courtesy: Sri.Mayavaram Guru
மஹாபெரியவாளின் கருணை மழையில் நனைந்து ஆத்ம த்ருப்தி அடைந்தோர் எண்ணிலடங்காதோர். அவருடைய நூறு ஆண்டு அவதார காலத்தில் அத்தகைய நிகழ்ச்சிகளும் எண்ணிலடங்காதவை. அவற்றில் இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம், ரா.கணபதி அண்ணாவின் எழுத்துக்களில்.
……முடிவில்லாத அவர் பெருமைகளுக்கு முடிமணியாக உள்ள 'பரம கருணையிலே அனுக்ரஹத்துக்கு' வருவோம். த்ரௌபதியை
. அயனான அந்தத் தருணத்தில் ஐயன் ரக்ஷித்ததையும்,குசேலருக்குப் பொருட்குவை ஈந்ததையும் அவர் எடுத்துக்காட்டாககக் கூறினார். அதே சாயலில் ஒவ்வொன்று பார்ப்போம் .இரண்டாவதில் முதலாவதின் தருணமறிந்த காப்பும் கெட்டி முலாம் பூசக் காண்போம்.
உரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்று ஸ்நானம்---பூஜைகளுக்குச் செல்லாமல் சிந்தனை வசப்பட்டிருக்கிறார். சிந்தனை கலைந்ததும் ஸ்ரீமடத்து மானேஜரை அழைத்து எங்கோ ஆயிரம் மைல் கடந்து உள்ள ஒரு சாமானிய பக்தருடைய முகவரியைத் தேடிப்பிடித்து எடுத்து வரச் செய்கிறார்.ஒரு குறிப்பிட்ட தொகை சொல்லி அதை உடனே அந்த பக்தருக்குத் தந்தி மணி ஆர்டர் செய்யச்சொல்கிறார். அதற்கதிகமாக எந்த விவரமும் தரவில்லை.
ஒன்றும் புரியாமலே அவரது உத்திரவை மடத்து மேலாளர் நிறைவேற்றுகிறார்.
நாலைந்து நாட்களுக்குப்பின் அந்த பக்தரிடமிருந்து நன்றிக் கண்ணீராலேயே எழுதிய மடல் வருகிறது.
அன்று அவர் தமது தந்தையின் சடலத்தைப் போட்டுக்கொண்டு உத்தரகிரியைக்குப் பொருள் இல்லாமல் தவித்து உட்கார்ந்திருந்தாராம்.
ஸ்ரீசரணரின் சந்திரமௌளீஸ்வர பூஜைக்கு நீண்ட காலம் நிதமும் குடலை குடலையாக வில்வம் கொண்டு வந்து கொடுத்து, 'பில்வம் வைத்தா' என்றே அவரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அந்தத் தந்தை. அப்பாவிடம் அன்பு சொரிந்த அப்பெரியவாளே கதி என்று த்ரௌபதி த்வாரகாவாஸனிடம் சரணாகதி செய்தது போல் அன்று அவரது புத்திரர் செய்தாராம்! நம்பவொண்ணாத அனுக்ரஹமாகத் தந்தி மணியார்டரும் வந்து குதித்ததாம், இவர் தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகொளுக்கு விடையாக!.
இவர்களாவது முன்னறிமுகம், நெடுநாள் பழக்கமே, பெற்றிருந்தவர்கள். 'புது' பக்தர் ஒருவருக்குக் கண்ணன் குசேலருக்குச் செய்ததை ஸ்ரீசரணர் அயனான தருணத்தில் செய்த நிகழ்ச்சியைக் காணலாம்.
ஒரு நாள் பம்பாயிலிருந்து செல்வச்செழிப்புள்ள ஓர் அம்மாள் ஸ்ரீசரணரின் தரிசனத்திற்கு வந்தாள். தன் குடும்பத்தினர் செய்யும் பிஸினஸில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஸ்ரீசரணருக்கென்று எடுத்து வைத்து, உடன் கொண்டு வந்திருப்பதாகவும் அதை ஸமர்ப்பிக்க விரும்புவதாகவும் விக்ஞாபனம் செய்து கொண்டாள்.
பெரிய தொகை!
அதிசய மடாதிபதியாகத் திரவிய காணிக்கைகளை அவசியத்திற்குக் கட்டுப்படுத்தியே ஏற்கவும், மறுக்கவும் செய்தவர் ஸ்ரீசரணர்! இப்போதோ அவர் மடத்தை விட்டுத் தனியாகச் சில பணிவிடையாளருடன் இருக்கிறார். அவ்வளவு பெருந்தொகை ஏற்பாரா?
அதில் சிறிதளவே ஏற்றுக்கொண்டார். அதுவும் ரொக்கமாக ஏற்காமல், அந்த மாதரசியையே வருகிற அடியார்களுக்குச் சமைத்துப்போடச் சாமான்களாக வாங்கிப் போட்டுவிட்டுப் போகுமாறு சொன்னார்.
முழுவதையும் அவர் ஏற்காததில் அம்மையாருக்கு மிகுந்த ஏமாற்றம்
"கவலைப்படாதே! பாக்கிப் பணமும் ஏதாவது நல்ல கார்யத்துக்கு ப்ரயோஜனமாகும். சித்த ( சிறிது ) நாழி இங்கேயே இருந்து விச்ராந்தி பண்ணிண்டு போகலாம்" என்றார் ஸ்ரீசரணர்.
அம்மாள் அவ்வாறே தங்கினார்.
