ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ‘ஏரண்டம்’ என்றால் ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான் விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு ‘விளக்கெண்ணெய் சாமியார்’ என்று அர்த்தம். கேலிப்பெயர் மாதிரி த்வனிக்கிறது. மஹான்கள் தங்களுக்கு ஊரும் பெயரும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அநாமதேயமாகக் கிடப்பார்கள், திரிவார்கள். ஜனங்கள் அவர்களைப் போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி, தூற்றிப் பரி ஹாஸப் பேர் வைத்தாலும் சரி, இரண்டும் அவர்களுக்கு ஒன்றுதான்.
ஏரண்டகருக்கு அப்பா, அம்மா வைத்த பெயரென்னவோ யாருக்கும் தெரியாது. ஏரண்டகர் என்பது ஜனங்களாக வைத்த பெயர்தான். அதற்குக் காரணம் உண்டு. கும்பகோணத்துக்கு மேற்கே இரண்டு மைலில் ஸ்வாமி மலைக்குப் போகிற வழியில் கொட்டையூர் என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. கொட்டையூர் என்று ஏன் பேர்? எத்தனையோ கொட்டைகள் இருகின்றன. இருந்தாலும் கொட்டை என்று இரண்டுதான் முக்கியமாக சொல்லப்படுகின்றன. ஒன்று ஆத்மார்த்தமானது - ருத்ராக்ஷத்தைக் கொட்டை என்றே சொல்வார்கள். சிவ தீகை்ஷ செய்து கெண்டு ருத்ராக்ஷம் போட்டுக் கொண்டிருப்பவர்களைக் ‘கொட்டைக்கட்டி’ என்பார்கள். இந்தக் கொட்டை மனஸில் சேருகிற அழுக்குகளை எடுப்பது.
இன்னொரு கொட்டை வயிற்றில் சேருகிற அழுக்குகளை, கெடுதல்களை எடுக்கிற ஆமணக்குக் கொட்டை. முத்துக்கொட்டை, கொட்டை முத்து என்றும் சொல்வார்கள். அதை ஆட்டித்தான் விளக்கெண்ணெய் எடுப்பது. வயிற்று அடைசலைப் போக்குவதோடு இன்னும் பல தினுசிலும் தேஹாரோக்யத்துக்குப் ப்ரயோஜனப்படுவது. வயிறு லேசாகி, தேஹம் ஆரோக்கியமாக இருந்தால்தான மனஸும் லேசாகி ஈச்வரபரமாக நிற்கும். ஆனதால் ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும் ‘நல்ல ருசி, நல்ல வாசனை’ என்று நாம் தின்றதுகளால் ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குத்தான்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
Source: Shri Varagooran Narayanan
No comments:
Post a Comment