Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Sunday, October 27, 2019

"பெரியவா ஏற்றுக்கொண்ட திரட்டுப்பால்"

(தீபாவளி தினத்தன்று, குமுட்டி அடுப்பில் கிளறிய திரட்டுப்பாலை, ஆசையோடு மஹானிடம் கொடுக்க நினைத்த கடம் வித்வான் சுபாஷ் சந்திரன்)
(பெரியவா கட்டாயம் ஏத்துப்பா! சொன்ன பிரதோஷம் மாமா)
தீபாவளி ஸ்பெஷல் போஸ்ட்
மஹானிடம் அளவற்ற பக்தி கொண்டவர் கடம் வித்வான் சுபாஷ் சந்திரன். தனக்கு எல்லாமே அந்த மஹான் தான் என்று நினைப்பவர் – தீபாவளி தினத்தன்று, குமுட்டி அடுப்பில் கிளறிய திரட்டுப்பாலை, ஆசையோடு மஹானிடம் கொடுக்க நினைத்தார்.
வெறும் நெல் பொரியையும், வாழைக்காய் மாவையும் பிட்க்ஷையாக ஒரு கைப்பிடி அளவே தினமும் ஏற்று சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் சர்வேஸ்வரரான மஹா பெரியவா, தன் திரட்டுப் பாலை ஏற்றுக் கொள்வாரா என்பதுதான் சுபாஷ் சந்திரனின் சந்தேகம்.
”ஏண்டா நீ ஆசையா பண்ணிண்டு வந்திருக்கே. இதைப் பெரியவா கட்டாயம் ஏத்துப்பா!” என்று அவருக்குத் தைரியம் சொன்னது யார் தெரியுமா? பெரியவாளைக் கடவுளாகப் பூஜிக்கும் பிரதோஷம் மாமா தான். மாமா சொல்லிவிட்டால் அது நிச்சயம் நடக்கும் என்று கடம் வித்வானும் நம்பினார்.
எவ்வளவோ பக்தர்கள் பழங்கள், மாலைகளோடு வரிசைக் கிரமமாக காத்துக் கொண்டு இருந்தனர். கடம் வித்வானின் நம்பிக்கை சற்றே சரிந்தது. பெரியவாளிடம் கைங்கர்யம் செய்யும் ஒருவர், “ இந்தக் கூட்டத்தில் இது சாத்தியமா என்ன? பெரியவா சந்நிதிக்கு நேரே வச்சுட்டு வேண்டிண்டு போங்க” என்று சொல்ல, கடம் வித்வான் மிகவும் மனம் தளர்ந்து விட்டார். ஆனால் மனதில் நம்பிக்கை கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்ததற்குக் காரணம் பிரதோஷம் மாமாவின் வார்த்தைகள்.
அதனால் சற்று கூட்டத்தை விட்டு நகர்ந்து திட்டு போன்ற ஒரு இடத்தில், கையில் கொண்டு வந்திருந்த பாத்திரத்தோடு உட்கார்ந்து விட்டார் கடம் வித்வான். அந்த சமயத்தில் மஹான், கையில் ஏதோ புத்தகத்தை வைத்துக் கொண்டு அதைப் படித்துக் கொண்டு இருந்தார். பக்தர்கள் அவரைத் தரிசித்தபடியே நகர்ந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அதே நிலை. கடம் வித்வான் மனத்தில் விரக்தி தோன்ற ஆரம்பித்தது.
”அவர் ஏத்துப்பார்” என்கிற பிரதோஷம் மாமாவின் குரல் மட்டும் அவரது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
திடீரென்று புத்தகத்திலிருந்த தன் முகத்தை அகற்றிய மஹான், வேறெங்கும் பார்க்காமல், நேராக கடம் வித்வானைப் பார்த்தார்.
ஜாடையில் அவரைத் தன் அருகில் வருமாறு அழைத்தார். கடம் வித்வான் இரண்டே எட்டில் மஹானின் அருகில் போய் நின்றார். அவர் கையில் இருந்த பாத்திரத்தை குழந்தை பாவத்தோடு தன் கையில் வாங்கிக் கொண்டார் மஹான். பிறகு தன் பக்தர் அன்பால் திரட்டிக்கொண்டு வந்த திரட்டுப்பாலை, முற்றும் துறந்த நிலையைத் துறந்தவராய் தீபாவளி பட்க்ஷணமாக தன் திருக்கரத்தாலேயே பாத்திரத்திலிருந்து எடுத்து உருட்டி வாயில் போட்டுக் கொண்டார்.
திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியால் சுபாஷ் சந்திரன் திக்கு முக்காடித் தான் போனார்.
பிரதோஷம் மாமா எவ்வளவு துல்லியமாக பகவானைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்கிற மகிழ்ச்சி ஒரு பக்கம்…. வாழ்நாளில் யாருக்குமே சுலபத்தில் கிடைக்காத பேறு அல்லவா இது?
Source: Sri Varagooran Narayanan

Saturday, October 26, 2019

"குமரேசா, அந்த மணியை வேகமாக அடி.."

(படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காகப் பெரியவாள் கையாண்ட யுக்தி)

சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஆந்திர நாட்டில் பயணம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் சில பேர்கள் மட்டும் உடன் செல்வார்கள். வேறு எவ்விதமான படாடோபமும்,பிருதாவளிகளும் இல்லை. பின்தங்கிய பகுதியிலுள்ள மக்களுக்கு பெரியவாளைப் பற்றி தெரிந்தே இருக்காது! முன்னதாகவே சென்று,பெரியவாள் தங்குவதற்கான இடம் தேர்ந்தெடுப்பது, உடன் செல்வோர் தங்குவதற்கான வசதிகள் - என்று எந்தத் திட்டமும் கிடையாது. "இங்கே தங்கலாம்"
என்று பெரியவாள் சொன்னால், மரத்தடியே ஆனாலும் அங்கேயே தங்கி விடுவோம்.

ஒரு கிராமம். அங்கு ஒரு சிறு சிவன் கோவில். பெரியவாள் அங்கு தங்கி சிரம பரிகாரம் செய்து கொண்டபோது, ஊர் மக்கள் வந்து தரிசனம் செய்து கொண்டார்கள்.

பின்னர்,செய்தி பக்கத்துக் கிராமங்களுக்குப் பரவியது.

கோவிலில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் பிக்ஷை செய்துவிட்டு, பெரியவாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். தொண்டர்களுக்கும் களைப்பு, ஆங்காங்கே படுத்துக் கொண்டார்கள்.

உச்சிகால பூஜை முடிந்தது. சிவாசாரியாருக்கு வீட்டுக்குப் போவதிலேயே குறி போலும்! வழக்கம்போல், வெளிக்கதவை பூட்டிக்கொண்டு போய்விட்டார். (பி.கு.)ஸ்வாமிகள் உள்ளே)

சுற்றுப்புற மக்கள் அப்போது தான் கோவிலுக்கு வந்தார்கள். கதவு பூட்டியிருந்தது.
'சுவாமிகள் புறப்பட்டுப் போய்விட்டார்களா? இந்த வெய்யிலில் எங்கே போயிருக்க முடியும்! பெரியவாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்காமற் போய்விட்டதே?'

என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பிப் போகிற வேளையில்,பெரியவாள் விழித்துக்கொண்டார்கள்.

"கோவில் கதவு சார்த்திப் பூட்டியிருக்கிறது" என்று குறை சொன்னார், ஒரு தொண்டர்.

"அடடா...ஜனங்கள் வந்து ஏமாந்திருப்பார்களே? எல்லாரையும் எப்படி அழைப்பது?"

கோவில் பிராகாரத்தில்,உயரத்தில் ஒரு பெரிய மணி கட்டியிருந்தது."குமரேசா, அதை வேகமாக அடி.."

எதிர்பாராமல் கோவில் மணியோசை கேட்டதும் ஜனங்களுக்குப் பிரக்ஞை வந்தது. கோவிலுக்கு ஓடோடிவந்தார்கள்.கோவில் காவற்காரர் திகைத்துப் போய் கதவைத் திறந்தார்.

படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காகப் பெரியவாள் கையாண்ட யுக்தியைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனார்கள்.

"எதுவும் தெரியாத எங்களையும் பொருட்படுத்தினார்களே! என்று நெஞ்சாரப் போற்றினார்கள்.

பெரியவாள் பார்வை சமதர்மப் பார்வை; மனித ஜீவன் என்ற ஒரே பார்வை

Friday, October 25, 2019

"பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்"

'கலியுகத்துல வரக்கூடிய எத்தனையோ
 பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா இருக்கிற 
மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப்
போய்ப் பாரு. உன்னோட  ஆத்துக்காரிக்கு பார்வை
கிடைக்கும்!' - வைத்தீஸ்வரன் கோவில்  குருக்கள்.



கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-22-02-2018 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

மகா பெரியவா காஞ்சிபுரத்துல இருந்த சமயம் அது.
வழக்கமா அவரை தரிசனம் பண்ணவர்றவா கூட்டம்
நிறைஞ்சிருந்த நாள் அது.

அந்தக் கூட்டத்துல இளம் வயசு உடைய ஒரு தம்பதியும்
இருந்தா. ஆத்துக்காரர் கையில பிறந்துஆறு ஏழு மாச
சிசு ஒண்ணு இருந்தது. குழந்தையைத் தூக்கிண்டு
ஆத்துக்காரியையும் தாங்கிண்டு வரிசையில மெதுவா
நடந்து வந்தார், அவர்.

