Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Thursday, November 14, 2013

குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை-மஹாபெரியவா

Courtesy: Sri.Mayavaram Guru

அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் 'டச்' பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் 'டச்'பண்ணவேண்டாமென்று 'வார்ன்'பண்ணுவதற்கே 'டச்' பண்ணுகிறேன். ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பேர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன. 'ஸெளந்தர்ய லஹரி'யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் 'டச்' பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள். அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை 'அன்டர்லைன்' பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.

நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்? அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.

ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – "யததாமபி கச்சிந்" என்று பகவான் சொன்னாற் போல. அதனால்தான் 'அதற்கான யோக ஸாதனை பண்ணினால்' என்று அழுத்திச் சொன்னது. 'பண்ணினால்' என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்! இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது] – லேசில் நடக்கிற விஷயமில்லை.

சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள்!

பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிறவனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான். ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை. பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, 'பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்! என்று 'போனஸ்' மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள். ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள்.

இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை.

அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது 'ரைஸ்' ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்! அவ்வளவுதான். அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை. அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது. இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.

லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள். ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது? ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.

'பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷதரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? 'என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.

அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை. காம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான். 'யோகம்' என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது. என்ன சொல்கிறாரென்றால்,

நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **

என்கிறார். என்ன அர்த்தமென்றால் 'இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, 'நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?' என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்' என்கிறார். ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், 'நம்மால் இதில் ஜயிக்க முடியாது' என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம். என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது 'அபிக்ரம நாசம்'- 'முயற்சி வீணாவது'- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது. 'ப்ரத்யவாயம்'- 'விபரீத பலன்'- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் "விட்டுவிடுகிறேன்"என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை. 'ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?'என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்! ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.

அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது. பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை. ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!

நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா? அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன். ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.

நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம். பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, 'இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு' என்று சொன்னால் அர்த்தமுண்டு. 'திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்' என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?

ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] 'ஸர்பென்ட் பவர்'முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி 'க்ளாஸ்' நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, 'மூலாதாரா, ஸஹஸ்ராரா' என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது. எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருதாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது. சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது. அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் "ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!" என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;' வார்னிங்'கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….

உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. 'தாங்க்' தான் பண்ணுகிறேன். 'யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது' என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார். அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.

அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது. இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை. ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தைச்] சொன்னேன்.

இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்: 'நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது. இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்' என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு. குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.

க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், 'இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர்ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.

ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்: மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? 'ஷாக்'தான் அடித்துக் கஷ்டப்படுவோம். குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top