திருத்தணி முருகன் கோவிலுக்கு பெரியவா தன் சீடர்களுடன் வந்திருந்தார். பல்லக்கை வெகுதூரம் சுமந்து வந்ததால் பணியாளர்கள் பசியில் களைத்து போயிருந்தனர்.
மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. அவர்கள் சாப்பிடுவதற்குத் தகுந்த இடம் ஏதுமில்லை. தன்னைச் சுமந்து வந்தவர்கள் பசியில் வாடியது கண்டு பெரியவா மிகவும் வருந்தினார். அப்போது பலராமராவ் என்பவர், மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார். அவர் கோயில் சரக்குமாஸ்டராகப் பணியாற்றுபவர். பெரியவா மீது மதிப்பு கொண்டவர். கடுமையான காய்ச்சலுடன் களைப்பாக மலையில் இருந்து இறங்கிய அவரை ஒருவர் பெரியவாளிடம் அழைத்துச் சென்றார்.
பெரியவாவைக் கண்ட பலராமராவ் பரவசப்பட்டார். சாக்ஷ்டாங்கமாக வணங்கி எழுந்தார். சுவாமிகள் அவரிடம்,’நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.,’ என்றார். கண்கள் கலங்கியபடியே ,’’சுவாமி தங்களுக்கு இந்த ஏழை உதவுவதா? அப்படி ஒரு பாக்கியமா? என்ன செய்ய வேண்டும்? என்று உத்தரவு போடுங்கள்,’’ உணர்ச்சிவசப்பட்டு கேட்டார். ‘’எனது பல்லக்கைத் தூக்கி வந்தவர்களின் பசி போக்க வழி செய்ய வேண்டும்.ஓட்டல்கள் அடைக்கப்பட்டுவிட்டன. மலைக்குப் போய் ஏதாவது உணவு தயாரிக்கவேண்டும்,’’என்று அன்போடு சொன்னார்.
”சுவாமி! நீங்கள் சொல்லும் பணியை நான் அவசியம் செய்யவேண்டும். ஆனால் இப்போது காய்ச்சலால் அவதிப்படுகிறேன். இத்துடன் ஏறி உணவு தயாரிக்க காலதாமதமாகுமே,’’என்று வருந்தினார்.
பெரியவா அவரிடம் உனக்கு ஜுரம், உடல்வலி எல்லாம் போய்விடும். தைரியமாக மலையேறிச் செல். உன் முதலாளி அனுமதியுடன் சீடர்களுக்கு உணவு தயாரித்து வை,’’ என்றார்.
பெரியவா பேச்சைக் கேட்ட பலராமராவ், தன் காய்ச்சலையும் மறந்து மலையேறி சூடாக வெண்பொங்கல், சாம்பார், சட்னியை சிறிது நேரத்தில் தயாரித்து முடித்தார். பின்னர் சன்னதிக்கு வந்து பார்த்தார். பெரியவா சன்னதியில் முருகப் பெருமானைத் தரிசித்துக் கொண்டிருந்தார்.
பெரியவாவைக் கண்ட பலராமராவுக்கு கண்ணீர் பெருகியது.
‘’சுவாமி! நான் உங்களிடம் உத்தரவு பெற்று மலையேறும் போதே, என்னை வாட்டிய காய்ச்சலும், உடல்வலியும் அறவே ஓடிப்போய் விட்ட்து. அது மட்டுமல்ல! என்னோடு இந்நேரம் வரை தாங்களும் உடனிருந்து சமையல் பணியும் செய்தது போல உணர்ந்தேன்,’’ என்றார்.
பின்னர், பெரியவாவோடு மலைக்கு வந்திருந்த பணியாளர்களுக்கு சூடான வெண்பொங்கலைப் பரிமாறினார். பணியாட்களும் விருப்பத்தோடு சாப்பிட்டு பசியாறினர்.
உம்மாச்சி தாத்தா வைத்தீஸ்வரனாச்சே !!!
Source: Shri Well-bred Kannan
No comments:
Post a Comment