சிறிது நேரத்தில் ஒரு புது பக்தர் வந்தார். தம்மை முதலியார் வகுப்பைச்சேர்ந்தவர்களாக அறிமுகம் செய்து கொண்டார். அவருடைய தோற்றத்திலேயே துக்கத்தின் அழுத்தமும் அதை விஞ்சும் பயப்பிராந்தியும் பிரதிபலித்தன.
ஸ்ரீசரணர் சந்தணத்தின் தண்மையுடன் அந்த வெந்த நெஞ்சினரை அருகழைத்து அமர்த்திக்கொண்டார்.
"ஒனக்கு என்னப்பா வேணூம்?" என்று பன்னீராகச் சீதம் சொரிந்து வினவினார்.
"சின்னக் கம்பெனி ஒண்ணுலே உபாயமா ( சிறியதான ) ஒரு வேலையிலே இருக்கேனுங்க. சம்பளம் பத்தறதே இல்லீங்க. .கடனா. வாங்கிக்கிட்டே போயி, வட்டி கூடக் கட்டமுடியல்லேங்க….." என்று மேலே பேசவொண்ணாது வந்தவர் குழறினார்.
"கடன்காரன் பிடுங்கல் தாங்கமுடியாம வந்திருக்கியாக்கும்!" என்று நெஞ்சார்ந்த பரிவுடன் பரமர் கேட்டார்." இப்ப இந்த க்ஷணத்துல என்ன நெலவரம்? தயங்காம பயப்படாம சொல்லு'" என்று அபயப் பிரதானம் செய்து ஊக்கினார்.
அழுகை ஊளை வெடிக்கும் குரலில் வந்தவர் " ஈட்டிக்காரன் தொரத்திக்கிட்டே வந்திருக்காங்க! இங்கேயேதான் வாசல்ல நிக்கறானுங்க!" என்றார்.
கடன் தொகை எவ்வளவு என்று அவரைக் கேட்டு ஸ்ரீசரணர் தெரிந்து கொண்டார். அம்மாள் கொண்டு வந்தது அதற்கு மிக அதிகமாயிருந்தது. ஸ்ரீசரணர் தம்மைச் சேர்ந்தோரின் பொருட்டாக அனுமதித்த பொருட்களை வாங்கத் தேவைப்படுவதைக் கூட்டினாலும் மிகுதி நின்றது.
அப்புரம் என்ன? பம்பாய் தனிகையின் திரவியம் முதலியார் கைக்கு---அவர் கையிலிருந்து பட்டாணியன் கைக்குப் போவதற்காக---சேர்ந்தது
ஸ்ரீசரணர் அம்மாளை நோக்கி இன்னருளுடன் " நான் கேட்ட ஸாமான்-----சப்பட்டை வாங்கினவிட்டும் மீதி நிக்கக் கூடியதையும் இவர் கையிலேயே போடு. கடன் அடைஞ்சா போதுமா? மாஸம் முடியக் குடும்பம் சாப்பிட்டாகணுமே? எல்லாம் ஒன் உபாயமாகவே இருக்கட்டும்!" என்றார்.
எத்தனை கரிசனம், அங்கலாய்ப்பு!
அம்மாளும் அவ்விதமே செய்தாள்.அவளது மனம் நிரம்பியிருந்தது பார்த்தாலே தெரிந்தது.
நிறைவை மேலும் நிறைவித்து நிறையறிவாளர், நிறையருளாளர், " ஸமய ஸஞ்சீவியா வந்தே! ஆபத்துக் காலத்திலே வந்து இவரை விடுவிச்சே! ரொம்பப் புண்ணியம், நன்னா இருப்பே!' என்று ஆசிமொழிந்தார், பொழிந்தார்.
நிறை நன்றியில் கண் நிறைந்து விம்மிக்கொண்டிருந்த முதலியாரிடம், " ஸ்வாமி ஒனக்காகவே எங்கேயிருந்தோ இந்தப் புண்ணீயவதியைக் கொண்டு வந்து சேத்து ரக்ஷிச்சிருக்கார். அவரை ஒரு போதும் மறக்காம கஷ்டமோ, நஷ்டமோ, அவர் தாங்கிக்கிறார்ங்கற நம்பிக்கையோட, முடிஞ்ச மட்டும் சிக்கனமா வருமானத்துக்குள்ளயே செலவைக் கட்டுப்படுத்திண்டு கடன் கஷ்டத்திலே மாட்டிக்காம இருக்கப் பாருப்பா!" என்று ஹிதோபதேசம் செய்தார். எத்தனை ஹிதமாக!
கடன் பட்டவர், பாரத்தின் அழுத்தம் நீங்க நிம்மதியாக விடைபெற்றார்.
அவர் சென்றபின் பெரியவாள் "அப்பாடா!" என்று சொன்னதுண்டே! முன்னறிமுகமில்லாத ஒருவருக்கு ஸமய ஸஞ்சீவியாக உதவியது மாத்திரமின்றி அவரது பாரத்தையும் ஸ்ரீசரணரே எவ்வளவுக்குப் பகிர்ந்து கொண்டு இப்பொது சுமை நீக்கத்தில் நிம்மதி காண்கிறார் என்பதைத் தெரிவிப்பதாக இருந்தது அந்த ஆசுவாச அப்பாடா!
ஸகல ஜீவர்களுடனும் அப்படி ஒன்றிக் கலந்த அன்பு மூர்த்தி அவர்! .
No comments:
Post a Comment