(பெரியவர் சொன்ன பரிகாரம்!)
கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்.
நன்றி-தினமலர்.(போன சனிக்கிழமை)
காஞ்சி பெரியவரை தரிசிக்க வந்திருந்தார் ஒரு பெண். முகத்தில் சோகமோ சோகம். அவரது பிள்ளை கல்லுாரி மாணவர். ரயிலில் அடிபட்டு காலமாகி விட்டார். தாய் வேதனையில் துடித்தார்.
அவர் சுவாமிகளைத் தேடி வந்தது தன் சோகத்திற்கு மாற்றுத் தேடி மட்டுமல்ல. விபத்தில் இறந்த உயிர்கள் ஆவியாய் அலையும் என்கிறார்களே, மகனின் ஆன்மா சாந்தி அடைய என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளவும் தான்.
ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்களே? எது சரியான பரிகாரம் என்பதை எப்படி அறிவது? அதோடு அந்த ஆன்மா உண்மையிலேயே சாந்தி அடைந்ததா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது?
தாய் மனம் தவித்தது. சுவாமியே சரணம் என வந்து விட்டாள். மகாபெரியவர் சொன்னால் கட்டாயம் சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு.
'சுவாமி! என் புத்திர சோகத்தை மெல்ல மெல்ல ஆற்றி கொள்வேன். ஆனால் என் புத்திரனின் ஆவி அலைந்து கொண்டிருக்கும் என்ற எண்ணத்தால் ஏற்படும் சோகத்தை தாங்க முடியவில்லை! அவன் ஆவி நற்கதி அடைய ஒரு பரிகாரம் சொல்லுங்கள். அது நற்கதி அடைந்ததை நான் எப்படி அறிவது என்பதற்கும் ஒரு வழி சொல்லுங்கள்!'
சுவாமிகள் மனத்தில் கருணை பெருகியது. அவரும் சாந்தி, ஹோமம் போன்ற பரிகாரங்களின் சக்தியை எடுத்து சொல்வதுண்டு தான். ஆனால் தன் மகனின் ஆவி நற்கதி அடைந்ததைத் தான் அறிய வேண்டும் என்கிறாளே? அருள் பொங்க பார்த்த அவர் பேசலானார்:
''நீ வசிக்கிற கிராமத்துல ஓயாம உழைக்கிற குடியானவ ஜனங்கள் இருப்பா இல்லையா? நீ அவாளுக்கெல்லாம் மதிய வேளைல நீர்மோர் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு. தவிச்சுண்டிருக்கறதா நீ சொல்றியே ஒன் பிள்ளையோட ஆன்மா, அது தவிக்கறதை விட்டு கட்டாயம் சாந்தி அடைஞ்சுடும். நீர்மோர் குடிச்ச குடியானவ ஜனங்களோட முகத்தை பார். அந்த முகங்கள்ல தென்படற மலர்ச்சி தான் உன் மகன் ஆன்மா சாந்தி அடைஞ்சதோட அடையாளம். வேற பரிகாரம் ஒண்ணும் பண்ண வேண்டாம்''.
தாயின் முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது. அப்படியே செய்கிறேன் என நமஸ்கரித்து விடைபெற்றார்
No comments:
Post a Comment