Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, November 30, 2013

பிரகஸ்பதி கொடுத்த வரம் - மஹா பெரியவா

Courtesy: Sri.Mayavaram Guru

"இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது.அரிசி மூட்டை என்ன விலை?"


"நம்ப நிலத்துல வெளஞ்சது ஸ்வாமி! ரொம்ப உயர்ந்த ரகம்.. உங்களைப் போல் மகான்கள் சாப்பிடற விஷயத்துல நான் மத்தவாளை நம்பறதில்லே.. காய்கறிகளும் அப்படித்தான். ஒரு சொத்தை,அழுகல் இல்லாம நானே பார்த்து வாங்கினேன். மளிகை சாமானும் அப்படித்தான்..முதல் தரம்!"

மௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மகான்.அவன் பேசி முடித்ததும் "அது போலத்தான் அர்ச்சனை பூக்களும், வில்வத்திலேயும், துளசியிலேயும். எத்தனை ஓட்டை தெரியுமா! நெறைய அழுகல் பூ இருந்தது. இவன் வீட்டு அர்ச்சனையில் தோஷமுள்ள பூக்கள்தான் இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா? தேவதைகள் நம்ப வேண்டாமா? பகவானோட நெருக்கத்தை நாடறவா எல்லாத்திலேயும் கவனமா இருக்கணும்" என்றார்.

வாழ்க்கையிலே முன்னேற எத்தனையோ பேர் உதவி செய்யறா.. அவாளுக்கு கிரகங்களும் நிறைய உபசரணை பண்றா.

ஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காத்தும், நித்திய கர்மாக்களுக்கு மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம் உபசரிக்க நேரமில்லாமப் போயிடறது. சிரமம் வந்தாதான் பகவானை நினைக்கறதுங்கிறதை மாத்திக்கணும்.

"வீட்டுலே யாருமே இல்லே…பொழுது போகலே.."ன்னு தவிக்கற நேரங்கள்லே, பகவானண்டே உட்கார்ந்து காதுக்கு இனிமையா நாலு ஸ்லோகம், பாட்டு சொல்லுங்களேன். மனசு எத்தனை விச்ராந்தியாறதுன்னு புரியும்.

தகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன், வேளா வேளைக்கு அன்னமும், கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது மட்டும் ரட்சணை இல்லை. அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுக்களை தினமும் ஒரு அரைமணி சம்பாஷிக்கணும். அப்படிப்பட்டவனை பிரம்மா
ஆசிர்வாதம் பண்றார்.

தாயார், குடி இருந்த கோவிலில்லையா? இதேபோல அன்பாய் இருக்கிறவனுக்கு அடுத்த பிறவியில் பூமி சொந்தமாய் அனுபவிக்கும் போகம் கிடைக்கும். ஏன்னா பூமி தேவி அப்படி அனுக்ரஹம் பண்றா.

குருவை மரியாதையா நடத்தறவனுக்கு,மத்தவாளுக்கு படிக்க ஒத்தாசை பண்றவாளுக்கு,அடுத்த பிறவியில் படிப்பு நன்றாக வரும். பிரகஸ்பதி அப்படி வரம் கொடுத்திருக்கார்.

Thursday, November 28, 2013

Dhaanam - Periyava

Courtesy: Sri.Mannargudi Sitaraman Srinivasan

எப்படி தான, தர்மம் செய்ய வேண்டும்? மஹா பெரியவா
மனிதவர்க்கத்துக்கு என்று ப்ரத்யேகமாக இருக்கிற பெரிய குறைபாடு லோபித்தனம்தான் என்று தெரிகிறது. இந்த்ரிய மனோ நிக்ரஹம் பண்ணினவர்களாகவும், க்ரூர ஸ்வபாவம் துளிக்கூட இல்லாமலும்கூட மனிதர்கள் தங்களை உயர்த்திக்கொண்டு விடலாம். ஆனால் இப்படிப்பட்டவர்கள்கூடப் பொருளை எடுத்துக் கொடுப்பது, தானம் செய்வது என்றால் கொஞ்சம் பின்னேதான் நிற்கிறார்கள். பொருளில் பற்றை விடுவது தான் மநுஷ்யனுக்கு மஹா கஷ்டமாக இருக்கிறது. இதனால்தான் மனிதனுக்கு முக்யமாக '' தத்த - தானம் பண்ணு '' என்று வேதத்தின் முடிவில் இருக்கப்பட்ட உபநிஷத்தே உபதேசம் பண்ணுகிறது.
நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்த்ரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். சிலர் (சிவ) பஞ்சாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் (நாராயண) அஷ்டாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியே (முருகனுக்கான) ஷடக்ஷரீ, ராம மந்த்ரம், க்ருஷ்ண மந்த்ரம், அம்பாள் மந்த்ரங்கள் என்று பல இருக்கின்றன. இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும், மநுஷ்ய ஜன்மா எடுத்த ஸகலருக்கும், வேத சிரஸான உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்த்ரம் '' தத்த : - தானம் பண்ணு; நல்ல கொடையாளியாக இரு'' என்பதுதான். நம் இஷ்டம், இஷ்டமில்லை என்பதற்கெல்லாம் இடமில்லாமல், இது நமக்கு வேதம் போட்டிருக்கிற ஆஜ்ஞை! மற்ற மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். இந்த ''தத்த''மந்த்ரத்தைக் காரியத்தில் பண்ணிக் காட்ட வேண்டும்.
இந்த உபதேசம் வருகிற ப்ருஹதாரண்யக உபநிஷத் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்தது. நாலு வேதங்களுக்குள் இன்று தேசம் முழுக்க ரொம்பவும் அநுஷ்டானத்திலிருப்பது யஜுர்வேதம்தான். அதில் சுக்லம், க்ருஷ்ணம் என்று இரண்டு பிரிவு உண்டு. வட இந்தியா முழுவதிலும் பெரும்பாலும் அநுஷ்டானத்தில் இருப்பது சுக்ல யஜுஸ்; தென்னிந்தியாவில் ரொம்பவும் அநுஸரிக்கப்படுவது க்ருஷ்ணயஜுஸ். சுக்ல யஜுஸைச் சேர்ந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்திலிருந்து தானத்தைப் பற்றி சொன்னேன். இதேமாதிரி க்ருஷ்ண யஜுஸில் உள்ள தைத்திரீயோபநிஷத்திலும் (1.11.3) தானத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.
அது என்ன சொல்கிறது? ''சிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும். அசிரத்தையோடு கொடுக்கக் கூடாது'' என்கிறது. ஸ்ரீயை (அதாவது செல்வத்தை) க் கொடுக்கும்போதே மனஸை ஸ்ரீயாக (லக்ஷ்மீகரமாக, மஙளமாக, ஸந்தோஷமாக) வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும் என்கிறது. முகத்தைச் சுளிக்காமல் கொடுக்க வேண்டும். ஸ்ரீயின் நிறைவுதான் 'ச்ரேயஸ்' என்பது. மனஸில் ஸ்ரீயுடன், மனமலர்ச்சியுடன், கொடுத்தால் இந்த தானத்தின் பலனாக 'ச்ரேயஸ்' கிடைக்கிறது. இன்னம் ஜாஸ்தி கொடுப்பதற்கு நம்மால் முடியவில்லையே என்று வெட்கத்தோடு கொடுக்க வேண்டும். ஹ்ரீயுடன் கொடு என்கிறது உபநிஷத். 'ஹ்ரீ' என்றால் வெட்கம், லஜ்ஜை என்று அர்த்தம். புருஷ ஸூ¨க்தத்தில் பகவானுக்கு ஹ்ரீ, ஸ்ரீ (லக்ஷ்மி) என்று இரண்டு பத்னிகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இங்கேயும் லக்ஷ்மியை, அதாவது பொருளைத் தரும்போது, ''ஸ்ரீயோடு கொடு'', ''ஹ்ரீயோடு கொடு'' என்று சொல்லியிருக்கிறது. வெட்கம் இரண்டு காரணத்துக்காக. ஒன்று, இன்னும் ஜாஸ்தி தரமுடியவில்லையே என்று; இரண்டாவது, தானம் பண்ணுவது வெளியிலேயே தெரியக்கூடாது என்ற கெனரவமான கூச்சம். வெளியில் தெரிந்தால் மற்றவர்களும் 'தேஹி' என்று பிடுங்குவார்களோ என்பதால் அல்ல. இவன் தர்மிஷ்டன் என்று நாலு பேருக்குத் தெரிந்து நம்மை ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்தால் நமக்கு அஹம்பாவம் வந்துவிடும். அது தானத்தின் பலனையெல்லாம் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்.
தானம் பண்ணிவிட்டு நாம் நம் பெயரைப் பேப்பரில் போட்டுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், 'எப்படியாவது நாலு பேருக்கு நாம் தானம் பண்ணினதை நைஸாகத் தெரியப்படுத்த வேண்டும்' என்கிற எண்ணம் உள்ளூர இருந்தால் அதுவும் தோஷம்தான். அந்த நாலுபேர் நாம் தானம் பண்ணினதற்காக ஒரு பங்கு கொண்டாடினால், அதோடு, ''பண்ணின தானத்தை வெளியிலேயே தெரிவிக்காமல் எத்தனை உத்தமமான குணம்!'' என்று பத்து பங்கு ஸ்தோத்திரம் பண்ணுவார்கள். மனஸுக்குள் நாம் இந்த ஸ்தோத்திரத்துக்கு ஆசைப்பட்டுவிட்டால், பேப்பரில் போட்டுக் கொள்வதைவிட இதுவே பெரிய தோஷமாகிவிடும். ஆனாலும் இப்படியெல்லாம் ஆசை, கீசை தலைதூக்கிக்கொண்டுதானே இருக்கிறது? அது தலையைத் தூக்கவொட்டாமல் அழுத்தி வைக்க என்ன பண்ணலாம்? ஒன்று பண்ணலாம் என்று தோன்றுகிறது. அதாவது, 'தானம் வாங்குகிறவன் நமக்கு அந்நியன் இல்லை; நம்மவனேதான்' என்ற உணர்ச்சியை நன்றாக வளர்த்துக்கொண்டுவிட்டால் கொடுத்ததை வெளியில் சொல்லவே தோன்றாது.
நம் குழந்தைக்கு அல்லது நெருங்கிய பந்துக்களுக்கு நாம் ஏதாவது செய்தால் அதை வெளியில் விளம்பரம் செய்து கொள்வோமா? அதே மாதிரிதான் எவரும் நமக்கு பந்துதான். ஸகல ஜந்துக்களும் ஒரே பார்வதி பரமேஸ்வராளின் குழந்தைகள்தான். அதனால் நாம் 'தானம் கொடுக்கிறோம்' என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். 'பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்' என்று அடங்கி, பவ்யமாகக் கொடுக்க வேண்டும். எங்கே இதிலும் ஓர் அஹங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும். '' பியா தேயம் '' என்கிறது உபநிஷதம். ''பியா'' என்றால், 'பயந்துகொண்டு' என்று அர்த்தம். ஸாதாரணமாக, வாங்குகிறவன்தான் பயந்து கொண்டு நிற்பான்; கொடுக்கிறவன் அதட்டிக்கொண்டு கொடுப்பான். வாஸ்தவத்தில் கொடுக்கிறவன்தான் பயப்பட வேண்டும் என்கிறது உபநிஷத். கடைசியாக, 'ஞானத்தோடு'கொடுக்க வேண்டும் என்று முடிக்கிறது.
ஸநாதன தர்மமமான நம் மதத்தில், எந்த ப்ராத்தனைக்கும் முடிவில், லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து" அதாவது வையகமும் துயர் தீர்கவே என்றுதானே முடிக்கிறோம்.


Tuesday, November 26, 2013

பெரியவா சொன்ன பரிகாரம்..

