பெரியவாள் முகாம் செய்திருந்த சிறிய கிராமத்தில் மொத்தம் பதினைந்து வீடுகளே இருந்தன.
ஓர் ஆரம்பப் பள்ளியில் பெரியவாள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கு முந்தைய தினம் முகாம் செய்திருந்த கிராமம் சற்றுப் பெரியது. ஆனால் தண்ணீர் வசதியில்லை. எல்லாவித உபயோகங்களுக்கும் ஒரு குளம் தான் கதி! அதில் தண்ணீர் அசுத்தமாக இருந்தது. “குடிதண்ணீருக்கே அந்தத் தண்ணிதான்” என்று மனம் வருந்தி முறையிட்டார்கள் கிராம மக்கள்.
அன்றைய தினம், அந்தக் குளத்தில்தான் பெரியவா ஸ்நானம் செய்தார்கள்.
அன்று மாலையே புறப்பட்டு, சிறிய கிராமத்துக்கு வந்தாகிவிட்டது.மறுநாள் காலை வழக்கம்போல் பெரிய கிராமத்து மக்கள் அதே குளத்துக்குப் போனார்கள்.
ஒரே அதிர்ச்சி!
ஒரு குப்பை இல்லை; பாசி இல்லை; சேறு இல்லை! தண்ணீர் நிர்மலமாகப் பளிங்கு போலிருந்தது.
“பெரியவங்க வந்து குளிச்சது, நம்ம பாக்கியம்!” எல்லையில்லாத சந்தோஷம்.
ஸ்வாமிகளுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டுமே?
ஒரு மாட்டுவண்டி நிறைய சாமான்கள் – அரிசி, பருப்பு, கறிகாய், வாழை இலை, புளி, மிளகாய் ஏற்றிக் கொண்டு முகாமுக்கு வந்துவிட்டார்கள். நூறு பேர்கள் உணவு கொள்ளத்தக்க அளவு பண்டங்கள்.
சாமான்களை ஸ்ரீமடத்தில் இறக்கிவிட்டு, பெரியவாளிடம் ஆசி பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்.
அவர்கள் புறப்பட்டுச் சென்றதும், “அந்த சாமான்களையெல்லாம் இன்னிக்கே சமைச்சுடு” என்று உத்தரவாயிற்று. சாப்பிடுவதற்கு இருந்ததே ஏழெட்டுப் பேர்கள். எல்லாவற்றையும் சமைத்தால், நூறு பேருக்கு எங்கே போவது?
பெரியவாள் உத்தரவு. அதன்படியே சமையல் ஆயிற்று.
ஏழெட்டுப் பேர்கள் சாப்பாடு, பிற்பகல் ஒரு மணிக்கே முடிந்துவிட்டது. சமையல் செய்த பண்டங்களை மூடி வைத்துவிட்டார்கள். “வீண்… அத்தனையும் வீணாகப் போகிறது” என்று சிப்பந்திகள் நொந்து கொண்டார்கள்.
மாலை மணி நான்கு, இரண்டு பேருந்துகளில், அன்றைய பிக்ஷாவந்தனத்துக்காக, குஜராத்திகள் வந்து சேர்ந்தார்கள். முதலில் காஞ்சிபுரம் சென்று ஒவ்வொரு இடமாக விசாரித்துக்கொண்டு, இங்கே வந்து சேர்ந்துள்ளார்கள்.
”ஸ்வாமிகளை உடனே தரிசனம் செய்யணும்…”
“முடியாது…”
“ஏன்?”
“முதலில் நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்; அப்புறம்தான், தரிசனம். பெரியவா உத்தரவு..”
“இனிமேல் அடுப்பு மூட்டி, இத்தனை பேருக்கும் சமையல் செய்ய இரண்டு மணி நேரமாகுமே?”
“இல்லை! இரண்டே நிமிஷம் போறும்! சமையல் ரெடி!”
“நாங்கள் வரப்போகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?”
“எங்களுக்குத் தெரியாது; பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும் போலிருக்கு…”
குஜராத்திக்காரர்கள் கண்களில் பரவசக் கண்ணீர்! கை, கால் கழுவிக்கொண்டு, சாப்பிட உட்கார்ந்தார்கள்.
கடைசியில், ஒரு பருக்கை சாதமோ, ஒரு கரண்டி சாம்பாரோ பாக்கியில்லை! நூறு பேர்களுக்கான உணவு வகைகளை, அறுபது பேர்களே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டார்கள், “என்ன ருசி, என்ன ருசி!” அவ்வளவு பசி!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
No comments:
Post a Comment