(ஆன்மிகத்தில் உயர்நிலை அடைந்தவர்கள் பேச, பார்வை மட்டுமே போதும் என்பதை அறிந்து வியந்தார் அடியவர்)
மார்ச் 09,2018-தினமலர்
மகா சுவாமிகள் உத்தரவின்படி திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமாரை சந்தித்தார் அடியவர் ஒருவர். காஞ்சிபுரம் அழைத்து வரச் சொன்ன தகவலை தெரிவித்தார். அடியவருடன் காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார் யோகிராம் சுரத்குமார்.
ஆசனத்தில் அமர்ந்திருந்த சுவாமிகள், யோகியை கண்டதும் தரையில் அமர்ந்தார். யோகியும் அவர் முன்பு அமர்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டே இருந்தனர். ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நிமிடங்கள் கரைந்தன. அடியவர் எப்போது பேசி கொள்வர் என காத்திருந்தார்.
சிறிது நேரத்திற்கு பின் புன்முறுவல் பூத்தார் சுவாமிகள்.
''நல்லது... யோகி வந்த வேலை முடிந்தது'' என எழுந்த பெரியவர், மறுபடியும் காரில் போய் திருவண்ணாமலையில் விட்டு வரச் சொல்லி அடியவருக்கு உத்தரவிட்டார்.
'அழைத்து வந்தது ஏதோ பேசத் தானே? அது நடக்கவில்லையே' என அடியவருக்கு ஆச்சரியம் எழுந்தது.
காரில் போகும் போது யோகி சிரித்தபடி, ''என்ன... நாங்கள் பேசிக்கொள்ளவில்லையே என நினைக்கிறீர்களா?'' என கேட்டார்.
தயக்கத்தோடு 'ஆமாம்' என்றார் அடியவர்.
'அவர் பார்வையாலே கேள்வி கேட்டார். நானும் பார்வையால் பதில் சொன்னேன். காஞ்சிபுரம் மடத்தின் ஆச்சார்யராக இருந்தவர் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். ராம நாமம் ஜபித்து வந்த அவரின் ஜீவசமாதி தஞ்சாவூர் மாவட்டம் கோவிந்தபுரத்தில் உள்ளது. மடத்தின் பொறுப்பை சீடரிடம் ஒப்படைத்த அவர், கிராமம் தோறும் சென்று ஜாதி, மதம் பாராமல் ராம மந்திர உபதேசம் செய்தவர். ராம நாமத்தை பரப்பும் நீயும், ஏன் கோவிந்தபுரத்தில் தங்கி சேவை செய்ய கூடாது'' என கேட்டார் சுவாமிகள்.
அதற்கு நான், ''இந்த பிச்சைக்காரனின் மனம் திருவண்ணாமலையில் லயித்து விட்டது. அதனால் அதை விட்டு செல்ல இஷ்டமில்லை'' என்றேன்.
''அப்படியானால் அங்கேயே இரு'' என்றார் சுவாமிகள்.
''இதை சொல்லவே உன்னை வர சொன்னேன். சரி... சென்று வா!''என விடை கொடுத்தார்.
ஆன்மிகத்தில் உயர்நிலை அடைந்தவர்கள் பேச, பார்வை மட்டுமே போதும் என்பதை அறிந்து வியந்தார் அடியவர்.
No comments:
Post a Comment