அன்யோன்யமான தம்பதிகள் அவாங்கறது பார்த்தபோதே
பட்டவர்த்தனமா தெரிஞ்சுது. இருந்தாலும் மகாபெரியவா
இருக்கிற சன்னிதானத்துக்குள்ள இப்படி நெருக்கமா
நடந்து வரணுமான்னு பலரும் நினைச்சா. ஆனா,அவா
கிட்டே நெருங்கினதும்தான் தெரிஞ்சது, அந்தப்
பெண்மணிக்கு பார்வை இல்லைங்கறது.

பலரும் உச் கொட்டி வருத்தப்பட்டதை அவர் கவனிச்ச
மாதிரியே காட்டிக்கலை. நேரா பெரியவா முன்னால
போய் நின்னா.

அவாளைப் பார்த்ததுமே,"என்ன மலையாள
தேசத்துலேர்ந்து வரேளா? இந்த மடத்தோட ஆதி குரு
அவதார க்ஷேத்ரம் அது" அப்படின்னார் மகாபெரியவா.

ரெண்டுபேரும், ஆமாம்.அங்கேர்ந்துதான் வரோம்கற
மாதிரி தலையை அசைச்சா.

"என்ன விஷயம்?" கேட்டார் ஆசார்யா.

"இவ என்னோட ஆத்துக்காரி. இந்தக் குழந்தையை
கருவுல தாங்கிண்டு இருக்கறச்சே நிறை மாசத்துல
எதிர்பாராதவிதமா கால் வழுக்கி தவறி விழுந்துட்டா.
தலையில பலமா அடிபட்டுடுத்து.பகவான் கிருபையில
கர்ப்பத்துல இருந்த சிசுக்கு ஒண்ணும் ஆகலை.
குழந்தையும் நார்மலா பொறந்தது. ஆனா, அதுக்கு
அப்புறமாதான் பிரச்னை ஆரம்பிச்சுது. இவளுக்கு
அடிக்கடி ஃபிட்ஸ் வர ஆரம்பிச்சுடுத்து. போதாக்
கொறைக்கு கொஞ்சம் கொஞ்சமா பார்வையும்
பறிபோயிடுத்து.! நானும் பார்க்காத வைத்தியமில்லை.
போகாத கோயிலும் இல்லை.
"ஒன் கஷ்டம் புரியறது. ஆமா, இங்கே என்னைப்
பார்க்கறதுக்கு ஏன் வந்தே!" பரிவோட கேட்டார் ஆசார்யா.

"இவளுக்குப் பார்வை போனதுக்கு தெய்வ குத்தம் ஏதாவது
காரணமா இருக்குமோன்னுட்டு எங்க ஊர் வழக்கப்படி
குடும்பத்துக்குப் பரிச்சயமான நம்பூதிரி ஒருத்தர்கிட்டே
பிரஸன்னம் பார்த்தோம்.க்ஷேத்ராடனம் செஞ்சா நிவர்த்தி
ஆகிடும். இவளுக்குப் பார்வை வந்துடும்னு அவர் 
சொன்னார். அதான் குழந்தையையும்,இவளையும்
கூட்டிண்டு க்ஷேத்ராடனம் பண்ணி, தீர்த்த ஸ்நானமும்
சுவாமி தரிசனமும் பண்ணிண்டு வரேன்.

"கோயில்களுக்குப் போறே சரி. இங்கே எதுக்கு வந்தே?
இது கோயில் இல்லையே!"-பெரியவா.

 "நீங்க கோயில் இல்லைன்னு சொல்றேள். ஆனா,
இதுதான் நடமாடும் தெய்வம் இருக்கிற இடம்னு,
வைத்தீஸ்வரன் கோவில்ல இருக்கிற குருக்கள்
ஒருத்தர் சொன்னார். 'கலியுகத்துல வரக்கூடிய
எத்தனையோ பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா
இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப்
போய்ப் பாரு. உன்னோட  ஆத்துக்காரிக்கு பார்வை
கிடைக்கும்!'னு அவர்தான் சொன்னார். அதான்
 உங்களை தரிசனம் பண்ண வந்திருக்கோம்!"
பவ்யமா அவர் சொல்ல,அவரோட ஆத்துக்காரியும்
'ஆமாம்'கற மாதிரி தலையை அசைச்சா.

மௌனமா அவாளை ஒரு நிமிஷம் பார்த்தார்
மகாபெரியவா.

"மொத மொதெல்லா உங்களைப் பார்க்க வர்றதால
என்ன எடுத்துண்டு வரணும்கறதுகூட எங்களுக்குத்
தெரியலை. அதனால இதை மட்டும் வாங்கிண்டு
வந்தோம்!" கையில இருந்த கொஞ்சம் வாழைப்
பழத்தை மகாபெரியவா முன்னால வைச்சுட்டு
நமஸ்காரம் செஞ்ச அவர், தன்னோட ஒய்ஃபையும்
நமஸ்காரம் செய்யச் சொல்லி அதுக்கு ஒத்தாசையும்
பண்ணினார். அப்புறம் குழந்தையையும் ஆசார்யா
திருவடி முன்னால கீழே விட்டுட்டு எடுத்துண்டார்.
அப்புறம் பிரசாதம் வாங்கிண்டு புறப்படலாம்னு
நினைச்சு கையை நீட்டினவர்கிட்டே ஆசார்யா,
"ஒரு நிமிஷம் இருங்கோ!" அபடின்னார்.

