Source: Dinamalar dated 05 August 14
திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் ஒருசமயம், மகாபெரியவர் முகாமிட்டிருந்தார்.
அவரைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமத்தலைவரும், மக்கள் சிலருமாக வந்தனர். கிராமத்தலைவர் பெரியவரிடம்,""சுவாமி! நாங்க ரொம்ப ஏழைங்க. எங்க கிராமத்திலே எங்களால் முடிந்தளவு நன்கொடை வசூலித்து மாரியம்மன் கோயில் ஒண்ணு கட்டியிருக்கோம். ஆனால், கும்பாபிஷேகம் நடத்த பணம் தட்டுப்பாடா இருக்குது! தாங்கள், ஒரு குருக்களை நியமித்து கும்பாபிஷேகம் நடத்திக் கொடுக்கணும். அவருக்கு எங்களால் முடிந்தளவு தட்சணை கொடுத்துடுறோம்,'' என்றார்.
பெரியவரும், ஒரு சீடர் மூலமாக குருக்கள் ஒருவரை வரவழைத்து, அவர்கள் கிராமத்திற்குச் சென்று கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டார்.
""அவங்க கொடுக்கறதை வாங்கிக்கோ! அகிலாண்டேஸ்வரி (திருவானைக்காவல் அம்பிகை) உனக்கு நெறைய கொடுப்பா,'' என்று ஆசிர்வதித்தார்.
குருக்களும் கிராமத்திற்கு சென்று கும்பாபிஷேகத்தை நடத்தினார். கிராமத்தலைவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தார். ஆனால், அந்த குருக்களோ, அது தனக்குப் போதாது என்றும், தான் கொண்டு வந்த பொருட்களுக்கான செலவை விட, பணம் குறைவாக இருப்பதாகவும் வாதிட்டார்.
மகாபெரியவரிடம் தாங்கள் பேசிய விபரத்தை கிராமத்தலைவர் குருக்களிடம் சொல்லியும் அவர் கேட்கிற பாடாக இல்லை. வேறுவழியின்றி, தனது மனைவியின் கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை கழற்றித்தரச் சொல்லி, அடகு வைத்த கிராமத்தலைவர் அதில் கிடைத்த தொகையை குருக்களிடம் வழங்கினார்.
இது நடந்து சில நாட்களாக குருக்களின் வீட்டில், அவரது மனைவிக்கு இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லை. தன் கணவரிடம், ""எனக்கு சரியாகத் தூக்கம் வர மாட்டேங்குது. தூங்கினாலும், என் கனவில் ஒரு அம்மன் சூலாயுதத்துடன் வந்து உக்கிரமாக காட்சி தருகிறாள்,'' என்றார்.
குருக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்குள் பெரியவர் காஞ்சிபுரம் திரும்பி விட்டதை அறிந்த அவர், தன் மனைவியுடன் காஞ்சிக்கே சென்று அவரைத் தரிசித்தார்.
"நீ அந்த கிராமத்திற்குப் போ! யார் சங்கிலியை அடகு வைத்து பணம் தந்தாரோ அவரிடமே சங்கிலியை மீட்டுக்கொடுக்க ஏற்பாடு செய்,".
தன் பிரச்னை பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று அதிசயித்த குருக்கள், அந்தக் கிராமத்திற்கு விரைந்தார். கிராமத்தலைவர் அடகு வைத்திருந்த சங்கிலியை மீட்டு, அவரது மனைவியிடம் கொடுத்து மாரியம்மன் முன்னிலையிலேயே அணியச் செய்தார்.
அதன்பிறகு மீண்டும் காஞ்சிபுரம் வந்து பெரியவரிடம் ஆசிபெற்றார். பெரியவர் ஒரு தட்டில் வஸ்திரம் மற்றும் அந்த கிராமத்து மக்கள் எவ்வளவு சம்பாவணை தரவேண்டுமோ அந்தப் பணம் ஆகியவற்றைக் குருக்களிடம் கொடுத்தார். மகிழ்வுடன் திருச்சி திரும்பிய குருக்கள் தம்பதிகள், அந்த மாரியம்மன் கோயிலுக்குச் சென்று. அந்தத்தொகையை கோயிலுக்கே நன்கொடையாக வழங்கி விட்டனர்.
ஆடிமாதத்தில், அம்பாள் பற்றியும், மகாபெரியவர் நிகழ்த்திய அற்புதம் பற்றியும் படித்த நமது நெஞ்சங்கள் நெகிழ்ச்சியில் மிதப்பதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!
No comments:
Post a Comment