(ஒரு பழைய தினமலர்)
காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டகாõல் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார்.
ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சிலநாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார்.
இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மகாபெரியவரின் தீவிரபக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.
மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடை களையும் பாதுகாத்து வந்தது. சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றிவரும். ஒருமுறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர். மகாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர் களான நமக்கு இருக்கட்டும்.
Source: Shri Hariharan
No comments:
Post a Comment