Courtesy: Sri.Mayavaram Guru

பரம சாதுவான ஒருத்தர் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவா முன் நெருஞ்சான் கிடையாக விழுந்தார். பேச முயன்றார். தொண்டை அடைத்துக் கொண்டது, சமாளித்து சொல்லத் தொடங்கினார்.
"நான் ஒன்னுமே செய்யலே… இகத்துக்கும் வழி செய்யலே..சம்பாத்தியம் கிடையாது. பரத்துக்கும் ஒன்னும் பண்ணலே. கோயில் குளத்துக்கும் போனதேயில்லை. சந்தியாவந்தனம் கூடப் பண்ணினதில்லை. இப்போ நினைச்சாலே பயமாயிருக்கு..."
பெரியவா சொன்னார்கள்:
"ஆறு பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திலே போய்த் தங்கு. எத்தனையோ வீடு, சும்மா பூட்டி வெச்சிருக்கா. ஒரு வீட்டை புடிச்சு, நன்னா பராமரிக்கிறேன்னு சொல்லு.
"தினமும் ஆற்றில் ஸ்நானம் செய்து ஸ்ஹஸ்ர காயத்ரி ஜபம் பண்ணு. இது பரத்துக்கு.
"அந்த கிராமத்திலுள்ள போஸ்டாபீஸிலே போய் உட்கார்ந்த்துக்கோ. லெட்டர் எழுதத் தெரியாதவா, மணியார்டர் பாரம் எழுதத் தெரியாதவா, ரெஜிஸ்டர்-சேவிங்க்ஸ் செய்யத் தெரியாதவா நிறையப் பேர் வருவா. நீ எழுதிக் கொடு. அவா எதாவது கொடுப்பா. அது போறும், இகத்துக்கு…
"கூடியவரை தப்புப் பண்ணாமலும், பொய் பேசாமலும் முடிந்த அளவு மெளன விரதம் இருந்துண்டு வா…"
வந்த அடியார்க்கு ரொம்பவும் திருப்தி. தன்னால் செய்யமுடியாத பரிகாரங்களை செய்யச் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் மறைந்தது.
பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தத் தெரியும்; எம்.ஏ. வகுப்புப் பாடமும் எடுக்கத் தெரியும்.

Sunday, November 24, 2013

அல்ஜீரியாவில் அபயமளித்தார் மஹா பெரியவர்

Courtesy:Sri.Mayavaram guru


பின் தங்கிய நாடாகிய அல்ஜீரியாவில் ரயில்வேயை மேம்படுத்த திட்டம் வகுத்தார்கள். அதற்கு அந்நாட்டு ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த்து நம் இந்திய இரயில்வேத்துறைப் பொறியாளர்களை. (எல்லா நாடுகளிலும் வெறியாளர்கள் இருப்பார்கள்; ஆனால் பாரதத்தில் தான் பொறியாளர்கள் கிடைப்பார்கள்!)

பல கோடி ரூபாய் திட்டம்; பல் வகையான இயந்திரங்கள் !

பொறியாளர்களும் பணியாளர்களுமாக அந்த நாட்டில் 1986 மே 17ம் தேதியன்று காலடி வைத்தோம்.

முதுனிலைப் பொறியாளனான என்னிடம் , இயந்திரங்ளை இயக்குவது, செப்பனிடுவது, சரி பார்ப்பது என்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

எங்கள் போதாத காலம் போலிருக்கிறது... இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்தன; வாரம் தவறாமல் ஒரு விபத்து ! இந்தத் தொழிலாளிக்குத் தலையில் அடி; அவர் கீழே விழுந்து கால் உடைத்துக்கொண்டார்; அந்தப்பகுதி இடிந்து விழுந்தது...! என்பன போன்ற "மகிழ்ச்சிகரமான " செய்திகள்.

குறித்த காலத்திற்குள் வேலையை முடித்துவிட முடியுமா என்பது ஒருபுறமிருக்க, எங்கள் குழுவைத்தேர்ந்தெடத்த இந்திய இரயில்வே வாரியத்தினர் எங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற மனக்குறையும் சேர்ந்துகொண்டது.

இனி, எங்ளுக்கு தெய்வமே துணை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோ.

மேம்பாட்டுத்திட்; முதன்மை அதிகாரி திரு. செல்வம் அவர்களுக்கும், தலைமை செயற்பொறியாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் கலக்கம் வந்துவிட்ட்து

"ராமச்சந்திரன் , என்ன செய்யலாம் ? "

" தெய்வமே துணை..."

" ரொம்ப சரி. நாங்களும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்றோம். இப்போ, நீங்கள் தெய்வத்தைக் காட்டுங்கள்...."

" உங்களுக்கே தெரியும் சார் ! உங்கள் அறையில் அந்த ஒரு படத்தை மட்டும் தானே வைத்திருக்கிறீர்க. அந்த நடமாடும் தெய்வம் தான் நமக்குத்துணை..."

" வெரிகுட் ஜடியா !"

அடுத்த நாளே ஒரு நீண்ட கடிதம் எழுதினோம் பரமாச்சாரியாருக்கு எங்கள் இன்னல்கள், துயரங்கள், சோகங்கள், இயந்திரக்கோளாறுகள, விபத்துகள்,... திட்டம் குறித்த காலத்தில் நிறைவேறி, வெற்றியுடன் தாய்நாடு திரும்பவேண்டும் – என்ற பிரார்த்தனையோடு.

பதினைந்தாம் நாள் , ஆசீர்வாத கடிதமும் பிரசாதமும் வந்தன – காஞ்சி ஸ்ரீ மடத்திலிருந்து.

சனிக்கிழமைதோறும், மாலையில் எங்கள் முகாமில் இறைவழிபாடு நடை பெறும். அந்தவார பூஜையின் போது எல்லாருக்கும் பெரியவாள் அனுக்ரஹித்த பிரசாதம் கொடுத்தோம். எல்லார் நெற்றியிலும் திருநீறு ஜொலித்தது.

என்ன விந்தை !!

அதற்குப்பின் ஒரு சிறு விபத்துகூட ஏற்படவில்லை! இயந்திரங்கள் இயந்திரகதியில் சுழலத்தொடங்கின. தொழிலாளர்கள் பயமில்லாமல் பணி செய்தார்கள்.

மேம்பாட்டுப்பணி, பற்பல இடங்களில் (site) நடைபெற்றது. ஒவ்வோர் இடத்திலும் வேலையைத் துவக்கும்முன், எனக்கு நிச்சயமாக அழைப்பு வரும் – பூஜை செய்வதற்காக.

குறிப்பிட்டிருந் காலத்திற்கு முன்னதாகவே, எங்கள் பணி சிறப்பாக நிறைவேறியது. பிரெஞ்சு, அல்ஜீரிய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக எங்கள் குழுவைப் பாராட்டினர்.

பாராட்டைக் கேட்டுக்கொள்ளும் கடமை எங்களுக்கு இருந்தது.

உரிமையாளர் காஞ்சிபுரத்திலிருதார் !

அது எங்களுக்கு மட்டுமே தெரியும்!

Friday, November 22, 2013

அரைகுறை-கர்வம் முழுமை-பணிவு! காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் [தினமணி 05-04-2013]

Courtesy: Sri.Mayavaram Guru

அரைகுறைப் படிப்பாளிகள்தான் வித்யா கர்வம் கொள்வர். முழுதாகக் கற்றறிந்தவர்கள் கர்வம் என்னவென்றே தெரியாமல் எளிமையாகவும் பணிவாகவும்தான் இருப்பார்கள். நிறைகுடம் தளும்பாது என்று பர்த்ருஹரி சொன்ன சுலோகம் ஒன்று உள்ளது.
ஏதோ கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த காலத்தில் சிற்றறிவினனாக இருந்த நான், மதம் பிடித்த யானை மாதிரி நானே ஸர்வக்ஞன் (அனைத்து அறிவினன்) என்று கர்வப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்புறம் நல்ல அறிவாளிகளுடைய ஸத்ஸங்கம் கிடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மேலும் தெரிந்து கொண்ட பிறகுதான் நான் ஒன்றும் தெரியாத மூர்க்கன் என்ற நல்லறிவு உண்டானது. ஜுரமாக என்னைப் பிடித்திருந்த மதமும் - கர்வமும் - போச்சு என்கிறார்.
அந்த ஜுரம் போய், வித்யாகர்வம் போனதோடு, தனது குல கர்வமும் போய், தான் ஒரு பிராமணன், ராஜா} க்ஷத்ரியன் என்பதையும் பொருட்படுத்தாமல் ராஜா அஜாதசத்ருவிடம் உபதேசிக்கும்படி கேட்டுக் கொண்டார் பர்த்ருஹரி.
"இப்படி வழக்கமே இல்லையே'' என்று நடைமுறையை ஒட்டி முதலில் மறுத்த அஜாதசத்ரு, பின்னர், அவருக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து உபதேசம் கொடுக்கிறார், வாய் வார்த்தையாய் மட்டும் இல்லாமல் ஒரு நாடகம் போலவே செய்து காட்டினார். இது போல் இன்னொரு கதை உள்ளது. ப்ரவாஹணர் என்ற ராஜரிஷி. அவரிடம் போய் கர்வபங்கம் பெற்ற ச்வேதகேது தன் தந்தையிடம் திரும்பி வந்து குமுறினான். அதற்கு அவன் அப்பா, சிறிதும் கோபப்படாமல், ""ராஜாவுக்குத் தெரிந்தது தனக்குத் தெரியவில்லை என்றால், உடனே அவனிடம் ஓடிப்போய் அதை தானம்பெற்று கற்றுக் கொள்வதுதானே'' என்றார். ஒரு பிராம்மணர் க்ஷத்ரியனிடம் சீடனாவதற்கு தயாராக இருக்கிறார். மகனிடம் "சரி, நாம் அங்கே போய் சிஷ்யராக இருந்து கற்போமே. வா' என்கிறார்.
ஸத்வித்யையில் இருந்த ஆர்வத்தால், தனக்குத் தெரியாததை தெரிந்தவரிடம் போய்க் கற்றுக் கொள்பவன்தான் அந்தப் பிள்ளையும். இருந்தாலும் இள ரத்தம் இல்லையா? அதனால் இங்கே, தான் யாரிடம் மான பங்கப்பட்டோமோ அவரிடமே போய் எப்படி கற்றுக் கொள்வது என்ற ரோஷம் அவனுக்கு வந்துவிட்டது. தந்தையிடம், ""நீங்களே போய்க் கொள்ளுங்கள்'' என்று சொல்லி, தான் போகாமல் நின்றுவிடுகிறான். தந்தையும் மான அவமானம் பார்க்காமல் தான் மட்டும் போகிறார்.
பொதுவாக, வித்யார்த்தி என்று மாணவனுக்குப் பெயர் சொல்ல ஒரு காரணம் உண்டு. கல்வியையே செல்வமாக நினைத்து, அவன் மேலும் மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு அந்தச் சொத்தினைச் சேர்த்துக் கொள்ள வேண்டியவன் என்பதுதான் அது. அதுபோல் அவன்தான் கர்வ குணம் இல்லாத பணிவுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திச் சொல்வது. விநயன் என்பதால், விநீதன் என்றே அவனுக்கு ஒரு பெயர். ஆனால் இங்கோ சீடனின் வயதில் உள்ள ச்வேதகேது ஒரு முறைப்பாகவும், அந்த முறைப்பில் வித்யை கற்பதில் அலட்சியமாகவும் இருக்க, குரு ஸ்தானம் வகிக்கும் அவனுடைய தந்தையோ விநிதராகவும் வித்யார்த்தியாகவும் இருக்கிறார்.
மேல்நாட்டில் சொல்கிறார்கள், ல்ழ்ங்ஹஸ்ரீட்ங்ழ் பிரயோஜனமில்லை, ற்ங்ஹஸ்ரீட்ங்ழ் தான் வேண்டும் என்று. ப்ரீச்சர் என்றால் மற்றவருக்குப் பிரகடனப்படுத்துகிறவர். அப்படிப் பண்ணுவதையே நோக்கமாகக் கொண்டவர். டீச்சர் என்றால் தம்முடைய வாழ்க்கையிலேயே பாடத்தைப் பின்பற்றி ஒழுகிப் பிறருக்கும் எடுத்துக் காட்டுகிறவர். ப்ரசார என்ற வார்த்தையை வைத்தே ல்ழ்ங்ஹஸ்ரீட்-ட் ஏற்பட்டது, காட்டுவது என்பதற்கான க்ரீக் வார்த்தையின் அடியாக ற்ங்ஹஸ்ரீட் ஏற்பட்டது என்கிறார்கள். ["Preacher பிரயோஜனமில்லை Teacher தான் வேண்டும்"............" ப்ரசார என்ற வார்த்தையை வைத்தே preach -ம் ஏற்பட்டது, காட்டுவது என்பதற்கான க்ரீக் வார்த்தையின் அடியாக teach ஏற்பட்டது என்கிறார்கள்." ....... ]

காட்டுவது என்றால் வழிகாட்டுவதுதான், தாமே நடந்துகாட்டி ஒரு பிரத்யட்ச உதாரணமாக இருந்து காட்டுவதுதான்!

Wednesday, November 20, 2013

பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்...

