சாஸ்வத சக்தி
அசையாத சிவனும் அம்பாளால்தான் அசைந்து காரியத்தில் ஈடுபடுகிறார் என்று வருவதை, சயன்ஸ்படி கொஞ்சம் விளக்கிப்பார்த்தால் “மாட்டர்” என்று பதார்த்தத்தைச் சொல்கிறார்கள். அதன் ஸ்வபாவம் “இனர்ஷியா” என்கிறார்கள். அதாவது சலனமில்லாமல் போட்டது போட்டபடிக் கிடப்பதுதான் என்கிறார்கள். அதனால் “இனர்ட்மாட்டர்” என்றே சேர்த்துச் சொல்வதாக இருக்கிறது. ஆனாலும் அப்படிப்பட்ட “இனர்ட் மாட்டர்” பல தினுஸில் சலனப்பட்டு, பல தினுசில் ஒன்று சேர்ந்துதான் ப்ரபஞ்சம் உண்டாகியிருக்கிறதென்று நன்றாகத் தெரிகிறது. அப்படியானால் ஏதோ ஒரு பவர், சக்திதானே சலனமில்லாத மாட்டரைச் சலிக்கும்படியாகப் பண்ணியிருப்பதாக ஆகிறது? அந்தச் சலனமில்லாத மாட்டரைத்தான் “சிவன்” என்றும் அதைச் சலிக்க வைக்கும் சக்தியைப் “பராச்க்தி“, “அம்பாள்” என்றும் சொல்லியிருக்கிறது.
நிச்சலனமான சிவனும், க்ரஹ நக்ஷத்ரங்களில் ஆரம்பித்து அணுவுக்குள் உள்ள பரமாணுவரை எல்லாம் சதா சலித்துக் கொண்டேயிருப்பதற்குக் காரணமான சக்தியும், பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அவர் “மாட்டர்“, அவர் “எனெர்ஜி” என்று சயன்ஸ் அடிபடையில் விளக்கிச் சொல்லலாம். இணைபிரியாத இரண்டு பேர் என்றாலும், அவர்கள் அடிப்படையிலிரண்டுகூட இல்லை. ஒன்றேதான் என்பதையும் அடாமிக் சயன்ஸில் “மாட்டரே” எனர்ஜியாவதாகச் சொல்லியிருப்பதைக் காட்டி உறுதிப்படுத்தலாம்.
ஆனால், ஒரு வித்யாசம், பெரிய வித்யாசம் என்னவென்றால், அங்கே ஒரு மாட்டரை எனர்ஜி ரூபமாக்கிய அப்புறம் மாட்டர் இல்லாமல் போய்விடும். இங்கேயோ சிவனும் சக்தியும் எப்போதுமே சாஸ்வத ஸத்யமாக இருக்கிறார்கள்.
[ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்]
No comments:
Post a Comment