நெஞ்சம் நிறைக்கும் ஜகத்குரு! — நூல் அறிமுகம்
நம் காலத்தின் உன்னத தவஞானியான மகா பெரியவாளின் வாக்குகள் பொருள் பொதிந்தவை. ஒவ்வொரு தலைமுறையினரும் அவரது கருத்துகளின், எண்ணங்களின் வீச்சைக் கண்டு ஆச்சர்யப்படுகின்றனர்.
அதேபோல், ஒரு படம், ஆயிரம் கருத்துகளைச் சொல்லவல்லது; விளக்கவல்லது. மகா பெரியவாளின் உத்தம வாழ்வை, Divya Darshan of Sri Kanchi Mahaswami என்ற இரண்டு தொகுதிகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், மிக அழகாகப் பதிவு செய்திருக்கின்றன.
மகாபெரியவா அவதரித்த வீடு தொடங்கி, அவர் ஜீவன் முக்தி அடையும் 1994 வரை 100 ஆண்டுகால வாழ்க்கையைப் புகைப் படங்களின் வாயிலாக நாம் தரிசிக்க முடிகிறது. குறிப்பாக, 1952 முதல் ஒவ்வொரு ஆண்டும் மிக மிக விரிவாக அனைத்துப் புகைப்படங்களும் இத்தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன.
மகா பெரியவாளின் குழந்தை போன்ற எழில் சிரிப்பு, ஒரு காலை மடித்து மற்றொரு காலின்மேல் ஊன்றி யோசனை செய்வது, ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு யாத்திரை செல்வது, ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டு கூர்மையாகப் பார்ப்பது, அரசியல், ஆன்மிக தலைவர்களைச் சந்தித்து ஆசியளிப்பது என்று மிக மிக அபூர்வமான புகைப்படங்கள் இத்தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
மகா பெரியவா பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்த விஜய யாத்திரை, பாதயாத்திரையின் வரை படங்களையும், அவர் அருள்பாலித்த நகரங்களையும் மிகத் துல்லியமாக விளக்குகின்றன இத்தொகுதிகள்.
விரிந்த ஞானம், எளிய அணுகுமுறை, மேதாவிலாசம், கருணை, அன்பு பொங்கும் விழிகள் என்று மகா பெரியவாளை நம் நெஞ்சின் அருகே கொண்டு வரும் அரிய தொகுதிகள் இவை. போற்றிப் பாதுகாக்க வேண்டிய பெட்டகம்.
Divya Darshan of Sri Kanchi Mahaswami (இரண்டு தொகுதிகள்), வெளியீடு: ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா டிரஸ்ட், எண் 70, செயிண்ட் மேரீஸ் சாலை, அபிராமபுரம், சென்னை 600 018. ஃபோன்: 044 – 24996823 / 9003076823. நன்கொடை: ரூ.2000/-
–நன்றி கல்கி
No comments:
Post a Comment