Courtesy: Sri.Mayavaram Guru

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்
காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை
கி.வா.ஜ-விடம், "தமிழ் என்றால் என்ன?" என்று கேட்டார்.
மேலும் "சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி
என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது
சொல்லுங்கள்!" என்கிறார்.
கி,வா.ஜ. அடக்கமாக,"பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!"
என்றார்.
"எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து 'ழ' என்பது
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,
குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி 'ழ' வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான 'ழ'வைத் தம்மிடத்தில்
உடையது 'தமிழ்' (தமி+ழ்) என்று சொல்லலாமா" என்கிறார்.
உடனே கி.வா.ஜ., "இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி
எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!" என்றாராம்.
சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
"யாமா மாநீ யாமா மா" என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்
பிரமித்துப் போனார்கள்.
அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,
முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை
என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?" என்று கேட்டு,
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.
அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,
"முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு
காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது
காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை
வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு
முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..
ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்
போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!"
என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் "என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்
கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும்
கோத்துத் துதித்திருக்கிறாரே!" என்று சொல்லிச் சொல்லி
மகிழ்ந்தார்.
எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து
தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

Monday, November 18, 2013

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ? - மஹா பெரியவா

Courtesy: Sri.Mayavaram Guru

நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம் என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?இந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மிடம் ஒரு சுவாசம்கூட இருக்கமுடியுமா. ஒருநாள், இதனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் நமக்குக் கிடைக்கும்.

நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக் குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். நமக்கு அகம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அகம்பாவம்தான். எனவே அகம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளேயே வேண்டி நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.

Saturday, November 16, 2013

தெய்வத்தின் குரல்: சுத்த நெய்யிலாக்கும் அது வறுபடுகிறது

Courtesy: Sri.Mayavaram Guru

ஸமார்த்த ராமதாஸின் புனித நினைவு கமழும் ஸதாரா. அப்பகுதிக்கு இயல்பான ஏகாந்த அமைதி. வைகறையின் சாந்தத்தில் இணைந்து தோய்ந்த அதிகாலை நாலரை மணி. ஸ்ரீ காஞ்சி முனிவரின் குரல் கேட்கிறது. முதல் நாளெல்லாம் பெரியவர் மௌனமானதால் இன்று தெய்வத்தின் குரலைக் கூடுதல் ஆவலுடன் அந்த வேளையிலும் அங்கே குழுமியிருந்தவர்கள் கேட்கிறார்கள்.
" ஆமாம், வாய் மௌனமானாலும் ராத்திரி மூக்குக்கு உப்புமா வாஸனை எட்டித்து! நான் சொல்ல வேண்

டாம்னு பார்த்தாலும் என்னவோ பாவம், இங்கே இருக்கிற ரெண்டு மூணு பேருக்கு ஏற்படற சிரமத்தை எப்படி சொல்லாமயிருக்கிறதா? சாதுர்மாஸ்யம்னு நான் வந்து ஒக்காந்துட்டேன். இன்னம் ரெண்டு மாஸத்துக்கு இந்த இடத்தை விட்டுப் பொறப்படறத்துக்கு இல்லை. ஆனா இது என்ன டவுனா, பட்டணமா? இங்கே பார்த்துப் பார்த்துப் பண்ணறத்துக்கு ஜனக்கட்டு இருக்கா? இந்தச் சின்ன விஷயம் என்னைப் பாக்க வரவாளுக்குத் தெரிய வேண்டாமா? ப்ரியத்தினாலே, பக்தியினாலேதான் எங்கெங்கிருந்தோ எத்தனையோ கஷ்டப் பட்டுண்டு வரேள், வாஸ்தவம்தான். ஆனாலும் பிறத்தியாருக்கு ச்ரமம் தரலாமா? என்னை ஏதோ ஒரு வேளை பாத்துட்டு அப்படியே நகந்துண்டே இருக்க வேண்டியதுதானே? போஜனம், டிஃபன், பலகாரம்னு வந்தவாளுக்குப் பண்ணி வைக்க இந்தச் சின்ன ஊர்லே ஏது வசதி? இங்கே இருக்கப்பட்ட ரெண்டு மூணு பேர்தானே கஷ்டத்தைப் பாக்காம எல்லாம் பண்ணவேண்டியிருக்கும்? அவா நல்ல மனஸோட, ஒண்ணும் மொணமொணக்காமதான் பண்றான்னாலும், என்னைப் பராமரிக்கிறதே கஷ்டம். அது போறாம, என்னைப் பாக்க வரவா, பார்க்க வரவாளைப் பார்க்க வரவான்னு பல பேருக்கு அவாளை சுச்ருக்ஷை பண்ண வைக்கிறது ஸரியா?"
உப்புமா தாளிப்பில் சற்றுக் கார நெடி கூடுதலானது போல் பெரியவரின் குரல் த்வனித்தாலும், அன்பு என்னும் சுத்த நெய்யிலாக்கும் அது வறுபடுகிறது என்பதும் அக மூக்குக்குத் தெரிகிறது. பணிவிடையாளரிடம் எசமானரின் பரிவன்பு!
"எங்கே அந்த 'பெல்காம் ----இருக்கானா?" என்கிறது நெய்--மிளகாய்க் குரல், மிளகாயை விட்டு விட்டு!
"இதோ இருக்கேன்"---என்று தண்டம் ஸமர்ப்பிக்கிறார் 'பெல்காம்'.....
"நான் இந்த மஹாராஷ்ட்ராவிலே சுத்த ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?"
மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே வர்ஷிப்பதாக உணர்ந்த 'பெல்காம்'---தான் அடிக்கடி பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருப்பதை இன்று அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில் உற்ற பெருமிதம், அவர் 'இத்தனாம் தடவை' என்று சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது.
"ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை வர முடியறது?"
"எனக்கு ரெயில்வே உத்யோகமொல்லியோ? பாஸ்லே வரேன்"
"ஓஹோ! ஸரி! உன் பாசை இங்கே வை" என்று தமக்கு முன்
தரையைத் தட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர்.
பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார்.
இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின் திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச் பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது!.
பெரியவர் பாஸை உன்னிப்பாக கவனிக்கிறார்; பேசத் தொடங்குகிறார். நெய்யிலே மறுபடி மிளகாய் வறுபடுகிறது. " பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே. எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ் இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு உண்டுன்னு இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக் கணக்கா ஒரு கையெழுத்துக் கூட காணும்! நீ என்ன பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக் கொண்டு போய் 'சரண்டர்' பண்ணணும். இனிமேல் உன் கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே என்னைப் பார்க்க வரணும்."
ஹரஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார்.
இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச் சேர்ந்த சிஷ்யப் பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய் காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன்வருகிறார்.
இதற்குப் பதினோறாண்டுகளுக் முன் முனிவர் ஸ்ரீமடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து பணக் காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என்று இவர் நன்கறிந்தவர்தான். ஆயினும் பெரியவாளின் திருவுளக்கருத்தினர் படியே செலவழிக்கப் படவேண்டுமென்று அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே இந்த ஆயிரத்தை செலுத்துகிறார்.
பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா?
"எங்கே 'பெல்காம்'?" என்கிறார்.
திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர்.
நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது!
பெல்காமில்..........நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத்
திட்டங்களைப்பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார், பெரியவர். இடித்த
மேகமே இன்மழை கொட்டுகிறது.
அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப்
பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது.
"பணத்தை எப்படிக் கொண்டு போவே?"
"பத்ரமா எடுத்துண்டு போறேன்" என்கிறார் 'பெல்காம்'
பொறுப்புணர்ச்சியுடன் நிறைவுடனும் அபார உலகியல்
அறிவுடனும் முனிவர் சொல்கிறார்: " அதெல்லாம்
ஸரியில்லை தொலைஞ்சு போச்சுன்னா, நீயோ, அவனோ
( கொடுத்தவரோ) ஜவாப் இல்லை. நான்தான் ஜவாப்.
( கொடுத்தபிரமுகரைப் பார்த்து) ,நீ இந்தத்தொகைக்கு அவன்
பேரிலே 'ட்ராஃப்ட்' வாங்கிக் குடுத்துடு."
அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன, ஸமயோசிதம்
என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும் இப்படி அற்புத
முன்னுதாரணம் தருவதே முனிவரின் இயல்பாயிருக்கிறது.
- மஹா பெரியவாள் விருந்து, ரா.கணபதி அண்ணா

மஹாபெரியவா என்கிற கருணைத் தெய்வம்.

courtesy: Sri.Mayavaram Guru



மஹாபெரியவாளின் கருணை மழையில் நனைந்து ஆத்ம த்ருப்தி அடைந்தோர் எண்ணிலடங்காதோர். அவருடைய நூறு ஆண்டு அவதார காலத்தில் அத்தகைய நிகழ்ச்சிகளும் எண்ணிலடங்காதவை. அவற்றில் இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம், ரா.கணபதி அண்ணாவின் எழுத்துக்களில்.
……முடிவில்லாத அவர் பெருமைகளுக்கு முடிமணியாக உள்ள 'பரம கருணையிலே அனுக்ரஹத்துக்கு' வருவோம். த்ரௌபதியை

