மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை
தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த
கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை
வேளைகளில் உரையாடுவது வழக்கம்.சுற்றியிருக்கும்
மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும்.மகான்
மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல
வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத
கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு
வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர,அதனால்
கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.வைத்தியர்கள்
வரவழைக்கப்பட்டனர்.கால்நடைத் துறையில் சிறந்து
விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல..
காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.
பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு
ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக்
கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து
போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால்
பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து
சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள்
நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச்
சொன்னார்கள்.
தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு
இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே
அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே
இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று
ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா
நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக்
கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக
நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு.....
ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில்
இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது.துள்ளியபடி
நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே
கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது.
ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான்.
அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை
எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து
கொண்டனர்.
பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின்
மகான் உள்ளே போனார்.
No comments:
Post a Comment