Baghavatham & Sugabrahmam
கருணை தெய்வம் காஞ்சி மகான்
”கேரளாவில் ஆஞ்ஞன் மாதவன் நம்பூதிரின்னு ஒருத்தர்; மிகப் பெரிய பண்டிதர். பாகவத உபந்யாசத்திலும் மகா விற்பன்னராகத் திகழ்ந்த மாதவன் நம்பூதிரி, மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.
ஒருமுறை மாதவன் நம்பூதிரியிடம், ‘இவனுக்கு பாகவதம் வாங்கிக் கொடு’ன்னு என்னைச் சுட்டிக்காட்டிச் சொன்னார் பெரியவா.
உடனடியா செயலில் இறங்கிய மாதவன் நம்பூதிரி, பாகவத புஸ்தகம் ஒன்றை வாங்கி வந்து, மகாபெரியவாகிட்ட கொடுத்து, ‘உங்க கையாலயே கொடுத்துடுங்கோ’ன்னு சொன்னார்.
மகா பெரியவா அந்தப் புஸ்தகத்தை வாங்கி, தன் சிரசுல வைச்சுண்டார். அப்புறம், அந்தப் புஸ்தகத்தின் மேல் மாலையெல்லாம் சாத்தினார். கொஞ்ச நேரம் கழிச்சு, புஸ்தகத்தை எடுத்து, ஆசீர்வாதம் பண்ணி எங்கிட்டே கொடுத்தார்.
வாழ்க்கைல நான் முன்னேறணும்; எப்பவும் க்ஷேமமா இருக்கணும்னு எம்மேல பெரியவாளுக்கு உண்டான அக்கறை, அதுல தெரிஞ்சுது. உருகிப்போயிட்டேன். கூடவே, அவரோட ஆசி எப்பவும் என்னை வழிநடத்தும்கற மகிழ்ச்சியில், மனசே நிறைஞ்சுபோயிடுச்சு. மாதவன் நம்பூதிரிக்கு மனப்பூர்வமா நன்றி சொன்னேன்.
பாகவதம் போன்ற புண்ணிய புஸ்தகத்தை, ரிஷிகேஷ் மாதிரியான இடத்துல, கங்கைக் கரையில உட்கார்ந்து தியானம் பண்ணி, பாராயணம் செஞ்சா நல்லதுன்னு மனசுக்குப் பட்டது. அதனால, வாய்ப்பு கிடைச்சப்ப, புஸ்தகத்தை எடுத்துண்டு ரிஷிகேஷூக்குப் புறப்பட்டுப் போனேன். அங்கேயே பல நாட்கள் தங்கியிருந்து, பாராயணத்துல மனசைச் செலுத்தினேன்.
வியாசர் தன் பிள்ளையை ‘சுகா’ன்னு அழைச்சாராம். அப்போ, அங்கே இருந்த மரம், செடி- கொடி, நதிகள், மலைகள்லாம் ‘ஏன்… ஏன்…’னு கேட்டதாம். இப்படிப் படிக்கப் படிக்க, பிரமிப்பும் வியப்புமா இருந்துது பாகவதம்.
அதிகாலை மூணு மணிக்கெல்லாம் எழுந்து, சகஸ்ர காயத்ரி பண்ணிட்டு, கங்கைக் கரையோரத்துல உட்கார்ந்து பாகவத பாராயணத்துல ஈடுபடுவேன்.
அங்கே… வசிஷ்ட குகைன்னு ஒரு இடம்; ரொம்பவே அமானுஷ்யமான இடம் அது. ரிஷிகேஷ்லேருந்து சுமார் 24 கி.மீ. தொலைவுல இருக்கிற அந்த வசிஷ்ட குகைல, சிவலிங்கம் ஒண்ணை பிரதிஷ்டை செஞ்சிருக்கா.