. அயனான அந்தத் தருணத்தில் ஐயன் ரக்ஷித்ததையும்,குசேலருக்குப் பொருட்குவை ஈந்ததையும் அவர் எடுத்துக்காட்டாககக் கூறினார். அதே சாயலில் ஒவ்வொன்று பார்ப்போம் .இரண்டாவதில் முதலாவதின் தருணமறிந்த காப்பும் கெட்டி முலாம் பூசக் காண்போம்.
உரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்று ஸ்நானம்---பூஜைகளுக்குச் செல்லாமல் சிந்தனை வசப்பட்டிருக்கிறார். சிந்தனை கலைந்ததும் ஸ்ரீமடத்து மானேஜரை அழைத்து எங்கோ ஆயிரம் மைல் கடந்து உள்ள ஒரு சாமானிய பக்தருடைய முகவரியைத் தேடிப்பிடித்து எடுத்து வரச் செய்கிறார்.ஒரு குறிப்பிட்ட தொகை சொல்லி அதை உடனே அந்த பக்தருக்குத் தந்தி மணி ஆர்டர் செய்யச்சொல்கிறார். அதற்கதிகமாக எந்த விவரமும் தரவில்லை.
ஒன்றும் புரியாமலே அவரது உத்திரவை மடத்து மேலாளர் நிறைவேற்றுகிறார்.
நாலைந்து நாட்களுக்குப்பின் அந்த பக்தரிடமிருந்து நன்றிக் கண்ணீராலேயே எழுதிய மடல் வருகிறது.
அன்று அவர் தமது தந்தையின் சடலத்தைப் போட்டுக்கொண்டு உத்தரகிரியைக்குப் பொருள் இல்லாமல் தவித்து உட்கார்ந்திருந்தாராம்.
ஸ்ரீசரணரின் சந்திரமௌளீஸ்வர பூஜைக்கு நீண்ட காலம் நிதமும் குடலை குடலையாக வில்வம் கொண்டு வந்து கொடுத்து, 'பில்வம் வைத்தா' என்றே அவரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அந்தத் தந்தை. அப்பாவிடம் அன்பு சொரிந்த அப்பெரியவாளே கதி என்று த்ரௌபதி த்வாரகாவாஸனிடம் சரணாகதி செய்தது போல் அன்று அவரது புத்திரர் செய்தாராம்! நம்பவொண்ணாத அனுக்ரஹமாகத் தந்தி மணியார்டரும் வந்து குதித்ததாம், இவர் தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகொளுக்கு விடையாக!.
இவர்களாவது முன்னறிமுகம், நெடுநாள் பழக்கமே, பெற்றிருந்தவர்கள். 'புது' பக்தர் ஒருவருக்குக் கண்ணன் குசேலருக்குச் செய்ததை ஸ்ரீசரணர் அயனான தருணத்தில் செய்த நிகழ்ச்சியைக் காணலாம்.
ஒரு நாள் பம்பாயிலிருந்து செல்வச்செழிப்புள்ள ஓர் அம்மாள் ஸ்ரீசரணரின் தரிசனத்திற்கு வந்தாள். தன் குடும்பத்தினர் செய்யும் பிஸினஸில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஸ்ரீசரணருக்கென்று எடுத்து வைத்து, உடன் கொண்டு வந்திருப்பதாகவும் அதை ஸமர்ப்பிக்க விரும்புவதாகவும் விக்ஞாபனம் செய்து கொண்டாள்.
பெரிய தொகை!
அதிசய மடாதிபதியாகத் திரவிய காணிக்கைகளை அவசியத்திற்குக் கட்டுப்படுத்தியே ஏற்கவும், மறுக்கவும் செய்தவர் ஸ்ரீசரணர்! இப்போதோ அவர் மடத்தை விட்டுத் தனியாகச் சில பணிவிடையாளருடன் இருக்கிறார். அவ்வளவு பெருந்தொகை ஏற்பாரா?
அதில் சிறிதளவே ஏற்றுக்கொண்டார். அதுவும் ரொக்கமாக ஏற்காமல், அந்த மாதரசியையே வருகிற அடியார்களுக்குச் சமைத்துப்போடச் சாமான்களாக வாங்கிப் போட்டுவிட்டுப் போகுமாறு சொன்னார்.
முழுவதையும் அவர் ஏற்காததில் அம்மையாருக்கு மிகுந்த ஏமாற்றம்
"கவலைப்படாதே! பாக்கிப் பணமும் ஏதாவது நல்ல கார்யத்துக்கு ப்ரயோஜனமாகும். சித்த ( சிறிது ) நாழி இங்கேயே இருந்து விச்ராந்தி பண்ணிண்டு போகலாம்" என்றார் ஸ்ரீசரணர்.
அம்மாள் அவ்வாறே தங்கினார்.
சிறிது நேரத்தில் ஒரு புது பக்தர் வந்தார். தம்மை முதலியார் வகுப்பைச்சேர்ந்தவர்களாக அறிமுகம் செய்து கொண்டார். அவருடைய தோற்றத்திலேயே துக்கத்தின் அழுத்தமும் அதை விஞ்சும் பயப்பிராந்தியும் பிரதிபலித்தன.
ஸ்ரீசரணர் சந்தணத்தின் தண்மையுடன் அந்த வெந்த நெஞ்சினரை அருகழைத்து அமர்த்திக்கொண்டார்.
"ஒனக்கு என்னப்பா வேணூம்?" என்று பன்னீராகச் சீதம் சொரிந்து வினவினார்.
"சின்னக் கம்பெனி ஒண்ணுலே உபாயமா ( சிறியதான ) ஒரு வேலையிலே இருக்கேனுங்க. சம்பளம் பத்தறதே இல்லீங்க. .கடனா. வாங்கிக்கிட்டே போயி, வட்டி கூடக் கட்டமுடியல்லேங்க….." என்று மேலே பேசவொண்ணாது வந்தவர் குழறினார்.
"கடன்காரன் பிடுங்கல் தாங்கமுடியாம வந்திருக்கியாக்கும்!" என்று நெஞ்சார்ந்த பரிவுடன் பரமர் கேட்டார்." இப்ப இந்த க்ஷணத்துல என்ன நெலவரம்? தயங்காம பயப்படாம சொல்லு'" என்று அபயப் பிரதானம் செய்து ஊக்கினார்.
அழுகை ஊளை வெடிக்கும் குரலில் வந்தவர் " ஈட்டிக்காரன் தொரத்திக்கிட்டே வந்திருக்காங்க! இங்கேயேதான் வாசல்ல நிக்கறானுங்க!" என்றார்.
கடன் தொகை எவ்வளவு என்று அவரைக் கேட்டு ஸ்ரீசரணர் தெரிந்து கொண்டார். அம்மாள் கொண்டு வந்தது அதற்கு மிக அதிகமாயிருந்தது. ஸ்ரீசரணர் தம்மைச் சேர்ந்தோரின் பொருட்டாக அனுமதித்த பொருட்களை வாங்கத் தேவைப்படுவதைக் கூட்டினாலும் மிகுதி நின்றது.
அப்புரம் என்ன? பம்பாய் தனிகையின் திரவியம் முதலியார் கைக்கு---அவர் கையிலிருந்து பட்டாணியன் கைக்குப் போவதற்காக---சேர்ந்தது
ஸ்ரீசரணர் அம்மாளை நோக்கி இன்னருளுடன் " நான் கேட்ட ஸாமான்-----சப்பட்டை வாங்கினவிட்டும் மீதி நிக்கக் கூடியதையும் இவர் கையிலேயே போடு. கடன் அடைஞ்சா போதுமா? மாஸம் முடியக் குடும்பம் சாப்பிட்டாகணுமே? எல்லாம் ஒன் உபாயமாகவே இருக்கட்டும்!" என்றார்.
எத்தனை கரிசனம், அங்கலாய்ப்பு!
அம்மாளும் அவ்விதமே செய்தாள்.அவளது மனம் நிரம்பியிருந்தது பார்த்தாலே தெரிந்தது.
நிறைவை மேலும் நிறைவித்து நிறையறிவாளர், நிறையருளாளர், " ஸமய ஸஞ்சீவியா வந்தே! ஆபத்துக் காலத்திலே வந்து இவரை விடுவிச்சே! ரொம்பப் புண்ணியம், நன்னா இருப்பே!' என்று ஆசிமொழிந்தார், பொழிந்தார்.
நிறை நன்றியில் கண் நிறைந்து விம்மிக்கொண்டிருந்த முதலியாரிடம், " ஸ்வாமி ஒனக்காகவே எங்கேயிருந்தோ இந்தப் புண்ணீயவதியைக் கொண்டு வந்து சேத்து ரக்ஷிச்சிருக்கார். அவரை ஒரு போதும் மறக்காம கஷ்டமோ, நஷ்டமோ, அவர் தாங்கிக்கிறார்ங்கற நம்பிக்கையோட, முடிஞ்ச மட்டும் சிக்கனமா வருமானத்துக்குள்ளயே செலவைக் கட்டுப்படுத்திண்டு கடன் கஷ்டத்திலே மாட்டிக்காம இருக்கப் பாருப்பா!" என்று ஹிதோபதேசம் செய்தார். எத்தனை ஹிதமாக!
கடன் பட்டவர், பாரத்தின் அழுத்தம் நீங்க நிம்மதியாக விடைபெற்றார்.
அவர் சென்றபின் பெரியவாள் "அப்பாடா!" என்று சொன்னதுண்டே! முன்னறிமுகமில்லாத ஒருவருக்கு ஸமய ஸஞ்சீவியாக உதவியது மாத்திரமின்றி அவரது பாரத்தையும் ஸ்ரீசரணரே எவ்வளவுக்குப் பகிர்ந்து கொண்டு இப்பொது சுமை நீக்கத்தில் நிம்மதி காண்கிறார் என்பதைத் தெரிவிப்பதாக இருந்தது அந்த ஆசுவாச அப்பாடா!
ஸகல ஜீவர்களுடனும் அப்படி ஒன்றிக் கலந்த அன்பு மூர்த்தி அவர்!
.

 

Thursday, November 14, 2013

குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை-மஹாபெரியவா

Courtesy: Sri.Mayavaram Guru

அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் 'டச்' பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் 'டச்'பண்ணவேண்டாமென்று 'வார்ன்'பண்ணுவதற்கே 'டச்' பண்ணுகிறேன். ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பேர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன. 'ஸெளந்தர்ய லஹரி'யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் 'டச்' பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள். அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை 'அன்டர்லைன்' பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.

நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்? அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.

ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – "யததாமபி கச்சிந்" என்று பகவான் சொன்னாற் போல. அதனால்தான் 'அதற்கான யோக ஸாதனை பண்ணினால்' என்று அழுத்திச் சொன்னது. 'பண்ணினால்' என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்! இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது] – லேசில் நடக்கிற விஷயமில்லை.

சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள்!

பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிறவனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான். ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை. பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, 'பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்! என்று 'போனஸ்' மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள். ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள்.

இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை.

அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது 'ரைஸ்' ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்! அவ்வளவுதான். அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை. அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது. இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.

லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள். ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது? ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.

'பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷதரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? 'என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.

அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை. காம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான். 'யோகம்' என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது. என்ன சொல்கிறாரென்றால்,

நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **

என்கிறார். என்ன அர்த்தமென்றால் 'இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, 'நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?' என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்' என்கிறார். ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், 'நம்மால் இதில் ஜயிக்க முடியாது' என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம். என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது 'அபிக்ரம நாசம்'- 'முயற்சி வீணாவது'- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது. 'ப்ரத்யவாயம்'- 'விபரீத பலன்'- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் "விட்டுவிடுகிறேன்"என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை. 'ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?'என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்! ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.

அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது. பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை. ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!

நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா? அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன். ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.

நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம். பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, 'இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு' என்று சொன்னால் அர்த்தமுண்டு. 'திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்' என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?

ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] 'ஸர்பென்ட் பவர்'முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி 'க்ளாஸ்' நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, 'மூலாதாரா, ஸஹஸ்ராரா' என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது. எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருதாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது. சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது. அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் "ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!" என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;' வார்னிங்'கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….

உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. 'தாங்க்' தான் பண்ணுகிறேன். 'யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது' என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார். அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.

அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது. இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை. ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தைச்] சொன்னேன்.

இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்: 'நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது. இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்' என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு. குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.

க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், 'இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர்ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.

ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்: மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? 'ஷாக்'தான் அடித்துக் கஷ்டப்படுவோம். குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.

Tuesday, November 12, 2013

பெரியவாளையே சந்தேகித்தவர் ....

Courtesy:Sri.Mayavaram Guru

ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.

அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். "கஜானா" சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. "ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?" என்ற சந்தேகம். பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. "நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, "அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடு"ன்னார்" என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.

"கஜானா" மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் "கஜானா"விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.

"நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்" என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.
அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா "நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?" என்றார்.

"அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்" என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.

"சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?" என்றார் பெரியவா
"காத்துண்டு இருக்கேன்" என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.

"அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!"

"அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு....." கஜானா இழுத்தார்.
"அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா"

"சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்" என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.

அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது "சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு"
கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.

"அதி"க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். "இவ்வளவுதானா?" என்று வேறு கேட்டார்.

பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
"இன்னம் உவப்பன் நான்" என்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!............என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.

பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று "இன்னும் என்ன இருக்கு" என்று கேள்வி
கஜான வெலவெலத்து போனார்.
"வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!" என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.

"பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்" என்று விக்கினார்.
குழந்தையாக சிரித்த பெரியவா, "இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?" என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்

வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை, கதைகள் மூலம் பெரிது பண்ணிக் காட்டுவதே புராணம்’ -மகா பெரியவா

Courtesy:Sri.Mayavaram Guru


மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட, வசதிமிக்க கல்கத்தா சேட்ஜி ஒருவருக்கு தீராத ஒரு நோய். எந்த உணவையும் சாப்பிட பிடிக்கலை. எதை சாப்பிட்டாலும், அதன் ருசி தெரியாமல், உப்பு சப்பில்லாமல் இருந்தன. தாகம் கூட எடுப்பது இல்லை. அதனால், நாளடைவில் மிகவும் மெலிந்து போனார். பார்க்காத வைத்தியம் இல்லை. இறுதியில் யாரோ சொல்லக்கேட்டு, மகாபெரியவரை போய் சந்தித்தார். விவரம் கூறினார். பெரியவா ஒரு விஷயம்  சொன்னார். பரிகாரம் போல் இருந்தது.

