Ramanathan Panchapakesan
பெரியவாளுடைய அத்யந்த பரம பக்தர் சுப்ரமண்ய ஐயர். சதா சர்வ காலமும் பெரியவாளுடைய கருணையை எண்ணி எண்ணி உருகுவார். ஒருமுறை அவருடைய பெண்ணும் மாப்பிள்ளையும் காஞ்சிபுரம் சென்று பெரியவாளை தர்சிக்க கிளம்பினார்கள். ஐயருக்கோ தன் பகவானுக்காக ஏதாவது குடுத்தனுப்ப ஆசை! தினமும் வீட்டில் பிள்ளையாருக்கு நிவேதிக்க வைத்திருந்த அவல் பொரியை ஒரு பொட்டலமாக கட்டி அவர்களிடம் கொடுத்து பெரியவாளிடம் சமர்ப்பிக்குமாறு சொன்னார்.
பக்தனின் "பாவம்" எல்லாருக்கும் புரியுமா? கிளம்பும் அவசரத்தில் அஸ்ரத்தையாக அந்த பொட்டலத்தை அவர்கள் தரையில் வைக்க,அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்த பேரன் பேத்திகள் அதை தட்டிவிட,அத்தனை அவல் பொரியும் பூமியில் சிதறின. அவர்கள் அதையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விட்டார்கள்! ஐயருக்கு இந்த விஷயம் அவர்கள் கிளம்பிப் போனதும்தான் தெரிய வந்தது. பாவம்!துடித்துப் போய்விட்டார்!
"அபச்சாரம்! அபச்சாரம்! பகவானே!.....மன்னிச்சுடுங்கோ!.....பூமில விழுந்ததை என் பகவானுக்கு அர்ப்பணிக்க எடுத்துண்டு போயிட்டாளே!எனக்கு தெரியாத போய்டுத்தே!......" என்று அழுது புலம்பினார்.
தேனம்பாக்கத்தில் அன்று ஏகக்கூட்டம்! புதுமாதிரியாக அன்று பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்தது ......
விநாயகர் சன்னதிக்கு முன்பாக!
பாரிஷதர்களுக்கு ஒரே குழப்பம்! எதற்காக இன்று பிள்ளையார் சந்நிதியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? தர்சனத்துக்கு வந்தவர்கள் தினுசு தினுசாக பழங்கள், பூக்கள் என்று கூடை கூடையாக பெரியவா முன் சமர்ப்பித்தவண்ணம் இருந்தனர்.
ஐயரின் பொண்ணுக்கோ, அப்பா குடுத்த இந்த அவல் பொரி பொட்டலத்தை எப்படி பெரியவாளிடம் குடுப்பது? என்று சங்கடமாக இருந்தது. ஏதோ ஒரு கோடியில் வேறு போய் நின்று கொண்டிருந்தனர். கிட்டே போவது சாத்யமாகப் படவில்லை.அப்போது பெரியவா மிக மிக அழகாக ஒரு விளையாட்டை அரங்கேற்றினார்.
" கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழை பற்றி பேச ஆரம்பித்துவிட்டு,
"இன்னிக்கி பிள்ளையாருக்கு ஏகப்பட்ட பழங்கள் வந்துடுத்து!......ஆனா,..இந்த......அவல் பொரிதான் காணோம்! யாராவுது அவல் பொரி கொண்டு வந்திருக்கேளா?......."
தெய்வத்தின் குரல் தேனாக பாய்ந்தது, ஏதோ ஒரு கோடியில் தர்மசங்கடத்தில் குழம்பிக் கொண்டிருந்த ஐயரின் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்! அவ்வளவுதான்!கூட்டத்தை கிழித்துக் கொண்டு, சாதாரண பேப்பரில் சுற்றி இருந்த அவல் பொரியை எடுத்துக்கொண்டு போய் பெரியவா முன்னால் சமர்ப்பித்தனர்.
சுப்ரமண்ய ஐயர், தன் அன்பை மட்டுமே தோய்த்து, பேப்பரில் சுற்றிக் கொடுத்திருந்த அவல் பொரியை தன் திருக்கரங்களால் தொட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டார்!-------------------------------------------
குசேலன்,அழுக்கு மேல் வஸ்த்ரத்தில் முடிந்து வைத்திருந்த அவலை க்ருஷ்ணன் கைகளால் அள்ளி அள்ளி உண்ட கருணையை பாகவதத்தில் பல முறை படித்து மகிழ்ந்திருப்போம்.....இங்கே பெரியவா நடத்திய அவல் பொரி நாடகம் மூலம் பகவானின் பக்த வாத்சல்யத்தையும் அனுபவிப்போம்!
அம்மாவுக்கு தன் வத்ஸ் ( குழந்தை) அழுக்கான கைகளால், தன் வாய்க்குள் இருந்து ஒழுகும் எச்சிலில் பிரட்டி, ஏதாவது தின்பண்டத்தை அம்மாவின் வாயில் போடும்போது, அவளுக்கு குழந்தையின் கை அழுக்கோ,எச்சிலோ எதுவுமே தெரியாது! அதன் அன்பு ஒன்று மட்டுமே தெரியும். சாதாரண லோகாயத அம்மாக்களே இப்படி அன்பில் மயங்கினார்கள் என்றால்,லோகமாதாவான பெரியவாளுடைய வாத்சல்யத்தை அளவிட முடியுமா?
No comments:
Post a Comment