திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத் தவிப்பில் இருந்தார். 1969 ஜனவரி 24-ல் தினமும் இரவில் தாங்க முடியாத தலைவலி இவரை வாட்டியது. சுமார் 10 மணி முதல் 11 மணி வரை தினமும் இரவில் இப்படி வலி வந்து சுந்தர்ராஜன் தவிப்பது வழக்கமாகி விட்டது. ஒரு வேளை மூளையில் புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த தலைவலியின் வேகம் இருந்தது. ஒரு மாத காலம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு இவர் டில்லியிலிருந்து ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-ஆம் நாள் வந்து சேர்ந்தார்.
விஜயவாடாவிலிருந்து இருபது கி.மீ.தூரத்தில் இருந்த தெலாபொரலு என்ற கிராமத்தில் ஸ்ரீபெரியவாளை தரிசித்தார். மாலை சுமார் நாலு மணிக்கு ஸ்ரீபெரியவா விஸ்ராந்தியாக படுத்துக் கொண்டிருந்தபோது இவர் ஸ்ரீபெரியவா முன்பாக நின்றார்.
‘உனக்கு பிரஹசரணம்னா தெரியுமா?’ என்று ஸ்ரீபெரியவா கேட்டார். சம்பந்தமில்லாத கேள்வியாக இது இவருக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இவர் வடமாள் பிரிவைச் சார்ந்தவராயிருந்தாலும் இவரது மனைவி பிரஹசரணம் பிரிவைச் சார்ந்தவள். அதை சுட்டுக்காட்டவே ஸ்ரீபெரியவா இப்படிக் கேட்பதாக இவருக்குப் புரிந்தது.
ஸ்ரீபெரியவாளிடம் தான் இப்படி மணந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
பின் இவர் தன்னுடைய தலைவலி உபாதை பற்றிக் கூறி அதற்காகவே பிரத்யேகமாக ஆபீஸில் விடுப்பு எடுத்து ஸ்ரீபெரியவாளிடம் வந்திருப்பதாகவும் அதற்காக பிரபு தயவு செய்து உபாயம் கூறவேண்டுமென்றும் வேண்டி வணங்கினார்.
‘உனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியுமோ?’ என்று ஸ்ரீபெரியவா கேட்க இவர் வெட்கத்துடன் ஸம்ஸ்க்ருதம் படிக்காததைக் கூறினார்.
‘நீ தினமும் நாராயணீயத்திலே ஒரு தசாகம் படிச்சுண்டு வா’ என்று அனுக்ரஹித்து அனுப்பினார்.
இவர் உத்தரவு வாங்கிக் கொண்டு தன் காரில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு பெண்மணி ஓடிவந்தாள்.
‘பெரியவா என்னை உங்க காரிலே விஜயவாடா வரை போகச் சொன்னார்’ என்று சொல்ல இவரும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
விஜயவாடா வந்ததும் அந்தப் பெண்மணி தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து இரவு உணவு உட்கொண்டுதான் போக வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால் இவருக்கோ ஒரே பயம். அங்கிருந்து ஐதராபாத்துக்கு விரைவாகச் சென்றாலும் இரவு பத்து மணியாகிவிடும் – இரவு பத்து மணிக்கு தினமும் வரும் தலைவலி வந்துவிடுமே என்பதுதான் அந்தப் பயம்.
‘ரொம்ப நேரமாகாது. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்று அந்த மாது அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு பலகாரமாக வாங்கிவந்து சுவையாகப் பரிமாறினாள்.
பதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு இவர் புறப்பட்டு ஐதராபாத்துக்கு இரவு 10 மணிக்கு பயத்துடன் போய் சேர்ந்து தலைவலியை எதிர்பார்த்தார்.
ஆனால் தலைவலி எங்கு போனதோ? வருமோ வருமோ என்று பயந்து சென்ற மாதங்களில் தவித்த அந்தத் தலைவலி அன்று வரவேயில்லை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வைதீஸ்வரரிடம் முறையிட்டதற்கே இப்படி ஒரு பலனா என்று சுந்தரராஜனுக்கு ஒரே வியப்பு.
சரி ஏதோ இன்று மட்டும் வராமல் விட்டு விட்டு நாளை வரலாமென்ற பயமும் சந்தேகமும் இல்லாமலில்லை. ஆனால் அன்றென்ன என்றென்றும் அதன்பின் தினமும் இரவு 10 முதல் ஒரு மணி நேரம் வரை உயிரை எடுத்த தலைவலி எப்படி மாயமானதோ அது மருந்தீஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு மட்டுமே தெரிந்த மகிமை.