அந்த கல்கத்தா சேட்ஜிக்கு, மகா பெரியவா சொன்ன பரிகாரம் என்பது மேலோட்டமாக பார்த்திட ஒரு பெரிய விஷயம்போல தெரியாது. ஆனால், நடைமுறையில் அதைச் செய்திட உண்மையில் இறையருள் நிறையவே வேண்டும்.
நம் மதத்தின் தனிப்பெரும் சிறப்புக்குரியவை, முதலில் வேதங்களே! அதைத் தொடர்ந்து இந்த மண்ணில் வந்தவை இதிகாச புராணங்கள். இதிகாசங்கள் என்றாலே, ராமாயணமும், மகாபாரதமும் வந்துவிடும்.
புராணம் என்று வரும்போது ஒரு பட்டியலே உள்ளது. அந்த வகையில், 'பிரம்ம புராணம், பத்மபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம்' என்று பதினெட்டு புராணங்களோடு வாயு புராணத்தையும் சேர்த்தால், 19 புராணங்கள் வருகிறது.
பெரியவர் அந்த சேட்ஜிக்கு சொன்ன பரிகாரம் இதுதான். மேலே கண்டவற்றில், நான்கு வேதங்கள் மற்றும் இரண்டு இதிகாசங்களையும் விட்டுவிட்டு, மீதமுள்ள அவ்வளவு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் பிசகின்றி, நூலாக அச்சிட்டு அதை இந்த பாரததேசம் முழுக்க உள்ள வேத பண்டிதர்களுக்கும், விரும்பிக் கேட்பவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். சேட்ஜியால் செய்ய முடியுமா? என்று கேட்டார். சேட்ஜியே உப்புச் சப்பில்லாத ஒரு வாழ்வை வாழ்ந்தபடி இருக்கிறார். எனவே, மறுபேச்சே பேசாமல் அந்த பரிகாரத்துக்கு தயாராகிவிட்டார்.
ஆனால், பதினெட்டு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் மாறாமல், அச்சிட வேண்டும் என்று பெரியவர் அடிக்கோடிட்டு விட்டபடியால், அதை தேடிக்கண்டுபிடிப்தே ஒரு பாடாக இருந்தது. அதற்காக ஒரு அலுவலகம் அமைந்து, அதில் வேத பண்டிதர் களை நியமித்து, அவர்களுக்கு உரிய சன்மானமும் மரியாதையும் தந்து, ஒரு அர சியல் கட்சித் தலைவர் ஒரு இயக்கத்தை நடத்துவதுபோலவே நடத்த வேண்டி யிருந்தது.
தோராயமாக சில லட்ச ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்ட விஷயம், பல லட்சங்களை விழுங்கியது. ஒவ்வொரு புராணத்தையும் தேடிப்பிடித்து அச்சேற்றி புரூஃப் திருத்தி, பின் உரிய முறையில் புத்தகமாக்கி, அதை பாதுகாப்பாக வைத்துவிட்டு, அடுத்த புராணம் என்று செயல்பட வேண்டியிருந்தது.
இவ்வாறு செய்வதால், அவருக்கு குணமாகிவிடும் என்கிற உறுதியை பெரியவர் தரவில்லை. சொல்லப் போனால், இந்த பரிகாரத்தைக்கூட, எடுத்த எடுப்பில் கூறிவிடவில்லை. ஒருமுறைக்கு பலமுறை அந்த சேட்ஜி சார்பில் ராஜகோபால சர்மா என்னும் உபன்யாச சிரோன்மணி ஒருவர், முயற்சி செய்தபிறகே அவர் கூறியிருந்தார். இதைக் கூற காரணம் உண்டு.
ஒரு நம்பிக்கை அடிப்படையில், பெரியவர் சொன்னதை செய்ய, அதைவிட கூடுதலான நம்பிக்கை செய்பவரிடம் வேண்டும். அடுத்து அந்த நம்பிக்கை துளியும் குறையாதபடி நீடிக்கவும் வேண்டும். ஏனென்றால், பெரியவர் சொன்ன இந்த பரிகாரப்படி பதினேழு புராணங்களைத் தேடிப்பிடித்து, அச்சேற்றிவிட்ட நிலையில், பதினெட்டு ஒன்றே பாக்கி என்றிருக்கும் நிலையில், அந்த சேட்ஜியிடம் எந்த குணப்பாடும் இல்லை. சொல்லப்போனால் குணமாவதற்கான அறிகுறிகள் கூட கண்ணில் படவில்லை.
ஆனால், பணமோ கரைந்தபடி உள்ளது. சொல்லப்போனால், சேட்ஜி சம்பாதித்ததை எல்லாம் கரைத்துவிட்டார் என்று கூட கூறலாம்தான். ஆனால், சேட்ஜியோ துளியும் நம்பிக்கை குன்றாமல் பதினெட்டாவதையும் வெளியிட்டு முடித்தார். பதினெட்டாவதாக ஸ்ரீஸ்கந்த புராணத்தை அச்சடிக்கத் தொடங்கும்போதே அவரிடம் ஒரு மாற்றம். தாகம் எடுக்க ஆரம்பித்தது. அச்சடித்து முடிக்கும்போது சாப்பிடவே தொடங்கிவிட்டார். நாக்குக்கு ருசி உணர்வு வந்து, அவரது மர்மநோய் இனி என்னால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல நீங்கியேவிட்டது.
சேட்ஜியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதன் பிறகு, அவர் பெரியவரை எப்படி எல்லாம் கொண்டாடி மகிழ்ந்திருப்பார் என்று கூறத் தேவையே இல்லை. இந்த விஷயத்தில் பெரியவர் சொன்ன பதில்தான் சிகரம்.
'இந்த அதிசயத்தை நான் செய்யவில்லை. அப்படிச் சொன்னால் தவறு. பதினெட்டு புராணங்களுக்குள்ளம் சப்த ரூபமாய் வாழ்ந்துகொண்டிருககும் நம் ரிஷிகளும் முனிவர்களும் இறை அம்சங்களுமே இதைச் செய்தன. சேட்ஜியின் கர்ம வினைக்கு இணையான பரிகாரமாக, நான் இதை எண்ணிடக் காரணம் கூட, நமது ரிஷிகளும் முனிவர்களுமே…' என்று, அவருக்கு வந்த வந்தனங்களை எல்லாம், அப்படியே ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் சமர்ப்பணமாகும்படி செய்துவிட்டார்.
இதை அறிந்தபோது, எனக்குள் பெரும் நம்பிக்கை ஒளி ஏற்பட்டது. 'விதியை மதியாலெல்லாம் வெல்ல முடியாது என்பது உண்மையாயினும், அந்த மதிக்குள் விதியை ஏற்றுக்கொள்ளும் தெளிவை, திட சித்தியை நாம் பெற்றாலே கூட போதுமே.' அதுதான் பகவான் ரமணரின் அனுபவம். வலியை விரும்பு – வலியே வலிமை போன்றவை… இவ் வேளையில், சிறு வயதில் நான் பார்க்க என் அத்தை ஒரு நோட்டில், 'சாதுஜன ப்ரியா ஸ்ரீராமா – ராமராஜ்ய விட்டலா ஜெயராமா. ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் – ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்…' என்று எழுதிய ஸ்லோகங்கள் நினைவுக்கு வருகின்றன.
அத்தையின் இல்வாழ்க்கை தொடக்கம், அத்தனை இனியதாயில்லை. கர்மத்தைவிட வேறு எதை காரணமாக கூற முடியும்? மருந்தாக அத்தை எடுத்துக் கொண்டது அந்த ஸ்லோகத்தைத்தான். அத்தை, இன்று பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். அந்த ஸ்லோகம் அத்தையின் கர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் குறைத்தது.
நான் பார்க்க பலர் ஸ்ரீராமஜெயம் எழுதக் காண்கிறேன். சிவபுராணம், ஹனுமன் சாலீசா என்று சிறு சிறு புத்தகங்களை அச்சிட்டு, அனைவருக்கும் கொடுக்கக் காண்கிறேன் – எல்லாவற்றுக்கும் மூலம் பெரியவர் சொன்ன இந்த பரிகாரமே!
உலக மருத்துவர்களெல்லா கை விட்டுவிட்ட வியாதிக்கே, மருந்தாக நமது அறநூல்கள் இருக்கிறதென்றால், இதை வைத்துக்கொண்டு, நாம் கர்மத்தில் உழல்வதும் இதை அறியாமல் இருப்பதும் எத்தனை அறியாமை?
ஒன்றை மட்டும் இமயத்தின் உச்சியில் நின்றுகொண்டு சொல்வதுபோல் சொல்வேன். மந்திரங்களால் நிரம்பியிருக்கும் மனங்களுக்கு பெரிய துன்பம் வரவே வராது. 'நான் சொல்லவா… ஒரு பெரிய கனபாடிகள் புற்றுநோயால் அவதிப்படுவதை…' என்று உடனே வரிந்துகட்டிக் கொண்டு பதில் சொன்னால், அவர்களுக்கு எனது பதில் இதுதான்:
ஒரு புத்தகத்தை வாங்குவது, வீட்டு அலமாரியில் வைப்பதற்காக அல்ல. வாசிப்பதற்காக! அதேபோல மந்திரங்களை நாம் அன்றாடம் கூறுவது என்பதும் வாய்ப்பாட்டு ஒப்பிப்பதுபோல் இருக்கக்கூடாது. துளியாவது அதன் பொருளை உணர்ந்துகொண்டு, உருக்கத்தோடு சொல்ல வேண்டும். அதே போல ராமஜெயம் என்று எழுதும்போது, ராம காவியம் மனத்துக்குள் ஓட வேண்டும். ஹனுமனின் சாகசங்களை நம் சாகசம்போல லயித்து அனுபவிக்கவேண்டும்.
திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொல்வதும் எழுதுவதும் எந்த வகை பக்தி? மாறிக் கொண்டேயிருக்கும் உலகில், மாறாதது மாற்றம் ஒன்றே என்றும், உலகில் அந்த திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒரு மந்திரம் அல்லது ஒரு சப்தத்தால் என்ன பெரிதாக ஏற்பட்டு விடும் என்று, அறிவுபூர்வமாக உணர்ச்சி பூர்வமாக கேட்பதில் உள்ள வேகத்தை அடக்கி, மனத்தை அதன் போக்குக்குப் போய்விடாதபடி, வளைத்துத் திருப்பி திரும்பத் திரும்பச் சொல்; திரும்பத் திரும்ப எழுது என்றும் இந்த அற்புதத்துக்குள் சிரமப்பட்டு முயல வேண்டும்.
நல்ல விதியமைப்பு கொஞ்சமாவது இருந்தாலே, இதில் நம்பிக்கை ஏற்படும். கோயிலுக்கு செல்வதை நித்ய பரிகாரம் என்று சான்றோர்கள் கூறுவார்கள். பசுவுக்கு அகத்திக் கீரை தருவதை சிறந்த பரிகாரம் என்பார்கள். ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு உதவுவதை, பசி என்று நம் காதுபட கூறுபவர்களுக்கு அன்னமிடுவதை, தாகம் என்று தவிப்பவர்களுக்கு தண்ணீர் தருவதை அன்றாட பரிகாரங்கள் என்பார்கள்.
இவற்றுக்கு நடுவில், இறை நாமங்களை ஜபிப்பது, எழுதுவது என்பதெல்லாம் விளக்கை பளிச்சென்று துலக்க முற்படுவது போன்றது. நான் இம்மட்டில் ஒரு நாளைக்கு 108 என்ற கணக்கெடுத்து இறை நாமத்தை எழுதி வருகிறேன். அழுத்தமாய் கர்மம் கரைவதையும் உணர்கிறேன். அதே சமயம், அது வேண்டும் இது வேண்டும் என்கிற ஆசைகளோடெல்லாம் இதை செய்வதில்லை. அப்படி ஆசைப்பட்டாலே, இந்தச் செயல்பாட்டை நாம் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பல் துலக்குவது, குளிப்பதுபோல இதை ஒரு நித்ய கடமையாக முதலில் செய்ய வேண்டும். பின் நெகிழ்வோடு செய்ய வேண்டும். நெகிழ்வோடு செய்திட லயிப்பு மிக முக்கியம். ஸ்ரீராமஜயம் எழுத எழுத அது காலப்போக்கில் தானா ஏற்பட்டது.
இந்த நாமம் குறித்து மட்டுமல்ல; புராணங்கள் குறித்தும், பெரியவர் கூறும் கருத்தும் மனத்துக்குள் ஆழமாய்ப் பதிவதாகவே உள்ளது.
'மிகச்சிறிய ஒன்றை ஒரு பூதக்கண்ணாடி பெரியதாக காட்டுகிறது. அதுபோலவே, வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை, கதைகள் மூலம் பெரிது பண்ணிக் காட்டுவதே புராணம்' என்று புராணங்களுக்கு அவர் விளக்கமளிக்கிறார்.
'ஒன்றை சுருக்கமாகச் சொன்னால் அது மனத்தில் பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரமாகச் சொல்லும்போது, நன்றாக மனத்தில் பதியும்' என்று புராணக்கதைகளின் நோக்கத்தை கூறுகிறார் பெரியவர்.
இதெல்லாமே அருமருந்து!
இந்த மருந்தை வைத்துக்கொண்டு, நாம் கர்மத்தை எண்ணி எதற்குக் கலங்க வேண்டும்? எனக்கும் இப்போது விதி பயமெல்லாம் இல்லை. அதே சமயம் இந்தப் பரிகாரங்களை அல்லது பரிகாரத்தை உள்ளடக்கிய பக்திமயமான வாழ்வில், ராம நாமத்தையோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தையோ, ருத்ரத்தையோ விடாமல் ஜபித்து கர்ம சிரத்தையாக இருக்கும்போது, அதற்குப் பரிசாக தெய்வமும் வீடு தேடி வந்து, கருணை காட்டுகிறது.

