கலவையில் ஒரு நாள் பேரொளி பிறந்து
காஞ்சியில் பெரியவராய் குருவெனச் சிறந்தது.
கலவையில் தான் அவருக்கு சன்னியாசம்!
சன்னியாசம் என்பதே மறுஜென்மம் தானே!
“கலவையில் பிறந்த பேரொளி"
ஆசிரியர் : நெமிலி எழில்மணி
டெலிபோன் மணி மிக ரம்மியமாக ஒலித்தது. பேசியவர், தமிழக அரசவை கலைஞர் பத்மஸ்ரீ இசைமணி டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் அவர்கள்.
"எழில்மணி! காஞ்சி பரமாச்சாரியார் பற்றியும் ஸ்ரீ சங்கராசார்யார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பற்றியும் H.M.V நிறுவனத்தார் நான்கு பாடல்கள் அடங்கிய இ.பி இசைத்தட்டு எடுக்க போகிறார்கள். கலைமாமணி திரு. எஸ்.டி சுந்தரம், கலைமாமணி டாக்டர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம், கவிஞர் நெல்லை அருள்மணி ஆகியோர் ஒவ்வொரு பாடலை எழுதுகின்றனர். நீங்களும் ஒரு பாடலை எழுதிக்கொண்டு வாருங்கள். நாளைக்கு ரிஹர்சல். அடுத்த வாரத்தில் ரிகார்டிங்".
என் மனம் குதூகலித்தது. ஒ! இது பேரின்பம்! என்ன பேறு !
கனவிலும் நினைவிலும் கண்கண்ட தெய்வமாக விளங்கும் அந்த காஞ்சி மாமுனிவரைப் பற்றி பாடல் எழுதுவது எவ்வளவு பெரிய பாக்கியம். நான் அனுதினம் வணங்கும் அன்னை பாலா திரிபுரசுந்தரியின் கருணையாகத்தான் இருக்கவேண்டும். கலவைக்கு பரமாச்சார்யாள் அடிக்கடி சென்று வருவதை கேள்விப்பட்டுள்ளேன்.
எனவே அவர் அங்கேதான் பிறந்திருக்க வேண்டும் என்று அனுமானம் செய்துக்கொண்டேன்.
என் மகிழ்ச்சியின் தாக்குதலால் யாரிடமும் ஏதும் கேட்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. பல்லவி பிறந்து விட்டது.
கலவையில் ஒரு நாள் பேரொளி பிறந்து
காஞ்சியில் பெரியவராய் குருவெனச் சிறந்தது.
பெரியவாளின் பெருங்கருணையால் அனு பல்லவியும் சரணங்களும் மடை திறந்த ஆறுபோல் வந்தன.
உலகினை உய்விக்க அருள்மழை பொழிந்தது
உள்ளத்திலே அன்பும் பயிரினை விளைத்தது
- கலவையில்
அன்புடன் ஞானஒளி கலவையானது - அங்கே
புனிதமும் பொறுமையுமே கலவையானது
பண்புடன் பக்தியங்கே கலவையானது - நமக்கு
இன்பநிலை வழங்கிடவே உலவுகின்றது
- கலவையில்
உருகவைக்கும் நெஞ்சை அன்புப்பார்வை - நம்மை
ஒளிரவைக்கும் செம்மைச் காவிப்போர்வை
பெருகவைக்கும் கண்ணீர் பேச்செதற்கு? - அவரைப்
பணியாமல் இருப்பவர்க்கு மூச்செதற்கு?
- கலவையில்
இசையமைப்பாளர் அமரர் டி.பி ராமசந்திரன் பக்திபூர்வமாக இசையமைக்க, காஞ்சி பெரியவர்களால் "கம்பீரகானமணி" என்று பட்டம் சூட்டப்பெற்ற சீர்காழி அவர்கள் உள்ளம் உருக பாட, பாடல் பதிவாகியது.
அதன்பின் ஒருநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் காஞ்சி பெரியவாளை பற்றி கட்டுரை ஒன்று வந்தது, ஆர்வமுடன் படித்த ஆரம்பித்த எனக்கு மாபெரும் அதிர்ச்சி!
துக்கத்தால் தொண்டை அடைத்துக் கொண்டது.
கண்ணீர் கட்டுகடங்காமல் பெருகியது!
ஆம்! கட்டுரை தொடக்கத்திலேயே காஞ்சி பரமாச்சார்யாள் விழுப்புரத்தில் பிறந்தவரென்று காணபட்டது.
