"எனக்கு அப்போ ஆறு வயஸ் இருக்கும். குத்தாலத்துக்கு பக்கத்துல முருகமங்கலம்ங்கற க்ராமத்துக்கு பெரியவா விஜயம் பண்ணியிருந்தா. என்னோட அத்தை பொண்ணாத்துல அன்னிக்கி பெரியவாளுக்கு பிக்ஷாவந்தனம். சுத்துவட்டார க்ராமத்துக்கெல்லாம் அடிக்கடி விஜயம் பண்ணும்போதெல்லாம் போய் தர்சனம் பண்ணிடுவேன். யார் போனாலும் கூட ஓடிப்போயிடுவேன். அப்பிடி ஒரு ஆகர்ஷணம் பெரியவாட்ட இருந்துது! அப்டி முருகமங்கலத்துல ஒருநாள் காலமே ஏழு மணி இருக்கும். அன்னிக்கி பெரியவா மௌன வரதம். சைகை மூலம் அவர் பேசறதே ரொம்ப அழகா இருக்கும். என்னை கூப்ட்டார்.
"ஒன்னை நாலஞ்சு எடத்துல பாத்தேனே!... இங்க எப்டி வந்தே?" எல்லாமே சைகைதான். பக்கத்திலிருந்த பாரிஷதர் விளக்கினார்.
"இது என்னோட அத்தங்கா அஹம்தான்..."
"இப்போ என்ன பண்ணிண்டு இருக்கே?" சைகை பண்ணினார்.
"நேக்கு இன்னும் பூணூல் போடலே...விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லுவேன்"
"நா.....ஒண்ணு சொன்னாக் கேப்பியா?"
சந்தோஷமா தலையாட்டினேன். பக்கத்தில் என்னைவிட கொஞ்சம் வயஸ் கூட ஆன பையன் ஒருத்தன் நின்னுண்டு, விளக்கையெல்லாம் துடைச்சிண்டு இருந்தான். அவனுக்கு பூணூல் போட்டிருந்தது.
பெரியவா அவனைக் காட்டி "அவன்ட்ட போயி "வெவ்வவ்வெவ்வே " ன்னு அழகு காமி!" சைகையில் அவர் அழகு காமிச்சது இன்னும் என் கண் முன்னால நிக்கறது. எனக்கோ ஒரே குழப்பம். பெரியவா சொன்னா யாருக்கு வேணாலும் அழகு காட்டலாந்தான்! நாம ஏன் குழப்பிக்கணும்? பெரியவாகிட்டயே கேட்டுடுவோம்ன்னு தோணித்து.
"பெரியவா..நா எப்டி இந்த அண்ணாவைப் பாத்து வெவ்வவ்வெவ்வே..ன்னு அழகு காட்டுவேன்? அவன் பூணூல் போட்டுண்டு இருக்கானே!"
சரியாக அந்த சமயத்தில் என்னை விட சின்னக்கொழந்தை ஒண்ணு அங்க வந்ததும், பெரியவா சைகையில் 'அந்தக் கொழந்தைக்கு அழகு காட்டு'..ன்னார். மொதல்ல யூஸ் பண்ணின டெக்னிக்கை இப்பவும் யூஸ் பண்ணினேன். "இது சின்னக் குழந்தை....நா அழகு காட்டினா அழுவானே பெரியவா!.." ன்னு சொன்னேன். அவர் நெனைச்சா யார் வேணாலும் அங்க வரலாமே! கரெக்டா வாசல்ல காவலுக்கு நின்னுண்டு இருந்த ஜவான் [பாராக்காரன்] துப்பாக்கியும் கையுமா உள்ள வந்து பெரியவா முன்னால நின்னான். "இவனுக்கு அழகு காமி" ......பெரியவாளும் என்னை விடறதா இல்லே!
"துப்பாக்கி வெச்சிண்டிருக்கான் பெரியவா.....அழகு காமிச்சா சுட்டுடுவானே!"
கடைசியில் "எனக்கு வெவ்வவ்வெவ்வே ன்னு அழகு காட்டு!"...ன்னு அவருக்கே அழகு காட்டச் சொன்னார்!
"அபசாரம்! நீங்க லோக குரு! உங்களுக்கு அழகு கட்டலாமா?" ...என்னோட டெக்னிக் கைகுடுத்தது. பெரியவா எழுந்து போய் ஸ்நானம் பண்ணப் போனார். அப்புறம் வந்துட்டு "வேற என்ன பண்ணறே?" ன்னார்.
"ஸ்ரீராம ஜயம்" எழுதுவேன்"
"கொண்டா.....பாப்போம்" ன்னு சைகையில் கையை நீட்டினார். போயி எடுத்துண்டு வந்ததும் என்னோட அக்காவும் கூட இருந்தா... நோட்டைப் பார்த்துட்டு, தன்னோட தங்கக்கையால எனக்கு ரெண்டு வெள்ளிக்காசு குடுத்தார்.....அத்துனூண்டு பையனான என்னைக் கிட்டக்க கூப்ட்டு சைகைல.... "நியமத்தோட இரு! சோப்பு தேச்சுக்காதே!" ன்னு இன்னும் சிலதெல்லாம் சொல்லி அநுக்ரஹம் பண்ணினார். இன்னி வரைக்கும் பெரியவா சொன்னபடி ஆத்மார்த்தமா இருந்துண்டு இருக்கேன்....அதோட பலன்தான் எனக்கு பரம பாக்யமா நம்ம குருஜி [மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள்] எனக்கு கெடைச்சிருக்கார்..." என்று மனஸ் நெகிழ விவரித்தார்.
சத்யமான வார்த்தை! ஒரு அவதார புருஷரே குருவாக கிடைப்பதற்கும், ஸதா அவருடைய சரண சாயலில் இருப்பதற்கும் கோடி கோடி புண்ய பலனே காரணம். சரண சாயல் என்பது அவருடைய அருகிலேயே இருந்து தொண்டாற்றுவது மட்டுமே இல்லை, எத்தனை தொலைவில் இருந்தாலும், நல்லதோ கெட்டதோ நம் வாழ்வில் எது நடந்தாலும், "குருவின் சங்கல்பம் மட்டுமே நம் வாழ்வை நடத்திச் செல்கிறது" என்ற சத்யத்தை உணர்ந்திருத்தலே ஆகும்.
Read more: http://periva.proboards.com/thread/4723/small-boys-experience-maha-periva/#ixzz2YmrZKpzI
No comments:
Post a Comment