தனக்குப் பக்கத்துல இருந்த அணுக்கத் தொண்டர்
ஒருத்தர்கிட்டே, "யார் கிட்டேயாவது டார்ச் லைட்
இருக்கான்னு கேளு!" அப்படின்னார் -பெரியவா
அதுக்காகவே கொண்டு வந்தவர் மாதிரி கூட்டத்துல
ஒருத்தர் தன்னோட ஹேண்ட்பேக்ல வைச்சுண்டு
இருந்த டார்ச்சை எடுத்து தொண்டர் கிட்டே குடுத்தார்.

டார்ச் லைட்டை அணுக்கத் தொண்டர் ஒரு மூங்கில்
தட்டுல வைச்சுக் குடுத்தார். அதை எடுத்துண்ட
ஆசார்யா,தன்னோட முகத்துக்கு நேரா,அதைத்
திருப்பி,'ஆன்' பண்ணினார்.

டார்ச்ல இருந்து வெளிச்சம் பரவித்து மகானோட
முகத்துல அதுபட்டு தனக்குப் பெரும் பாக்யம்
கிடைச்சதா பூரிச்சு பிரகாசித்தது..மகான் முகத்துல
படர்ந்த வெளிச்சம் தவிர மீதி அவர் தலைக்குப்
பின்னால இருந்த சுவர்ல பட்டு அப்படியே பூரண
ஒளிவட்டமா ஜொலிச்சுது. அங்கே இருந்த
எல்லாரும் அந்தப் பரவசமான காட்சியைப்
பார்த்துண்டு இருக்கறச்சே, ஆசார்யா அந்த நபரைக்
கூப்பிட்டார்.

"ஒன்னோட பார்யாகிட்டே நான் தெரியறேனான்னு
கேளு!" அப்படின்னார். 

வந்தவர் திரும்பி தன்னோட ஆத்துக்காரிகிட்டே
அதைக் கேட்கறதுக்குள்ளே." ஆஹா என்ன ஒரு
தேஜோமயமா சன்யாசி ஒருத்தர் உட்கார்ந்துண்டு
இருக்கார்.அவரை எனக்கு நன்னா தெரியறதே!"
அப்படின்னு பரவசமா,சந்தோஷமா குரல் எழுப்பினா
அவரோட ஆத்துக்காரி.

ரெண்டுபேரும் பரம சந்தோஷமா மகாபெரியவாளை
திரும்பவும் நமஸ்காரம் பண்ணினா.

" நான் பெத்த குழந்தையோட முகத்தைப் பார்க்கவே
முடியாதோன்னு நினைச்சு தினம் தினம் ஏங்கினேன்.
உங்களாலதான் எனக்கு அந்த பாக்யம் கிடைச்சுது!"ன்னு
தழுதழுக்கச் சொல்லி மகாபெரியவாளைக்
கையெடுத்துக் கும்பிட்டார் அந்தப் பெண்மணி.

"அடடே ஒனக்குப் பார்வை என்னால வந்ததுன்னா 
சொல்றே? எனக்கு என்னவோ அப்படித் தோணலை.
நீங்க இத்தனை நாளா தரிசனம் பண்ணிண்டு வந்தேளே,
அந்த தெய்வங்களோட அனுகிரஹம்தான் நோக்கு
நேத்ர தரிசனம் கிடைக்கப் பண்ணியிருக்கு. க்ஷேமமா
ஒரு கொறையும் இல்லாம இருப்பேள். சௌக்யமா
போயிட்டு வாங்கோ!" குங்குமப் ப்ரசாதமும் ஒரு
ஆரஞ்சும் குடுத்து ஆசிர்வதித்தார் மகா பெரியவா.

எல்லாத்தையும் பண்ணிட்டு, எதுவுமே தான்
செய்யலைன்னு சொல்லிக்கிற மகாபெரியவாளோட
மகத்துவத்தை நினைச்சு சிலிர்ப்போட பிரசாதத்தை
வாங்கிண்டு புறாப்பட்டா அவா.

Wednesday, October 23, 2019

"மத்தாப்பு கொளுத்திய மகாபெரியவர்...."

(நடமாடும் தெய்வமான பெரியவர், உலக மக்களின் நன்மைக்காக அடிக்கடி உபவாசம் (உண்ணாநோன்பு) மேற்கொண்டு தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அவர் தீபாவளியன்று, குழந்தைகளுக்காக இப்படி நடந்து கொண்டது அதிசயம் தானே!)