Sunday, November 10, 2013

சிவனுக்கு ஆபரணம்

Courtesy: Sri.Mayavaram Guru

சிவனுக்கு ஆபரணம்

எந்த பக்தராவது கொன்றைப்பூ கொண்டு வந்து கொடுத்தால், பெரியவாள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் காரணம்; பரமேசுவரன் மிகவும் உவந்து ஏற்றுக் கொள்ளும் பூ-கொன்றைப்பூ.
... ஒரு பக்தர்,கூடை நிறைய கொன்றைப் பூ கொண்டு வந்து சமர்ப்பித்தார். பெரியவாள் கூடையையே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். "கூடையிலே வேறே என்ன கொண்டு வந்திருக்கே?" "கொன்றைப் பூ மட்டும்தான்" "இல்லே! பரமேசுவரனுக்கு உகந்த பூ மட்டும் கொண்டு வரலே. அவனுக்கு ஆபரணமும் கொண்டு வந்திருக்கே!"
யாருக்கும் விளங்கவில்லை. பூக்கூடையை சற்றுத் தள்ளி எடுத்துக் கொண்டு போய்,ஒரு மூங்கில் தட்டில் கவிழ்க்கச் சொன்னார்கள். தட்டில் கொட்டியவுடன், ஒரு சர்ப்பம் சர்ரென்று வெளிப்பட்டு நொடி நேரத்தில் ஓடி மறந்தே போயிற்று.
பரபரப்புடன் பெரியவாளிடம் வந்து சொன்னார்கள். பெரியவாள் புன்னகைக்கிற மாதிரி தரிசனம் கொடுத்துக் கொண்டு, அந்த பக்தரைப் பார்த்து,"இனிமேல் சந்திரமௌலீஸ்வரருக்கு பூ மட்டும் கொண்டு வா: ஆபரணம் எல்லாம் வேண்டாம்!" என்றார்கள்.

அலை அலையாய் சிரிப்பு.

Saturday, November 9, 2013

மஹாபெரியவா கூறும் சுந்தர விநாயகர்:

 

மஹாபெரியவா கூறும் சுந்தர விநாயகர்:
சுந்தரர்:அப்பர் - ஸம்பந்தர்களுக்கு அன்பிலில் ஏற்பட்டாற் போல ஸுந்தரரும் திருவையாற்றுக்குப் போனபோது காவேரியில் பெரிய வெள்ளமாக வந்து அவரைத் தடுத்தது. அவர் எதிர்க்கரையிலேயே நின்று கொண்டு, "ஐயாறுடைய அடிகளே! ஓலம் ஓலம்!" என்று கதறினார். இங்கேயும் அப்பாவுக்கு முந்தித் திருவையாற்றுப் பிள்ளையார்தான் பக்தர் கஷ்டத்தைத் தெரிந்து கொண்டு அவருடைய ஓலத்தை அப்பாவுக்குத் தாமே 'ரிலே' பண்ணினார். அதனாலே அவருக்கு 'ஓலமிட்ட விநாயகர்' என்றே பெயர். தோழர் - 'தம்பிரான் தோழர்' என்று ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளைச் சொல்வார்கள் - அந்தத் தோழர் ஓலமிட்டு, அதை ஜ்யேஷ்ட புத்ரனும் 'ஸெகன்ட்' பண்ணின தத்க்ஷணமே ஸ்வாமி வெள்ளத்தை வடிய வைத்தார்.
ஃப்ரன்ட் என்கிற முறையிலே ஸுந்தரர் ஸ்வாமிகிட்டே எதை வேணாலும் கேட்பார். பரவை நாச்சியார் என்று அவருக்கு ப்ரியாமானவள். அவள் ஸுந்தரமூர்த்திகளின் ஊரான திருவாரூர் கோவிலில் நாட்யம் பண்ணுகிறவர்களில் பரம பக்தையான ஒரு உத்தமி. ரொம்பவும் தானதர்மிஷ்டை. அவள் வாரிக் கொடுக்கிறதற்காக ஸுந்தரர் அப்பப்போ "பொன்னு தா", "நெல்லு தா" என்றெல்லாம் ஸ்வாமியிடம் நச்சரித்துப் பெற்றுக் கொள்வார். அப்படி, 'திருமுதுகுன்றம்' என்று தேவாரத்தில் சொல்லியிருக்கும் விருத்தாசலத்திலேயும் அவர் பொன் கேட்டு, ஸ்வாமியும் பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார். ஸுந்தரர் அதோடு விடாமல் "கொடுத்தது மட்டும் போறாது. இதைக் காபந்து பண்ணி எடுத்துண்டு நான் ஊர் ஊராப் போயத் திருவாரூர் சேருகிறது கஷ்டம். ஆனதாலே இதை நீயே எப்படியாவது அங்கே சேர்த்திடு" என்றார்.
ஸ்வாமியும் "ஸரி" என்றார். ஆனால் கொஞ்சம் லீலை பண்ணவும் நினைத்து, "இந்தப் பொன்னை இங்கே ஓடற மணிமுத்தாற்றிலே போட்டுடு. அப்பறம் ஊர் ஊரா என்னைப் பாடிண்டு திருவாரூருக்குப் போய் அங்கே கமலாலயத்திலே - அதுதான் அங்கே உள்ள பிரஸித்தி பெற்ற திருக்குளம் - ஈசான்ய 'வடகிழக்கு' மூலையிலிலேருந்து கலெக்ட் பண்ணிக்கோ" என்றார்.
"அப்படியே" என்று மணிமுத்தாற்றிலே பொன் மூட்டையைப் போடப் போன ஸுந்தரருக்கு ஒரு ஸந்தேஹம் வந்தது. "நாம் படுத்தியெடுக்கிறோம் என்கிறதாலே ஸ்வாமி ஏதாவது கொனஷ்டை பண்ணி வெக்கப் போறார் இங்கே உசந்த மாற்றுத் தங்கமாக் குடுத்துட்டு கமலாலயத்தில எடுக்கறப்போ மாற்று கொறைச்சுடப்போறார்" என்று நினைத்தார். மாற்று என்பது காரட் மாதிரி. 24 காரட், 14காரட் என்கிறோமே அப்படி. 24-ஐயே 14-ஆக ஸ்வாமி பண்ணி விடப் போகிறாரே என்று ஸுந்தரர் நினைத்தார். இரண்டு இடத்திலேயும் உரைத்து மாற்றுப் பார்த்துக் கொள்வதுதான் நல்லது என்று நினைத்தார்.
உடனே அவருக்கு ஸஹாயம் செய்வதற்காகப் பிள்ளையார் அவர் பக்கத்தில் வந்து நின்றார். பொன்னை உரைத்துப் பார்த்து, பத்தரை மாற்று - 24 காரட் - என்று - 'ஸர்டிஃபை' பண்ணினார். விருத்தாசலம் கோவிலில் அறுபத்து மூவருக்குப் பக்கத்தில் 'மாற்றுரைத்த பிள்ளையார்' என்றே அவர் இருக்கிறார், அறுபத்து மூவரையும் சொல்லித் திருத்தொண்டத்தொகை பாடியவர் ஸுந்தரர்தானே?
அந்தப் பொன்னில், பின்னாடி 'கம்பேர்' பண்ணுவதற்காக ஸாம்பிளாக 'மச்சம்'
என்று ஒரு துணுக்கை ஸுந்தரர் வெட்டியெடுத்துக் கொண்டு மூட்டையை அப்படியே மணிமுத்தாற்றில் போட்டு விட்டார்.
அப்புறம் க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் பாடிக்கொண்டே போய்த் திருவாரூரை அடைந்தார். பரவை நாச்சியாரைக் கமலாலயத்தின் ஈசான்யத்தில் படித்துறையில் நிறுத்தி விட்டுக் குளத்துக்குள் இறங்கினார், பொன்னை எடுப்பதற்காக
இவர் நினைக்காத ஒரு கொனஷ்டையை ஸ்வாமி பண்ணினார். ஏதோ மாற்றுதான் குறைந்தது என்றில்லாமல் முதலுக்கே மோசமாக ஸ்வாமி விளையாடினார். இவர் தேடு தேடு என்று தேடியும் பொன் மூட்டையே அகப்படவில்லை!
பரவையானால், "எங்கேயோ ஆத்துலே போட்டுட்டு இங்கே கொளத்துலே தேடறீரே ஸ்வாமி" என்று பரிஹாஸம் பண்ணினாள். அவள் சொன்னது பிற்பாடு வசனமே ஆகிவிட்டது!
ஸுந்தரருக்கு எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது. உணர்ச்சி ஜாஸ்தியானால் அவருக்குப் பாட வந்துவிடும். ஆனால் வழக்கம் போல் நிந்தாஸ்துதி பண்ணினால், இந்தத் தடவை ஸ்வாமி காது கொடுக்காமலிருந்து, ஒரு பொம்மனாட்டிக்கு முன்னே தாம் இன்னும் அவமானப் படப் போகிறோமே என்பதால் ரொம்பவும் தைன்யமாகவே குழைந்து வேண்டிக் கொண்டு பதிகம் பாடினார். பொன் ஸமாசாரமானதால் "பொன் செய்த மேனியினீர்!" என்றே ஆரம்பித்துப் பாடினார். (பிறிதொரு சமயத்தில்) "பொன்னார் மேனியனே!" பாடினதும் ஸுந்தரர்தான்.
ஸ்வாமி இவருடைய பாட்டைப் பெறணுமென்றே தான் சோதித்தது இவர் பாடினவுடனே பொன் அகப்படும்படிப் பண்ணிவிட்டார்!
இங்கேயும் பிள்ளையார்தான் வந்து மாற்றுப் பார்த்தார். அதனால் திருவாரூரிலும் ஒரு மாற்றுரைத்த விநாயகர் உண்டு.
ஸுந்தரர் நினைத்த கொனஷ்டையையும் ஸ்வாமி இப்போது பண்ணியிருந்தார்!மச்சத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்று குறைந்திருந்தது!14 காரட்!
பாட்டு ப்ரியரை ஸுந்தரர் மறுபடி ஸ்துதித்தார். ஸ்வாமியும் பதினாலை இருபத்து நாலாகவே மாற்றிக் கொடுத்தார்.
அப்புறம் ஒரு ஸமயம் ஸுந்தரமூர்த்தி, சேரமான் பெருமாளுடைய ஊருக்குப் போய் அரண்மனையில் தங்கி விட்டுப் புறப்பட்டார். ராஜாவான சேரமான் அவருக்கு ராஜோபசாரம் பண்ணி வழியனுப்பும்போது மூட்டை மூட்டையாக - 'பொதி' என்று சொல்வது, அப்படி - நிறையப் பொதி பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார். ராஜஸேவகர்கள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வர, ஸுந்தரர் கொங்கு நாட்டு வழியாகத் திருவாரூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
திருப்பூருக்குக் கிட்டே திருமுருகன்பூண்டி என்ற க்ஷேத்ரம். அங்கே காட்டு வழியில் ஸுந்தரர் ஆள்களோடு போய்க் கொண்டிருந்தார். அந்த ஊர் ஸ்வாமி பார்த்தார். 'வழக்கமாக நம்மிடம் அதைத்தா தா, இதைத் தா என்று நச்சரித்தபோது ஒரு க்ஷேத்ரம் விடாமல் நம்மிடம் வந்து பாடியவன், இப்போது நம்மை லக்ஷ்யமே பண்ணாமல் அல்லவா பெரிய ராஜஸம்பாவனையுடன் போகிறான்? நாம் ஏதாவது கொடுத்தால், 'நீயே அதைத் திருவாருரில் சேரு' என்கிறவன், ராஜ ஸேவகர்கள்தான்
நிஜமான துணை என்ற தைரியத்தில்தானே இப்போது காட்டிலே இத்தனை பொதியுடன் போகிறான்?' என்று நினைத்தார். கொஞ்சம் சோதனை லீலை செய்வதற்கு முடிவு பண்ணினார்.
பூதகணங்களை வேடர்களாக ஆக்கி ஸுந்தரர் கோஷ்டியை எதிர்த்து வழிப்பறி செய்ய வைத்தார். உயிரக்கு ஹானி செய்யாமல் அந்த கணங்கள் பொருளை மட்டும் பிடுங்கிக் கொண்டு ஸ்வாமியிடம் வந்து பொதியைக் கொடுத்துவிட்டன.
எல்லாம் பறி கொடுத்துவிட்டு ஸுந்தரர் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த ஊர்ப் பிள்ளையாருக்குத்தான் கருணை பெருகிற்று. ஊருக்குப் பேர் திருமுருகன்பூண்டி. அந்த முருகன் "வைதாரையும் வாழ வைப்பான்" என்கிறார்கள். ஆனால் அந்த ஊரிலோ அவனடைய அண்ணாக்காரர்தான் தன்னை 'வயிறுதாரி' என்று ஸுந்தரர் வைததையும் நினைக்காமல் அவரை வாழவைக்க நினைத்தார்! அதனால் கோவிலை விட்டே கொஞ்ச தூரம் ஓடி வந்தார். சற்று தூரத்தில் ஸுந்தரரைப் பார்த்தவுடனேயே ஒரே கூவலாகக் கூவி அவரைக் கூப்பிட்டார். "இங்கே கோவிலில் இருக்கிற என் அப்பாதான் கணங்களை அனுப்பி வழிப்பறி செய்தது. அதிலே கணபதியான எனக்குப் பங்கு இல்லை. c கோவிலுக்கு வந்து அவரைப் பாடு. c பாடிவிட்டால் அவர் மனஸு குளிர்ந்து, தான் பண்ணினதை அப்படியே மாற்றி விடுவார்" என்று தகவல் கொடுத்து உபாயமும் சொல்லிக் கொடுத்தார். ஸுந்தரமூர்த்தியைக் கூவிக் கூவிக் கூப்பிட்ட அந்தப் பிள்ளையார் 'கூப்பிடு பிள்ளையார்' என்று பெயரில் திருமுருகன்பூண்டியிலிருந்து அவிநாசிக்குப் போகிற வழியில் இருக்கிறார்.
அவருக்கு ரொம்பவும் நன்றி சொல்லி விட்டு, அவர் பரம கருணையோடு வழிகாட்ட ஸுந்தரர் கோவிலுக்குப் போனார். 'நிந்தாஸ்துதி பண்ணி இன்னும் கஷ்டம் ஏற்பட இடம் கொடுக்க வேண்டாம்.ஸ்வாமியேதான் கொள்ளை நடத்தினது என்பதுகூட நமக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம். துஷ்ட வேடர்கள் நிறைந்த இந்த ஊரில் c இருக்கலாமா என்று ஸ்வாமியிடம் அங்கலாய்த்துக் கொள்கிற ரீதியிலேயே பாடலாம்' என்று ஸுந்தரர் நினைத்தார். 'இங்கே ஏன் ஸவாமி, c வாஸம் பண்ணணும்,' என்று அர்த்தம் கொடுக்கும்படியாக ஒவ்வொரு பாடலும் "எத்துக்' (கு) இங் (கு) இருந்தீர், எம்பிரானே?" என்று முடித்துப் பதிகம் பாடினார்.
ஸ்வாமியும் தாம்தான் அந்த வழிப்பறியை 'அரேஞ்ஜ்' பண்ணினது என்று காட்டிக் கொள்ளாமல், அந்த வேடர்களுக்கு மனஸ் மாறிவிட்ட மாதிரிக் காட்டி, கணங்களை மறுபடி வேடர்களாக்கி அவர்கள் பொதியை எல்லாம் ஸந்நிதியலேயே ஸுந்தரருக்கு முன்னாடி கொண்டு வந்து போட்டுவிடும்படிப் பண்ணினார்.