ஸ்ரீபெரியவாளின் திருவாக்கின்படி இவர் அவ்வருடம் மார்ச் மாதம் 7ஆம் தேதி ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் நாராயணியம் பாராயணத்தை ஆரம்பித்தார். நூறு நாட்கள் பாராயணம் செய்வதற்குள் இவரால் நாலு திருமணங்கள் மங்களகரமாக நிச்சயித்து நடக்கப்பட்டதென்றும் இவர்கள் யாவரும் சஷ்டி அப்தபூர்த்தி செய்து வாழ்வது ஸ்ரீபெரியவாளின் அருளால்தான் என்கிறார் இந்த பக்தர்.
எமர்ஜென்ஸி காலத்தில் இவர் பார்லிமெண்டில் ஒரு கேள்விக்கான பதிலை இவரைச் சார்ந்த அரசாங்கத் துறைக்காக எழுத வேண்டியிருந்தது. அந்த பதிலை எழுதி நிதி அமைச்சக செயலாளரிடம் இவர் சமர்ப்பிக்க, அந்த செகரட்ரி அறையில் அதைப் பற்றி விவாதிக்க இவரை அழைத்தார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான செக்ரட்ரி அந்த பதிலில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டுமென வலியுறுத்தினார். கீழ் அதிகாரியான இவரோ அந்த மாற்றங்களில் தனக்கு ஒப்புதல் இல்லை என்றும், அதை மாற்றக்கூடாதென்றும் தன் கருத்தைக் கூறினார்.
‘மன்னிக்க வேண்டும், அப்படி பதிலை மாற்றி அமைப்பது சரியான உண்மையை மறைப்பதாக ஆகும். அப்படியே மாற்றினால் அதற்கு முழுப் பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும்’ என்று மிக அழுத்தமாக இவர் கூறியபோது, தன் கீழ் வேலை செய்யும் ஒருவர் தன் கட்டளையை கீழ்ப்படியாததில் அதிகாரிக்குக் கோபம்.
மிகவும் பதட்டமடைந்த அதிகாரி உடனே போன் செய்து ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னரை டில்லிக்கு விமானத்தில் அடுத்தநாளே வந்தாக வேண்டுமென்று இவர் முன்னாலேயே உத்தரவிட்டார். சூழ்நிலை மிகவும் பாதகமாக இருந்தது.
‘சரி… நீங்க போகலாம்… ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் நாளைக்கு இது சம்பந்தமான ரெகார்டுகளுடன் வரச் சொல்லியிருக்கேன். நீங்க எழுதி வெச்சுருக்கிற இந்த பதிலுக்கும் அவர் கொண்டு வரப்போற விபரங்களுக்கும் தாருமாறா ஏதாவது இருந்தால் உங்க மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்’.
இப்படி மிரட்டலும், பயமுறுத்தலுமாக அதிகாரி இவரை அறையிலிருந்து போகச் சொன்ன போது இவருக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. தன்மேல் எப்படியாவது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து விட்டதால் தான் செகரட்ரி கோபமாக இத்தனை தடாலடி விவகாரம் செய்கிறார் என்பது சுந்தர்ராஜனுக்குப் புரிந்தது.
தான் எழுதி வைத்த பதில் நேர்மையாகவும், சத்தியமாகவும் இருந்தாலும் அதிகாரி தன் கோபத்தைக் காட்ட எந்த வகையிலும் முயற்சிக்கலாமென்பதும் இவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
அன்று இரவு அடுத்த நாள் தன் நிலைமை என்னவாகுமோ என்ற நடுக்கமும் கவலையுமாக தூக்கம்வராமல், ஸ்ரீபெரியவாளையே நினைத்து வேண்டிக் கொண்டிருந்தார்.
அதிகாலையில் ஓர் அதிசயம்.
இர்வின் ரோடில் ‘கணேஷ் மந்திர்’ என்ற கோயிலின் அர்ச்சகர் இவர் வீட்டுக் கதவைத் தட்ட இவர் திறந்தார். அந்த அர்ச்சகர் கையில் பிரசாதத்துடன் நின்றார்.
‘ஸ்ரீபெரியவாளை நேத்து தரிசனம் செய்யப் போனேன். அவா இந்தப் பிரசாதத்தை உங்க கிட்டே இன்னிக்கு விடியற்கலையிலேயே கட்டாயம் சேர்த்துடனும்னு கொடுத்து அனுப்பினா’ என்றார்!
இவருக்கு இன்ப அதிர்ச்சி. இங்கே ஒரு பக்தன் இரவு முழுவதும் வேதனைப்பட்டு வேண்டிக் கொண்டதை எங்கிருந்தோ எப்படியோ தெரிந்து அனுக்ரஹிக்கும் ஸ்ரீபெரியவா கருணையை எண்ணியபடி கண்ணீர் மல்க பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
இனி எது வந்தாலும் கவலை இல்லை என்ற தெம்பு வந்துவிட்டது. அன்று மதியம் பதினொரு மணியளவில் நிலைமை தலைகீழானது. அப்போது நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில், அந்த ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் சுந்தர்ராஜன் எழுதியிருந்த பதில் முற்றிலும் பொருத்தமானதென்றும் அவை யாவும் சரியான தகவலை உடையதென்றும் அதில் சிறிதும் மாற்றம் செய்யக் கூடாதென்றும் கூற, மீட்டிங்கில் கூடியிருந்த மற்ற மூத்த அதிகாரிகளும் இதையே வழி மொழிந்தனர்.