தீபாவளி வார போஸ்ட் (Source: Sri Varagooran Narayanan)

2012-தினமலர்

குழந்தைகள் என்றால் காஞ்சி மகாப்பெரியவருக்கு உயிர். தீபாவளி வந்துவிட்டால், மகாப்பெரியவரும் ஒரு குழந்தையாக மாறி விடுவார் என்ற சேதி உங்களுக்கு புதுசாக இருக்கும்.ஆம்..மகாப்பெரியவர் தீபாவளி அன்று என்ன செய்வார் என்பதைக் கேளுங்கள்.
அன்று அதிகாலை எழுந்து ஆத்மபூஜை முடித்து, கங்கா ஸ்நானம் செய்வார். கதர் ஆடை அணிவார். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆசி வழங்குவார். எல்லாருக்கும் "கண்ணன் கதைகள்' சொல்வார். கோதுமை இனிப்பு வகைகளை உண்பார்.குழந்தைகளுக்கு கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு ஆகியவற்றைக் கொடுப்பார். அவற்றை வெடிக்கச் சொல்லி, குழந்தைகள் சிரித்து மகிழும் போது, தானும் அவர்களுடன் சிரித்து மகிழ்வார்.
அது மட்டுமல்ல! அவர்களோடு சேர்ந்து, தானும் மத்தாப்புகளை கொளுத்தி மகிழ்வார். பின்பு அவர்களுக்கு நீதிக்கதைகளைச் சொல்லுவார். அன்று முழுக்க பெரியவரின் பணி இது தான்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தீபாவளி லேகியம் இரண்டு அல்லது மூன்று உருண்டைகள் சாப்பிடுவார்.
நடமாடும் தெய்வமான பெரியவர், உலக மக்களின் நன்மைக்காக அடிக்கடி உபவாசம் (உண்ணாநோன்பு) மேற்கொண்டு தான் கேள்விப்பட்டிருக்கிறோம்
. ஆனால், அவர் தீபாவளியன்று, குழந்தைகளுக்காக இப்படி நடந்து கொண்டது அதிசயம் தானே!
சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை

Tuesday, October 22, 2019

"அதோ நிற்கிறாளே...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடைவையைக்-கொடு!

("தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்)(ஆமாம் அந்த அம்மையாரும்தான்!)

தீபாவளி வார ஸ்பெஷல் Source: Sri Varagooran Narayanan

தீபாவளி தினம்,

ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.
'என்ன' என்று ஜாடையால் கேட்டார்கள்,பெரியவா.
"வேட்டி..." என்று இழுத்தான்,வண்டிக்காரன்.
பெரியவாள்,பக்கத்திலிருந்த சிஷ்யரிடம், "அவனுக்கு ஒரு வேஷ்டி-துண்டு வாங்கிக்கொடு" என்றார்கள்.
சிஷ்யர் வேஷ்டி-துண்டு கொண்டு வந்து கொடுத்த பின்னர் வண்டிக்காரன் நகரவில்லை.
"சம்சாரத்துக்குப் பொடவை..."
அந்தச் சமயத்தில், புடவை ஏதும் கையிருப்பில் இல்லை.
ஆனால், பெரியவாளோ," அவனுக்கு ஒரு புடைவை கொண்டு வந்து கொடு" என்று சிஷ்யனுக்கு ஆக்ஞையிட்டார்கள்.
சிஷ்யர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது.
பெரியவாள் தரிசனத்துக்காகப் பல பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஓர் அம்மாள், தொண்டரின் இக்கட்டைப் புரிந்து கொண்டார். உடனே, சற்றுத் தொலைவில் ஒரு மறைவான இடத்துக்குச் சென்று,தான் கட்டிக் கொண்டிருந்த புதுப் புடைவையைக் களைந்து விட்டு,ஒரு பழைய புடவையைக் கட்டிக்கொண்டு வந்தார்.அந்தப் புதுப் புடைவை யையும் சீட்டி ரவிக்கைத் துண்டையும் வண்டிக்காரனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.
பெரியவாளுக்கு உடம்பெல்லாம் கண்கள் போலும் . புடவை மாற்று விவகாரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது.
சற்றைக்கெல்லாம் ஒரு தம்பதி தரிசனத்துக்கு வந்தார்கள். "பெண்ணுக்குக் கல்யாணம்,..பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.."
"கல்யாணப் புடைவைகள், காஞ்சிபுரம் கடைத் தெருவிலே வாங்கினேளா?
""ஆமாம்,..கூறைப் புடைவை, சம்பந்திக்குப் புடைவை, பந்துக்களுக்குப் புடைவைன்னு.. ஏகப்பட்ட புடைவைகள்..."
"பந்துக்களுக்குன்னு வாங்கியிருக்கிற புடைவையிலே ஒரு புடைவையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுப்பியோ?"
தம்பதிக்கு மகிழ்ச்சி கரை புரண்டது. பெரியவாளே கேட்கிறா..உயர்ந்த புடைவை ஒன்றை பெரியவாள் திரு முன்னிலையில் சமர்ப்பித்தார்கள்.
தொண்டரைக் கூப்பிட்டு, "அதோ நிற்கிறாளே ...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடைவையைக் கொடு.....தீபாவளி புதுப் புடைவையை வண்டிக்காரனுக்குக் கொடுத்துட்டு பழசைக் கட்டிண்டு நிற்கிறா...." என்றார்கள்,பெரியவாள்
."தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்.ஆமாம் அந்த அம்மையாரும்தான்!

