Courtesy: Sri.Mayavaram Guru
ஸமார்த்த ராமதாஸின் புனித நினைவு கமழும் ஸதாரா. அப்பகுதிக்கு இயல்பான ஏகாந்த அமைதி. வைகறையின் சாந்தத்தில் இணைந்து தோய்ந்த அதிகாலை நாலரை மணி. ஸ்ரீ காஞ்சி முனிவரின் குரல் கேட்கிறது. முதல் நாளெல்லாம் பெரியவர் மௌனமானதால் இன்று தெய்வத்தின் குரலைக் கூடுதல் ஆவலுடன் அந்த வேளையிலும் அங்கே குழுமியிருந்தவர்கள் கேட்கிறார்கள்.
" ஆமாம், வாய் மௌனமானாலும் ராத்திரி மூக்குக்கு உப்புமா வாஸனை எட்டித்து! நான் சொல்ல வேண்
டாம்னு பார்த்தாலும் என்னவோ பாவம், இங்கே இருக்கிற ரெண்டு மூணு பேருக்கு ஏற்படற சிரமத்தை எப்படி சொல்லாமயிருக்கிறதா? சாதுர்மாஸ்யம்னு நான் வந்து ஒக்காந்துட்டேன். இன்னம் ரெண்டு மாஸத்துக்கு இந்த இடத்தை விட்டுப் பொறப்படறத்துக்கு இல்லை. ஆனா இது என்ன டவுனா, பட்டணமா? இங்கே பார்த்துப் பார்த்துப் பண்ணறத்துக்கு ஜனக்கட்டு இருக்கா? இந்தச் சின்ன விஷயம் என்னைப் பாக்க வரவாளுக்குத் தெரிய வேண்டாமா? ப்ரியத்தினாலே, பக்தியினாலேதான் எங்கெங்கிருந்தோ எத்தனையோ கஷ்டப் பட்டுண்டு வரேள், வாஸ்தவம்தான். ஆனாலும் பிறத்தியாருக்கு ச்ரமம் தரலாமா? என்னை ஏதோ ஒரு வேளை பாத்துட்டு அப்படியே நகந்துண்டே இருக்க வேண்டியதுதானே? போஜனம், டிஃபன், பலகாரம்னு வந்தவாளுக்குப் பண்ணி வைக்க இந்தச் சின்ன ஊர்லே ஏது வசதி? இங்கே இருக்கப்பட்ட ரெண்டு மூணு பேர்தானே கஷ்டத்தைப் பாக்காம எல்லாம் பண்ணவேண்டியிருக்கும்? அவா நல்ல மனஸோட, ஒண்ணும் மொணமொணக்காமதான் பண்றான்னாலும், என்னைப் பராமரிக்கிறதே கஷ்டம். அது போறாம, என்னைப் பாக்க வரவா, பார்க்க வரவாளைப் பார்க்க வரவான்னு பல பேருக்கு அவாளை சுச்ருக்ஷை பண்ண வைக்கிறது ஸரியா?"
உப்புமா தாளிப்பில் சற்றுக் கார நெடி கூடுதலானது போல் பெரியவரின் குரல் த்வனித்தாலும், அன்பு என்னும் சுத்த நெய்யிலாக்கும் அது வறுபடுகிறது என்பதும் அக மூக்குக்குத் தெரிகிறது. பணிவிடையாளரிடம் எசமானரின் பரிவன்பு!
"எங்கே அந்த 'பெல்காம் ----இருக்கானா?" என்கிறது நெய்--மிளகாய்க் குரல், மிளகாயை விட்டு விட்டு!
"இதோ இருக்கேன்"---என்று தண்டம் ஸமர்ப்பிக்கிறார் 'பெல்காம்'.....
"நான் இந்த மஹாராஷ்ட்ராவிலே சுத்த ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?"
மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே வர்ஷிப்பதாக உணர்ந்த 'பெல்காம்'---தான் அடிக்கடி பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருப்பதை இன்று அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில் உற்ற பெருமிதம், அவர் 'இத்தனாம் தடவை' என்று சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது.
"ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை வர முடியறது?"
"எனக்கு ரெயில்வே உத்யோகமொல்லியோ? பாஸ்லே வரேன்"
"ஓஹோ! ஸரி! உன் பாசை இங்கே வை" என்று தமக்கு முன்
தரையைத் தட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர்.
பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார்.
இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின் திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச் பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது!.
பெரியவர் பாஸை உன்னிப்பாக கவனிக்கிறார்; பேசத் தொடங்குகிறார். நெய்யிலே மறுபடி மிளகாய் வறுபடுகிறது. " பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே. எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ் இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு உண்டுன்னு இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக் கணக்கா ஒரு கையெழுத்துக் கூட காணும்! நீ என்ன பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக் கொண்டு போய் 'சரண்டர்' பண்ணணும். இனிமேல் உன் கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே என்னைப் பார்க்க வரணும்."
ஹரஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார்.
இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச் சேர்ந்த சிஷ்யப் பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய் காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன்வருகிறார்.
இதற்குப் பதினோறாண்டுகளுக் முன் முனிவர் ஸ்ரீமடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து பணக் காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என்று இவர் நன்கறிந்தவர்தான். ஆயினும் பெரியவாளின் திருவுளக்கருத்தினர் படியே செலவழிக்கப் படவேண்டுமென்று அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே இந்த ஆயிரத்தை செலுத்துகிறார்.
பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா?
"எங்கே 'பெல்காம்'?" என்கிறார்.
திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர்.
நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது!
பெல்காமில்..........நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத்
திட்டங்களைப்பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார், பெரியவர். இடித்த
மேகமே இன்மழை கொட்டுகிறது.
அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப்
பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது.
"பணத்தை எப்படிக் கொண்டு போவே?"
"பத்ரமா எடுத்துண்டு போறேன்" என்கிறார் 'பெல்காம்'
பொறுப்புணர்ச்சியுடன் நிறைவுடனும் அபார உலகியல்
அறிவுடனும் முனிவர் சொல்கிறார்: " அதெல்லாம்
ஸரியில்லை தொலைஞ்சு போச்சுன்னா, நீயோ, அவனோ
( கொடுத்தவரோ) ஜவாப் இல்லை. நான்தான் ஜவாப்.
( கொடுத்தபிரமுகரைப் பார்த்து) ,நீ இந்தத்தொகைக்கு அவன்
பேரிலே 'ட்ராஃப்ட்' வாங்கிக் குடுத்துடு."
அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன, ஸமயோசிதம்
என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும் இப்படி அற்புத
முன்னுதாரணம் தருவதே முனிவரின் இயல்பாயிருக்கிறது.
- மஹா பெரியவாள் விருந்து, ரா.கணபதி அண்ணா
No comments:
Post a Comment