செக்ரட்ரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தர்மசங்கடமான நிலையில் சுந்தர்ராஜனிடம் நேற்று கடுமையாக தான் நடந்து கொண்டதற்கு வருந்துவதாகவும், அதற்கு பிராயச்சித்தமாக தன் அறையிலேயே இவரையும் மதிய உணவு அருந்துமாறு கேட்டுக் கொண்டு அழைத்தார்.
ஒரு அரசாங்கத் துறையில் இப்படி ஒரு கீழ் அதிகாரியை மேல் அதிகாரி உபசரித்து கூப்பிடுவது எப்போதும் நடப்பதல்ல. ஆனால் உலகாளும் மேலதிகாரியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்திற்கு முன் இவையெல்லாம் எம்மாத்திரம் என்று சுந்தரராஜனுக்கு அப்போது தோன்றியிருக்கலாம்.
ஐ.நா. சபையின் ஒரு முக்கிய பதவிக்கான தேர்வு நடந்தபோது இவர் தன்னுடைய விவரங்கள் அடங்கிய மெடிகல் ரிபோர்டை தேர்வுக்காக டெல்லியில் கொடுக்கச் சென்றார். 1976-ஆம் வருடம் பிப்ரவரி 4ஆம் தேதியன்று இவர் அப்படி ஐநா சபையின் டில்லி அலுவலகத்தில் கொடுத்தபோது ஸ்ரீபெரியவாளின் திருக்கரங்கள் அனுக்ரஹிப்பதாகக் காட்சி தெரிந்தது. ஸ்ரீபெரியவாளின் மேல் கொண்டிருந்த மிகுந்த நம்பிக்கையோடு தான் நிச்சயம் தேர்வாகிவிடுவோம் என்று உறுதியாக நினைத்து அப்படி அயல்நாடு போவதற்கு முன் தன் பத்து வயது மகனுக்குத் திருப்பதியில் உபநயனம் செய்து வைக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார்.
ஸ்ரீபெரியவாளிடம் மஹாசிவராத்திரி அன்று தரிசித்துத் தான் அயல்நாடு செல்ல நேர்ந்ததால், வயதான பெற்றோர்களை விட்டுவிட்டு செல்லும் நிலைமை ஏற்படுமென்றும், அதனால் ஸ்ரீ பெரியவாளே எது சரியானதோ அதை அனுக்ரஹிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.
அடுத்த நாள் டெல்லியில் அலுவலகத்தில் விடுப்பு முடிந்து சேர்ந்தபோது ஐநா சபையிலிருந்து இவரைத் தேர்வு செய்து தந்தி மூலம் உத்தரவு வந்தது. பின் ஜூன் மாதம் இவர் ஸ்பெயினில் ஐநா சபையில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றபின் இவர் தேர்வான விபரங்கள் அடங்கிய கோப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது.
அந்தக் கோப்பில் ஒரு அதிசயம் காத்திருந்தது.
அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த ஏழு நாடுகளின் நபர்களில் அந்த நாட்டின் ஃபைனான்ஸ் செகரட்ரி பிளாக்கிலிருந்து ஒரு நபரைத் தேர்வு செய்து அதை பிரதமமந்திரிக்கு அனுப்பியிருந்தது தெரியவந்தது. ஆனால் டிரினிடாட் டுபாகோவின் பிரதமமந்திரியான டாக்டர் எரிக் வில்லியம்ஸ் அதை ஏற்காமல் அந்த ஏழு பெயரில் இவர் பெயரைத் தேர்வு செய்து உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.
இதில் அதிசயம் என்ன? அந்த அயல்நாட்டு பிரதமமந்திரி கையெழுத்திட்ட அந்த அயல்நாட்டு நேரம் சரியாக இந்திய நேரத்தின் மஹாசிவராத்திரியன்று சுந்தர்ராஜன் உலகெலாம் உரைந்து ஓதற்கரியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீபரமேஸ்வரரான பெரியவாளைத் தரிசித்து இதற்கான அனுக்ரஹம் வேண்டிய அதே நேரம்.
பக்தருக்கு மெய் சிலிர்த்தது.