Thursday, November 7, 2013

மஹாபெரியவா கூறும் விநாயகரும் மாணிக்கவாசகரும்

மாணிக்கவாசகர்:
தேவாரம் பாடிய மூவரைப் பற்றி விக்நேச்வர ஸம்பந்தமாக இவ்வளவு!ஆனால் மாணிக்கவாசகர் அவருடைய திருவாசகத்திலே பிள்ளையாரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இருந்தாலும் அவருடைய வாழ்க்கையிலே இவர் நெருக்கமா ஸம்பந்தப் பட்டிருக்கிறார். ரொம்ப பேருக்குத் தெரியாத கதை சொல்கிறேன். பழங்காலத்திலே பாண்டிய நாட்டிலேயிருந்து சோழ தேசம் போகிறதற்கு ஆவுடையார் கோவில் வழியாகத்தான் நல்ல சாலை இருந்தது. மாணிக்கவாசகர் காலத்தில் ஆவுடையார் கோவிலுக்கு திருப்பெருந்துறை என்று பெயர். அங்கே வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஒரு சத்திரம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் வானம் பார்க்க, அதாவது வரையில்லாமல், ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்பார். வெயிலில் வந்த யாத்ரிகர்கள் ஒரு கூரையின் கீழ் 'ரெஸ்ட்' பண்ணிக் கொள்ளும் சத்திரத்துக்குப் பக்கத்திலேயே இப்படி அத்தனை வெயிலையும் தன் மேலே வாங்கிக் கொள்கிற ஒரு பிள்ளையார்!இன்னும் சில இடங்களிலும் இப்படி உண்டு. அங்கேயெல்லாம் 'வெயில் உகந்த பிள்ளையார்' என்று அவருக்குப் பேர் சொல்வார்கள். இங்கேயோ 'வெயில் காத்த பிள்ளையார்' என்று பேர். என்ன வித்யாஸமென்றால் மற்ற இடங்களில் ஜனங்கள் அநுபவிக்கிற வெயில் கஷ்டத்தை நாமும் அவர்களோடு சேர்ந்து அநுபவிப்போமே என்று 'ஸிம்பதி'யிலே அவராக வெயிலை ப்ரியப்பட்டு உகந்து ஏற்றுக் கொள்கிறார். இங்கேயோ அதற்கு மேலே ஒரு படி போய், சத்திரத்தில் தங்கினவர்கள் அப்புறம் யாத்திரை தொடரும் போது வெயிலால் கஷ்டப்படாமல் அந்த வெயிலை அவர்களுக்குமாகச் சேர்த்து vicarious suffering என்கிறார்களே, அப்படித் தாமே வாங்கிக்கொண்டு, அவர்களை உஷ்ணத்திலிருந்து காப்பாற்றுகிறார். அதனால் 'வெயில் காத்த பிள்ளையார்' என்று பெயர் பெற்றிருக்கிறார். பாண்டிய ராஜாவுக்காகத் குதிரை வாங்கப் போன மந்திரி திருவாதவூரர் அப்புறம் மாணிக்கவாசகர் என்ற மஹானான கதை தெரிந்திருக்கும். அவர் குதிரை வாங்கப் போகிற வழியிலே அந்தத் திருப்பெருந்துறைச் சத்திரத்தில்தான் ராத் தங்கினார். அப்போது அவருடைய ஸ்வப்பனத்திலே வெயில் காத்த பிள்ளையார் தோன்றினார். வெயிலோ, suffering -ஆ எதுவும் தெரியாத பரப்ரஹ்மமே தாம் என்று வாதவூரருக்குத் தெரிவிக்க நினைத்து, தான் ஒருத்தரே ப்ரஹ்ம - விஷ்ணு -ருத்ரர் ஆகிய மூன்று ரூபமாக மாறி அவருக்குக்காட்சி கொடுத்தார். கொடுத்த அப்புறம், "இந்த ஊரிலே பரப்ரஹ்மத்துக்குக் கோவில் கட்டு. அரூபமாகவும் நிர்குணமாகவும் இருக்கிற தத்வத்துக்கு எப்படிக் கோவில் கட்டுவது என்று கேட்காதே. அதற்கு நேரடியாகக் கோவில் கட்ட முடியாதுதான் ஆனாலும் அப்படி ஒரு தத்வம் உண்டு என்று ஸகல ஜனங்களுக்கும் துளியாவது நினைப்பு வர வேண்டுமல்லவா? அதற்காகத்தான் அதை 'ஸிம்பாலிக்'காக (உருவகமாக) ப் புரிந்து கொள்ளும்படி ஒரு கோவில் கட்டச் சொல்கிறேன்.
"ப்ரஹ்மம் அருவம். நாம் பார்க்கிற மூர்த்திகளுக்குள் சிவலிங்கம் தவிர பாக்கி எல்லாம் உருவம். சிவ லிங்கத்துக்கு அவயவங்கள் கொண்ட உருவமும் இல்லை, அது அருவமுமில்லாமல் ஒரு நிள உருண்டையாயிருக்கிறது. அதனால் அருவுருவம் என்று அதற்குப் பேர். சிவலிங்கத்துக்குப் பீடம் இருக்கிறதே, ஆவடையார் என்று, அதுவே ப்ரஹ்ம - விஷ்ணு - ருத்ர ஸ்வரூபம். அதற்கு மேலே சிவம் என்கிற அருவ ப்ரஹ்மம் இருப்பதை ஸிம்பாலிக்காகக் காட்டத்தான் லிங்கம் வைத்தது.
"ஆனால் உருவ தத்வத்திலேயே ருசியுள்ள ஜனங்கள் அதை மறந்துவிட்டு லிங்கத்தையும் ஒரு உருவ மூர்த்திதான் என்று நினைக்கிறார்கள். பொது ஜனங்கள் உள்ள ஸ்திதியில் அப்படி நினைப்பதுதான் இயற்கை. அதனால் மற்ற கோவில்களிலெல்லாம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். ஆனாலும், இத்தனாம் பெரியதேசத்தில் ஒரு இடத்திலாவது வேதத்தின் பரம தாத்பர்யமான பரப்ரஹ்மத்தை, அருவப் பரம்பொருளை அழுத்தமாக ஞாபகபப்படுத்த ஒரு ஆலயம் வேண்டாமா? உருவம் என்பதிலிருந்து அருவுருவம் என்கிற வரையில் கொண்டுவிட்டிருக்கிற ஈச்வரனுக்குத்தான் அதற்கும் அடுத்த ஸ்டேஜான அருவமாக வைத்தும் கோவில் கட்டினால் பொருத்தமாயிருக்கும், ஜனங்களின் மனோபாவத்துக்கும் அதுவே ஸரியாய் வரும்.
"ஆனபடியால் c இங்கே ஆவுடையாரை மட்டும் மூலஸ்தானத்தில வைத்து, அதற்கு மேல் லிங்கம் ப்ரதிஷ்டை பண்ணாமல் காலியாகவே விட்டுக் கோவில் கட்டு. காலி என்பதால் சூன்யமில்லை, அதுதான் நம் இத்தனை ஜீவாத்மாக்களுக்கும் மூலம் என்று ஜனங்களுக்குப் புரிவிப்பதாக அதற்கு ஆத்மாநாதஸ்வாமி என்று பெயர் வை.
"நான் சொன்னேனே என்று இப்பவே காரியத்தில் இறங்காதே!இங்கே ஒரு குருந்த மரத்தின் கீழே என் தகப்பனார் குரு ஸ்வரூபத்தில் வந்து ஆத்மாவை c அநுபவத்தில் தெரிந்து கொள்ளும்படியாக - அதாவது நம்முடைய ஆத்மா பரப்ரஹ்மமே என்பதை c அநுபவமாக அறியும்படி - உபதேசிப்பார். அதற்கப்புறமே ஆலய நிர்மாணம் பண்ணு" என்று சொல்லி விட்டுப் பிள்ளையார் மறைந்துவிட்டார்.
இப்படி ஒரு ஆனை சொன்னதன் மேல்தான் குதிரைக்கான பணத்தில் மாட்டுக்குக் கோவில் எழும்பிற்று!ஆவுடையார் என்பது மாடுதான், பரமேச்வரனின் ரிஷபம்!ஆ-மாடு, உடையார் என்றால் ஸ்வாமி. கோவில் கல்வெட்டுக்களில் பார்த்தால் 'ஸ்வாமி' என்பதற்குத் தமிழ் வார்த்தையாக 'உடையார்' என்றே போட்டிருக்கும். ராஜராஜீச்சுரமுடையார், திருநாசேக்சுரமுடையார் என்கிற மாதிரி. மற்ற மாடுகளுக்கெல்லாம் தலைமையில் அவற்றுக்கு ஸ்வாமியாக உள்ள ரிஷபந்தான் ஆவடையார். மற்ற ஊர்களில் அந்த ரிஷபத்தின் மேலே லிங்க ரூபத்தில் பரமேச்வரன். ஜீவாத்மாக்களான அத்தனை பசுக்களுக்குள்ளும் உடையாரான பசுபதி மாட்டு ஜாதிப் பசுபதியான ஆவுடையார் மேலே உட்கார்ந்திருப்பார்.
பிள்ளையார் சொன்னபடியே அப்புறம் ப்ராம்மண குருவாக ஈச்ரவன் வர, அவரடம் வாதவுரரர் உபதேசம் பெற்றுக் கொண்ட ஆவுடையாரை மட்டும் வைத்துக் கோவில் கட்டினார். ஞானாபூதி பெற்றவுடனேயே அவருக்கு மணி மயியாகத்தான் திருவாசகம் பாடவந்தால் மாணிக்கவாசகர் என்ற புதுப் பெயரும் உண்டாகி விட்டது.
அரூப ஸ்வாமி ஆவுடையார் மட்டுமே மூலஸ்தானத்தில் இருந்தால் ஜனங்கள் அந்தத திருப்பெருந்தறைக்கும் 'ஆவுடையார் கோவில்' என்று புதப் பெயர் வைத்துவிட்டார்கள்.
அம்பாளும் அங்கே அரூபந்தான். இவர் ஆத்மநாதர் என்றால் அவள் யோகாம்பிகை.
இப்படி அவர்கள் அரூபமாக விட்டதற்கு வட்டியும் முதலுமாக மாணிக்கவாகர் என்ன பண்ணினாரென்றால் கோவில் கட்டச் சொன்ன பிள்ளையாருக்கே அங்கே மூன்று மூர்த்திகள் சேர்ந்தாற்போல் வைத்து விட்டார். அவர் இவருக்கு மும்மூர்த்திகளாக மூன்று ரூபத்தில் தரிசனம் தந்தால் இவரும் அவருக்கு மூன்று மூர்த்தி வைத்துவிட்டார் - மூம்மூர்த்திகளும் அவரே என்று காட்டுவதாக.
இரட்டைப் பிள்ளையார் பல ஊரில் உண்டு. ஆவுடையார் கோவிலில் மட்டும் மூன்று பிள்ளையார்!