Thursday, October 17, 2019

"சங்கரனாவது... கிங்கரனாவது?"

( "மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே...... இனிமே சங்கரனாவது, கிங்கரனாவது"என்று பெரும் குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம்.
சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது

எழுதியவர்;பி.சுவாமிநாதன்.
தட்டச்சு;வரகூரான்.நாராயணன்.
இது ஒரு மறுபதிவு
[கட்டுரையை சுருக்கி இருக்கேன்
சுவாமிநாதன் மன்னிக்கவும்)

கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம் ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில் பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார்.அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை.....
பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி,

"என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப் பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக
திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க.
"அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!" என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா..
பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர் மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக்கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம்என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும்பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார்.
வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. பஞ்சகச்சம் அணிந்து  தும்பைப்பூ மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர் காரிலிருந்து கீழே இறங்கினார்.இறங்கியதைப் பார்த்ததும் சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.
"சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன்.உள்ளே இருக்கிறது என் மனைவி.தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். மனைவிக்கு திடீர்னு தலைவலி.அவளுக்கு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா சரியாயிடும்.இன்னிக்குன்னு பார்த்தா ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னாஇரண்டு பேருக்கும் ஸ்டாராங்கா காபி போட்டு கொடுக்க முடியுமா?
"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் வேணும்னா கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார்.மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள்
அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப் பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற ஒரு நப்பாசை.
"நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன்.ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன். நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா? என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்கு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து ஒடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில் இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன்.நண்பர் பக்கத்துல இருக்கார்.அவா கிரஹத்துல தங்கிட்டு
நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன்.
காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய பழங்கள்,கல்கண்டு,புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும் மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் சதசிவம் தம்பதிகள்
.சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல  வேண்டும் என்ற அவாவில்.
ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர்,சதாசிவத்தின் தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்.. அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக் கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார்.பின் தொடர்ந்தனர் தம்பதிகள்.
"வாப்பா சதாசிவம்..கும்பகோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா.. அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை.. பஸ்ஸும் இல்லை..."
"அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில்
சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு "சங்கரன்னு ஒருத்தர்.. அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார். அவருக்குத்தான் நன்றி சொல்லணும்"என்றார் குழைவாக.
"மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே...... இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும் குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம்.
சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது.
"பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று ஆசிர்வதித்தார் பெரியவா.
நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில்
இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து ""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?" என்று கேட்டார்.
"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ...கலையில்தானே நான் வந்திருக்கேன்"
சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்துவாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ
நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க.. நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார்.
சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது.

"அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?" என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார்,
"பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்..... பெரியவா இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம் கூடவே அவரது மனைவியும்.

Wednesday, October 16, 2019

" நாளைக்குக் கார்த்தால, கொஞ்சம் நெறைய சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்து குடேன்!" -பெரியவா

(கனவுல கேட்டு,வியப்பில் ஆழ்த்திய சம்பவம்)


நன்றி- குமுதம்.லைஃப்
தொகுப்பு-என். அக்‌ஷிதா
14-12-2018 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன். 

மகாபெரியவா சன்யாசம் ஏத்துண்ட காலத்துல இருந்து,முக்தி அடையற காலம் வரைக்கும் நாவுக்கு அரசராகத்தான் இருந்தார்.

அதாவது உணவுல தனிப்பட்ட விருப்பம்னு அவருக்கு எதுவுமே இருந்ததில்லை.ஒரு கட்டத்துல கொஞ்சம் நெல் பொரி மட்டுமே அவரோட ஆகாரமா இருந்தது.

அப்படிப்பட்ட மகான் தன்னோட பக்தை ஒருத்தரோட கனவுல  காட்சி தந்து, "சோமாஸ் செஞ்சு எடுத்துண்டு வா!" அப்படின்னு  உத்தரவிட்டார்னா,அபூர்வமான சம்பவமா இருக்கும்!

அதைத்தான் 
இப்போ பார்க்கப் போறோம்.