துடித்து போய்விட்டேன்! ஓ! எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம்.
பெரியவாள் பிறந்த இடம் கலவையில்லையா?
பெரியவாள் பிறந்த இடம் கலவையில்லையா ??
பெரியவாள் பிறந்த இடம் கலவையில்லையா ??
ஆயிரம் தடவை இந்த கேள்விகள் என் நெஞ்சைத் தாக்கின.
"கலவையில் பிறந்ததாக" எழுதிவிட்ட என் அறியாமையை யார் மன்னிப்பார்கள்?
என்னிடத்தில் நம்பிக்கை வைத்துப் பாடலை பதிவு செய்த சீர்காழி அவர்கள் இதனை எப்படி தாங்குவார்கள்?
சரி! என்ன செலவானாலும் பரவாயில்லை! பல்லவியை மாற்றி வேறு பாடல் முயற்சி செய்திட வேண்டும் என்ற வெறியிலே திரு சீர்காழியார் அவர்களை சந்தித்தேன்.
"வாங்க! வாங்க!! உங்களைத்தான் நெனைச்சிகிட்டிருந்தேன். கரெக்டா வந்துடீங்களே! பெரியவா இசைத்தட்டான "சந்திரசேகரேந்திர ஜெயேந்திர விஜயம்" சீக்கிரமே வந்திடும். ஒரிஜினல் "டேப்" கல்கத்தாவுக்கு அனுப்பி இருக்காங்க! அநேகமாக அடுத்த மாதமே கூட வந்துவிடலாம்" என்று கூறினாரே பார்க்கலாம். எனக்கு அழுகையே வந்துவிடும்போல இருந்தது.
மெதுவாக நான் செய்த தவற்றினை கூறினேன், ஒரு கணம் சீர்காழி துணுக்குற்றார். மறுகணம் சுதாரித்து கொண்டு "இல்லை எழில்மணி! அது தப்பான பாடலாக எனக்குத் தோன்றவில்லை. அப்படியிருந்தால் பெரியவாள் கருணையாலே அந்த ரிகார்டிங் தடைப்பட்டிருக்கும். எதற்கும் அந்த கட்டுரையை நன்றாக படியுங்கள்" என்றார்.
"ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இயற்பெயர் சுவாமிநாதன்! பிறந்தது விழுப்புரம். அன்னையின் பெயர் மஹாலக்ஷ்மி அம்மையார். தந்தையார் பெயர் சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் திண்டிவனத்தில்தான் சுவாமிகள் படிப்பு. 1907 - ம் ஆண்டின் ஆரம்பத்தில் 12 வயதான சுவாமிநாதனும் , அவரது அன்னையாரும், அன்னையாரின் சகோதரியும் கலவைக்கு பயணமானார்கள். காரணம் அந்த சகோதரியின் பிள்ளைக்குத்தான் காஞ்சி ஆசார்யாளாக - காமகோடி பீடாதிபதி ஆகியுள்ளார் என்பதும், அவரது குருவானவர் கலவையில் சமாதி ஆனார் என்பதும் ஆகும். இருந்த ஒரு மகனும் சங்கராச்சாரியார் ஆகிவிட்டதால் பாசத்தால் துடிக்கும் தமது சகோதரியை ஆறுதல் படுத்தத்தான் சுவாமிநாதன், தாயாரான மஹாலக்ஷ்மி அம்மையார் பயணப்பட்டது.இடையில் காஞ்சிபுரத்தில், மடத்தில் தங்கினார். அப்போது கலவையினின்று வந்த ஒரு வண்டியில் சங்கர மடத்தை சார்ந்த மேஸ்திரியும் சிலரும் தம்முடன் சுவாமிநாதனை ஏற்றிகொண்டனர். வேறொரு வண்டியில் மகாலட்சுமி அம்மையாரும், அவரது சகோதரியும் மற்றவர்களும் கலவைக்கு பயணப்பட்டனர். வண்டியில் செல்லும்போது சுவாமிநாதனிடம் மெல்ல பேச்சு கொடுத்தார் மேஸ்திரி.
