ப்ரதோஷம் மாமாவின் மனைவி, மகள், பேரன், பேத்தி, பந்து, மித்திரர்கள் அனைவரும் பெரியவாளிடம் பூரணபக்தி செய்து சரணாகதி செய்தவர்கள். மாமாவின் துணைவியாருக்கு ஒரு சமயம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சோதனை செய்யும் போது அவருக்கு ஒரு வகை கேன்சர் என்று தெரியவந்தது. இதனால் பெருங்கலக்கம் உண்டானது. ஆனால் மாமா கலங்காமல் பெருந்தெய்வமான ஸ்ரீ மஹாபெரியவாளிடம் பொறுப்பை அர்ப்பணித்து விட்டு மனைவிக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். இரவு முழுவதும் உடல் நிலை பாதிப்பால் தவித்துக் கொண்டிருந்த மாமிக்கு கனவில் நடமாடும் தெய்வம் ஆள் உயர குத்து விளக்கில் ‘முருகனாய்’ காட்சி அளித்து பிரகாசமாக தரிசனம் தந்தார். தான் அணிந்திருந்த சால்வையை எடுத்து மாமிக்கு போர்த்தினார்.. உடனே மெய் சிலிர்த்து விழித்துக் கொண்ட மாமி தன் உடலில் ஏதோ மாயம் நிகழ்ந்தது போல் உணர்ந்தார்.
அதுவரை அனுபவித்த உபாதைகள் சட்டென்று மாயமாய் மறைந்துவிட அவர் புத்துணர்வு பெற்றார். மறுநாள் மாமி தனக்கு கனவில் அருளிய பெருந்தெய்வத்தை உடனே காணவேண்டும் என்று விரும்பினார். மாமாவோ ‘உடல்நிலை இன்னும் சற்று தேறிய உடன் செல்லலாம்’ என்று சொன்னார். மறுநாளும் திரும்பவும் அதே போல் காட்சி தந்த மஹானின் முன்பு ‘ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே’ என்ற திருப்புகழ்ப் பாடலைப் பாடினார். அதில் ‘கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே’ என்று மனமுருகிப் பாடும்போது கனவு கலைந்தது. உடனே மாமி அன்று இரவே காஞ்சிக்குப் புறப்பட்டார். ரயில் தாமதத்தால் மதியம் காஞ்சி வந்த மாமிக்கு மஹாப்ரபு கலவை சென்று கொண்டிருப்பதாக தெரியவந்தது. விடாப்பிடியாக கலவையை நோக்கி அவரும் புறப்பட்டார். ஆற்காடு அருகே ஓர் இடத்தில் பெரியவா இருப்பதை அறிந்து அங்கு சென்று தரிசித்தார். அப்போது அவர் கண்ட காட்சி மேலும் அதிசயத்தில் ஆழ்த்தியது. காரணம் அவர் கண்டது கனவல்ல நிஜம் என்பது போல கனவில் கண்ட மாதிரியே ஒரு கல்மண்டபத்தில் அமர்ந்து மஹாபெரியவா தரிசனம் தந்தது தான். இப்படி மஹான்கள் கனவும், நினைவும் ஒன்றே என்று உலகிற்கு உணர்த்துவது போல் இந்த அருள் விளையாட்டு அமைந்தது.
No comments:
Post a Comment