கட்டுரை ஆசிரியர்-எஸ். ரமணி அண்ணா
.
பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் கொண்டே வினவினார்.
உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா ! வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்.
அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா ?" என்று கவலையுடன் விசாரித்தார்.
உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்.
இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!
ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.
அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.
ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"
உடனே ஸ்வாமிகள், "ஆமாமா! மோட்ஷத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் அது ! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு ! இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.
ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா...நாங்கெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும் !" என்றார்.
அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:
"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:
கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரச் சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.
குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் ! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ..."
- சொல்லி விட்டு சஸ்பென்சாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்.
சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ? அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் ஒக்காத்துவா.
அவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா! அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா ! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா? "
சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை.மஹா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: " ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. ஒரு அதிதியக் கூடக் காணோம்! கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் ? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்' என்று கேட்டார்.
சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொள்ளையிலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார். அந்த அம்மாவைக் கூப்பிட்டு, தனக்கு 'வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்' னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.
இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே' னு கொழம்பினார்.
சித்த நாழி கழிச்சு, கீர வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?' நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்' ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா' னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்."
- இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: "போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த அந்த ஆச்சிகிட்டே கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா 'சிவ..சிவ' னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.
திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்' னு சொன்னா. இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா..."
நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா ? சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்தமஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா ? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கு
முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ" எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.
பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. நாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல், சர்வசதா காலம் அவனிடம் போய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாது ஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத் தான் பக்தி என்று பெயர்.
No comments:
Post a Comment