"காஞ்சி அசார்யாளாக ஆகியுள்ள சுவாமிநாதனின் ஒன்று விட்ட சகோதரர் எதிர்பாராமல் ஜுரத்தின் காரணமாக இறைவனடி சேர்ந்தமையால் உடனே திண்டிவனம் சென்று சுவாமிநாதனை அழைத்து வர உத்தரவாகியுள்ளது என்றும், எதிர்பாராமல் காஞ்சிபுரத்திலேயே சுவாமிநாதனை பார்கைக் கூடியதாகிவிட்டது என்றும், அடுத்த அசார்யாளாகபீடமேறப் போகிறவர் சுவாமிநாதன் தான்" எனவும் கூற, சுவாமிநாதன் அதிர்ச்சிக்குள்ளானார். ஆறுதல் கூறவந்த தமது அன்னையாருக்கு இப்போது ஆறுதல் அளிக்க வேண்டிய நிலையாகியுள்ளதே, என நினைத்தார். சுவாமிநாதனின் தந்தையாருக்கு தந்தி கொடுக்கப்பட்டது. கலவையில் "ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகளாக 68-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக அமைவதற்கு" சுவாமிநாதனுக்கு சன்யாசம் தரப்பட்டது. அவர் 1907-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதியன்று "காஞ்சி காமகோடி பீடாதிபதி" யானார்கள்.
இந்த விவரங்களை கேட்டதும் சீர்காழி அவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள்!
"ஆஹா! என்னே பெரியவாள் கருணை! கலவையில் தான் அவருக்கு சன்னியாசம்! சன்னியாசம் என்பதே மறுஜென்மம் தானே! தவிர தீட்சை பெறுவதே பேரொளி பெறுவதாகும். ஆகவே "கலவையில் ஒரு நாள் பேரொளி பிறந்தது காஞ்சியில் பெரியவராய் குருவேனச் சிறந்தது" என்ற வரிகள் உண்மையான வரிகள்தான். நீங்களும் கலங்கி என்னையும் கலக்கிவிட்டீர்களே என அன்புடன் கடிந்து கொண்டார்கள்.
நான் தயக்கமாக இருந்ததை பார்த்து "எதற்கு வீண் குழப்பம்! இசைத்தட்டு வந்தவுடன் பெரியவாள் பாதங்களில்தானே வைக்கப்போகிறோம். அவர் ஆசீர்வதித்து விட்டால் உங்களுக்கு சந்தோஷம் தானே" என்று எனக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்.
அதேபோல் இசைத்தட்டு வெளி வந்ததும் என்னை காஞ்சிபுரம் வரச் சொல்லியிருந்தார். விடிகின்ற காலை நேரம். அமைதி தவழும் காஞ்சி மடத்தில் இருந்தேன்.சரியாக 8 மணிக்கெல்லாம் சீர்காழி அவர்கள் வந்து விட்டார். தேனம்பாக்கத்தில் தான் காஞ்சி பெரியவாள் அருள் மழை பொழிவதாக அறிந்த நாங்கள், தேனம்பாக்கம் சென்றோம்.
தேனம்பாக்கம் கோவிலிலே திரண்ட கூட்டம். கிணற்றுக்கு இந்தப் பக்கம் பக்தர்கள் பெரியவாளைப் பார்க்கும் ஆவலில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டார்கள்.
கிணற்றுக்கு அந்த பக்கம் உள்ளஅறையில் பெரியவர் பூஜை செய்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.
பெரியவர் எப்போது தரிசனம் தருவார்? அதற்கு சரியான பதில் யாருக்கும் தெரியாது!
தரிசனம் தந்து விடுவார் என்ற ஆவல் மட்டும் அனைவருக்கும் இருந்தது. நாங்களும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டோம். எங்கும் "ஹர ஹர சங்கரா - ஜெய ஜெய சங்கரா" என்ற மெலிதான கோஷம்.
அப்போது சீர்காழியின் அருகிலிருந்த சிலர் அவரை பாடுமாறு கேட்கவும், திடுக்கிட்டார் அவர்.
"என்னங்க நீங்க! பெரியவா பூஜை பண்ணிண்டிருக்கார். பூஜை நடக்கிறதே! பாடினா இடைஞ்சலாகாதோ" என்று அன்புடன் கடிந்து கொண்டார். ஒரு பத்து நிமிடம் கழிந்தது. அப்போது கதவு திறப்பது போன்ற ஒரு சத்தம். அனைவரும் நிசப்தமாகி பெரியவாளை தரிசிக்க கை கட்டி வாய் பொத்தித் தயாரானார்கள். கதவை திறந்து வந்தவர் பெரியவர் அல்ல. அவருக்கு பணிவிடைகளை உள்ளே செய்து கொண்டிருந்த அன்பர் ஒருவர் தான்.