மகாபெரியவாளோட பரமபக்தையான மாமி ஒருத்தர் சென்னையில் இருந்தார். அம்பத்தஞ்சு அறுபது
வயசு இருக்கும் அவங்களுக்கு. ஒரு நாள் விடியக்கார்த்தால நேரம். அந்த மாமியோட கனவுல மகா
பெரியவா தரிசனம் தந்தார். எப்போதும் ஆசார்யாளையே நினைச்சுண்டு இருக்கிற அந்த மாமிக்கு 
கனவுல அவரோட தரிசனம் கிடைச்சதும் அப்படியே  நெக்குருகிப்  போய்ட்டா. உடம்பெல்லாம் 
அப்படியே சிலிர்த்துப்போச்சு.

அப்படியே ஆசார்யா முன்னால மண்டியிட்டு நமஸ்காரம் செஞ்சா. வாத்ஸல்யத்தோடு அந்த மாமியைப் பார்த்த மகாபெரியவா, " நாளைக்குக் கார்த்தால, கொஞ்சம் நெறைய சோமாஸ் பண்ணி
எடுத்துண்டு வந்து குடேன்!" அப்படின்னு சொல்லிட்டு,சட்டென்று மறைஞ்சுட்டார்.

நல்ல சொப்பனம். கண்டா அப்படியே தூங்கிண்டு இருக்கக் கூடாது. உடனே எழுந்திருந்துடணும்னு
சாஸ்த்ரம் சொல்றது. அதனால,சட்டுன்னு எழுந்துண்ட அந்த மாமி, மளமளன்னு குளிச்சு,வழக்கமான
பூஜையெல்லாம் செஞ்சுட்டு, சோமாஸ் தயார் பண்ணற வேலையை ஆரம்பிச்சுட்டா.

சோமாஸ் பண்றச்சே எல்லாம், அந்த மாமியோட மனசுல ஆயிரமாயிரம் கேள்விகள் ஓடித்து. 'ஆசார்யா
ஆசார நியமம் உடையவராச்சே, அவர் எதுக்கு சோமாஸ் கேட்கிறார்!' பசிக்கு நெல் பொரி போதும்னு
நியதி வைச்சுண்டு இருக்கிறவர், ருசிக்கு பட்சணம் வேணும்னு கேட்பாரோ..! ஒருவேளை தனக்குத்தான்
ஏதாவது பிரமையா இருக்குமோ? நாமபாட்டுக்கு இதை செஞ்சு எடுத்துண்டு மடத்துக்குப் போய் பெரியவா முன்னிலையில வைச்சு, அவர் இதெல்லாம் என்னங்கற மாதிரி கேட்டுட்டார்னா குத்தமாப்
போயிடுமே...அதை எப்படிப் போக்கிக்கறது?' இந்த மாதிரி எழுந்த கேள்வியை எல்லாம் தள்ளிட்டு. 'ஜய ஜய சங்கர, ஹரஹர சங்கர..!'னு சொல்லிண்டே சோமாஸ் பண்ணி முடிச்சா.

மொத்தமா ஒரு பெரிய ஓலைப்பெட்டியில போட்டு எடுத்துண்டு ஸ்ரீமடத்துக்குப் போய்ச் சேர்ந்தா.

அங்கே போய் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்திருந்த பக்தர்கூட்ட வரிசையில நின்னா. அப்பவும் அவ  மனசுக்குள்ளே,'இதை அவர்தான் கேட்டிருப்பாரா? நாம கனவுல கண்டதை ஏதோ தப்பான பிரமையா  புரிஞ்சுண்டுட்டோமா?' அப்படிங்கற சிந்தனைகள் ஓட ஆரம்பிச்சது. அந்த சமயத்துல
ஆசார்யாளோட அணுக்கத் தொண்டர் ஒருத்தர் அங்கே வந்தார்.

" மாமீ...மகாபெரியவா உங்களைக் கூப்பிடறார்!" அப்படின்னு சொன்னார். சோமாஸ் இருந்த ஓலைப்
பெட்டியை தூக்கிண்டு வேகவேகமா ஆசார்யா முன்னால போய் நின்னா அந்த மாமி.


"என்ன சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்துட்டியா? ஒரு அறுபது இருக்குமா?" மகாபெரியவா கேட்ட முதல் வார்த்தையே அந்த மாமியை அப்படியே மலைச்சுப்போய் நிற்கவைச்சுது.

ஒண்ணு, கனவுல வந்து சோமாஸ் கேட்டது தான்தான் அப்படின்னு நிரூபணம்  பண்ணற மாதிரி, "சோமாஸ் எடுத்துண்டு வந்துட்டியா?'ன்னு கேட்டது. அடுத்தது, என்னவோ பக்கத்துல இருந்து எண்ணிப்  பார்த்தவர் மாதிரி கரெக்டா 'அறுபது இருக்கா'ன்னு கேட்டது! அப்படியே சிலிர்த்து போய் நின்ன மாமிகிட்டே அடுத்த வார்த்தையைச் சொன்னார் ஆசார்யா.

