அனைத்து அறன்’ அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்.’ அதாவது, தங்கள் மனஸைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாகச் சுத்தம் செய்து கொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர்.
கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம், ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.
தான் அடங்கியிருக்க வேண்டும்; பக்தியோடு ஈஸ்வர ஸேவை என்று நினைத்து ஸமூஹ ஸேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்கச் சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், ‘ஷோ’வாகவுமே முடிந்து போகும். இந்தப் படாடோபத்தால் ‘ஸேவை’ என்று செய்கிறவனுக்கு அஹங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அஹங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய ஸேவையை அடக்கமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய்தால் அஹங்காரத்தை அதிகமாக்கிவிடும். குளிக்க வேண்டும் என்று போய்ச் சேற்றை வாரிப் பூசிக் கொண்டதாகி விடும்.
‘தான் சுத்தமாவதுதான் ஸர்வ தர்மமும்’ என்றால் இது ஸ்வயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில் நினைக்கிற மாதிரியான ஸ்வயநலம் இல்லை. பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய ஸுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதுதான் தப்பான ஸ்வய நலம். மனஸை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டியதாகிறது. இது இந்திரிய ஸௌக்கியங்களிலிருந்து நம் மனஸை மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment