந்து விட்டு எரியும்போது, சாஸ்திரிகளின் சிரசில் இருந்து ஓர் ஆத்ம ஜோதி புறப்பட்டு, கற்பூர ஜோதியுடன் இரண்டறக் கலந்து வானவெளியில் செல்வதைக் கண்டதாகச் சொல்வர்.

அதே நேரத்தில் காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மகா பெரியவாள், “அதோ … சுப்ரமண்ய சாஸ்திரிகள் மோட்சத்துக்குப் போயிண்டிருக்கார், பாருங்கோ” என்று உடன் இருந்த சிஷ்யர்கள் மற்றும் பக்தர்களிடம் வானத்தைக் காட்டிச்சொன்னாராம். இது நடந்தது கி.பி. 1933-ஆம் ஆண்டில்! இதுவே இவரது மகாசமாதி வருடம். சுப்ரமண்ய சாஸ்திரிகளது 76-வது வருட ஆராதனை உற்ஸவம் கடந்த 07-11-09 அன்று சித்தமல்லியில் உள்ள அவரது அதிஷ்டானத்தில் நடந்தேறியது.

clip_image006

அதிஷ்டானம் வந்து வணங்கும் பக்தர்களுக்கு இன்றைக்கும் இன்னருள் புரிந்து வருகிறார் சுப்ரமண்ய சாஸ்திரிகள்.

clip_image007

மேலும் இந்த மஹானைப் பற்றிய விவரங்களுக்கு
________________________________________________________

clip_image008

இவ்வளவு சிறப்புமிக்க இந்த அதிஷ்டானம் மக்கள் மத்தியில் மிகப் ப்ரபலமாக பேசப் படவேண்டும்…நம் மக்கள் எல்லோரும் வந்து தரிசிக்க வேண்டும். இந்த மகானின் ஆசிகளை பெற வேண்டும்.

மேலும் ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் யதீந்திராளின் அதிஷ்டானம் பற்றிய விவரங்களுக்கு நீங்கள் அணுக வேண்டிய நபர்கள்:

1. ஸ்ரீ வி. சுப்ரமணியன், அட்வகேட், சென்னை. போன்: 98407 89261

2. ஸ்ரீ “ஜ்யோதிஷரத்னா” ராமன், பாண்டிச்சேரி. போன் : 94433 09487 / 0413-2251842

http://srikulasekhara.blogspot.com/

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top