Tuesday, November 5, 2013

மஹாபெரியவா கூறும் தேவாரத்தில் விநாயகர்:

Source: Shri Athma Iyer

விக்நேச்வரரைப் பற்றி வருகிற இரண்டு தேவாரக் குறிப்புகளை விஷயம் தெரிந்தவர்கள் விசேஷித்துச் சொல்வார்கள். ஒன்று அப்பர் வாக்கு. மற்றது ஸம்பந்தருடையது.
அப்பர்:
சமணனாயிருந்த பல்லவ ராஜா தன் மாதிரியே சமணராயிருந்து விட்டு அப்புறம் சைவராகி விட்ட அப்பர் ஸ்வாமிகளைப் பல விதத்தில் ஹிம்ஸைப்படுத்திக் காளவாயில் போட்டான், கல்லைக் கட்டி ஸமுத்ரத்திலே போட்டான், அப்புறம் அதெல்லாம் பலிக்கவில்லை என்பதைப் பார்த்துத் தானும் அவரை நமஸ்காரம் பண்ணி வைதிக மதத்திற்குத் திரும்பி விட்டான் என்று கதை கேட்டிருப்பீர்கள். அதிலே காளவாய்க்கும் கல்லைக் கட்டிப் போட்டதற்கும் நடுப்புற (நடுவில்) விஷம் கொடுத்ததாகவும், அவர் மேலே மதயானையை ஏவி விட்டதாகவும் இருக்கிறது. அப்படி மதயானையை ஏவினபோது அவர் பாட்டுக்குக் கொஞ்சங்கூட பயப்படாமல், "அஞ்சுவது யாதென்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை" என்று பதிகம் பாடிக் கொண்டு தீரமாக நின்றார். மத்தகஜம் வேகமாக வருகிறபோது கஜஸம்ஹார மூர்த்தியான ஸ்வாமியை, 'வேழம் உரித்த நிலை' என்று ஸ்துதித்துக் கொண்டு நின்றார் கஜானனரைப் பற்றியும் அந்தப் பதிகத்தில்தான் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்!
"பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறு."
"அந்தக் களிறு எந்த ஈச்வரனின் பரிவாரத்தில் இருக்கிறதோ, அந்த ஈச்வரனின் "தமர் நாம்", அதாவது, "தம்மவர் நாம்", அதாவது ஈச்வரனே, "இவர்கள் என்னுடைய மநுஷர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் படியான அடியார் நாங்கள் ஆகவே நாங்கள் ராஜா ஏவி விட்டிருக்கிற இந்த மதத் களிறானாலும் ஸரி, வேறே என்ன உத்பாதமானாலும் ஸரி, அஞ்சுவது யாதொன்றுமில்லை!" என்று பாடினார்.
மதயானை அவரைப் பிரதக்ஷிண நமஸ்காரம் பண்ணிவிட்டு ஏவினவனையே தாக்குவதற்குப் பாய்ந்தது. அவன் ஓட்டம் பிடித்தான்.
"கணபதி என்னும் களிறு" பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறாரென்றால்:நம்மில் ஒவ்வொருத்தரும் நூறாயிரம் ஆசைகளை வைத்துக் கொண்டு, ஒன்று பூர்த்தியானால் இன்னொன்று என்று ஸதா பரபரக்கிற, படபடக்கிற சஞ்சல மனஸுக்காராளாக இருக்கிறோம். இதைத்தான் "பல பல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனம்" என்றார். ஸாதாரணமாகச் சொல்வது, ஆசாபூர்த்திக்கு ஏற்படும் இடையூற்றை அகற்றி அது நிறைவேற அநுக்ரஹிக்கிறவரே விக்நேச்வரர் என்பது. ஆனால் அப்பர் ஸ்வாமிகளோ அப்படிச் சொல்லாமல் ரொம்ப 'ஹை லெவ'லுக்குக் கொண்டு போய் விடுகிறார். நல்ல விஷயஜ்ஞரான புலவர்கள் எப்படி அர்த்தம் பண்ணுவார்களோ, எனக்குத் தோன்றுகிற அர்த்தம் இப்படித்தான். என்னவென்றால்:ஆசைப் பூர்த்தி என்று போனால் அதற்கு முடிவேயிருக்காது. ஒன்று பூர்த்தியாச்சென்றால் இன்னொன்று என்று அது போய்க் கொண்டேதான் இருக்கும். முடிவிலே அத்தனை ஆசைகளும் ஸம்ஸார பந்தத்தை மேலும் மேலும் இறுக்குகிறவைதான். கணபதி இதற்குத்தான் அநுக்ரஹிக்கிறாரென்றால் அதொன்றும் சிறப்பில்லை என்று அப்பர் நினைத்திருக்கிறார். அவர் அபிப்ராயத்தில் -
'அநுபவத்தில்' என்று சொல்லணும் - கணபதி என்ன பண்ணுகிறார்? ஆசைகளினால் ஸதா பதறிக் கொண்டிருக்கும் நம் மனஸில் பிள்ளையார் 'கலமலக்கிட்டுத் திரிகிறா'ராம். அப்படியென்றால் ஒரே கலக்காகக் கலக்கிக் கொண்டு உத்ஸாஹமாகச் சுற்றுகிறார் என்று அர்த்தம். ஏற்கெனவே ஆசைகளால் பதைத்துத் கலங்கிப் போயிருக்கிற மனஸை அவர் எதிர்த்திசையில் போட்டுக் கலக்குகிறார். கலக்கல், அதற்கு எதிர்க்கலக்கல், revolution -ம் அதற்கு எதிரான counter revolution -ம் என்றால் என்ன ஆகும்? முதலாவதை இரண்டாவது சமனம் பண்ணி, கலக்கம் எல்லாம் அடங்கி equilibrium என்கிற ஸமநிலையான பரம சாந்தநிலை உண்டாகும். மனஸ் அப்படி சாந்தமாக அடங்கி விட்டால் அதுதான் மோக்ஷம். ஒரு களிறு - ஆண் யானை - எத்தனை சக்தியோடு ஒரு சுழலக்குள்ளே நுழைந்து கலக்கு கலக்கு என்று கலக்கி விளையாடி கம்பீரமாக ஸஞ்சாரம் பண்ணுமோ, அப்படி நம்முடைய ஆசைச் சுழல்மயமான மனஸுக்குள்ளே பரமக்ருபையோடு விக்நேச்வரர் புகுந்து எதிர்ச் சுழலாகச் சுழற்றிக் கொண்டு வெற்றிநடை போட்டுத் திரிகிறாராம்!இது அப்பர் சொல்வது.
ஸம்பந்தர்:
ஸம்பந்தமூர்த்தி என்ன சொல்லியிருக்கிறாரென்றால்:விக்நேச்வரர் பல வேறு ஸந்தர்ப்பங்களில் பல வேறு அவஸரங்களாக (கோலங்களாக) அவதரித்திருக்கிறார். அவற்றிலே ஒன்றில், படி என்கிற பெண் யானையாக அம்பாள் ஒரு ரூபம் கொண்டிருந்தாள். அந்தக் காலத்தில், ஸ்வாமி (சிவபெருமான்) தன்னுடைய அடியார்களுடைய இடர்களைத் தானே கடிந்து போக்கிவிடாமல் அதற்கென்றே 'ஆதரைஸ்' ஆன ஒரு விக்ன நிவாரண மூர்த்தியைத் தன்னுடைய பிள்ளயாகப் பெற்று, அந்த பிள்ளை மூலம் நடத்தணும் என்று லீலையாக ஒரு ஸங்கல்பம் பண்ணினார். உடனே அவர் ஆண் யானையாகி, பிடியாயிருந்த அம்பாளோடு அப்படி ஒரு புத்ரோத்பத்தி பண்ணினார். இந்த விருத்தாந்தத்தைத்தான் ஸம்பந்தர், வலிவலம் என்று திருவாரூர்கிட்டே மூவரும் பாடின க்ஷேத்ரம் இருக்கிறது, அங்கே பாடின தம்முடைய பதிகத்தில் சொல்லியிருக்கிறார்.
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே
வலிவலத்தில் தானதர்ம வள்ளல்களாக 'மிகு கொடை வடிவனிர்' இருப்பதை ஸம்பந்தமூர்த்தி பார்த்தார். உடனே அவருக்குப் பரமேச்வரன் லோகம் பூரவாவுக்குமாக அளித்திருக்கிற பெரிய கொடை ஒன்றைச் சொல்லத் தோன்றிற்று. என்ன கொடை என்றால், அடியார் இடர்கடியவே அவர் கணபதியை வரவழைத்தாரே, அதுதான்
'தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளி'னாரே, அதுதான்
விக்நேச்வரருக்குப் பல நாமாக்கள் இருந்தாலும் அப்பர் பாடல், ஸம்பந்தர்
பாடல் இரண்டிலும் கணபதி என்ற நாமாவே வருகிறது. பிள்ளையார் மந்த்ரங்களில் முக்யமானவற்றிலும் அந்தப் பேர்தான் இருக்கிறது. பிள்ளையார் மதத்தின் பெயரும் 'காணபத்யம்' என்று அந்தப் பேரை வைத்தே இருக்கிறது.
ஸுந்தரமூர்த்தி ஸ்வாமி இந்த இரண்டு பேரைப் போலப் பிள்ளையாரைப் புகழ்ந்து பாடவில்லை. பரமேச்வரனையே ரொம்பவும் நிந்தா ஸ்துதி செய்த 'வன்றொண்டர்' அல்லவா அவர்? பிள்ளையாரையும் அப்படித்தான் இறக்கியிருக்கிறார்!ஒரு இடத்தில் "கணபதியேல் வயிறுதாரி" என்று. இன்னொரிடத்தில் கணக்கு வழக்கில்லாமல் தின்று கொண்டு தொப்பையை வளர்க்கிறதைத் தவிர வேறே ஒன்றும் தெரியாத கணபதி என்ற அர்த்தத்திலே 'எண்ணிலியுண் பெருவயிறன் கணபதி, ஒன்றறியான்' என்று சொல்கிறார். இங்கேயும் இரண்டு இடத்திலேயும் கணபதி நாமாதான் இரண்டிலுமே பெருந்தீனிக்காரர் என்று அவருக்கு வசவு!
இப்படி அவர் சொன்னார் என்றுதான் பிள்ளையார், "பெருந்தீனிக்காரன்னுதானே சொன்னே? அப்படியே இருக்கட்டும். ஒளவை படைக்கற பெருந்தீனி முழுசையும் ஸாவகாசமா மொக்கிவிட்டும், ஒனக்கு முந்தி அவ கைலாஸத்துல சேரும்படிப் பண்றேனா, இல்லியா, பார்" என்று கடைசியில் பண்ணிக்காட்டினார் போலிருக்கிறது! ஆனாலும் அவர் ஸுந்தரருக்கு நிறைய அநுக்ரஹங்களும் பண்ணித்தான் இருக்கிறார்.

Sunday, November 3, 2013

Source: Smt. Varalakshmi Sundararaman Pillaiyar : Periyava Kural

 

தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.
தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் “பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
“குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை: “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.
முதல் பிள்ளை இவர்: குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.
குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். அவளுக்குப் பிற்பாடுதான்
சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர்….
என்பதில் சொல்லாமல் சொல்கிறார். “அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே” என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.
தத்துவமயமான விநாயகர்
விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.
சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்” என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் ‘டாண்’ என்று, “பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல
உங்களுக்கு என்ன பாத்தியதையும்’ என்று தெரிந்தது.
அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது. கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு ‘ஸ்தூல காயர்’ என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.
இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கு கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளை யார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.
ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.
நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம்,
யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்: ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.
அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை .இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் “பிள்ளையார்” , “பிள்ளையார்” என்றே விசேஷித்து அழைக்கிறோம்.
எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.
பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.
“தோர்பி: கர்ணம்” என்பேத தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.
விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top