காஞ்சிப்பெரியவரிடம் பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மிகுந்த பக்தி உண்டு. சர்மா எப்போதும் பெரியவரை மனதில் சிந்தித்துக் கொண்டே இருப்பார். 1978, ஏப்ரல் 13, தமிழ்ப் புத்தாண்டு தினம். அன்று தேனாம்பாக்கத்திலுள்ள தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தேவராஜசர்மாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சட்டென்று கண்திறந்து பார்த்தார். அவருடைய முன்னிலையில் விபூதி, ருத்ராட்சம், கஷாயத்துடன் பெரியவரே காட்சி தந்தார். அதிர்ச்சியும் ஆனந்தமும் மனதில் நிறைய எழுந்து நின்ற தேவராஜசர்மாவுக்கு, “”என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருதேவா” என்று ரீதிகௌளை ராகத்தில் மும்பை சகோதரிகள் சரோஜாவும், லலிதாவும் பாடும் பாடல் தான் நினைவுக்கு வந்தது.
மறுநாள் காலையில் பொழுது விடியும் முன்பே குளித்து கோயிலுக்குச் செல்ல ஆயத்தமானார். அரிக்கேன் விளக்கொளியில் நான்கு மாடவீதியிலும் பாராயண கோஷ்டியுடன் வலம் வந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தார். காமாட்சி அம்மனைத் தரிசனம் செய்தார். அந்த ஆண்டு முழுவதும் தேவராஜசர்மாவிற்கு எடுத்த செயல்கள் அனைத்தும் நினைத்ததைவிடச் சிறப்பாகவே அமைந்தன. குருகடாட்சம் பெற்றால் வாழ்வில் கோடி நன்மை உண்டாகும் என்பதை சர்மா உணர்ந்தார். தேவராஜ சர்மாவிற்கு ஒருமுறை காதில் கடுமையான வலி ஏற்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர் ஆபரேஷன் செய்தால் ஒழிய வலி குறைய வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.
காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்து அவரிடம் உத்தரவு பெற்றால் ஒழிய ஆபரேஷன் செய்து கொள்வதில்லை என்று தீர்மானம் எடுத்துக் கொண்டார் சர்மா. கையில் ஆரஞ்சுப்பழங்களை எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார். காதுவலி பற்றி பெரியவரிடம் சொல்லி வருத்தப்பட்டார். பெரியவர் பதிலேதும் சொல்லாமல், அவர் கொடுத்த பழங்களின் தோல்களை உரித்துக் கீழே போட்டார். சர்மா தன் மனதிற்குள், பெரியவர் தன் தீவினைகளையே உரித்து எடுத்துவிட்டதாக எண்ணிக் கொண்டார்.
அன்று முதல் காதுவலி குறைய ஆரம்பித்து விட்டது. மறுபடியும் காது பரிசோதிக்கும் டாக்டரிடம் சென்றார். டாக்டருக்கு அதிர்ச்சி. “”உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள். வேறு டாக்டரிடம் சென்று வைத்தியம் எடுத்துக் கொண்டீர்களா? ” என்று கேட்டார். சர்மா கண் கலங்கியபடியே,”"வேறு எந்த மருத்துவரிடமும் செல்லவில்லை. வைத்தியம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.
டாக்டர் சர்மாவிடம், “”பயப்படாமல் சொல்லுங்கள். நான் அந்த மருந்தைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போன்றவர்களுக்கு கொடுக்க வசதியாக இருக்கும்” என்று பரிவாக கேட்டார்.
“”டாக்டர்! நீங்கள் சொல்வது என்னவோ உண்மை தான். சில நாட்களுக்கு முன் ஒரு பெரிய வைத்தியரிடம் சென்றேன். அவர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். “அருட்பிரசாதம்’ என்னும் மருந்தைக் கொடுத்து என்னைக் குணப்படுத்திவிட்டார்” என்று சொல்லி மகிழ்ந்தார் சர்மா.
டாக்டரும் சர்மாவிடம்,”"இனி ஆபரேஷன் உங்களுக்குத் தேவைப்படாது. நீங்கள் தைரியமாக வீட்டுக்குச் செல்லலாம். காதுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது” என்று உறுதியளித்தார். தேவராஜசர்மாவும், பெரியவரின் கருணையை மனதிற்குள் வியந்தபடியே தன் வீட்டுக்கு கிளம்பினார்.
அற்புதம். குருவுக்கும் வந்தனங்கள்.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி. மற்ற பதிவுகளும் "யூனிகோட்" எழுத்துருவில் பகிர்ந்தால் படிக்க இயலும். நன்றி.
I tried to do it in Unicode but in vain. But i have given the link in my Feb 2011 postings about the installation of Tamil Font for reading the postings of Deivathin Kural. Have you seen that? Pls let me know if you need that link..
DeleteThanks and best regards,