அன்புதான் அழகு
நம் மனசை அப்படியே பூர்ணமாக அழகுக்குக் கொடுத்து அனுபவிக்க நமக்குத் தெரியவில்லை. அழகிலேயே ஈச்வரத்வத்தை அனுபவிக்கும் பக்குவம் நம் எல்லோருக்கும் சிந்திக்கக் கூடியதில்லை. ஏதோ அழகாயிருக்கிறது என்று கொஞ்ச நாழி ரசித்து சந்தோஷப்படுவதற்கு அதிகமாக அதை மோக்ஷோபாயமான உபாஸனையாக ஆக்கிக் கொள்ள நம்மில் எல்லோராலும் முடியவில்லை.
நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது அழகு என்று அரித்தம்.
இங்கே ஒரு முக்கியமான நிபந்தனை. அதாவது நாம் அனுபவிக்கும் ஆனந்தம் மனோவிகாரத்தில் ஏற்படுகிற சந்தோஷமாக இல்லாமல் மனசில் சுத்தமான, சாந்தமான இன்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறபோதுதான் அதற்குக் காரண பூதமானது அழகாயிருக்கிறதெற்கு அர்த்தம்.
அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூட க் குறைந்துகொண்டே வர ஆரம்பிக்கிறது. அன்பேஉருவானவர்களை அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்றால், அப்போது அன்பு தான் அழகு என்று ஆகிவிடுகிறது. ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால்கூட , அவர்களிடம் பயந்துகொண்டு குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது குழந்தை! காரணம் என்ன? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது தெரிந்து கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதென்றால், “உயிருள்ள ரூபமாக இருக்கிற ஒன்றின் அழகு, அது அன்பாக இருக்க இருக்க ஜாஸ்தியாகிறது. அன்பு ரொம்பவும் முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே அடிபட்டுப்போய் அன்புதான் அழகாகத் தெரிகிறது” என்று ஆகிறது.
— ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸவதி சங்கராச்சார்ய சுவாமிகள்
No comments:
Post a Comment