ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. குடும்ப தலைவர், ஒரு ஜோசியரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விவரம் கேட்டார்.
'எக்கச்சக்கமா கிரக தோஷம், நவக்ரக ஹோமம், பெரிய அளவிலே செய்வது தான் பரிஹாரம்'.
பெரியவாளுடைய அனுமதியை பெற வந்தார் பக்தர்.
'ஜோசியர் சொன்ன படி நவக்ரக ஹோமம் செய்தால், நல்லது ஏற்படா விட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது' என்று சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார்கள் பெரியவாள்.
பக்தருக்கு குழப்பம். ஹோமம் செய்வதா? வேண்டாமா? பெரியவாளை மறுபடி கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்ன உடனேயே, சடக்கென்று புறப்பட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள்.
பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம் 'பெரியவா சரியான முடிவு சொல்லலையே?' என்று புலம்பி நச்சரித்தார்.அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய் பக்தரின் ஆதங்கத்தை சொன்னார்.
பெரியவா சொன்ன பதில்....
1. எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா, பாட்டி, இருக்கிறார்கள். அவர்களை சரிவர கவனித்து போஷிக்க வேண்டும். அது முக்கியமான தர்மம்.
2. வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு கூடுமானவரையில் தர்மம் செய்யணும்.
3. தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
4. ஏழைகளையும், சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யகூடாது, பிரியமாக நடத்த வேண்டும்.
- இதில் இருந்து, அக்குடும்ப தலைவர் இந்த நற்செயல்களை செய்யவில்லை என்பதை ஊகித்து அறிய முடிகிறது.
அந்த சீடர், பக்தரிடம் போய், 'உங்கள் கடைமைகளை எல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும். குடும்ப கஷ்டம் எல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது' என்று பக்குவமாக சொன்னார்.
பக்தருக்கு நெஞ்சில் முள் குத்திற்று. பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டத்தனங்களை ஒப்பு கொண்டார்.
'பரம்பரையா வந்தது. பெரியவா அனுகிரகத்தாலே, நல்ல வழிக்கு திரும்பணும். சரணாகதி பண்றேன்'.
பெரியவாள் மனம் உருகி போய்விட்டது. 'க்ஷேமமா இரு'.
அது சரி, அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?
ஸ்வாமியே சரணம்.
நன்றி - கச்சிமூதூர் கருணாமூர்த்தி, ஸ்ரீ மடம் ஸ்ரீ பாலு மாமா அவர்கள்.
Source: Shri Kathi Nagaratnam
No comments:
Post a Comment