"என்னடா இது! சன்யாசிக்கு எதுக்கு பட்சண ஆசை? சோமாஸ் எடுத்துண்டு வரச் சொல்றாரேன்னு நினைச்சியா? இதெல்லாம் வேதபாடசாலைல படிக்கறாளே அவாளுக்குத் தர்றதுக்காகத்தான் கேட்டேன்.இன்னும் கொஞ்ச நேரத்துல அவாளே இங்கே வருவா. நீயே உன் கையால் குடுத்துடு..!"

அவர் சொன்ன மாதிரியே கொஞ்சநேரத்துல மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்தா வேதபாடசாலையில படிக்கிற மாணவர்கள்.அப்போதான் பெரிய அதிசயமே நடந்தது.

ஆசார்யா சொன்னபடியே எல்லாரும் வரிசையில வர, ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு,ரெண்டு சோமாஸைக் குடுத்தா அந்த மாமி. ரொம்ப சரியா முப்பது பேர் வந்திருந்தா.ஒரு சோமாஸ்கூட குறையாமலும், கூடாமலும் கரெக்டா அறுபது கணக்கா பத்தித்து.

ஆசார்யாளோட ஞான திருஷ்டியை உணர்ந்து, அங்கே இருந்த எல்லாரும் அப்படியே சிலிர்த்துப் போய்
'ஜயஜய சங்கர, ஹரஹர சங்கர'ன்னு சொல்ல ஆரம்பிச்சா.

ஆசார்யா பட்சணங்களோட எண்ணிக்கை சரியா அறுபது இருக்குன்னு சொன்னதும்,கனவுல சோமாஸ்
கேட்டது தான்தான்னு நிரூபணம் செஞ்சதும் மட்டும்தான் அவாளுக்கெல்லாம் தெரியும். ஆனா,குறிப்பா
சோமாஸ்தான் வேணும்னு ஏன் கேட்டாங்கறது, யாருக்குமே தெரியாது.

அந்த ரகசியம் என்னன்னா, வேதபாடசாலை மாணவர்கள் சிலர், தங்களோட பாடசாலைக்குப் பக்கத்துல
ஒரு பட்சணக் கடையில சோமாஸ் விற்கறதைப் பார்த்திருக்கா. பாடசாலை விதிப்படி அந்த மாதிரி விற்கறதை எல்லாம் வாங்கி சாப்பிட முடியாது. இருந்தாலும் அவாளுக்கு சோமாஸ் சாப்டணும்கற ஆசை வந்திருக்கு. அதை தன்னோட ஞானதிருஷ்டியில தெரிஞ்சுண்டுதான், அவாளோட ஆசை பூர்த்தியாகறதுக்காக இப்படி ஒரு திருவிளையாடலைப் பண்ணியிருந்தார் மகாபெரியவா.

Tuesday, October 15, 2019

'மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய'த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா ? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன். அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..." -மஹா பெரியவா சொன்ன குமரேசன் தம்பதிகள் கதை.

கட்டுரை ஆசிரியர்-எஸ். ரமணி அண்ணா


.
    பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் கொண்டே வினவினார். 

    உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா !  வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். 

    அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா ?" என்று கவலையுடன் விசாரித்தார். 

    உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்.

    இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்! 

    ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். 

    அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது. 

    ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?" 

    உடனே ஸ்வாமிகள், "ஆமாமா! மோட்ஷத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் அது ! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு ! இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார். 

    ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா...நாங்கெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும் !" என்றார். 

    அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது: 

    "ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:

    கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரச் சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா. 

    குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் ! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ..." 

    - சொல்லி விட்டு சஸ்பென்சாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள். 

    சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ? அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் ஒக்காத்துவா.

    அவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா! அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா ! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா? " 

    சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை.மஹா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: " ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. ஒரு அதிதியக் கூடக் காணோம்! கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் ? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்' என்று கேட்டார். 

    சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொள்ளையிலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார். அந்த அம்மாவைக் கூப்பிட்டு, தனக்கு 'வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்' னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.

    இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே' னு கொழம்பினார். 

    சித்த நாழி கழிச்சு, கீர வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?' நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்' ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா' னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்." 

    - இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: "போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த அந்த ஆச்சிகிட்டே கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா 'சிவ..சிவ' னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.

    திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்' னு சொன்னா. இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா..." 

    நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா ? சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்தமஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா ? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன். அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..." 

    முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ" எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.

    பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. நாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல், சர்வசதா காலம் அவனிடம் போய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாது ஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத் தான் பக்தி என்று பெயர்.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top