அவர் மெல்ல வந்து கிணற்றின் இந்தப் பக்கம் அங்கேயும் இங்கேயும் கண்கள் அலைபாய நின்றார்.
"இங்கே சீர்காழி கோவிந்தராஜன் வந்திருக்காரா?" உடனே அதிர்ச்சிக்குள்ளானார் சீர்காழி அவர்கள்.
"இதோ இருக்கிறேன்" என்று பரபரப்புடன் கூறினார்.
"நீங்கதானா! உங்களை பெரியவா பாடச் சொன்னார்" என்று கூறி உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டாரே பார்க்கலாம்!
மெய்சிலிர்த்து விட்டார் சீர்காழி! என்னே இது பெருங்கருணை! இது என்னே தெய்வீகத் தொடர்பு!
"பாடலாமா" என்று பத்து நிமிடங்களுக்கு முன் சந்தேகம்!
"பாடேன் " என்று பெரியவாளின் உத்தரவு! என்னே இது அற்புதம்!
உடனே "ஹிமாத்ரிசுதே பாஹிமாம்" என்ற பாடலை கம்பீரமாக பாடினார்.
தொடர்ந்து "ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஜெயேந்திர விஜயம்" என்ற தலைப்புடன் கொண்ட இசைத்தட்டில் உள்ள பாடல்களை பாட ஆரம்பித்தார். மென்மையான காற்று அருகிலிருந்த மரங்களில் இருந்து வீசி மகிழ வைத்தது.
புள்ளினங்களின் ஒலி அவரது இசைக்கு சுருதி கூட்டின. எப்படிப்பட்ட தெய்வீகமான அனுபவம்!
"காமாட்சித்தாய் மடியில் சீராட்சி புரிந்து வரும்
காமகோடி தரிசனம் காணகாணப் புண்ணியம்"
என்ற பாடலை பாடி முடித்தார்.
தொடர்ந்து "கலவையில் ஒரு நாள் பேரொளி பிறந்து" என்ற பாடலை பாடினார்.
அப்பாடலின் சரணத்தில் வரும்
"உருகவைக்கும் நெஞ்சை அன்புப்பார்வை - நம்மை
ஒளிரவைக்கும் செம்மைச் காவிப்போர்வை"
என்ற வரிகளை பாடிவிட்டு
"பெருகவைக்கும் கண்ணீர் பேச்செதற்கு" என்றும் தொடங்கும்போது மீண்டும் கதவு திறந்தது. பணிவிடை செய்யும் அந்த அன்பர்தான் போலும் என அசுவாரஸ்யமாக இருந்த அனைவர் முகத்திலும் ஆனந்த அதிர்ச்சி.
ஆம்! செம்மைக்காவிப் போர்வையும், சிந்தும் அன்புப் பார்வையும் விளங்க நடமாடும் சிவப்பழமாய் பெரியவர் காட்சி அளித்தார்.காளிக்கு பாதம் வரை எலுமிச்சைக் கனி மாலை சுற்றியிருப்பார்களே, அது போன்ற எலுமிச்சைக் கனி மாலையை சுற்றிகொண்டிருந்தார்.
"பெருக வைக்கும் கண்ணீர், பெருக வைக்கும் கண்ணீர" என்ற சீர்காழி பாடலை பாட முடியாது தொண்டை அடைக்க கண்ணீர் விட ஆரம்பித்தார். அங்கு வந்த அத்தனை பேர் விழிகளிலும் உணர்ச்சி பிரவாகமாக கண்ணீர் பெருகியது. ஒரு பெண்மணி கதறவே ஆரம்பித்துவிட்டார். கண்ணீர் வழியாக அங்கு வந்தவர்கள் வினை கரைய ஆரம்பித்தது. பெரியவாளும் லேசாக விழிகளை துடைத்துக் கொண்டார். தொடர்ந்து பாடுமாறு சீர்காழி அவர்களை நோக்கி சைகை செய்தார். மிகவும் கஷ்டப்பட்டு தமது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு சீர்காழி அவர்கள்
"பெருகவைக்கும் கண்ணீர் பேச்செதற்கு? - அவரைப்
பணியாமல் இருப்பவர்க்கு மூச்செதற்கு?"
என்று பாடி முடித்தார் . தொடர்ந்து இசைத்தட்டில் வந்துள்ள மற்ற இரு பாடல்களையும் (பாரதம் முழுவதும் பாதங்கள் பதிந்ததால் - உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்,) (மெய்ஞான குருதேவன் வந்தான் - கலைமாமணி எஸ்.டி சுந்தரம்) பாடி முடித்தார். அதன்பின் "நாள் என் செய்யும்-" என்ற சுந்தர் அலங்காரமும். திருப்புகழும் பாடி நிறைவு செய்தார்.
