உயிர் உருக்கும் சம்பவம் இது...
எத்தனை முறை நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வரும்...
ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்கள் சொல்லும் போது அவரும் நெகிழ்வார். நம்மையும் நெகிழ பண்ணுவார்.
ஐயன் ஏதோ ஒரு கிராமத்தில் முகாம். காலை எங்கோ செல்லும் போது வயல்வெளியாக செல்வார் பரிவாரத்துடன்.
தூரத்தில் ஒரு குடியானவர்(ன் போட முடியவில்லை) கோவணாண்டியாக, ஐயனை பார்த்து கைகூப்பிக்கொண்டு நிற்பார்.
ஐயன் சென்று விடுவார்.
திரும்பி வரும்போது வயக்காடு மேட்டில் பூசணி, வாழை, பரங்கி என்று நிறைய காய் கறி கீரை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
ஐயன் சொடுக்கி தன் உயிரே ஆன அந்த குடியானவ பக்தரை கூப்பிடுவார்.
'சாமி நான் கொடுத்த வாங்கிப்பீங்களோ ன்னு தான், காய் கறி... எடுத்துப்பிங்களா சாமி?'.
ஐயன் கருணையோடு நோக்கி... சொல்வார் பாரிஷதரிடம் ,'இன்னிக்கு பிக்ஷைக்கு இதெல்லாம் தான். எடுத்துக்கோங்கோ'.
அங்கே நிற்காது கருணை வெள்ளம்.
சிறிதே தூரம் சென்று நட்ட நாடு சாலையில் நின்று ஸ்ரீ மடம் பாலு மாமா அவர்களிடம் ஏதோ விஷயம், உப்பு பெறாது என்போமே, அதை ஆரம்பிப்பார். இதை ஏன் இங்கே வெட்ட வெளியிலே, நட்ட நாடு ரோட்டிலே, மொட்டை வெயிலிலே என்று பாலு மாமா பாடாத பாடு படுவார். ஸ்ரீ கணேச சர்மா மாமா சொல்லி கேட்கவேண்டும்.
கிழக்காலே மேற்காலே, தெக்காலே, வடக்காலே, ஒத்தை காலை மடிச்சிண்டு, தலைல வஸ்த்ரம் போட்டுண்டு போடாம, குனிஞ்சு, நிமிந்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...
அப்புறம் கிளம்பி, ஸ்நானம் ஆகி, பூஜை முடிஞ்சு, பிக்ஷை பண்ணி, விஸ்ராந்தி பண்ணிக்கும் போது மெதுவாக, ஸ்ரீ பாலு மாமாவிடம் கேட்டாராம் ஐயன்.
'ஏண்டா பாலு, ஒன்னை ரொம்ப நேரம் வெயில்ல கால் கடுக்க நிக்க வெச்சுட்டேனோ?'.
வெச்சாச்சு. வெச்சுட்டு என்ன கேள்வி வேறே?
எப்படி கேட்க முடியும்?
மாமா சொன்னார்களாம், 'அதெல்லாம் ஒன்னும் இல்லே'.
சும்மா விடுமா நம் தெய்வம்? 'இல்லேடா, ஒன்னை ரொம்ப நிக்க வெச்சுட்டேன். ஏன் ன்னு கேளு?'.
இதுவேறயா, பண்றதையும் பண்ணிப்பிட்டு...
ஏன்? பெரியவா?'.
'இல்லே, என்னை முன்னாடி பார்க்கணும் ன்னா நீ என்ன பண்ணுவே?'
'இது என்ன கேள்வி பெரியவா, இதோ ஒங்க முன்னாடி வந்து நின்னு நன்னா நன்னா பாத்துட்டு போவேன்'.
'சரி, பின்னாடி இருந்து என்னை பார்க்க?'.
விடமாட்டாரே... 'இதோ, பின்னாடி போய் உங்க முதுகை பார்த்துண்டு நிப்பேன், பக்கவாட்டிலேயும் அப்படித்தான்' என்றார் மாமா முன்யோசிதமாய்.
'அதெல்லாம் சரி டா, ஒன்னாலே இதெல்லாம் முடியும். அங்கே வயல்ல வெயில்ல நின்னு வேலை பார்த்துண்டு இருந்தானே, அவன் நந்தன் அம்சம் டா. அவனால இதெல்லாம் பண்ண முடியுமா? இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா? அதுனால தான் நான் திரும்பி திரும்பி நின்னு அவன் நன்னா பார்க்கற மாதிரி பண்ணினேன்'.
வேறு எதுவும் சொல்லவேண்டுமா?
இதுவல்லவோ தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...
Source: Shri Karthi Nagaratnam
No comments:
Post a Comment