1987-ஆம் வருஷம் நவம்பர் மாதம் சுந்தர்ராஜனுக்கு ஒரு கடுமையான சவாலான பணி கொடுக்கப்பட்டது. யுகோஸ்லாவியாவில் ஒரு அகிலநாடுகளின் வர்த்தக சபையின் பிரதிநிதிக்கான தேர்தலில் நம் நாட்டின் உறுப்பினருக்கு பிரசாரம் செய்ய இவரை இந்திய அரசாங்கம் நியமித்தது.
அப்போது இந்திய நாட்டில் வறட்சி காரணமாக இதற்கான செலவுகளை தாராளமாகச் செய்ய முடியாத நிலையில் இவருக்குப் பக்கபலமாக ஆட்களையோ, தேர்தல் பிரசாரத்தில் செலவழிக்க பணமோ கிடைக்கவில்லை.
ஆனால் இந்திய உறுப்பினரும், பாகிஸ்தான் உறுப்பினரும் நேருக்கு நேர் போட்டியிடும் நிலைமை வந்தது. மற்ற 27 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் வேட்பாளருக்கு தக்க பலமாக ஆறு உயர் அதிகாரிகளுடன் மற்ற நாடுகளின் அங்கத்தினரை மகிழ்விக்க கேளிக்கைகளுக்காக நிறையப் பணமும் அந்த நாடு கொடுத்திருந்தது.
பெல்கிரேட் சென்று நம் நாட்டு தூதரை சுந்தர்ராஜன் சந்தித்தபோது அவர், “நீங்க எப்படி பிரசாரம் செஞ்சாலும், பாகிஸ்தான்காரன் மத்தவங்களுக்கு பணத்தைக் கொட்டி சந்தோஷப்படுத்தி நம்மை தோக்க வைக்கத்தான் போறான்” என்பதாக நம்பிக்கையில்லாமல் கூறினார். சுந்தர்ராஜனுக்கும் அதுதான் யதார்த்தமான உண்மை என்று தோன்றியது.
இருந்தாலும் நாடு தனக்கு இட்டிருந்த பணியை இந்த இக்கட்டில் எப்படி நிறைவேற்றுவதென்று மன உளைச்சலோடு தூக்கம் வராமல் இரவு சென்றது.
அதிகாலை ஒரு அதிசயக் கனவு.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இவர் முன் தோன்றுகிறார். தன் இருகரங்களை விரித்து அபயகரமாக காட்டுகிறார். நடுநாயகமாக நடராஜ மூர்த்தியான ஸ்ரீபெரியவா தரிசனம் நல்க வலது திருக்கரத்தில் வெங்கடாசலபதியும் இடது திருக்கரத்தில் பத்மாவதித் தாயாரும் தோன்ற அருள்கின்றனர்.
இந்த சொப்பனம் கண்டவுடன் மெய்சிலிர்க்க இவர் உடனே எழுந்து, அப்போது எத்தனை மணி என்றும் பார்க்காமல் நம் நாட்டுத் தூதரை போன் மூலம் தொடர்பு கொண்டு தான் கண்ட கனவைக் கூறினார். ஸ்ரீபெரியவாளைக் கனவில் காண்பது அத்தனை சுலபமல்ல அப்படிக் கனவில் மஹான் வந்து ஆசீர்வதித்தால் எப்படியும் நம்நாடுதான் ஜெயிக்கப் போகிறதென்று இவர் உணர்ச்சி பொங்கப் பேசினார். அந்த அகாலத்தினும் இவர் சொல்வதை அவமதிக்காமல் கேட்டுக் கொண்டார்.
அடுத்த நாளில் 27 நாடுகளின் வாக்காளர்களிடம் சுந்தர்ராஜன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். ஸ்ரீபெரியவாளின் மாபெரும் கருணையினால் அந்த 27 நாடுகளிலிருந்து 20 நாடுகளின் வோட்டு இந்தியாவிற்கும் மற்ற 7 வோட்டு பாகிஸ்தானுக்கும் கிடைக்க இந்தியப் பிரதிநிதி அமோக வெற்றியடைந்தார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹ மேன்மை இப்படியெல்லாம் அதிசயங்கள் காட்டக் காத்திருக்க, அந்த மஹானைச் சரணமடைந்து வாழ்வில் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு, ஆரோக்யமாக ஆனந்தமான சர்வமங்களத்துடன் சௌபாக்யத்துடன் நாம் வாழ்வோமாக!
பரிபூர்ண யோகநிலையிலும், பரிசுத்த தவமேன்மையிலும் பிரம்மரிஷி சுகமுனிவரின் உயர்வோடு சாக்க்ஷாத் பரமேஸ்வரரே திருஅவதாரம் கொண்டு நம்மிடையே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் மிக எளிமையோடு நம்மை ஆட்கொண்டு அனுக்ரஹிப்பதை நம் பூர்வஜன்ம பலனாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!! — with Kunchithapatham Kashyap.
Source: Shri Mannargudi Sitaraman Srinivasan
No comments:
Post a Comment