உடனே இசைத்தட்டுடன் உள்ள பழத்தட்டு பெரியவாள் இருந்த இடத்துக்கு அனுப்பப்பட்டது. உடனே சீர்காழியை பார்த்துவிட்டு புன்னகையுடன் இசைத்தட்டு தடவிக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
சீர்காழி அவர்கள் கூடவந்திருந்த என்னையும், கவிஞர் உளுந்தூர்ப்பேட்டைசண்முகத்தையும் எச்.எம் வி மேனேஜர் திரு மங்கபதியினையும் பற்றி பெரியவாளிடம் கூறினார். அன்புப் பார்வையும் காவிப் போர்வையும் திகழ புன்னகை பூக்கும் அந்த தெய்வத்தை கண்டவுடன் எனது ஏக்கம் பறந்தது. எனது பாடல், சரியான பாடலே என்ற திருப்தியும் பிறந்தது. எல்லாரையும் அசீர்வதித்த பெரியவாள் மீண்டும் உள்ளே சென்று விட்டார். அதன்பிறகு ஒரு மணி நேரம் காத்திருந்தோம், மீண்டும் தரிசனம் செய்ய. ஆனால் தரிசனமாகவில்லை.
என்னே இது ஆச்சரியம். அன்று மாலை மயிலை கற்பகாம்பாள் கோயிலில் இந்த இசைத்தட்டு வெளியீட்டு விழாவுக்கு எச்.எம் வி ஏற்பாடு செய்திருந்தது. இங்கே காலையில் பெரியவாளே ரிலீஸ் செய்கிறார். எப்படிப்பட்ட பெரும்பாக்கியம்.
மாலையில் கற்பகத்தின் சன்னதியில்விழா நடைபெறுகிறது.
காலையில் காமாட்சி செல்வர் முன்னாலே வெளியீடு நடைபெறுகிறது.
நிறைந்த மனதோடு வெளியே வந்தபோது எனது அன்புக்குரிய பெரியவர் ஒருவர் தென்பட்டார். அவரிடம் வந்த விவரத்தைக் கூறிவிட்டு ஒரு சந்தேகத்தையும் எழுப்பினேன்.
"நாங்கள் சாதாரணமான மானுடர்கள், சந்தோஷம் வந்தால் குதிப்போம்; துக்கம் வந்தால் துடிப்போம். உணர்சிகளுக்கு ஆட்பட்டவர்கள் நாங்கள். நாங்கள் பெரியவாளை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டோம். ஆனால் உணர்சிகளை கடந்த பெரியவாளும் சிறிது கலங்கி லேசாக கண்களை துடைத்து கொண்டார், பெரியவர் உணர்ச்சி வசப்படுவாரா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர் தந்த பதில் என்னை ஆனந்தப் பரவசத்திற்கு உள்ளாக்கியது.
அந்த பெரியவர் கூறுகிறார்,
"நீங்க நம்ம பெரியவாளைப் பத்தி எழுதின பாட்டுன்னு நினைச்சேள். பெரியவாளைப் பார்த்ததும் அழுதுட்டேள்.
பெரியவா என்ன நெனச்சி இருப்பார் தெரியுமா? அவரோட குருநாதர் கலவையில் தானே சமாதி அடைந்தார். அதனால்தானே குரு பூஜைக்கு போய் வந்து கொண்டிருக்கிறார். தன்னோடு குருநாதர் பாட்டாச்சேன்னு குருவை நினைச்சு கண்ணீர் விட்டிருப்பார்! கலவையில் நிறைந்த பேரொளி தானே அவரது குருநாதர்."
எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஒரு கல்லில் இருகனிகள் என்பது இதுதானா!
எச்.எம் வி மேனேஜர் அவர்கள் , "சீர்காழி அவர்கள் இப்பாடல் இசைத்தட்டு மூலம் வரும் ராயல்டி தொகையை காஞ்சி சங்கர மடத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்" என்று கூறிய செய்தியும் தேனாக இனித்தது.
கலவையில் பிறந்த பேரொளியின் கருணை மழையில் நனைந்து அமைதியோடு அனைவரும் எந்தக் குறையும் ஏக்கமும் இன்றி வீடு திரும்பினோம்.
Source: Shri Varagooran Narayanan.