அந்த இடத்துல, கங்கை ரொம்ப சாதுவா ஓடிண்டிருப்பா. குகை வாசல்ல, சால்வையைப் போர்த்திண்டு உட்கார்ந்து பாராயணம் செய்யறப்ப, கங்கை நதி சலனமே இல்லாம நம்ம மனசுக்குள்ளேயே ஓடற மாதிரி ஓர் அனுபவம்… ரொம்ப சிலிர்ப்பா இருக்கும்.
வியாசர், சுகரைக் கூப்பிட்டபோது, மரம், செடி-கொடில்லாம் ‘ஏன்?’னு கேட்டதுன்னு சொன்னேன் இல்லியா…
ஒருநாள், தூக்கம் கலையற நேரம்… மகா பெரியவா என் சொப்பனத்துல வந்து, ‘ஏய், நான்தான் சுகப் பிரம்மம். தாயார் கர்ப்பத்துல இருக்கறச்சயே பிரும்ம நிலையை அடைஞ்சுட்டேன். நான்தான் சுகப் பிரம்மம்!’னு சொன்னார்.
அது சொப்பனம்தானா, இல்லே நிஜமாவே பெரியவா என்னை ஆசீர்வதிக்கறதுக்காக அங்கே வந்து அப்படிச் சொன்னாரான்னு இன்னும் எனக்கு விளங்கலை. ஆனா, அந்த கங்கைக் கரையிலே யாருமே இல்லே. நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டேன். கண்லேருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடியுது.
எனக்கென்னவோ வேத சத்தியமா, மகா பெரியவாதான் வந்து அப்படிச் சொன்னதுமாதிரி இப்பவும் தோணறது.
என்னோட ஏழாவது வயசுல, கும்பகோணம்- காவிரிக் கரையில, மகா பெரியவாளுக்கு பாத பூஜை பண்ணியிருக்கேன். தங்கத்தை உருக்கி வார்த்த மாதிரியான அவரோட உருவம், அன்னிக்கு எப்படி அத்தனை தேஜஸோட இருந்துதோ, அதே மாதிரி கங்கைக் கரையில என் கண்ணுக்குத் தெரிஞ்சா பெரியவா.
நான் பிரம்மசரியம் அனுசரிக்க, மகா பெரியவாளோட கடாட்சமும், ஆஞ்ஞன் மாதவன் நம்பூதிரியிடம் வாங்கி வரச் சொல்லி, மகா பெரியவா ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்த பாகவதமும்தான் உதவியா இருந்துட்டு வரது.பல க்ஷேத்திரங்கள், பல நதி தீரங்கள் போய் தரிசனம் பண்ணிண்டு வரேன். ஆனா, பெரியவாளைவிட ஒரு பெரிய, பிரத்யட்ச தெய்வம் உண்டான்னு தெரியலை எனக்கு! அதுக்காக நான் தெய்வத்தை நிந்திக்கறதா நினைக்கப்படாது. என்னைப் பொறுத்தவரை மகா பெரியவா, தெய்வத்துக்குச் சமானம்!
எத்தனையோ சிரமங்கள், எவ்வளவோ அவமானங்கள் எல்லாம் தாங்கிண்டு, சகிச்சுண்டு நான் முன்னேறி வந்திருக்கேன்னா, அதுக்குப் பெரியவாளோட ஈடு இணையற்ற கருணைதான் காரணம்.
அவரோட கருணை எனக்கு மட்டுமா கிடைச்சுது? எத்தனை எத்தனையோ பேருக்குக் கிடைச்சுது!
அதை எல்லாம் சக்தி விகடன் வாசகர்களோடு பகிர்ந்துக்கறதுல அளவு கடந்த சந்தோஷம் எனக்கு!” என்று சொல்லிவிட்டு, காஞ்சி மகானின் நினைவுகளில் மூழ்கினார் பட்டாபி.
படிக்க படிக்க பரவசம்னு சொல்லுவாளே.. அது இதுதானோ..
ReplyDelete